ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த சுகோ கிராமத்தின் முதியவர் ஒருவர், அங்கு பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான உடல்களுக்கு மத்தியில் நடந்து செல்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக இறந்த உடல்களின் மீது போர்த்தப்பட்டுள்ள துணியை தூக்கி அவர்களின் முகத்தைப் பார்க்கிறார். யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, "கோரமண்டல் விரைவுவண்டியில் பயணம் செய்த என் மகனைத் தேடுகிறேன். ஆனால் அவனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று அழுதுகொண்டிருந்தவர் உடைந்த குரலில் பதிலளித்தார். ஒடிசாவின் பாலசோர் (பாலேஸ்வர்) மாவட்டத்தில் ஜூன் 2 அன்று மாலையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களில் பயணித்த தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களைத் தேடிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்களின் துயரக் கதைகளில் அவரது கதையும் ஒன்றாகும். ஜூன் 3 ஆம் தேதி காலையில்தான் இந்தியா இந்த துயரத்தின் அளவையும் தீவிரத்தையும் உணரத் தொடங்கியது. கிட்டத்தட்ட 300 பேர் இறந்தனர்; 1000 பேர் காயமடைந்தனர் என்பது தெரிய வந்தது. அடையாளம் காணப்பட்ட இறப்புகளின் பெரும் எண்ணிக் கையைத் தவிர, பயணிகளின் பட்டியலையும் அடையாளம் காணப்படாத இறப்புகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான, தீவிரமான காயம்பட்டோரின் எண்ணிக் கையும் மிகமிக அதிகமாகும். எல்லா அறிகுறிகளின்படியும், இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும் அதிர்ச்சி மற்றும் பேரழிவின் அடிப்படையிலும், பாலசோர் இந்தியாவின் மிக மோசமான ரயில் பேரழிவுகளில் ஒன்றாக நினைவில் கொள்ளப்படும்.
பாலசோர் ரயில் விபத்து போன்ற ஒரு பெரிய பேரழிவை எதிர்கொள்ள இந்தியா என்ன மாதிரியான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? உடனடி மீட்பு, ரயில் சேவைகள் புனரமைப்பைத் தாண்டி, தவறுக்கு காரணமானவர் களை பொறுப்பாக்குவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உத்தரவாதம் செய்வது என்ற கேள்வியும் உள்ளது. மேலும், இதுபோன்ற பேரழிவு மீண்டும் மீண்டும் நிகழாமல் இருக்க, முடிந்தவரை நடவடிக்கை எடுக்கப்படவும் வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து, கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் வேலைவாய்ப்பு தேடி புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் ஆவர். தங்களுடைய குடும்பங்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான உணவை உத்தரவாதம் செய்யப் புறப்பட்டவர்களின் மரணம் அத்தகைய குடும்பங்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கும். எனவே இந்த பெரும் துயரத்திலிருந்து அவர்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான நீண்டகால நிதி ஆதரவு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. பாதிக்கப் பட்டவர்களுக்கான இந்த நிதி ஆதரவை வழங்கு வதற்கு முன்பு, முதலில் அரசு நிச்சயமாக தனக்குள்ள பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், மோடி அரசாங்கம் இந்த பொறுப்பேற்கும் உணர்வற்ற குணத்திற்கு இழிபெயர் பெற்றது. ஒரு முழுமையான ஆய்வினை மேற்கொள்வது, அடிப்படையான கட்டமைப்புக் காரணிகளை உடனடியாக சரி செய்வதற்குப் பதிலாக, இந்தப் பேரழிவிற்கு நாசவேலை மற்றும் சதிச் செயலே காரணம் என அரசாங்கம் சித்தரிக்க முனைகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்பே, விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்ற ரயில்வே வாரியத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளது. ரயில் விபத்துக்களை சமாளிக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு ரயில் விபத்து வழக்குகள் (கான்பூர் 2016, குனேரு 2017) கடுமையான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட விதிகளுடன் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விபத்துகளில் எந்த சதியும் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
ரயில்வே விபத்துகளை விசாரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தையும் தேசிய புலனாய்வு முகமையையும் பயன்படுத்துவது, புறக்கணிக்கப் படும் தீர்மானகரமான நிகழ்ச்சி நிரலான ரயில்வே பாதுகாப்பு குறித்து மோடி அரசு தொடர்ந்து ஒப்புக்கொள்ள மறுக்கும் போக்கையே கடைபிடிக்கிறது என்பதையே மிகத் தெளிவாகக் காட்டுகிறது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், ரயில்வே அதிகாரிகள் உட்பட பல்வேறு அதிகாரிகள் ரயில் வேயில் உள்ள பல பாதுகாப்பு சிக்கல்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளனர். இருப்பினும் இதுபோன்ற எச்சரிக்கைகள் வழக்கமாகவே புறக்கணிக்கப்படுகின்றன. பெரும்பாலான ரயில்வே உள்கட்டமைப்புகள் உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால் நவீனமயமாக்கலை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பதிலாக, அரசாங்கம் அதிவேக ரயில்களை இயக்குவதில் தான் பெருவிருப்பம் கொண்டுள்ளது. இந்தியா வின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்ற பெயரில், மோடி அரசாங்கம் எழுபத்தைந்து வந்தே பாரத் ரயில்களை இயக்குவதற்கான ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தது. அவை அடிப்படையில் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு வண்டிகளின் மறு வடிவமன்றி வேறல்ல. இந்த ஒவ்வொரு ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார். ரயில்வேயால் புதிய ரயில்க ளுக்கான பெட்டிகளை வழங்க முடியாமல் போனதால், குறைந்த பெட்டிகளுடன் கூடிய ரயில்களை இயக்குவதற்கும் கூட அரசாங்கம் தயாராக உள்ளது.
