இன்றைய இந்தியாவில் இடைவிடாத தாக்குதல் தன்மை மிக்க நிர்வாகத் துறையால் அரசாட்சி செயல்படுத்தப்படுகிறது. இது சட்டம் உருவாக்கும் நம்பிக்கைக்குறிய ஒரு கருவியாக மட்டுமே செயல்படுவதாக நாடாளுமன்றத்தை மாற்றியுள்ளது. நீதித்துறையில் இருந்து வரும் எந்த ஒரு சரிசெய்யும் நடவடிக்கையும் நிர்வாக ஆணைகள் மூலம் அலட்சியத்துடன் தூக்கி எறியப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என நம்பப்படும் ஊடகங்கள், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதும், அதனை ஊதிப் பெரிதாக்குவதும், வல்லமைமிக்க தலைவரின் விளம்பர ஊடகமாக செயல்படுவதுமே அவற்றின் முக்கியப் பணி என ஏற்றுக்கொண்ட, தன்விருப்பமுள்ள கூட்டாளியாக, திறன்மிகு வகையில் மறுவடிவமைக்கப்பட்டு விட்டன. கடந்த எழுபதாண்டுகளாக இந்தியாவில் அரசமைப்புச் சட்ட ஜனநாயகம் உயிர்த்திருப்பதற்கு மிகமுக்கியமான அம்சமாக விளங்கும், அதிகாரங்களைப் பிரித்து வைத்திருப்பதும், பல்வகை நிறுவனங்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் இன்று மிகமோசமாக சிதைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
543 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் முன்னணி எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான இடைவெளி 250 என்னும் மிக அதிக அளவாக உள்ளதால், தேர்தல் அரங்கில் ஏற்பட்டுள்ள பெரும் ஏற்றத்தாழ்வு, இந்தத் தாக்குதல் தன்மை மிக்க அதிகார மையமயமாக்கலை எளிதாக்கியுள்ளது. இருப்பினும், பல தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்பட்டதால் அல்லது வெற்றி பெறுவதில் இருந்து தடுக்கப்பட்டதால் மாநிலங்களில் உள்ள நிலைமை சரிசமமாகவே இருக்கிறது. ஆனாலும் மோடி ஆட்சி மீண்டும் மீண்டும் பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை கவிழ்த்து வருகிறது. மேலும் கட்சித் தாவல்களை உருவாக்குவதன் மூலம் அவ்வாறு மாநில அரசாங்கங்களை கவிழ்க்க முடியாத மாநிலங்களில் மத்திய அரசின் நிறுவனங்கள், ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநர் அலுவலகங்கள் மூலம் நெருக்கடி கொடுப்பதன் மூலம் இடைவிடாத பழிவாங்கும் போரை நடத்தி வருகிறது. 50 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்யவும், பல கட்சி ஜனநாயகத்தை ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு உட்படுத்தவும் எண்ணும் ஆளும் பாஜகவின் கனவிலிருந்து எழும், முழு அளவிலான தேர்தல் எதேச்சதிகாரத்தில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால், ஒன்றுபட்ட, உறுதியான அரசியல் எதிர்ப்பு மிக மிக அவசியமாகும்.
இந்தியாவில் 1977 வரை காங்கிரஸ் கட்சி மத்திய அரசை இடையூறற்ற வகையில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. இந்த முப்பதாண்டுகள் நீடித்த காங்கிரஸ் ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகள், எதேச்சதிகார ஆட்சியின் ஆபத்தான பிடிக்குள் அரசமைப்புச்சட்ட ஜனநாயகம் சிக்கிக்கொண்ட, உள்நாட்டு அவசரநிலையால் குறிக்கப்பட்டது. 1977 தேர்தல்கள் அந்த அவசர நிலையை ஜனதா கட்சி ஆட்சியின் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தன. வலது, வலதுமைய கட்சிகளின் குறுகிய கால இணைப்பால் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி மத்தியில் காங்கிரசுக்கு பதிலாக ஆட்சியமைத்தது. 1977க்குப் பிந்தைய காலகட்டம் அடிக்கடி மாற்றப்பட்ட அரசாங்கங்கள், மேலாதிக்கமிக்க ஒற்றைக் கட்சி ஆட்சிக்கு பதிலாக ஒரு கூட்டணி காலகட்டத்தின் எழுச்சியைக் கண்டது. ஆர்எஸ்எஸ் தனது செல்வாக்கையும் நிறுவன வலையமைப்பையும் விரிவுபடுத்த இந்த பரிணாமத்தை முறையாகப் பயன்படுத்திக் கொண்டது. 1977ல் ஜனசங்கத்தை கலைத்து விட்டு ஜனதா கட்சியாக மாற்றியது முதல் 1980களில் பாரதிய ஜனதா கட்சியாக தன்னை புதுப்பித்துக் கொண்டது வரையிலும், 1990களின் மத்தியில் அதன் முக்கிய நிகழ்ச்சி நிரலில் இருந்த சில சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கிடப்பில் போட்டது முதல் தொடர்ச்சியாக இரண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றிகளைப் பெற்ற பிறகு அதன் முழு இந்துராஷ்டிரத் திட்டத்தையும் வெளிப்படையாக செயல்படுத்துவது வரையிலும், சங்பாஜக அமைப்பு, இந்தியாவின் சமூக கொந்தளிப்புகளையும் நாடாளுமன்ற ஜனநாய கத்தில் உள்ள அரசியல் வாய்ப்புகளையும் பயன்படுத்தி அதிகபட்ச வலிமையைப் பெற்றுக் கொண்டது.
