அன்று அனிதா தொடங்கி, இன்று ஜெகதீஸ்வரன் வரை மாணவர்கள் நீட் தேர்வினால் மரணமடைந்துள்ளார்கள் என்றால், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரனும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். நீட் தேர்வில் 400 மார்க் எடுத்தும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. பணம் இல்லாததால் தனியார் கல்லூரியில் சேரமுடியவில்லை. மருத்துவர் ஆக வேண்டும் என்கிற தன்னுடைய லட்சியம் நிறைவேறாததால் மாணவர் ஜெகதீஸ்வரன் இறந்து போனார் என்றால், அந்த சோகம் தாளாமல் அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், நீட் தேர்வு தேவையில்லை என்று தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டு ஆண்டுகள் ஆன பின்பும் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதுமட்டுமின்றி, நீட் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து, நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்திற்கு நான் கையெழுத்துப் போடமாட்டேன் என்று அடாவடியாக பொது வெளியில் பேசுகிறார். தமிழ்நாடு மாநில அரசின் பொதுப் பாடத் திட்டத்தினை பல்கலைக் கழகங்கள் அமல்படுத்தத் தேவையில்லை என்று அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையையும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கு எதிராகவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. ஜெகதீஸ்வரன் கூட படித்த ஒரு மாணவர், நான் நீட் தேர்வில் குறைவான மார்க்தான் வாங்கினேன், ஆனால் ஜெகதீஸ்வரன் நல்ல மார்க் பெற்றான், என் தந்தை ரூ.25 லட்சம் கட்டி என்னை தனியார் கல்லூரியில் சேர்த்துவிட்டார். ஆனால், ஜெகதீஸ்வரனுக்கு அதற்கான வசதியில்லை. நீட் கோச்சிங்கிற்கு செலவு செய்ய வேண்டும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், லட்சணக் கணக்கில் செலவு செய்யக் கூடிய நிலையில் உள்ளவர்களால்தான் டாக்டராக முடியும் என்று மிகவும் ஆதங்கத்தோடு பேசினார். நீட் தேர்வு தகுதிக்குதான் மதிப்பு கொடுக்கிறது. இதனால் கட்டணக் கொள்ளை தடுக்கப்படுகிறது என்பது சுத்தப் பொய் என நிரூபணமாகியுள்ளது. இங்கு போதுமான மருத்துவர்கள் இருக்கும்போது, எதற்காக 25 லட்ச ரூபாய் செலவு செய்து மருத்துவம் படிக்க வேண்டும் என்று காக்கி உடையைக் கழட்டிவிட்டு காவிக்கு மாறியவரான அடுத்த ஆணவக்காரர் அண்ணாமலை கேட்கிறார். அதற்கு அந்த மாணவர், இங்கு நல்ல அரசியல்வாதிகள் பலர் இருக்கும்போது, நீங்கள் எதற்காக அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்டதாக சமூக வலைத் தளங்களில் வைரலானது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் தலை முதல் கால் வரை சோதனை செய்து, அவர்களின் மனநிலையையே மாற்றி சித்தரவதை செய்கிறார்கள். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாமல் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். ஆனால், நீட் தேர்வே எழுதாதவர்கள் எல்லாம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கிறார்கள் பாஜக ஆளும் மாநிலங்களில். திரிபுராவில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 3536 ஆனால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 88,889 என்றும் உத்ரகாண்டில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 12047, தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 37,301 என்று செய்திகள் சமூக வலைத் தளங்கனில் வருகின்றன. இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால், தமிழே தெரியாதவர்கள் தமிழ் மொழித் தாளில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தவர்கள்தான் இவர்கள். தேர்விற்கான கேள்வித் தாளை முன்னாலேயே வெளி யிட்டவர்கள்தான் இவர்கள். ஆர்எஸ்எஸ்-பாஜக திட்டமிட்டு, தமிழ்நாட்டை பழி வாங்குகிறது, வஞ்சிக்கிறது என்பது வெளிப்படை யாகவே தெரிகிறது. ஆனால், பிரதமர் மோடியும் மற்றவர்களும் தமிழ்நாட்டின் மீது, தமிழ் மொழியின் மீது மிகுந்து அன்பு கொண்டவர்கள் போல் நன்கு நடிப்பார்கள். அடுத்த ஆண்டில் நீட் தேர்வு இருக்காது என்று தமிழ்நாட்டை ஆளும் கட்சியினர் அறிவித்துள்ளார்கள். ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலே கூட அதை அமல்படுத்தமுடியும். அதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும் திமுக அரசு, இல்லையென்றால், பாஜகவின் நயவஞ்சகச் செயலுக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள், பெற்றோர்கள் பலியாவதைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நல்ல மருத்துவம் கிடைக்கும், நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்கிற நிலை எதிர்காலத்தில் இல்லாமல் போகும். நீட் தேர்வு முறையை நீட்டிக் கொண்டு போகாமல் உடனடியாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)