மத்திய மோடி அரசு இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் மீதான போர் என்றே சொல்லலாம். நான்கு சட்டத் தொகுப்புகள் மூலம் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படு கின்றன. கட்டுமானத் தொழிலாளர் நலச் சட்டம் இந்தியாவில் வர தமிழகம் முன்னோடி மாநிலமாக பங்காற்றியிருக்கிறது. அந்த முயற்சியின் காரணமாகவே தேசிய பிரச்சாரக் குழு உருவாக்கப்பட்டு, டெல்லியில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. தொடர் போராட்ட இயக்கத்தின் விளைவாக 1996இல் கட்டுமான தொழிலாளர் நலச் சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்படி மாநிலங்களில் தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. இந்த அயராத முயற்சிக்காக தமிழக தோழர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று போராடி பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. நலவாரி யத்தில் இருப்பில் உள்ள பணத்தை அதானி, அம்பானிக்கு கொடுக்க முனைகிறார்கள். இன்னொரு பக்கம் சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி தொழிலாளர் வர்க்கத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். இந்தியா முழுவதும் 10 அந்நிய பகாசுர நிறுவனங்கள் கட்டுமானத் தொழிலில் இறங்கி இருக்கின்றனர். பெரும் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை நாம் அமைப்பாக்க வேண்டும். வெறும் பயனாளிகள் என்ற நிலையிலிருந்து மாற்றி கட்டுமானத் தொழிலாளர்களை போர்க்குணமிக்க போராட்டத்தில் திரட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நலவாரிய வேலைகளை மையப்படுத்திய சங்கம் என்பதிலிருந்து வர்க்கப் போராட்டத்தை மையப்படுத்திய சங்கமாக நமது வேலையை மறு திசைவழிப்படுத்த வேண்டிய அவசியம் கட்டி இருக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்களாகிய நாம் தான் இந்த நாட்டையே எழுப்புகிறோம். ஆனால், நாம் ஆட்சியாளர் களால் புறக்கணிக்கப்படுகிறோம். நாட்டில் உள்ள 93% அமைப்பு சாராத் தொழிலாளர்களில் 55% கட்டுமான தொழிலாளர்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஆகவே, இந்த மாபெரும் சக்தியை 2024 தேர்தலில் மோடி ஆட்சியை தோற்கடிப் பதற்காக அணிதிரட்ட வேண்டும். அப்போது தான் நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.