கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை ஜூன் 1, 2023 அன்று, ஏஐசிசிடியு அகில இந்திய செயலாளர் தோழர் கிளிஃப்டன் தலைமையில் சந்தித்த ஏஐசிசிடியு பிரதிநிதிகள் குழு முன் வைத்த தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கை களாவன:
கடந்த டிசம்பர், 2021 முதல் இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் உரிமைகளுக்காக போராடிவரும் 80 தொழிலா ளர்கள் மீண்டும் பணிக்கமர்த்தப்பட வேண்டும். இது சம்பந்தமான உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டும்.
கர்நாடக மாநிலம் முழுவதும் பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதுபோல் திடக்கழிவு மேலாண்மை நிர்வாகத்தில் பணி புரியும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் சுமை தூக்குவோர் நேரடியாக சம்பளம் வழங்கும் நடைமுறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
ஆடை தயாரிப்பு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்
பல்லாரி மாவட்ட சுரங்க தொழிலாளர் களுக்கு புனர்வாழ்வு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். கர்நாடகா முழுவதும் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், தனது தேர்தல் அறிக்கையில் தொழிலாளர் நலன் பற்றி உத்தரவாதம் அளித்த பல்வேறு விசயங்கள் பற்றியும் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த பாஜக தலைமையிலான ஆட்சி தொழிலாளர்களின் வாழ்க்கையை, வாழ்வா தாரத்தை சூறையாடி சிதைத்திருக்கிறது. மட்டுமல்லாமல் தொழிலாளர் வர்க்க உரிமைகள் மீது தாக்குதலையும் உரிமைகளைப் பறிக்கும் சட்ட திருத்தங்களையும் மேற்கொண்டிருந்தது.
இவற்றுக்கு எதிராக ஏஐசிசிடியு எதிர்ப்பு இயக்கங்களை கட்டமைத்த போது, அப்போது எதிரணியில் இருந்த சித்தராமையாவும் டி.கே. சிவக்குமாரும் தொழிலாளர்களின் போராட்டத் திற்கு ஆதரவளித்ததோடு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப் படும் என்ற உத்தரவாதத்தையும் அளித்திருந்தனர்.
கீழ்க்கண்ட கோரிக்கைகள் கர்நாடக அரசாங்கத்திடம் வைக்கப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் நேரடி பண பட்டுவாடா மூலம் ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட வேண்டும். கர்நாடக மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் வேலை செய்யும் வாகன ஓட்டுனர்கள், சுமை தூக்குவோர், புதை சாக்கடை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், சுத்தம் செய்வோர், குழிக்குள் இறங்கி வேலை செய்வோர் (man hole operators) மேற்பார்வையாளர்கள் ஆகிய அனைவரும் நேரடி பணப்பட்டுவாடா முறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
ஐபி சாலப்பா குழு பரிந்துரை அமலாக்கப்பட வேண்டும்.
2013 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூவர் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்பட வேண்டும்.
அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் விலையில்லா வீடு வழங்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸில் பணி நீக்கம் செய்யப்பட்ட 80 தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்.
ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 25000 என அறிவிக்க வேண்டும். தொழிலாளர்களின் கௌரவமான பணி நிலைமைகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
2022இல் தொழிற்சாலை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். பெல்லாரி சுரங்க தொழிலாளர்களின் வாழ்வு புனரமைக்கப்பட்டு அவர்களுக்கு மறு வேலை வாய்ப்பு உத்திரவாதப் படுத்தப்பட வேண்டும்.
அரசாங்க மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் அதுபோல் நூலகங்கள் மற்றும் இதர துறைகளில் காண்ட்ராக்ட் முறை ஒழிக்கப்பட்டு அந்த தொழிலாளர்கள் நிரந்தரப் படுத்தப்பட வேண்டும்.
வேலையின்மை விகிதம் உயர்ந்து வருவதை தணிக்க நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திட இப்போதுள்ள 5 ஆண்டுகள் என்பதற்கு பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்று திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)