எவ்வாறாயினும், பாஜகவின் தனிப்பெரும் அரசியல் ஆதிக்கம் ஒரு எதேச்சதிகார ஆட்சியின் கைகளில் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை குவிப்பதை மட்டுமே செய்யவில்லை. சங்-பாஜக அமைப்பு தனது தேர்தல் வெற்றிகளை ஆர்எஸ்எஸ் உலகக் கண்ணோட்டத்திற்கும் இந்துத்வா அல்லது இந்து மேலாதிக்க பெரும்பான்மைவாத கட்டமைப்பிற்கும் ஏற்ப, இந்தியாவை, இந்திய அரசை, இந்திய சமூகத்தை மறுவடிவமைப்பதற்கான உரிமமாகப் பயன்படுத் துகிறது. இன்றைக்கு மோடி அரசாங்கம் எந்தளவுக்கு அதிகாரத்தை மையப்படுத்தி யுள்ளதோ அந்தளவுக்கு வன்முறையை பரவலாக்கியதற்கும் வெறுப்புக் குற்றங்களை இயல்பாக்கியதற்கும் குறிக்கப்படுகிறது. கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் கொள்ளை, தங்கு தடையற்ற அரசு ஒடுக்குமுறை, தன்னிச்சையாக செயல்படும் கண்காணிப்புக் குழுக்களின் திட்டமிடப்பட்ட வன்முறை ஆகியவை அச்சத்தின் குடியரசாக இந்தியாவை மாற்றி யுள்ளன. அங்கு குடிமக்கள், ஒரு கண்காணிப்பு அரசில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட சமூகத்தின் அச்சமுற்ற குடிமக்களாக மாற்றப்படுகிறார்கள். அரசியல் எதிரிகள் தொடர்ச்சியாக பழிவாங்கப்படுகிறார்கள்; கருத்தியல் எதிர்ப்பாளர்கள் இடைவிடாத துன்புறுத்தலுக்கும் வேட்டை யாடுதலுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்; தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட ஏழைகள் அதிகரித்த கொடுமை களை எதிர்கொள்கின்றனர்; சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லீம்கள், வெறுப்புப் பரப்புரை, விலக்கி வைக்கப்படுதல், அப்பட்டமான இனப்படுகொலை வன்முறை ஆகியவற்றுக்கு இலக்காகியுள்ளனர். மக்கள் மீது எந்த அக்கறையுமற்ற, அதிகாரத்தைப் பெறுவதற்கான இழிந்த வேட்கையின் வழிமுறையாக, அரசியல் மாறும்போது, அனைத்தையும் விழுங்கிக் கொள்ளும் அராஜக நிலைக்கு நாடு தள்ளப்படும். இன்று மணிப்பூருக்கு நடப்பது நாளை ஒட்டுமொத்த இந்தியாவுக்கே நடக்கும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.