புறக்கணிக்கப்படும் ரயில்வே பாதுகாப்பு, முறையான பராமரிப்பு, நவீனமயமாக்கல் ஆகிய பிரச்சினைகள், ரயில்வேயில் மனிதவளம் தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக அபாயகரமான விகிதாச்சாரத்தை எடுத்துள்ளன. ரயில்வே பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் மிகப்பெரும் வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக இருந்து வருகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள், தொடர்ந்து ஒழித்துக்கட்டப்படும் பணியிடங்கள் ஆகியவற்றின் காரணமாக, மனிதவளத்தில் அபாயகரமான வீழ்ச்சியை இத்துறை காண்கிறது. காலியாக உள்ள, ஒழித்துக்கட்டப்பட்ட பணியிடங்களில் பாதி யளவு நேரடியாக பாதுகாப்பு சம்பந்தப் பட்டவையாகும். இதன் பாதகமான தாக்கம் தெளிவாக உள்ளது: 2022 டிசம்பரில் நாடாளு மன்றத்தில் தலைமைக் கணக்குத் தணிக்கை யாளரால் தாக்கல் செய்யப்பட்ட செயல்திறன் குறித்த தணிக்கை அறிக்கை, தடம்புரளும் விபத்துகளில் ஆபத்தான அதிகரிப்பை சுட்டிக் காட்டியது. ஒவ்வொரு நான்கு பெரிய தடம்புரளும் விபத்துகளில் மூன்று தடம்புரளும் விபத்துகள் பராமரிப்பும் ஆய்வும் இல்லாதது தொடர்பானவையாகும்.
கவாச் எனப்படும் மோதல் தடுப்பு தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்வது குறித்து சமீப காலமாக கொண்டாட்டப் பரப்புரைகள் அதிகம் காணப்படுகின்றன. ஆனால் இந்த தொழில் நுட்பம் உண்மையில் இந்தியாவின் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதையில் 2%க்கும் சிறிதளவு அதிகமான பகுதியை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. தற்போதைய நிதி ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தும் வேகத் தையும் கணக்கில் கொண்டால், ரயில் பாதையின் முழு நீளத்திற்கும் இதனை அமுல்படுத்த பல பத்தாண்டுகள் ஆகும். இந்நிலையில், விபத்துக் குள்ளான பாதையின் சம்பந்தப்பட்ட பகுதி கவாச்சால் பாதுகாக்கப்படவில்லை. மேலும், மின்னணு பின்னிப்பூட்டல் சமிக்ஞை (எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிக்னல் சிஸ்டம்) அமைப்பின் தோல்வியால் ஏற்பட்ட இந்த குறிப்பிட்ட விபத்தை கவாச்சால் தடுத்திருக்க முடியாது என்று கூறுவதிலேயே அரசாங்கம் மும்முரமாக உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த விஷயத்திலும் கூட, ஒரு குறிப்பான எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது. அது நிர்வாகத்தால் கவனிக்கப் படாமல் விடப்பட்டுவிட்டது.
