தமிழ்நாடு, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார விநியோக நிறுவனங்கள், மத்திய அரசின் சூரிய ஆற்றல் கழகத்துடன் (SECI - Solar Energy Corporation of India) பி.எஸ்.ஏ ஒப்பந்தத்தில் (POWER SALE AGREEMENT - FOR SALE OF SOLAR POWER) கையெழுத்திட்டு இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துப் பெற்ற ஒப்பந்தங்களை வைத்து, அமெரிக்க முதலீட்டார்களை அதானி நிறுவனம் ஏமாற்றியிருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு  மோடியின் ஆருயிர் நண்பர் அதானியைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். இந்தப் பின்னணியில், கென்யா நாடு அதானி குழுமத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. கென்யா அரசுடன் அதானி குழுமம் மின் ஒப்பந்தம் செய்தபோதே அந்நாட்டு மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதேபோல், வங்க தேசம், இலங்கை போன்ற நாடுகளிலும் தற்போது அதானி குழுமத்திற்கு பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டின் மின் துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி, கடந்த மூன்று ஆண்டுகளாக, அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. சோலார் எனர்ஜி என்ற மத்திய அரசின் மின் நிறுவனத்தின் மூலமே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சோலார் எனர்ஜி அதிகாரிகள் இந்த லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கலாம். இருக்கட்டும். ஆனால், தமிழ்நாட்டில் அதானிக்கு மட்டுமல்ல, அம்பானி, வேதாந்தா, மிட்டல் போன்ற பல்வேறு பெருங்குழும நிறுவனங்களுக்கு கடல், மலை, விவசாயம் என தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழிக்க வழிவிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றதே. மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மாங்குளம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் உரிமத்தை, தூத்துக்குடி ஸ்டெர்லைட்  கொலைகார நிறுவனமான வேதாந்தாவின் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டிற்கு மோடி அரசு வழங்கியுள்ளது. இதனால், மதுரை மாவட்டத்தின் வனம், தொல்லியல், விவசாயம் மட்டுமின்றி அப்பகுதிகளின் வாழ்க்கையே அழிக்கப்படும் அபாயம் உள்ளது. அந்த மக்கள் எங்கள் உயிர் போனாலும் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடிய ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் 35 வயதே ஆன திவ்யா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது கணவரும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முன்நிற்பவர். தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் போராடும் மக்களைக் கண்டு கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் வேலையை  தமிழ்நாடு அரசுதான் செய்து கொண்டிருக்கிறது. அதற்கேற்பவே சமீபத்தில் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ஒன்றையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ்மிடாலம், மிடாலம், இனயம் போன்ற பல்வேறு பகுதிகளில் 1144.06 ஹெக்டேர் (2,827 ஏக்கர்) நிலப்பரப்பில் மோனோசைட், சிர்கான், இல்மனைட் போன்ற அரியமணல் வகைகளை அகழ்வு செய்வதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இவையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கான திட்டங்கள். இந்தத் திட்டங்களும் கூட ஒன்றிய அரசால் கொண்டுவரப்படுகிறது என்று செந்தில் பாலாஜி போல மற்ற அமைச்சர்கள் கூறலாம். தமிழ்நாட்டு மக்களை அழிக்க இந்த திட்டங்களை அனுமதித்தால் தமிழ்நாட்டில் எதற்காக ஒரு அரசு என்று மக்கள் கேட்கத்தான்  செய்வார்கள். இப்படி கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க திமுக அரசு அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமானவர்கள் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சாட்டிய பின்னரும் இதுவரை திமுக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்  இருந்து வருவது, வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா. இதுபோன்ற மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாடு சுடுகாடாகும். கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்ட மரபு கொண்ட தமிழக மக்கள் கொடிய கார்ப்பரேட் திட்டங்களை எதிர்த்து போராடுவார்கள். வெற்றி பெறுவார்கள்!