சிதம்பரம் நடராசர் கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும்!
“கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்.5 ல் உத்தரவிட்டது.ராதாகிருஷ்ணன் என்பவர், ‘சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சொந்தமாக, தமிழ்நாட்டிலும், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள 3,000 ஏக்கர் நிலங்களை மீட்கக் கோரி’, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது விசாரித்த நீதிபதி தண்டபாணி அவர்கள் , ‘இதுதொடர்பாக விசாரணை நடத்தி 12 வாரத்திற்குள் நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
சிதம்பரம் நடராசர் கோவில் நிலங்கள், சொத்துக்கள், செயல்பாடுகள் மீதான சர்ச்சைகள் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகின்றன! கடந்த இருபதாண்டு காலமாக நடைபெறும் வழக்குகள், தீர்ப்புகள், கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் நடத்தும் சட்டவிரோதமான செயல்பாடுகள், வரவு செலவு முறைகேடுகள் என்பதும் தொடர்கதையாக உள்ளன.
நிலங்களை மீட்க கோரிய மற்றொரு தீர்ப்பு!
சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள், ‘சிதம்பரம் நடராசர் கோயில் 2008 முதல் 2014 ம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது, 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் காட்டப்பட்டுள்ளதால், கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், கடந்த செப்டம்பர் 19 ல், தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கோயிலுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை அறநிலையத் துறையின் தாசில்தார் நிர்வகித்து வருவதாகவும், அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்சகட்டமாக, மோசடிகள் செய்த தீட்சிதர்கள் தரப்பில் இருந்து, ‘சிதம்பரம் கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் தானமாக வழங்கிய 3,000 ஏக்கர் நிலத்தில், தற்போது 1000 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும், அதுகுறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தர வேண்டும்’ என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை, ‘கோயிலுக்கு 3,000 ஏக்கர் நிலம் இருந்த நிலையில், 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டதாக’ குற்றம் சாட்டியது.
“2,000 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்தும், 1000 ஏக்கரில் இருந்து ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே ஆண்டு வருவாய் கிடைப்பது குறித்தும்,” அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், “பக்தர்களின் காணிக்கை கணக்கில் வைக்காதது குறித்தும் 2017 - 2018ஆம் ஆண்டில் இருந்து 2021 - 2022ஆம் ஆண்டு வரையிலான வரவு - செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்யவும்” தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
மேலும், அந்த வழக்கில், தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது; கோயிலுக்குச் சொந்தமாக தற்போது எவ்வளவு பரப்பு நிலம் உள்ளது என்பது குறித்து தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
சிதம்பரம் நடராசர் கோவில் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டில் நிலவுவது சட்டத்தின் ஆட்சியா? தீட்சிதர்களின் ஆட்சியா? என்ற விவாதம் நீண்ட காலமாக நிலவுகிறது. தீட்சிதர்கள் தனிச்சொத்து போல சிதம்பரம் நடராசர் கோவில் இருப்பதால், கோவிலுக்கு பாத்தியப்பட்ட மொத்த விவசாய நிலங்கள், குடிமனைகள், கட்டடங்கள், அவற்றில் தற்போதுள்ள குத்தகை மற்றும் வாடகைதாரர்கள் பட்டியல் எதுவும் தமிழ்நாடு அரசிடம் இல்லை.
சங்கப் பரிவாரத்தின் ஆதரவு
சிதம்பரம் கோவில், தீட்சிதர்கள் மற்றும் தமிழ்நாடு மடங்கள், கோவில்களின் மீது, தமிழ்நாடு அரசாங்கம் கட்டுப்பாடு செலுத்தக் கூடாது என ஆர்எஸ்எஸ் சங்கப் பரிவாரம் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
கடந்த 2022 ம் ஆண்டில், மதுரையில், விசுவ இந்து பரிசத் நடத்திய அகில பாரத துறவியர் மாநாட்டில் “தமிழ்நாடு அரசாங்கம் கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் “ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வினையாற்றிய இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் மற்றும் தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத் துறை செயல்படாது.”எனவும், “ஆதீனங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடாது” எனவும் அறிவித்தார். தமிழ்நாடு அரசாங்கத்தின் இத்தகைய அடிபணிந்து போகும் போக்கு தீட்சிதர்களின் அராஜகத்தை அதிகரிக்கவே செய்திருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக நிதி முறைகேடுகள் மீது தொடர்ச்சியானப் புகார்கள் வந்ததால், 2022 ஜூன் மாதத்தில், அதுகுறித்து விசாரிக்க, ஆய்வுசெய்ய சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் இந்துசமய அறநிலையத் துறையினர் சென்றனர்; அப்போது, கோவில் நிர்வாக கணக்கு விவரங்களை தீட்சிதர்கள் தர மறுத்ததோடு, ஆய்வு நடத்த அரசு அதிகாரிகளை அனுமதிக்க முடியாது எனவும் விவாதம் செய்து அறநிலையத் துறையினரை வெளியே அனுப்பி வைத்தனர்.
சிதம்பரம் தீட்சிதர்களின் தொடரும் குற்றமய நடவடிக்கைகள்!
கடந்த 2019 ல் தனது மகனுக்கு அர்ச்சனை செய்யச் சென்ற லதா என்ற 53 வயது பெண்மணி, தீட்சிதரிடம் கேள்வி கேட்டதற்காக அவரது கன்னத்தில் ஒரு தீட்சிதர் அறைந்து விட்டார்; அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்யப்படவில்லை. அதேபோல, கடந்த 15.2. 2022 அன்று சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள் கடவுளை வழிபடச் சென்ற ஜெயசீலா என்ற தலித் பெண் ஒருவரை, இருபது தீட்சிதர்கள் மறித்து உள்ளே போகவிடாமல் தடுத்ததுடன், அவரின் சாதியைச் சொல்லி இழிவாகவும் பேசினர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது; முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளி தீட்சிதர்களின் பெயர்கள் கூடப் பதிவு செய்யப் படவில்லை; அவர்கள் கைது செய்யப்படவும் இல்லை.
பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, பக்தர்களை தாக்குவது, தட்சணையை பிரிப்பதில் தீட்சிதர்களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு தீட்சிதர் கொல்லப்பட்ட வழக்கு, கே.ஆடூர் செல்வராஜ் என்பவரை, நிலத்தரகர் ராயரை தீட்சிதர்கள் கொன்ற வழக்கு எனப் பல்வேறு குற்றமய / கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஆனால், எவரும் கைது செய்யப்படவில்லை.
கடந்த 2000 ம் ஆண்டில், தமிழில் பாடுவதை வலியுறுத்திய சிவனடியார் ஆறுமுகசாமியைத் தீட்சிதர்கள் தாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட அனைத்து தீட்சிதர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். மேலும், அதற்குப் பிறகு போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட, ‘சிற்றம்பல மேடையிலேறி தமிழில் பாடும் உரிமை’ யை தடுக்க, கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி பக்தர்கள் சிற்றம்பல மேடை ஏறுவதற்கு தடைவிதித்து, ‘தீட்சிதர்களைத் தவிர வேறு யாரும் சிற்றம்பல மேடை ஏறி வழிபடக் கூடாது’ என எழுதப்படாத விதியை தொடர்ந்து செயல்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு நிதி முறைகேடுகள் தில்லை நடராசர் கோவிலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சுமார் 3,000 ஏக்கர் நிலம் மற்றும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கட்டிடங்கள், நகர்ப்புற சொத்துக்கள் உள்ளன. ஆனாலும், சுமார் 400 ஏக்கர் நிலங்கள் பற்றிய கணக்கு மட்டுமே இந்து அறநிலையத் துறை வசமுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துக்கள், சுமார் 400 தீட்சிதர் ஸ்மார்த்த பிராமணர் குடும்பங்களின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்மார்த்த பிராமணர்கள் பிடியில் சிக்கிய சிதம்பரம் நடராசர் கோவில்!
சிதம்பரத்தில் அமைந்துள்ள ‘ஆடவல்லான்’ என அழைக்கப்படுகிற சிவனின் ஒரு கோலம் தில்லை நடராஜர் ஆவார். சிதம்பரம் நடராசர் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக பணியாற்றுகிற தீட்சிதர்கள், வேதங்கள், யாகங்கள் கற்ற வேதவேள்வி வழிபாட்டை மட்டுமே ஏற்கிற ஆரியமரபு சார்ந்த ஸ்மார்த்த பிராமணர்களின் ஒரு தனி வகையான சிறிய குழு ஆவர்.
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோழர் ஆட்சி காலத்தில், சிவன் கோவிலான சிதம்பரம் நடராசர் கோவில் நிர்வாகம் சிவனை தங்கள் கடவுளாக கொள்ளாத, (இந்திர வழிபாடு கொண்ட) ஸ்மார்த்த பிராமணர் தீட்சிதர்கள் பிடிகளுக்குள் சிக்கிக் கொண்டது வரலாற்று முரணாகும்.
தீட்சிதர்கள் சாம்ராஜ்யம் முடிவு கட்டப்பட வேண்டும்; சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்!
| சிவனை தங்கள் கடவுளாக கொள்ளாத, வேதவேள்வி வழிபாட்டை ஏற்கிற ஆரிய மரபு சார்ந்த ஸ்மார்த்த பிராமணர்களின் பிடியிலிருந்து மீட்டு, சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழ்நாடு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திட, சட்டமன்றத்தில் ஒரு தனிச் சட்டம் இயற்றிட வேண்டும்.
| சிதம்பரம் நடராசர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு, குத்தகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
| சிதம்பரம் நடராசர் கோவில் விசயத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தமிழ்நாடு அரசு நிலை நாட்டிட வேண்டும்.
|அனைத்து சாதி மக்களும் எவ்வித வேறுபாடோ பாரபட்சமோ இன்றி சுதந்திரமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடு செய்வது இந்திய அரசமைப்பு சட்டம் வழங்கும் உரிமையாகும்; அந்த உரிமை சிதம்பரம் நடராசர் கோவிலிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
|சிதம்பரம் நடராசர் கோவில் தெற்கு வாசல் நந்தனார் நுழைந்த வாசல் என்பதால் நீண்ட காலமாக சுவர் கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கிறது. அத்தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்றி தெற்கு வாசல் பக்தர்களுக்காக திறக்கப்பட வேண்டும்
| தில்லை நடராசர் கோவிலில் இதுவரை தீட்சிதர்கள் நடத்திய அனைத்துவகை சட்ட விரோதமான செயல்கள் பற்றியும், (கொலைகள், சாதிய வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள், பெண் பக்தர்களை அவமானப்படுத்துதல், குழந்தை திருமணங்கள், சிற்றம்பல மேடையில் தமிழில் பாடும் உரிமையை தடுப்பது, நிதி முறைகேடுகள், நில விற்பனைகள் போன்றவை) நீதிபதி தலைமையிலான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
| சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் அரங்கேற்றி வரும் குற்றமய செயல்பாடுகள் முடிவுக்கு கொண்டுவர கிரிமினல் தீட்சிதர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்; சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசாங்கம் தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)