சென்னையை அடுத்துள்ள சுங்குவார் சத்திரத்தி லுள்ள ்கொரிய சாம்சங் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சாம்சங் இந்தியா ஒர்க்கர்ஸ் யூனியன் (SIWU) என்ற சங்கத்தைத் துவக்கினார்கள். அது சிஐடியு மையத்துடன் இணைக்கப்பட்டது. 1700 நிரந்தரத் தொழிலாளர்களில் 1350 பேர் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களானார்கள். சாம்சங் நிர்வாகமோ சங்கத்தை ஏற்க, அங்கீகரிக்க மறுத்தது மட்டுமின்றி, சங்கத்தின் பெயரில் சாம்சங் என்ற கம்பெனியின் பெயர் இடம் பெறக் கூடாது என்றது. சாம்சங் இந்தியா ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற பெயரில் சங்கத்தைப் பதிவு செய்யக்கூடாது என்றது.
சட்டப்படி சங்கத்தைப் பதிவு செய்வ தற்கு மாறாக, திமுக அரசின் தொழிலாளர் துறை சங்கப் பதிவை நிறுத்தி வைத்தது. சாம்சங் நிர்வாகம் தனக்கு சாதகமான தொழிலாளர்களைக் கொண்ட குழுவை ஏற்படுத்தி தொழிலாளர் கமிட்டி அமைத்து அதனுடன்தான் பேசுவேன் என்று அறிவித்தது.
இந்தச் சூழலில் பெரும்பான்மை சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும். தொழிற்சங்க சட்டப்படி முறையாக சங்கத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தொழிலாளர்கள் கோரிக்கையில் இணைந்து கொண்டது. எவ்வித சமரச முயற்சிகளும் சாம்சங் நிர்வாக தரப்பிலும், தொழிலாளர் துறை தரப்பிலும் எடுக்கப்படாத காரணத்தால் திட்டமிட்டபடி செப்டம்பர் 9ம் தேதியிலிருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சாம்சங் நிர்வாகத்தின் அடாவடிச் செயல்கள்
தொழிலாளர்கள் ஆலை வாயிலில் கூடி நிற்கக் கூடாது என்றது. சட்டத்துக்குப் புறம்பாக தொழிலாளர் உரிமைகளை மறுக்கிற தொழிலாளர் விரோத நடைமுறைகளை கையாண்டது. மனிதவள மேம்பாட்டுத் துறையிலிருந்து தொழிலாளர் குடும்பங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் கூறி, மிரட்டி பணிய வைக்கப் பார்த்தது. வேலை நிறுத்த நாட்களுக்கு சம்பளம் இல்லை என்றதோடு ஒவ்வொரு வேலை நிறுத்த நாளுக்கும் 8 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றது. செப்டம்பர் மாதம் வேலை பார்த்த 8 நாட்கள் சம்பளத்தையும்கூட கொடுக்க மறுத்தது. நிர்வாகத்திற்கு விசுவாசமான தொழிலாளர்களைக் கொண்டு பத்திரிகை, சமூக ஊடகங்களில் வேலை நிறுத்தத்திற்கு எதிராக பேச வைத்து விசமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றுவோம், தமிழகத்துக்கு முதலீடு வராது என்று நாடகமாடியது.
பலமுனைகளிலும் தாக்குதல்
தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிராக பத்திரிகையாளர் என்ற பெயரில் சில கார்ப்பரேட் ஜால்ராக்களும், பாஜக சங்கிகளும் சாம்சங்கிற்கு வக்காலத்து வாங்கினார்கள். ‘கம்யூனிஸ்ட்டுகள் ஆலையை மூடி விடுவார்கள், சீனக் கைப் பொம்மைகள், தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் செய்துவிடுவார்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தொழிலாளர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றார்கள். நிர்வாக திறமையின்மையால், வரி ஏய்ப்பு செய்ததால், தொழில்நுட்ப மேம்படுத்துதலைச் செய்யாததால், முதலாளிகளுக்கு இடையிலான போட்டியின் விளைவால் மூடப்பட்ட ஆலைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் மூடிவிட்டதாகக் கதை அளந்தனர்.
பாஜக மாநிலத் துணைத்தலைவர் திருப்பதி, மத்திய தொழிலாளர் அமைச்சர் ஆகியோர் நேரடியாகவே அந்நிய மூலதனத்தை பாதுகாக்க முதல்வர் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றனர்.
திமுக அரசும் தொமுசவும்
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று வந்த முதலமைச்சர் ஸ்டாலின் பன்னாட்டு சாம்சங் நிறுவனத்தின் மனம் கோணாமல் நடந்து கொண்டார். போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தமிழக காவல்துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டது. சாம்சங் தொழிலாளர் சங்கத்துக்கு ஆதரவான எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி கிடைக்கவில்லை. மத்திய தொழிற்சங்க கூட்டுக்குழு அறைகூவல் விடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் கூடுவதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டனர். இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் கைது, அவர்கள் மீது பொய் வழக்கு, நள்ளிரவில் சாம்சங் தொழிலாளர்கள் வீடுகளுக்கு காவல்துறை சென்று கைது என்று தனது மூலதன விசுவாசத்தை திமுக அரசு காட்டிக்கொண்டது. திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொழிற்சங்க உரிமை, கூட்டுப் பேர உரிமை மற்றும் தொழிற்சாலை ஜனநாயகத்திற்கான போராட்டத்தை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு சிறுமைப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டது.தொழில்துறை அமைச்சர் ராஜா, நடுத்தர, சிறு, குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கொண்ட குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழு போராட்டத்தில் ஈடுபட்ட சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்காமலேயே சாம்சங்கிற்கு விசுவாசமான தொழிலாளர்களை வைத்துப் பேசி ஒப்பந்தம் ஏற்கப்பட்டதாகக் கூறி தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என தன்னிச்சையாக அறிவித்தது. இதற்கெதிராக “சட்டமா, சாம்சங் கொட்டமா” எனக் கேட்டு தமிழ்நாடு முழுவதும் இயக்கங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, அந்திய நாட்டுக் கம்பெனியான சாம்சங்கிற்கென தனி விதிமுறைகள் இருக்கும் அல்லவா? என்றார். இவர்கள் இவர்களுக்கு வாக்களித்த தொழிலாளர்களுக்காக இருக்கிறார்களா? நம் நாட்டுச் சட்டத்தை மதிக்காத, லாப வெறிபிடித்த சாம்சங் போன்ற நிர்வாகங்களுக்காக இருக்கிறார்களா?
அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கக் கூட்டுக் குழுவில் உறுப்பினராக இருக்கும் திமுகவின் தொமுச இந்தப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஆதரவு அறிக்கையில் கையெழுத்திட்டு விட்டு பின்னர், தன்னை போராட்டத்தில் இருந்து முழுமையாகத் துண்டித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், சாம்சங் பிரச்சனையை அளவுக்கு மீறி ஊதிப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சிஐடியுக்கு ஆலோசனை வேறு வழங்கியது. தொழிற்சங்க இயக்கம் எந்த அரசாங்கத்தின் ஊது குழலாகவும் செயல்படக்கூடாது. அப்படி செயல்பட்டால் அந்த சங்கம் மதிப்பிழந்து போகும்.
நீதிமன்றத் தலையீடு
அமைதியான முறையில் போராடும் தொழிலா ளர்களை காவல்துறை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கூறிய பின்பு, சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களும் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர். சங்கப் பதிவுக்கான வழக்கு இப்போது உயர்நீதிமன்றத்தில் உள்ளது.
முடிவுக்கு வந்த 37 நாட்கள் வேலை நிறுத்தம்
தமிழகத் தொழிலாளர்கள், எஸ்கேஎம் உள்ளிட்ட விவசாய அமைப்புகள், வெகுஜன அமைப்புகள், கம்யூனிஸ்ட்கள் மற்றும் தோழமைக் கட்சிகள், சில எதிர்க்கட்சிகள், கொரியாவில் செயல்படும் சாம்சங் ஊழியர் சங்கம் ஆகியவை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனியின், தமிழக அரசின் ஒடுக்கு முறைக்கு எதிராக தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று உதவிகள் செய்தார்கள். நிதி வழங்கினார்கள்.
அமைச்சர்கள் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு இணைந்து கொண்டார். அக்டோபர் 15 அன்று தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்பு நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக மட்டும் (?) தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது, தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். தொழிற்சங்கத்தின் கோரிக்கைப் பட்டியல் மீது நிர்வாகம் பதிலுரை தாக்கல் செய்யும் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். கடும் அடக்குமுறைகளை சந்தித்த போதும் தொழிலாளர்கள் 37 நாட்கள் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அரசியல் அணி சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்களை கணக்கில் கொண்டு சிஐடியு சங்கம் முதல்வரின் தலையீட்டை மெச்சுவது தெரிகிறது. அடக்கு முறையின் போது கூட எல்லா விசயங்களும் முதலமைச்சருக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பியது. தொழில்துறை மூலதனத்தையும் தொழிலாளர் உரிமைகளையும் இரண்டு கண்களாக பாவித்து முதலமைச்சர் ஸ்டாலின் இரு தரப்பினரையும் இணங்க வைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது பற்றி பெருமைப்பட முரசொலி தலையங்கம் எழுதுகிறது. ஆனால், உண்மையிலேயே ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. இருப்பினும், சர்வதேச அளவில் ஊழல், அராஜகத்திற்குப் பெயர் பெற்ற சாம்சங் நிறுவனம் சுங்குவார் சத்திரம் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்பு பதிலுரை கொடுக்க வேண்டும் என்கிற நிலையே சாம்சங் தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிப்பதற்கான முதல் படியாகும். சங்க உரிமை தொடர்பான வழக்கு வந்தபோது அரசு மேலும் கால அவகாசம் கேட்டதிலிருந்து இது தெளிவாகிறது.
தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் அடக்குமுறை, சிறைக் கொடுமைகள், இரட்டை ஆயுள் தண்டனையை சந்தித்தனர் பிரிக்கால் தொழிலாளர்கள் அன்று. சில ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்சங் தொழிலாளர்கள் அந்த போராட்டச் செங்கொடியை இன்று உயர்த்திப் பிடித்துள்ளார்கள். சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமை. தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை இயற்ற வேண்டும். தொழிற்சங்க உரிமை, கூட்டுப்பேர உரிமைக்கான இந்திய அரசு ஏற்றுக்கொண்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்கள் 87 மற்றும் 98 ஐ அமல்படுத்துவதை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும் போது மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தொழிற்சங்க உரிமை, வேலை நேரம் உள்ளிட்ட நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் சொல்லுகிற தொழில் அமைதி முதலாளிகளின் மூலதனத்தை பாதுகாப்பதற்கான அமைதி.
கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறி, மூலதனத் தாக்குதல் இருக்கும் வரை உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்ட மும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)