தோழர்களே, நண்பர்களே,
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக புரட்சிகர பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தோழர் சுகுந்தன் உடலின் முன் கூடி அஞ்சலி செலுத்துகிறோம். இதே நேரத்தில் கன்யாகுமரியில் கட்டுமான சங்க மாநில மாநாட்டில் கூடியுள்ள தோழர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். தோழர் சதிஷ் கூறியதைப் போல் தோழர் ஏ.வி. இங்குள்ள தொழிற்சங்க, தொழிலாளர் இயக்கத்தின் அடையாளமாக இருந்தார். அந்த அடையாளத்தின் தொடர்ச்சியாக தோழர் சுகுந்தன் இருந்தார். உண்மை. தொழிலாளர்களது அனைத்து கோரிக்கைகளும் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களும் தொய்வின்றி தொடரும் எனவும் உங்களிடையே உறுதியளித்தார். எவ்விதமான வெற்றிடமும் இருக்காது எனவும் கூறினார். இது மிகவும் முக்கியமான உறுதிமொழி.
உண்மையில் வெற்றிடமென்று எதுவும் இருப்பதில்லை. ஒருமுறை தோழர் நாகபூஷன் பட்நாயக் சொன்னார். தலைவர்கள் நுரை போன்றவர்கள்; மக்கள் கடல் அலை போன்றவர்கள். நுரைகள் கலைந்துவிடும். அலைகள் நிரந்தரமாக இருக்கும். அலைகள் இருக்கும் வரை நுரைகள் இருந்துகொண்டே இருக்கும்.
திருடப்பட்ட தொழிலாளரது உழைப்பு மூலதனமாகிறது. முதலாளிகளை, முதலாளித்துவ சமுதாயத்தை உருவாக்குகிறது. தொழிலாளரது களவாடப்பட்ட கனவு, தொழிற்சங்க இயக்கத்தை, தொழிலாளர் போராட்டங்களை உருவாக்குகிறது. தொழிலாளர் தலைவர்களையும் உருவாக்குகிறது. எனவே வெற்றிடத்துக்கு வேலை இல்லை. எனவே கடல் இருக்கும் வரை அலைகள் இருந்து கொண்டே இருக்கும். தொழிலாளர் இருக்கும் வரை தொழிலாளர் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இதற்கு சாட்சி, கடந்த கால தொழிலாளர் போராட்டங்களே. மிகவும் பின்தங்கிய சமூகத்தினர், படுமோசமாக சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் சங்கமாக நின்று முதலாளிகளை எதிர்த்துப் போராடியதை ஆம்பூர், வாணியம்பாடி அறியும். பர்தாவுடனும் பர்தாவை விலக்கியும் போராடிய இஸ்லாமிய பெண் தொழிலாளர் இந்து தொழிலாளருடன் கரம்கோர்த்து போராடியதை படிப்பாளிகள், படைப்பாளிகள், கலைஞர்களும் அறிவார்கள். என்னைப் போன்றவர்கள் அந்தப் போராட்டங்களை நேரில் கண்டு ஊக்கம் பெற்றிருக்கிறோம்.
இத்தகைய போராட்டங்களுக்கு அப்போதைய வடார்க்காடு, தருமபுரி மக்கள் போராட்டங்கள் ஊக்கமளித்ததை தோழர் ஏ.வி. பலரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தோழர் சுகுந்தன் காட்டாறு போன்றவர். எப்போது? எப்படி? வரும் என்று தெரியாது. காட்டாற்றுக்கு, கரைகளுக்கு இடையே ஓடுவது கஷ்டம். அவர் கட்சிக்குள்ளேயே இருந்தாலும் ஏராளமான பரிசோதனைகளை மேற்கொண்டதை தோழர் முருகேசன் சுட்டிக்காட்டினார். பரிசோதனைகள் தவறில்லை. ஆனால் அவை இயற்கை விதிகள், சமூக விதிகளுக்கு உட்பட்டவை. எந்த பரிசோதனை முடிவும் சமூகத்துக்கு பயன்பட வேண்டும். தோழர் சுகுந்தன் தோழர் ஏ.வியின் தொடர்ச்சியாக இருந்தாலும் அவர் ஆம்பூர், வாணியம்பாடியின் அடையாளமாகத் தங்கிவிடவில்லை. இங்குள்ள தொழிற்சங்க, தொழிலாளர் போராட்டத்துக்கு ஒரு புரட்சிகர வழிமுறை, ஒரு அகில இந்திய தலைமை தேவை என்பதை உணர்ந்திருந்தார். ஆகவேதான் அவர் தோல், தோல்பொருள் தொழிலாளர் சங்கத்தை அந்த நிர்வாகிகளின் ஒப்புதலோடு ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தில் இணைத்தார். அதன் மாநில துணைத் தலைவராகவும் உயர்ந்தார்.
தோழர் சுகுந்தன், இந்தியாவையும் இந்திய மக்களையும் சூழ்ந்துள்ள பாசிச பேராபத்தையும் உணர்ந்திருந்தார். எனவேதான் அவர் கட்சியின் 11வது கட்சிக் காங்கிரசில், பாசிசத்திற்கெதிரான ஒரு போராளியாக உற்சாகமாக பங்களித்தார். நான்கு சட்டத் தொகுப்புகள் மூலம் தொழிலாளரது கால்களுக்கும் கைகளுக்கும் விலங்கிட்டு கார்ப்பரேட் முதலைகளுக்கு உணவாக்கும் சதித்திட்டம்; கூடுவதற்கு, பேசுவதற்கு, எழுதுவதற்கு தடையென இந்திய ஜனநாயகத்தை அழித்துவரும் மோடி ஆட்சியை வீழ்த்துவதுதான் தலையாய உடனடிப் பணி என்பதை உணர்ந்திருந்தார் தோழர் சுகுந்தன். அந்த தெளிவோடுதான் பட்னா காங்கிரசில் தோழர் சுகுந்தன் பங்கெடுத்துக் கொண்டார்.
சென்னை சிம்சன் தொழிற்சாலையில் பணியாற்றி, முழுநேர புரட்சியாளராக கிராமப்புரங்களுக்குச் சென்ற தோழர் சுகுந்தனது அரசியல் சகா டி.கே.எஸ். ஜனார்த்தனன் இறந்தபோது, இங்கு பார்த்தது போல, டி.கே.எஸ் உடலைப் பார்த்து பெண்கள் கதறி அழுதனர். "இனி உங்கள பார்க்க முடியாதா"? என்று கூறி அழுதனர். அப்போது நான் கூறினேன்; டிகேஎஸை நீங்கள் ஏன் பார்க்க முடியாது? நீங்கள் நடத்தும் ஒவ்வொரு போராட் டத்திலும் டிகேஎஸை பார்க்க முடியும்" என்று கூறினேன். அதையே இங்கு மீண்டும் கூறுகிறேன். தோழர் சுகுந்தனை நீங்கள் நடத்தும் தொழிலாளர் போராட்டங்களில் பார்க்க முடியும். பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் மீண்டும் பார்க்க முடியும். தோழர் சுகுந்தனுக்கு புரட்சிகர செவ்வஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)