அகில இந்திய தொழிற்சங்க மையகவுன்சில்
ஏஐசிசிடியு
AICCTU
11 ஆவது அகில இந்திய மாநாடு அறைகூவல்!
தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுப்போம்!
2025, பிப்ரவரி 24 - பொது மாநாடு தால்கடோரா ஸ்டேடியம்.
2025, பிப்ரவரி 25, 26 - பிரதிநிதிகள் மாநாடு பியாரேலால் பவன், ஐடிஓ
புது டெல்லி
அன்பார்ந்த தோழர்களே!
ஏஐசிசிடியு தனது 11ஆவது அகில இந்திய மாநாட்டை 2025, பிப்ரவரி 24 - 26 தேதிகளில் புது டெல்லியில் நடத்துகிறது.
இந்திய அரசாங்கம் நவ தாராளவாத சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, தொழிலாளர் வர்க்க இயக்கம் காத்திரமான சவால்களை எதிர்கொண்ட பின்னணியில் ஏஐசிசிடியு தனது பயணத்தை 1989இல் துவங்கியது. அப்போது ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை ஆயத்தப்படுத்த “தொழிற்சங்கங்களை ஜனநாயகப்படுத்துவோம்! தொழிலாளர்களை அரசியல்படுத்துவோம்!” என்ற முழக்கத்தை முன் வைத்தது. ஆளும் வர்க்கம் நாட்டை நவ தாராளவாத சந்தைப் பொருளாதாரம் என்ற மாற்றத்தை நோக்கி செலுத்திய போது, ஏஐசிசிடியு தொழிற்சங்க இயக்கத்தை தொழிற்சாலையின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து வெளியில் கொண்டு வந்து அதை எதிர்த்துப் போராட தீர்மானித்தது. ஏஐசிசிடியுவின் துவக்க மாநாட்டிலிருந்து இந்தப் போர் முழக்கமானது தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றம், மிகக் கொடூரமான தொழிற்சாலைகள் தனியார்மயமாக்கம், தொழிலாளர் சக்தியை முறைசாராமயப்படுத்துவது ஆகியவற்றை எதிர்கொண்டு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்து, இப்போது 11ஆவது மாநாட்டில் அதன் அறைகூவலானது ‘தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுப்போம்’ என்பதாக இருக்கிறது.
சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட ஏஐசிசிடியு கடந்த 35 ஆண்டு காலத்தில் எதிர்ப்பு இயக்கங்களை சுதந்திரமாகவும் மற்ற எல்லா மைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஒருமைப்பாட்டு நடவடிக்கைகள் மூலமும் கட்டமைத்து வந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகால மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இப்போது தொழிலாளர் வர்க்கம் மீதான கொடூர சுரண்டலும் ஒடுக்குமுறையும் உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் கூடவே பெரும் எண்ணிக்கையில் ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, ஊதிய வீழ்ச்சி, சமூக பாதுகாப்புத் திட்டங்களை ஒழித்துக்கட்டுவது, அனைத்தும் தழுவிய ஒப்பந்தமயம், ஆலை மூடல், கதவடைப்பு, ராக்கெட் வேகத்தில் உயரும் வறுமை, எங்கும் நிறைந்திருக்கும் பசி மற்றும் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு என்ற பின்னணியில் இன்று இந்தியத் தொழிலாளர் வர்க்கம் வாழ்வு, வாழ்வாதாரம், உரிமைகள் மீது இதுவரை இல்லாத மோசமான தாக்குதலைச் சந்தித்து வருகிறது.
