கட்டுமானத் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்றைய நிலை பற்றி பொதுச் செயலாளர் அறிக்கை விவரமாக சொல்லி உள்ளது. அறிக்கை யின் மீது பிரதிநிதிகளும் விவாதம் செய்துள்ளீர்கள்.
நாம் சரியான நேரத்தில் இந்த மாநாட்டை கட்டமைத்திருக்கிறோம். இந்த சூழல், தாக்குத லுக்கு எதிராக ஒரு அவசர பதில் வினையைக் கோருகிறது. ஆகவே தான், நாம் புதிய திசைவழி பற்றி பேசுகிறோம். மோடி அரசு தொழி லாளர்களின் எல்லா உரிமைகளையும் பறிக்கிறது. அவர்கள் தெளிவாக ஒரு செய்தியைச் சொல் கிறார்கள். 1996ஆம் ஆண்டு கட்டுமான தொழிலாளர் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்பதுதான் அந்த செய்தி. 2024 நாடாளுமன்ற தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நாடாளுமன்றத் தேர்தலாக இந்தத் தேர்தலைப் பார்க்க முடியாது, கூடாது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதுவும் மிச்சம் இருக்காது. ஆகவேதான், இது 'செய் அல்லது செத்துமடி' என்பதற்கான சூழலாக இருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் கட்டுமானத் தொழி லாளர்கள் கடும் துன்ப, துயரங்களை அனுபவித் தார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு உள்ளானார்கள். இந்தப் பின்னணியில்தான் நமது தொழிற்சங்க வேலையை மறு திசைவழிப் படுத்த வேண்டும் எனச் சொல்கிறோம். நல வாரியத்தை மையமாகக் கொண்ட வேலையை மாற்றி அமைக்க வேண்டும். நமது முழக்கம் "சங்கம் முதலில், வாரியம் இரண்டாம் பட்சம்' என்பதாக இருக்கிறது. பல வகை தொழிலாளர்களுக்கான வாரியம் உள்ளது. புதிய சமூகப் பாதுகாப்பு பற்றி அரசாங்கம் பேசி வருகிறது. அது என்ன புதிய சமூக பாதுகாப்பு? இஸ்ரம் போர்ட்டலா? அல்லது எல்லா தொழிலுக்கும் பொதுவான வாரியமா? என்னவென்று தெரியவில்லை. உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது, பழைய பாணியில் நாம் நமது தொழிற்சங்க வேலைகளைத் தொடர முடியாது. நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனை என்ன? நமது போராட்டம் எப்படி இருக்க வேண்டும்? யாரைக் கூர்மைப்படுத்தி இருக்க வேண்டும்?
நமது போராட்டம் கட்டுமான நிறுவனங் கள் - அரசாங்கக் கூட்டிற்கு எதிரானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பொருத்த மான பிரத்தியேக பிரச்சனை மீது கவனம் செலுத்த வேண்டும். அந்தந்த மாநிலங்கள் அதற்கேற்ற வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். நாம் எப்போதும் செய்கிற வேலையை மாற்றி அமைத்து மறு திசைவழிப் படுத்த வேண்டும். இது போன்ற சூழல்கள் எப்போதுமே சவால்களையும் வாய்ப்புகளையும் கொண்டு வரும். ஒப்பீட்டளவில் நம்மிடம் ஆற்றலும் திறமையும் இருப்பதால் நம்மால் வலுவான கட்டுமானத் தொழிலாளர்களின் கூட்டமைப்பை உருவாக்க முடியும்.
நாம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அணுகுவதற்கு என்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த மாநாட்டில் அவர்கள் பிரச்சி னைக்கு சிறப்பு செல் (குழு) உருவாக்குவது பற்றி முடிவு செய்யலாம். டெல்லி நோக்கி புலம் பெயர்வது என்பது எப்போதும் இருக்கின்ற அதே நேரத்தில், தெற்கு நோக்கி வருவதும் அதிகரித்த அளவில் நடைபெறுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சனையை அணுக சில குறிப்பிட்ட தோழர்களை அதற்கு பொறுப்பாக் கலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் திட்டமிட்டு மோதல் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் போலி வீடியோ அதைத்தான் காட்டியது. மோடி ஆட்சியை அகற்ற வேண்டுமானால் கட்டுமானத் தொழிலாளர்கள் மத்தியில் நாம் அரசியல் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்த வேண்டும். "நல்ல காலம்" முதல் "அமுத காலம்' வரையி லான அர்த்தமற்ற பாசாங்கு பேச்சுக்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். நமக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட வலைப் பின்னல் கொண்ட அமைப்பு இருந்தால்தான் நம்முடைய புரட்சிகர கருத்துக்களை திறம்பட எடுத்துச் செல்ல முடியும். அதே போல் பெரும் எண்ணிக்கை யிலான தொழிலாளர்களை நம் அமைப்புக்கு கொண்டு வருவதும் முக்கியமானது. அப்போது மட்டுமே நமது நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.
நமது அமைப்பு பலமாக மாற வேண்டும். அமைப்பு உறுப்பினர் எண்ணிக்கையை ஆதார மாகக் கொண்டது. இறுதி ஆராய்ச்சியில் எண்கள் முக்கியமானவை. எந்த அளவுக்கு நாம் இறங்கி களத்தில் வேலை செய்கிறோம் என்பதன் வெளிப்பாடு எண்ணிக்கை. அடுத்தது, அரசியல் படுத்துதல் என்பது நமது முக்கிய அம்சமாக இருக்கும். நாம் சேர்க்கும் உறுப்பினர்களில் இருந்து ஊழியர்களை கண்டறிய வேண்டும். வளர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்ப்போடு நின்றுவிடாமல், வருடா வருடம் தொழிலாளர்கள் உடனான தொடர்புகளைப் புதுப்பிக்கவும் வேண்டும். சாதாரண கட்டுமானத் தொழிலாளி அரசியல்படுத்தப்பட்டு ஒரு தொழிற்சங்க ஊழியராக வளர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதோடு பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களை அமைப்புக்கு கொண்டு வர வேண்டும். நமது உறுப்பினர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டவில்லை. இப்போதுள்ள சூழலை எதிர்கொள்ள மிகப்பெரும் உறுப்பினர் எண்ணிக்கை, வலுவான அமைப்பு கட்டமைப்பு இரண்டும் தேவை. காலத்தின் தேவைக்கு ஈடு கொடுக்க எழுந்து நிற்க இந்த மாநாடு வழிகாட்டும் என நம்புகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)