மணிப்பூர் வன்முறைக்கு பிஜேபி-ஆர்எஸ்எஸ் அரசியல் சித்து விளையாட்டுகளே காரணம்
சென்ற இதழ் தொடர்ச்சி
மணிப்பூர் வன்முறை, கலவரம் இன்னும் தொடர்கிறது. மிசோரத்திலும் கூட எதிரொலிக் கிறது. மணிப்பூர் சென்றுவந்த “இந்தியா கூட்டணியின்” நாடாளுமன்ற குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அங்குள்ள நிலமைகள் பற்றி மாலெ தீப்பொறி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
இந்திய அரசியல் களத்தில், மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றாக இந்தியா கூட்டணி பார்க்கப் படுகிறது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருக்கிறது. தோழர் திபங்கர் தலைமை யிலான சிபிஐ எம்எல் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த இந்தியா கூட்டணியின் சார்பில் மணிப்பூருக்குச் செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் எனக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ரவிக்குமார் அவர்க ளுக்கும் வாய்ப்பு கிட்டியது.
நாங்கள் முதலில் இம்பாலுக்குச் சென்றோம். அங்கிருந்து சுராச்சந்த்பூர் என்கிற மலை மாவட்டத் துக்குச் சென்றோம். அந்த பகுதியில் குக்கி மற்றும் நாகா சமூகத்தைச் சார்ந்த மக்கள்தான் பெரும்பான்மை யாக இருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக, அரசு கட்டிடங்களில் பள்ளி, கல்லூரி களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் ஏராளமானோர் அகதிகளாக வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து, சொத்துகளை இழந்து கட்டிய ஆடைகளோடு வந்து மாதக் கணக்கிலே தங்கி இருக்கிறார்கள். ஈழத்துக்குச் சென்ற போது நான் அகதிகள் முகாமில் தங்கி இருந்த தமிழர்களை சந்தித்தபோது என்ன மாதிரியான உணர்வைப் பெற்றேனோ; துக்கத்திற்கும் துயரத்திற்கும் ஆளா னேனோ அதேபோன்ற உணர்வுதான் மணிப்பூரிலும் ஏற்பட்டது. இங்கே இருக்கிற அரசாங்கம் மெய்தி மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அரசாங்கமும் காவல்துறையும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள். ஏராளமான குக்கி இனமக்கள் படுகொலை செய்யப்பட்டிருக் கிறார்கள் என்று அந்த அகதி முகாமிலே தங்கி இருந்தவர்கள் அவர்கள் மொழியில் எடுத்துச் சொன்னார்கள். ராணுவத்திலிருந்த ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டதை ஊடகத்திலே நாம் பார்த்தோம். அந்த குடும்பத்தை அங்கு சந்தித்தோம்.
குறிப்பாக, முழுமையாக ஆடைகளை களைந்து அவமானப்படுத்தப்பட்ட பெண்மணியை, நம்மு டைய இந்தியா கூட்டணியில் இருந்த பெண் எம்பிக்கள் சந்தித்தார்கள். இந்திய மண்ணில் இருப்பவர்கள் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவதும் காலம் காலமாக தொடர்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும், மணிப்பூரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தலித்துகள் இதுபோன்ற வன்கொடுமைகளால் ஊரு விட்டு ஊரு, மாவட்டம் விட்டு மாவட்டம் புலம்பெயர்ந்து செல்லக்கூடிய கொடுமைகள் நடந்து வருகின்றன. எப்போதும் போல் அதிகார வர்க்கம் எளிய மக்களுக்கு எதிராகவே இருக்கிறது. காவல்துறை, வருவாய்த்துறை, ஆட்சியாளர்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிரிவினர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அதிகாரத்தோடு தொடர்பில்லாத எளிய மக்களுக்கு எதிராக இருப்பதும் அதிகாரவர்க்கத்தின் ஒரு பண்புக்கூறாகவே இருந்து வருகிறது. அதைத்தான் மணிப்பூரிலும் பார்க்க முடிந்தது. சுராசந்த்பூர் மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட நகரத்திற்கு நாங்கள் போயிருந்தபொழுது அந்த நகரத்தின் பல இடங்களிலே எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பற்றிக் கேட்டோம். இது எங்கள் மண். இங்கே மெய்தி களுக்கு இடமில்லை என்று பல வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன. அடுத்து, சுராஜ்சந்த் என்ற மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஒரு மன்னரின் பெயரை அழித்துவிட்டு வேறு பெயரை எழுதிப் போட்டி ருக்கிறார்கள்.