தோழர் விஎம்மின் 25 வது ஆண்டு நினைவுநாளில், நமது மாபெரும் தியாகிகள், மறைந்த தலைவர்களது மாபெரும் புரட்சிகர லட்சியத்திற்கு இகக(மாலெ) தன்னை மறுஅர்ப்பணிப்பு செய்துகொள்கிறது, இன்றைய சவால்மிக்க சூழலில் தோழர் விஎம் மினது புரட்சிகர மரபை முன்னெடுத்துச்செல்ல உறுதி ஏற்கிறது.
தோழர் விஎம், 1970 களின் துவக்க காலத்தில் கட்சியின் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, கட்சி சந்தித்த பின்னடைவுக்குப் பிந்தைய கட்சி மறுகட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்தினார். தோழர் விஎம் மினது கடைசி கட்டுரையில், கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க வெகுமக்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருங்கள், அவர்களது நலனை உச்சபட்ச கடமையாகக் கொண்டிருங்கள் என்று சொன்ன அந்த சொற்கள் கட்சியை மீட்டெடுக்கும் மறுகட்டமைப்பு செய்யும் இந்த இயக்கப் போக்கிற்கு உத்வேகமூட்டியது. மக்களுடனான கட்சியின் உயிரோட்டமான பிணைப்பு, மக்களைச் சார்ந்திருப்பது, பலதரப்பட்ட போராட்டங்களில் மக்களின் துணிச்சல்மிக்க அணிதிரட்டலில் கட்சியின் தலைமைப்பங்கு இவையே கட்சியின் வளர்ச்சிக்கு திறவுகோலாக விளங்கின. கட்சியின் வெகுமக்கள் நடைமுறை, வெகுமக்கள் பண்பை வலுப்படுத்தும் பொருட்டு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்கிட உறுதிகொள்கிறோம்.
தோழர் வி எம் தலைமையில், கட்சி தனது சுதந்திர பாத்திரத்தை, முன்முயற்சியை, அடையாளத்தை வலுப்படுத்தி வந்த அதேவேளை, தனிநபர் முதல், அமைப்புகள் வரையிலான ஒரு முழுவரிசை கூட்டாளிகளைத் தேடும் செயல்மிக்க அய்க்கிய முன்னணி கொள்கையையும் கட்சி வளர்த்தெடுத்தது. எல்லா வழிகளிலும் கட்சியின் சுதந்திரமான வலுவையும் பாத்திரத்தையும் வலுப்படுத்தும் அதேபோது, கட்சியின் இந்த அய்க்கிய முன்னணி கொள்கையை வளர்க்கவும் செயல்படுத்தவுமான கட்சியின் திறனை உயர்த்தியாக வேண்டும்.
கட்சி தனது திட்டங்கள், கொள்கைகளை வளர்ப்பதிலும் பல அரங்குகளிலும் முன்னேறி வருவதிலுமான அதன் வெற்றி, கட்சியின் அமைப்பு வலுவையும் கருத்தியல் தெளிவையும் சார்ந்துள்ளது. சோவியத் யூனியன் சரிவை அடுத்து பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களைத் தாங்களே கலைத்துக் கொண்டிருந்தபோது, தோழர் வி எம் தலைமையின் கீழ், கட்சி புரட்சிகர மார்க்சியத்தை உயர்த்திப்பிடித்தது. அதுமட்டுமின்றி, ஒரே சமயத்தில் கட்சி, அதன் அமைப்பு கட்டமைப்பு, ஜனநாயக செயல்பாடு, கூட்டுத்தலைமையை வளர்த்தெடுத்தது, உறுதிப்படுத்தியது.
மிகமுக்கியமான 2024 தேர்தல்களுக்கும் வளர்ந்துவரும் பாசிச தாக்குதலுக்கு எதிரான தீர்மானகரமான எதிர்ப்புக்கும் ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது, நாம் மார்க்சியம் லெனினியம் மாசேதுங் சிந்தனை அடித்தளத்தின் மீது உறுதியாக நிற்கவேண்டும்: நமது அமைப்புக் கட்டமைப்பையும் செயல்பாட்டுமுறையையும் வலுப்படுத்தியாக வேண்டும். இந்த ஆண்டு, பிப்ரவரியில் பாட்னாவில் வெற்றிகரமாக கட்சிக் காங்கிரஸ் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நமது வேலைப்பகுதிகள் அனைத்திலும் கட்சிக் கிளைகளையும் உள்ளூர் கமிட்டிகளையும் மறுசீரமைப்பு செய்திட தீர்மானித்தோம்.
செயல்படுகிற கிளைகள், உள்ளூர் கமிட்டிகள் இல்லாமல் நாம், களமட்டத்தில் அமைப்பாக்கப்பட்ட இருத்தலை உண்மையில் கொண்டிருக்க முடியாது; அதிலும் குறிப்பாக உச்சமடைந்துவரும் பாசிசதாக்குதல் சூழ்நிலையில், உள்ளூர் அமைப்புகள் இல்லாமலிருப்பது பிரதானமான வலுவின்மையாகும். எனவே களத்தில் துடிப்பும் இயங்காற்றலும் கொண்ட அமைப்புக் கட்டமைப்பை உறுதிசெய்வதற்கான அழுத்தம் தொடரவேண்டும், அது நமது கட்சியை வரையறுத்துக்காட்டுகிற இயல்பாக ஆக்கப்பட வேண்டும். இந்த ஆண்டு உறுதி ஏற்பு நாளில், நமது ஒட்டுமொத்த அமைப்பையும் உறுதியாக ஒன்றுபடுத்தப்பட்ட, சண்டைக்கு எப்போதும் ஆயத்தமாக இருக்கும் போராடும் சக்தியாக ஆற்றலூட்ட உறுதியேற்போம்.
தோழர் விஎம் க்கு செவ்வணக்கம்!
நமது தியாகிகள், மறைந்த தலைவர்களுக்கு செவ்வணக்கம்!
இகக(மாலெ) நீடுழி வாழ்க!
பாசிசத்தை தோற்கடிப்போம், மக்கள் உரிமைகளை பாதுகாப்போம்!
போராட ஒன்றுபடுவோம்! வெற்றிபெற போராடுவோம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)