“விக்சித் பாரத்”- (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற பெயரில் மோடி எல்லாவற்றையும் விற்கிற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். ஒட்டுமொத்த இந்தியாவும் அதானிகள், அம்பானிகள் போன்ற அவருடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு ஒரு சிலர் கைகளில் செல்வம் குவிவது என்பதாகவும் வேலைகள், வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுமாகவும் மட்டுமே உள்ளது. உழைக்கும் மக்களும் ஏழைகளும் அதிகரித்த அளவில் அத்தியாவசிய தேவைகளைக் கூட அணுக முடியாதபடியாகி வருகிறது. முன்வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மூலம் தொழில் உறவுகள் எஜமானன் - அடிமை உறவாக மாறிவிட்டது. தொழில் செய்வதை இலகுவாக்குவது என்ற பெயரில் தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளானது நடப்பில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் அத்தனையையும் ஒழித்துக் கட்டுவதன் மூலம் தொழிலாளர் உரிமைகளை நிர்மூலமாக்குவதை குறியாகக் கொண்டுள்ளது. “ஊபா” சட்டத்தோடு கூடுதலாக மூன்று குற்றவியல் சட்டங்களும் அதோடுகூட தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் இணைந்து கொள்வதானது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைக்கு நிச்சயமாக பேரிடியாக அமைய உள்ளது.
போலீஸ் இராஜ்ஜியம் இப்போது புல்டோசர் இராஜ்ஜியத்திடம் சேர்ந்து மேலும் வலுவூட்டப்படுகிறது. இது வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை கொடூரமாக இடித்துத் தள்ளுகிறது. தொழிலாளர்களின் குரலும் அதன் தொழிற்சங்கங்களும் மோடியின் மாதிரி வளர்ச்சிக்கு முக்கிய தடைகளாக இருப்பதாக பூதாகரப்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக குற்றமயப்படுத்தப்படுகின்றன. சென்னை சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் போராட்டம், மூலதனத்துக்கு தொழிலாளர்கள் தடையை உருவாக்குகிறார்கள் என்றும் தொழிற்சங்கங்களை உருவாக்குவதன் மூலம் மூலதன வெளியேற்றத்துக்கு வழிவகை செய்கிறார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு பாஜக தலைவர்களால் பூதாகரப்படுத்தப்பட்டது. தொழிற்சங்கங்கள் வளர்ச்சிக்கு எதிரானவை என்று குற்றம் சாட்டி விட்டு, தொழிலாளர்கள் வாழ்க்கைக்கான ஊதியம் பெறும் உரிமை, அர்த்தமுள்ள சமூக பாதுகாப்பு, கவுரவமான வாழ்க்கை ஆகியவை பறித்தெடுக்கப்படுகின்றன. மோடியின் 11 ஆண்டு ஆட்சி காலத்தில் தொழிலாளர் மீதும், நாட்டின் மீதும் கழுத்தை நெறிக்கும் மூலதன பிடி முழுமையாக நிறுவப்பட்டுள்ளது. எல்லா ஜனநாயக விழுமியங்களையும் நெறிமுறைகளையும் இடித்துத் தள்ளிவிட்டு, அரசாங்கமும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் நடத்தப்படுகிறது.
துன்பங்கள், தாக்குதல்கள், பேரழிவுகள் என்ற இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மோடி அரசாங்கமும் பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டமும் மதவாத துருவச் சேர்க்கையை தீவிரப்படுத்திட மூர்க்கத்தனமாகச் செயல்படுகின்றன. வெறுப்பு அரசியலை அதி உயர்ந்த மட்டத்துக்கு உயர்த்துவதற்கும், அடிப்படை பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி மக்களின் போராட்ட ஒற்றுமையை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள சமீபத்திய வெறுப்பு நிறைந்த, நஞ்சு தோய்ந்த முழக்கம் என்பது “நீங்கள் பிளவுபட்டீர்கள் என்றால், கொல்லப்படுவீர்கள்” என்பதாகும்.