கல்லூரி மாணவர்களை பல இடங்களில் சந்தித்தோம். அவர் பனியன்களிலே "இது எங்கள் மண் எங்கள் நாடு' என்ற பொருளில் முழக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. நீண்ட நெடுங் காலமாகவே அது ஒரு விடுதலைப் போராட்டமாக நடந்து கொண்டே இருக்கிறது. விடுதலை இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. மாணவர் இயக்கமும் அதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அடிப்படையிலேயே குக்கி மக்கள் பழங்குடி இனத்தவர்கள். மதம் என்று பார்க்கிற பொழுது கிறிஸ்தவர்கள். ஆர்எஸ்எஸ்- பிஜேபி உள்ளே அடி எடுத்து வைப்பதற்கு முன்பு, பல்வேறு முரண்கள் இருந்தாலும் கூட, குக்கி -மெய்தி மக்கள் அண்ணன், தம்பிகளாகவே இருந்து வந்துள்ளார்கள். இம்பால் பள்ளத்தாக்கிலே மெய்தி மக்கள் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த மணிப்பூரிலே 10%தான் பள்ளத்தாக்கு, 90% மலைப்பகுதி. மலைப்பகுதியிலேயே வடபகுதியில் இருப்பவர்கள் நாகா. தென் பகுதியில் இருப்பவர்கள் குக்கி. அவர்கள் கிட்டத்தட்ட 40 லிருந்து 42% சதவீதம் வரை இருக்கிறார்கள். கொஞ்சம் இந்துக்களும் இருக்கி றார்கள். எட்டு சதவீதம் முஸ்லிம்களும் உள்ளனர்.
நாங்கள் தங்கி இருந்த இடத்திற்கு எல்லா இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும் வந்து எங்களைப் பார்த்தார்கள். எஸ்சி சங்கத்தைச் சார்ந்தவர்களும் எங்களை வந்து பார்த்தார்கள்.இவர்கள் 3% க்குமேல் இருக்கிறார்கள். நாங்கள் இந்து இல்லை நாங்கள் சனமாகி மதத்தைப் பின்பற்றக்கூடியவர்கள். குலதெய்வத்தை வழிபடுபவர்கள்.எங்களுக்கும் மெய்தி மக்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. குக்கி இன மக்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் மெய்தி மக்கள் சொல்ற கருத்தைத்தான் சொல்கிறார்கள். இந்த மலைப் பிரதேசத்தில் நிறைய ஆக்கிரமிப்பாளர்கள் வந்து குடியேறி இருக்கிறார்கள். இவர்கள் மியான்மர் பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்கள். அவர்கள் சட்ட விரோத தொழில்களில் ஈடுபடு கிறார்கள். அவர்கள் பார்த்தி என்று சொல்லக்கூடிய கஞ்சாச் செடிகளை பயிரிடுகிறார்கள். அவர்களைத் தான் வெளியேற்ற சொல்லி போராடுகிறார்கள் என்று கருத்து கூறினார்கள். குக்கி சமூகத்தை சார்ந்த மக்கள் என்ன சொல்றாங்கன்னா; இது எங்கள் மண், எங்கள் மண்ணை நாங்கள் தான் ஆளவேண்டும். எங்கள் மண்ணில் யாரும் நுழையக்கூடாது, ஆக்கிரமிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள்.
மார்ச், ஏப்ரல் அந்தக் காலகட்டத்தில் இம்பால் பள்ளத்தாக்கிலே தங்கிப் படிக்கிற, வேலை செய்கிற குக்கி இன மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். மெய்தி மக்களையும் பழங்குடி மக்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, அங்குள்ள உயர்நீதிமன்றம் இதற்கு ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மெய்திக்கள் இந்துக்கள் ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள். அரசுத் துறைகளில் எல்லா அதிகார வர்க்கத்தையும் அவர்கள்தான் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். பொருளாதார ரீதியாக மிகவும் வளம் பெற்றவர்கள். இப்படிப்பட்டவர்களை ஏன் பழங்குடி மக்கள் என்று அறிவிக்க வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல், போராட்டமாக மாறுகிறது. இந்தநிலையில், அங்குள்ள உயர்நீதிமன்றம் மாநில அரசாங்கத்துக்கு ஒரு காலக்கெடு கொடுத்து அந்த மக்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிக் கிறது. அந்த தீர்ப்பை எதிர்த்து குக்கி சமூகத்தினர் பேரணி நடத்தினர். அந்த பேரணியில்தான் மே மாதத்தில் வன்முறை ஏவப்படுகிறது. இவ்வாறுதான் அங்கு வன்முறை வெடித்தது.