பிப்ரவரியில் தென்மேற்கு ரயில்வேயின் ரயில் இயக்கம் சம்பந்தப்பட்ட துறையின் மூத்த அதிகாரி சமர்ப்பித்த குறிப்பில், விழிப்புடன் செயல்பட்ட ரயில் ஓட்டுநர், ரயிலின் மெதுவான வேகம் காரணமாக தென்மேற்கு ரயில்வேயின் மைசூர் மண்டல பிரூர்சிக்ஜாஜூர் பிரிவில் உள்ள ஹோசதுர்கா சாலை ரயில் நிலையத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய நேருக்கு நேர் மோதல் தவிர்க்கப்பட்டது. மேலும் அக்குறிப்பு, ஹொசதுர்கா மற்றும் பஹனகா பஜார் ரயில் நிலையங்களின் அமைப்பிற்கு இடையே உள்ள ஒற்றுமையை குறிப்பிட்டு, சமிக்ஞைகளின் அமைப்பை மாற்றியமைக்கவும், வெளிப்ப டையாகத் தெரியும் இடைவெளிகளை, ஆபத்து களை அகற்றவும் உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தியது. இந்த எச்சரிக் கையை ரயில்வே நிர்வாகம் கவனத்தில் எடுத்திருந்தால், பாலசோர் ரயில் விபத்தை ஒரு வேளை தவிர்த்திருக்கலாம்.
உலகில் இப்போது அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் மக்களுடைய பயணத் தேவை களைப் பூர்த்தி செய்யும் பொதுப் போக்குவரத்து அமைப்பாக ரயில்வேயை மேம்படுத்துவதற்கான பாதுகாப்பு பொறியமைவு, பிற அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அதற்கு எதிர் திசையில் ரயில்வே தொடர்ந்து மறுசீரமைக்கப்படுவதைக் காணலாம். ரயில்வே பாதுகாப்பு, அதன் அடிப்படை வசதிகளை பாதிக்கும் உள்ளார்ந்த காரணிகளை வழக்கமான பொது ஆய்வுக்கு உட்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கிய, ரயில்வே நிதிநிலை அறிக்கையை, மோடி அரசு பொறுப்பேற்றவுடன் ஒழித்துக்கட்டி விட்டது. இது திட்டக்கமிஷனை ஒழித்துக்கட்டி, அதனை நிதி ஆயோக் எனப்படும் ஒன்றாக மாற்றியமைப்பது போன்ற நடவடிக்கையாகும். ரயில்வே துறைக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்ட முழுநேர கேபினட் அமைச்சர் தற்போது இல்லை. இப்போது இருக்கும் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிற்கு ரயில்வே,மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பமும் தகவல் தொடர்பும் ஆகிய மூன்று முக்கிய துறைகளின் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தனியார்மயமாக்கம், இலாபம், மக்கள் தொடர்பு ஆகியவையே இப்போது இந்த பொருளாதாரத்தின் முக்கியமான உயிர்நாடியை இயக்குகின்ற முதன்மை விசயங்களாக இருக் கின்றன. மக்களும் மக்களுக்கான சேவையும் என்ற மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய இரண்டு விசயங்கள் பின்னணிக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்திய மக்களுக்கு பாதுகாப்பான, மலிவான, மக்களுக்கு ஏற்ற போக்குவரத்து வழங்குவதற்குப் பதிலாக, செல்வந்தர்களின் வசதிக்கான போக்குவரத்து அமைப்பாகவே பெரும்பாலும் இரயில்வே சந்தைப்படுத்தப்படுகிறது. இந்த போக்கை மாற்றி, ரயில்வேயை மக்களுக்கானதாக மீட்டெடுக்க வேண்டும். காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அடிப்படைப் படிப்பினைகளைப் பெறுவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனது பரப்புரை இயக்கத்தையும், அரசியல் ஆதாயத் தையும் மேம்படுத்துவதற்காக இத்துயர சம்பவத்தை பயன்படுத்துகிறது. மக்கள் படும் அவலங்களில் கவனம் செலுத்துவதற்கும், அரசாங்கத்தை பொறுப்பேற்க வைப்பதற்கும் பதிலாக, இரயில்வே அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் பாதுகாக்கவும் அவரை முன்னிறுத்தவும் ஊடகங்கள் நெருக்கடிக் குள்ளாக்கப்படுகின்றன. பாஜகவின் தேர்ந்தெடுத்த எதிரிகளான சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தி னரையும் அல்லது அரசியல் எதிர்ப்பாளர் களையும் குறிவைத்து, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவினால் பரப்பப்படும் பொய்க ளாலும் வெறுப்பு நிறைந்த கதையாடல்களாலும் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகிறது. ஒரு கொடூரமான சோகத்தினை இப்படி வெட்கக் கேடான, இழிந்த வழியில் ஆயுதமயமாக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும். பாலசோர் மாதிரியான பேரழிவுகள் மீண்டும் ஏற்படாது என்று மக்களுக்கு உறுதிமொழி கிடைக்கவேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)