தெளிவாகவே, இந்தியாவுக்கு உடனடியாக ஒரு மாற்று வழித் தேவையாகும். இந்தியா என்பது அரசமைப்புச்சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட இறையாண்மைமிக்க சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் பார்வை, அனைத்து குடிமக்களுக்கும் உரிமைகள், சுதந்திரம் வழங்கும் சாசனத்துடன் பில்லியன் மக்களுக்கும் அதிகமான மக்களுக்காக செயல்படும் ஜனநாயகத்தின் விதிமுறைகள், வேற்றுமையில் ஒற்றுமையும் கூட்டுக் கலாச் சாரமும் என்னும் சமூகக் கட்டமைப்பு, மாநிலங்களின் ஒன்றியமாகவே இந்தியா நிர்வகிக்கப்படும் என்ற கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான கட்டமைப்பு ஆகிய எதையும் இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாம் அறிந்தும் அனுபவித்தும் வரும் நவீன இந்தியாவின் அரசமைப்புச் சட்ட பயணத்தை, இந்தியா என்பது ஒரு பாசிச இந்து மேலாதிக்க அரசு என்ற மாற்றுப் பாதை தடம் புரள செய்யும் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
எனவே, இந்திய மக்களுக்கு ஒரு புதிய சமூக உடன்படிக்கை, ஒரு புதிய ஒப்பந்தம் தேவைப்படுகிறது. மோடி ஆட்சியைத் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே இதனை நிச்சயமாக அடைய முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள பல கொள்கைகளையும் அரசாட்சி செய்யும் முறைகளையும் இந்தியா மறுபரிசீலனை செய்து மறுசீரமைக்க வேண்டும். அவற்றில் சில ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உட்பட்ட மோடி ஆட்சிக்கு முந்தைய ஆட்சிகள் ஏற்படுத்தி உள்ளவையாகும். கார்ப்பரேட் சார்பு பொருளாதார சலுகைகளும் தனியார் மயமாக்கமும், ஆதாரும் ஜிஎஸ்டியும் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் போலி மோதல் கொலைகளும் போன்ற எதுவாக இருந்தாலும், மோடி காலத்தின் பல பேரழிவுகள், பெரும் தாக்குதல்களின் தோற்றத்தை பாஜக அல்லாத ஆட்சிகளிலேயே காணலாம்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் எதிர்க்கட்சிகளின் இந்த முதல் கூட்டத்தில் நீண்ட கோரிக்கைப் பட்டியலை முன்வைப்பது நிச்சய மாக அப்பாவித்தனமாகவே இருக்க முடியும். இப்படி ஒரு சந்திப்பு நடப்பதையே ஒரு சாதகமான தொடக்கமாக பார்க்க வேண்டும். தற்செயலாக, பிப்ரவரி 18 அன்று இகக(மாலெ) 11வது மாநாட்டையொட்டி பாட்னாவில் நடைபெற்ற 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம். இந்தியாவைக் காப்பாற்றுவோம்' என்ற கருத்தரங்கம், நான்கு மாதங்களுக்கு முன்பே இத்தகைய கூட்டத்தின் அவசியத்தை எடுத்து ரைத்தது. பாஜக அல்லாத பரந்த அரசியல் கட்சிகளின் அடிப்படையிலான இந்தக் கூட்டம், நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டு அடுத்தடுத்த ஆட்சிக் காலங்கள் ஏற்படுத்திய பேரழிவில் இருந்து இந்தியாவை மீட்பதற்கான சாத்தியமான, நம்பகமான மாற்றணி ஒன்று மேலெழுவதற்கான முதல் படியாக இருக்க வேண்டும். காங்கிரசும் அதன் பல்வேறு பிரிவுகளும், சோசலிச நீரோட்டத்தையும் சமூக நீதி முகாமையும் சேர்ந்த கட்சிகளான பழைய லோக் தளம், ஜனதா தளம் ஆகியவற்றின் பிரிவுகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும், அங்கீகரிக் கப்பட்ட தேசியக் கட்சியின் அந்தஸ்தைப் பெறுவதற்கான முயற்சியில் உள்ள சமீபத்திய உருவாக்கமான ஆம் ஆத்மி கட்சியும் உள்ளிட்ட இந்தியாவின் பலவண்ண எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையூட்டும் கலவையை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தலைவர்கள் இந்த முதல் கூட்டத்தில் பங்கு பெறுகின்றனர். அத்தகைய கூட்டணி சாத்தியமானதென நிரூபணமாகுமா? இதேபோன்ற கூட்டணிகள் தற்போது தமிழ்நாடு. பீகார் போன்ற மாநிலங்களில் செயல்படுகின்றன. மேலும் 2004க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டு முழு பதவிக் காலங்களை அனுபவித்ததையும் நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, மோடி அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் இந்த இக் கட்டான சூழ்நிலையிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு ஒரு நிலையான கூட்டணியை உருவாக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