அங்கு இருக்கக்கூடிய ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட எல்லாருமே மெய்தி மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று கருதப்ப டுகிறது. இதற்கு காரணம், ஆர்எஸ்எஸ்-பிஜேபி குறிப்பாக மோடி-அமித்ஷா இவர்களெல்லாம் மெய்தி மக்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான். மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சுராசந்த்பூர் மாவட்டத்தில் முதல்வரோ, ஆளுநரோ யாரும் அவர்களைப்போய் பார்க்கவில்லை. அதைவிடக் கொடுமை,அகதி முகாம்களில் தங்கி இருக்கிற மக்களுக்கு பல்வேறு தொண்டு அமைப்புகள்தான் உதவி செய்கின்றன. ஆடை, உணவு, குடிநீர், குழந்தைகளுக்கான பால், மருந்து என 80 சதவீதத்திற்கு மேல் தொண்டு அமைப்பினர்தான் உதவுகிறார்கள். பிறகு நாங்கள் ஹெலிகாப்டரில் ஏறி, மெய்தி மக்கள் அகதிகளாக தங்கி இருக்கிற ஒரு பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள பெண்கள் கூச்சல் போட்டார் கள். நீங்கள் எங்களை கடந்துதான் சுராசந்த்பூர் பகுதிக்குச் செல்ல வேண்டும். ஏன் எங்களை முதலில் பார்க்கவில்லை? ஏன் இந்த பாகுபாடு? அவர்களை முன்னமே பார்த்துவிட்டு பிறகு எங்களை பார்க்க வருகிறீர்கள், ஏன்? நாங்களும் கடுமையாக பாதிக்கப் பட்டு இருக்கிறோம். நீங்களெல்லாம் குக்கி இன பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள். நாங்கள் எவ்வளவு அதிகமாக பாதிக்கப்பட்டிருக் கிறோம் என்பது தெரியுமா எனக்கேட்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள்.
மெய்தி மக்கள் ஒரு கல்லூரியில் தங்கியிருக் கிறார்கள். ஒரு மாதமாக இருப்பதாகச் சொன்னார்கள். அரசாங்கம் உங்களுக்கு ஏதாவது உதவி செய்கிறதா? உணவு, உடை, மருந்து, பால்கொடுக்கிறார்களா? எனக்கேட்டோம். எதுவுமே இல்லை. நிறைய இளம் பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். அவர்க ளுக்கு நாப்கின் கொடுக்கப்படவில்லை. தண்ணீரு டன் கூடிய கழிப்பறை வசதி இல்லை. மின் விளக்குகள் இல்லை. அவர்களை, ஒரு இருட்டுப் பகுதியில்தான் சந்தித்தோம். உணவு மட்டும் அந்தந்த நேரத்திற்கு வந்து கொடுக்கிறார்கள். அங்கேயும் கிட்டத்தட்ட தொண்டு அமைப்புகள் தான் உதவி செய்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்து விட்டு அடுத்த நாள், இம்பாலில் ஆளுநரைப் பார்த்தோம். அவர்கள் ரொம்ப மரியாதையாக வரவேற்பு கொடுத்தார்கள், பேசினார்கள். கோரிக்கைகளை எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். நீங்கள் பிரதமரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுமூமான முடிவு எடுக்க முயற்சி செய்ய வேண்டுமென்று சொன்னோம். வழக்கம்போல கேட்டுக்கொண்டார். அதனால் எந்த பயனும் விளையவில்லை. இதுநாள் வரையிலும் மோதலும் வன்முறையும் தொடர்கிறது. குக்கி, நாகா இன மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். ரொம்ப முக்கியமா, அந்த கஞ்சாச் செடி வளர்ப்பு அதனால் ஏற்படக்கூடிய வணிகம் இதை குறி வைத்துதான் மெய்தி இன மக்கள் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும். அந்த வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும். அந்த நிலங்களை வாங்க வேண்டும் அப்படிப்பட்ட வேட்கையுடன் தான் பிரச்சனைகளை கையாள்கிறார்கள். பழங்குடி அந்தஸ்து கேட்கி றார்கள். ஏனெனில், பழங்குடி மக்கள்தான் மலைப் பகுதியில் நிலம் வாங்க முடியும். இவங்க பழங்குடி யில்லை