சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவருடைய அலுவலகத்தில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதற்கு ஒரே காரணம் அவர் முறப்பநாடு ஆற்றில் நடக்கும் மணற்கொள்ளையைத் தடுத்தார் என்பதுதான். இவர் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்துள்ளார். ஏற்கனவே லூர்து பிரான்சிஸ் ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக இருந்தபோது, அவரைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்கள் மணல் மாஃபியாக்கள். ராமசுப்பிரமணியன், மாரிமுத்து என இருவர் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைக்கு முக்கிய காரணம் பிரான்சிஸ் மணற்கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டதுதான். இந்த ராமசுப்பிரமணியன் மீது பல புகார்களை லூர்து பிரான்சிஸ் இதற்கு முன்பே கொடுத்துள்ளார். ஆனால், ராமசுப்பிரமணியன் வெறும் அம்பு மட்டுமே. அவருக்குப் பின்னால் சக்தி வாய்ந்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மணற்கொள்ளை, சட்டவிரோத கல் குவாரி, கனிம வளக் கொள்ளை என தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஆர்வலர்கள், நேர்மையான அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகள் தாக்கப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரியில் வேலையின் போது 6 பேர் இறந்து போனார்கள். அதைத் தொடர்ந்து கொஞ்ச நாட்கள் குவாரிகள் மூடப்பட்டன. இப்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீண்டும் குவாரிகளில் வேலைகள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் சட்டவிரோதமாகவே செயல்படுகின்றன. இவற்றிற்கு சபை நடுவே இருப்பவரின் ஆசியும் உள்ளது எனப் பேசிக் கொள்கிறார்கள் மக்கள். நெல்லை மாநகரத்தில் மையமாக உள்ள சந்திப்பு பேருந்து நிலையத்தைப் புதுப்பிப்பதாகச் சொல்லி அங்கிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மணலை வெளி நாட்டில் விற்றுவிட்டார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். தமிழ்நாட்டில் அதிமுக என்றாலும் சரி திமுக என்றாலும் சரி மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளை மட்டும் காட்சி மாறாமல் நடந்து கொண்டிருக்கின்றன. வள்ளியூரில் சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டார். வேலூரில் ஆற்று மணல் கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இவ்வாறு கொள்ளையைத் தடுக்க நினைப்பவர்கள் கொலை செய்யப்பட்டால், அதைத் தடுக்க யார் முன் வருவார்கள்? அவ்வாறு வரக் கூடாது என்று அச்சுறுத்தும் வகையில்தான் இந்தக் கொலைகளை அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியோடு நடத்துகிறார்கள். லூர்து பிரான்சிஸ் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை தனக்கு ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து தூத்துகுடி தாலுகாவிற்கு இடமாற்றம் கேட்டுள்ளார். கொடுக்கப்படவில்லை.மணற்கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் முறப்பநாடு காவல் ஆய்வாளர். அவர், மணற்கொள்ளையர்கள் மீது லூர்து பிரான்சிஸ் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரே, லூர்து பிரான்சிஸ் கொலைக்கும் விசாரணை அதிகாரியா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய பின்னர் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். முதலமைச்சர் லூர்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்றும் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். மணற்கொள்ளையை முற்றிலுமாகத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், இதுபோன்று ஒரு கோடி ரூபாய் நிதியுதவி, மற்றொரு லூர்து பிரான்சிஸ் படுகொலையாவதைத் தடுத்திடுமா? இது மணற்கொள்ளையை மறைப்பதற்கான, மறக்க வைப்பதற்கான செயல் ஆகும். நேர்மையாளர்களுக்கு விடப்படும் சவால்களுக்கு அச்சுறுத்தலுக்கு ஆதரவான செயலாகும். மணற் கொள்ளையை, கனிமவளக் கொள்ளையை, சட்ட விரோத கல்குவாரிகளை, பசுமைக் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பல்பிடிங்கிய பல்வீர் சிங்குகள் இதுபோன்ற மாஃபியாக்களுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட்டதில்லை. அவர்கள் எளியவர்களிடம்தான் தங்கள் பராக்கிரமங்களைக் காட்டுவார்கள். கொள்ளைகள் தடுக்கப்பட்டால்தான் கொலைகளும் தடுக்கப்படும். இல்லையென்றால் ஒரு கோடி நிதியுதவியும் அரசு வேலையும் பொருளற்றுப் போகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)