தற்போதைய நிலவரப்படி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நடவடிக்கையில் பங்கேற்பவைகளில் சில முற்றிலும் வேறுபட்ட பிராந்திய கட்சிகள் ஆகும். அதேவேளையில், ஒருவருக்கு ஒருவர் போட்டியாளராக சிலர் ஒரே பகுதிக்குள்ளும் செயல்படுகின்றனர். போட்டி போடுவதிலிருந்து ஒத்துழைப்பிற்கு மாறுவதற்கு நீங்கள் விரும்பினால், அதை ஒத்துழைப்பிற்குள் போட்டியிடுவது என்றும் அழைக்கலாம் நிச்சயமாக சில முன்முயற்சிகளும் சாதகமான சூழலும், வளரவும் பரிணமிக்கவும் வேண்டிய கட்டமைப்பும் தேவைப்படும். ஒரு நியாயமான, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொகுதிப் பங்கீட்டைச் செயல்படுத்துவதிலும் பல்வேறு சிரமங்கள் இருக்கும். ஆனால், இந்தியா தற்போது எதிர்கொள்ளும் முன்னெப்போதும் இல்லாத, அசாதாரணமான அரசியல் சூழலால் இந்த ஒற்றுமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பல வழிகளில் இது இந்தியாவின் இரண்டாவது விடுதலை போராட்டமாகும். 1947 க்கு முந்தைய கால விடுதலைப் போராட்டத்தின் போது, அரசியல் சுதந்திரத்திற்கும் சமூக மாற்றத்திற்குமாக நடைபெற்ற இயக்கம், ஒன்றிணைந்தும் ஒத்துழைப்புடனும் செயல்பட்ட பல நீரோட்டங்களையும் வண்ணங்களையும் கொண்டிருந்தது. பல்வகை நிகழ்வுகளையும் கொண்டிருந்த இந்த வரலாற்றில் இருந்து உருவான அரசியல் சாசனமும், அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையும், ஜனநாயகம் செயல்படக் கூடியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற இந்தியா கடக்க வேண்டிய முரண்கள், மோதல்கள் குறித்து நம்மை எச்சரித்திருந்தன. இன்று நவீன இந்தியாவின் முன்பே அரசமைப்புச்சட்ட பார்வையும் அடித்தளமும் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் போது, பகத்சிங், அம்பேத்கர், பெரியார், காந்தி,நேரு ஆகியோரின் மரபுகள் பல ஆண்டுகால பாசிசத் தாக்குதலுக்குப் பிறகு ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், புத்துயிர்ப்பு அளிக்கவும் ஒன்றிணைய வேண்டும்.
விடுதலைப் போராட்ட இயக்கத்தின் செழுமையான மரபும் எழுபதாண்டு கால நாடாளுமன்ற ஜனநாயகமும், 'இந்திய மக்களா கிய நமக்கு' கணிசமான அரசியல் அனுபவத்தை அளித்துள்ளது. இந்த எழுபதாண்டுகள் பல்வகை புதிய கட்சிகளை உருவாக்கியுள்ளன. அவற்றில் பல சமூக, பிராந்திய, இன அடையாளங்களில் வேரூன்றியுள்ளன. இந்தக் கட்சிகளை தனிமைப் படுத்தப்பட்ட, வேறுபட்ட அமைப்புகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அனைத்துக் கட்சிக ளுக்கும் உரிய இடத்தை வழங்கும் கூட்டாட்சி ஜனநாயக வெளியை நாம் முன்னிலைப்படுத்த வேண்டும். அசாதாரண சூழ்நிலைகள் அசாதா ரணமான எதிர்வினைகளைக் கோருகின்றன.அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் அதன் மிகச் சிறந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுமான எதிர்ப்பு இயக்கம் உண்மையிலேயே இந்தியா வுக்கு தேவைப்படுகிறது. அவர்களின் உரிமை களுக்காகவும், பாதுகாப்பான வாழ்வாதாரத் திற்காகவும், விடுதலைக்காகவும், நீதிக்காகவு மான வேட்கை மக்கள் மத்தியில் வெளிப்படை யாக அதிகரித்து வருகிறது. களத்தில் மக்களின் போராட்டங்களுடனும் விருப்பங்களுடனும் நெருக்கமான உயிரோட்டமான உறவுகளை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான செயல் முறைக்கு ஆற்றல் அளிக்கப்பட வேண்டும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)