என்பதால் அங்கு நிலம் வாங்க முடியல. எனவேதான், அவர்கள் தங்களை பழங்குடி மக்கள் என அறிவிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஒட்டு மொத்தமாக பார்த்தால், அவர்களுக்கு இடையில் இந்து, கிறிஸ்தவர்கள் முரண்பாட்டால் இது பெரி தாக வெடித்தமாதிரி தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் உள்ளே புகுந்து, வழக்கம்போல மத அடிப்படையி லான வேறுபாட்டை அவர்களுக்கிடையே உரு வாக்கி, இந்துக்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் அவர்களுக்கிடையில் முரண்பாடுகளை விதைத்துவருகிறார்கள். வளம் கொழிக்கும் அந்த மலைப்பகுதியில், மெய்தி மக்களை விடவும் மற்றவர்கள் அங்கு நிலம் வாங்க வேண்டும்; முதலீடு செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் விரும்புகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் அதைத்தான் சொல்கிறார்கள். மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது. இப்ப அதை உடைத்து விட்டு விட்டார்கள்; எல்லா கதவுகளையும் திறந்து விட்டார்கள் அம்பானியும் அதானியும் அங்கு நிலங்களை வாங்கலாம்; தொழில் தொடங்கலாம். கார்ப்பரேட்டு களுக்காக காஷ்மீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மணிப்பூரிலும் இந்த மாதிரியான நோக்கங்கள் இருக்கலாம் என்பது மக்களிடம் பேசும்போது தெரிய வருகிறது. இது, முழுக்க முழுக்க இந்திய அரசாங் கத்தின் அரசியல் சித்து விளையாட்டுகளாலேயே உருவாகியுள்ளது. மணிப்பூர் மக்கள் பாதிக்கப்படு வதற்கு அங்கு ஏற்கனவே உள்ள முரண்கள் மட்டும் காரணம் இல்லை. இந்திய அரசு முன்வைக்கிற அரசியல் முரண்களும் முக்கிய காரணங்களாக உள்ளன.
ஆகஸ்ட் மாதம், சிபிஐ எம்எல், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மணிப்பூர் சென்றிருந்தன. மோடி அரசாங்கமும் அங்கு உள்ள மாநில அரசாங்கமும் இரட்டை என்ஜின் அரசாங்கம்தான் காரணம் என்று பலரும் சொன்னார்கள். இங்குள்ள நிலமைகள், எந்த அளவு மிசோரத்தில் எதிரொலிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
வடகிழக்குப் பகுதிகள், ஒரு காலத்தில் பிஜேபி என்று சொல்லிக் கொள்வதற்கு கூட ஆளில்லாமல் இருந்த பகுதி. 10 ஆண்டுகளில் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் விதைத்த வெறுப்பு அரசியல் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபி இந்த அளவுக்கு செல்வாக்கு பெற முடிந்திருக்கிறது, ஆட்சி அமைக்க முடிகிறது என்றால் மிகப்பெரிய அதிர்ச்சிதான். மிசோரத்திலும் இந்த செல்வாக்கு இருக்குமென்றே தெரிகிறது. காங்கிரஸ் கோலோச்சிய இடங்களில், கம்யூனிஸ்டுகள் செல்வாக்கோடிருந்த இடங்களில் கூட, அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிஜேபி முன்னுக்கு வந்திருக்கிறது. இதெல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது இடதுசாரிகள், இதர ஜனநாயக சக்திகள் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங் களை, பண்பு மாற்றங்களை ரொம்ப தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும். ஏனெனில், இதே உத்தியைத்தான், ஆர்எஸ்எஸ் -பாஜக எல்லா மாநிலங்களிலும் பின்பற்றுகிறது. உபியில், 80% முஸ்லிம்கள் இருக்கும் நாடாளுமன்ற தொகுதியிலேயே பிஜேபி ஜெயிக்கிறதென்றால் இதெல்லாம் ஒரு மேஜிக் மாதிரி தெரிகிறது. அதே போல, பெரும்பான்மையாக கிறித்துவர்கள் இருக்கும் தொகுதியிலேயும் பிஜேபி வெற்றி பெறமுடிகிறது.