இந்தத் தாக்குதலை துணிச்சலாக எதிர்கொண்டும் மோடி அரசாங்கம் மற்றும் பாஜக – ஆர்எஸ்எஸ்-ஸின் பிளவுவாதத் திட்டத்தை முறியடிக்கும் விதமாக உழைக்கும் மக்களும், ஏழைகளும் வீதிகளிலும் அதேபோல் தேர்தல்களிலும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை அறுதிப் பெரும்பான்மைக்கு கீழே தடுத்து நிறுத்தி, (2019ல் பெற்ற இடங்களை விட 63 தொகுதிகள் குறைவு) சர்வாதிகார மோடி இராஜ்ஜியத்திற்கு பெருத்த அடியை வழங்கியிருக்கிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க, போர்க்குணமிக்க, ஓராண்டு கால விவசாய இயக்கம், பிடிவாதமாக இருந்த மோடி அரசாங்கத்தை 3 கருப்பு விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தது. திட்டத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு தொழிலாளர்களின் சக்தி வாய்ந்த இயக்கங்களுடன், புதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக பழைய பென்சன் திட்டம் கோரி அரசு ஊழியர்கள் நடத்துகிற நீடித்த இயக்கமும் வீதிகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. எப்படி இருந்த போதிலும், மோடி அரசாங்கம், மக்கள் அளித்த தேர்தல் தீர்ப்புகளையும், வீதிப் போராட்டங்களின் செய்தியையும் தொடர்ந்து அவமதிக்கிறது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தனியார் மயம் உள்ளிட்ட தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் சார்பு நிகழ்ச்சி நிரலை எவ்வித தங்குதடையின்றி மோடி அராஜகமாக திணித்து வருகிறார். மக்கள் போராட்டங்களையும், தேர்தல் தீர்ப்புகளையும் மோடி அரசாங்கம் அராஜகமாக மீறி வருவதானது சர்வாதிகார மோடி இராஜ்ஜியத்திற்கு தீர்மானகரமான அடி கொடுக்கிற தொழிலாளர் வர்க்கத்தின், உழைக்கும் மக்களின் அனைத்தும் தழுவிய யுத்தத்தை வரவழைத்தே தீரும்.
இது போன்றதொரு சவாலான சூழலில், தொழிலாளர் வர்க்க இயக்கம் உயர்ந்த சிகரங்களை அடைய தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவும், தனது உறுதிப்பாட்டை வலிமைப்படுத்திக் கொள்ளவும், ஏஐசிசிடியு தனது 11ஆவது அகில இந்திய மாநாட்டை நடத்துகிறது. நமது நாட்டின் சின்னமாக விளங்கி வரும் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கும் அரணாக எழுந்து நின்று, நமது எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏஐசிசிடியு அறைகூவல் விடுகிறது. அகில இந்திய மாநாடு பெருவெற்றி பெற்றிட, சாத்தியமான எல்லா வகையிலும் ஆதரவு தந்து, நிதி வழங்கி உதவுமாறும் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தொழிலாளர் உரிமையை மீட்டெடுப்போம்!
உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, கவுரவம் மற்றும் சமத்துவத்துக்காகப் போராடுவோம்!
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய கிரிமினல் சட்டங்களை நீக்குவதற்காக, தனியார்மயத்தை தடுத்து நிறுத்துவதற்காகப் போராடுவோம் !
கவுரவமான வேலை, ஊதியம், பழைய பென்சன் திட்டத்திற்காகப் போராடுவோம்!
ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் உயர்த்திப் பிடிப்போம்!
ஆளும் வர்க்கத்தின் முகவரான பாசிச மோடி இராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடுவோம்!
ஏஐசிசிடியு வின் 11ஆவது அகில இந்திய மாநாட்டை பெரும் வெற்றி பெறச் செய்வோம்!
அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில்.
ஏஐசிசிடியு
All India Central Council of Trade Unions - AICCTU
தமிழ்நாடு.
3/254 B, ஜீவா தெரு
வண்டலூர்
சென்னை - 600048
aicctutamilnadu@gmail.com
தொடர்புக்கு : 98403 40741
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)