மணிப்பூரில் கூட, மலைப்பகுதியில் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்கள் பிஜேபிக்கு ஓட்டு போடுகிறார்கள். குக்கி இன மக்கள் மத்தியிலிருந்து பிஜேபி எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் பிஜேபியை ஒரு சராசரி அரசியல் கட்சியாக பார்க்கிற பார்வை உள்ளது. தமிழ்நாட்டில் அதை ஒரு மதவெறி இயக்கமாக, சமூக விரோத, வலதுசாரி இயக்கமாக பார்ப்பது போன்ற பார்வை வடக்குப் பகுதியில் இல்லை என்பது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. பிஜேபியை காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனாலும் அதை தேர்தல் கோணத்தில் தான் பார்க்கிறார்கள். அடிப்படையில் வெறுப்பு அரசியலை விதைக்கிற கருத்தியல் எதிராளி என்ற அடிப்படையில் (பிஜேபியை) வீழ்த்த வேண்டும் என்று நினைப்பதாகத் தெரியவில்லை. அதை ஒரு சனாதன இயக்கமாக பார்க்கிற பார்வை அதனிடம் இல்லை. காங்கிரசுக்கு, பிஜேபி எதிர்ப்பு என்ற அளவிலேயே எண்ணுகிறது. எப்படி திமுகவுக்கு அதிமுக எதிர்ப்பு, அதிமுகவுக்கு திமுக (தேர்தலில்) எதிர்ப்பு என்று பார்க்கப்படுகிறதோ அதுபோலதான், பிஜேபியை காங்கிரசுக்கு எதிரான ஒரு தேர்தல் இயக்கம் என்று பார்க்கிற பார்வை (காங்கிரசுக்கு) இருக்கிறது. அதைக் கடந்தும் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது.
ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் இந்த பார்வை (vision) இருக்கிறது. ஒரு சில முன்னணித் தலைவர்கள் கருத்தியல் அடிப்படையில் பார்க்கி றார்கள். ஆனால் ஒட்டு மொத்தமாக அந்தக் கட்சியிலுள்ளவர்கள் அப்படிப் பார்க்கிறார்களா என்றால் நிச்சயமா இல்லை என்றுதான் சொல்ல முடியும். அதனால்தான், வட இந்திய மாநிலங்களில் உள்ள தலித்துகள், பழங்குடி மக்கள் கூட பிஜேபியை ஆகா! ஓகோ! என்று தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆர்எஸ்எஸ்-ல் இருப்பதை பெருமையாகப் பேசுகிறார்கள். இது பெரிய அதிர்ச்சி யாக இருக்கிறது. அம்பேத்கரையும் தங்களது தலைவர் என்று சொல்கிறார்கள்; பிஜேபியையும் தன்னுடைய இயக்கம் என்று சொல்லுகிறார்களே! இது எப்படி என்று தோன்றுகிறது? தமிழ்நாட்டுப் பார்வையில் இருந்து பார்க்கிற பொழுது இது அதிர்ச்சியாக இருக்கிறது. நான் முன்பே சொன்னது போல, காங்கிரஸில் இருப்பவர்கள் பிஜேபியை ஒரு தேர்தல் எதிராளியாய் பார்க்கிறார்களே தவிர ஒரு கருத்தியல் எதிராளியாய் பார்க்கிறார்களா என்பது, கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இந்த அடிப் படையில் பார்க்கும்போது, முன்பு காங்கிரசுக்கு ஓட்டு போட்ட மாதிரி, மக்கள் இப்போது பிஜேபிக்கு ஓட்டு போடுகிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக அரசியல் வெறுப்பை விதைத்தாலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அரசியல் வெறுப்புப் பேச்சு பேசினாலும் அதே முஸ்லிம் சமூகத்தில் இருந்தும் கிறிஸ்தவ சமூகத்தில் இருந்தும் பிஜேபிக்கு வாக்களிக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதை களத்தில் சென்று பார்க்கிறபோது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பயத்தின் காரணமாக பிஜேபிக்கு வாக்களிக்கிறார்கள் என்றும் கூறி விட முடியாது. அப்படி வாக்களிக்கிறவர்கள் மிக மிகக் குறைவான வர்களாகவே இருப்பார்கள். எனவே மிசோரத்திலும் பிஜேபினுடைய தாக்கத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அங்கேயும் கூட இந்த முரண்கள் விரிவடையலாம்; வன்முறைகளும் வெடிக்கலாம்.
இந்தியா கூட்டணி பற்றி...
அடுத்த இதழில்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)