தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல், மழை, வெள்ளம் என்பது விதியாகவே மாறிக் கொண்டிருக்கிறது. நவம்பரில் எந்த மழையையும் தாக்குப்பிடிக்கத் தயார் நிலையில் இருக்கிறது தமிழ்நாடு அரசு என்று முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை பெருமையாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில், பெஞ்சல் புயல் வந்து புரட்டிப் போட்டது. 23ம் தேதி உருவான புயல் மெல்ல நகர்ந்து நவம்பர் 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. போதாக்குறைக்கு, சாத்தனூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் இருந்த வீட்டை, உடைமைகளை அனைத்தையும் இழந்துவிட்டுத் தெருக்களில் தவித்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெறும் 2000 ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்தது. மக்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார்கள். கடந்த ஆண்டைப்போலவே இப்பவும், ஒன்றிய மோடி அரசு பேரழிவுச் சேதத்தை பெயரளவுக்கான சேதம் என்றது. சீரமைப்புப் பணிக்கு ரூ.6675 கோடி ஒதுக்கீடு செய்யக் கேட்டால் வெறும் 945 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்தது. ஒன்றிய அரசு விடுவித்துள்ள அந்த 945 கோடி ரூபாயும், ஆண்டுதோறும் ஒதுக்கப்பட வேண்டிய பேரிடர் நிதி. இந்த வெள்ளப் பேரிடருக்காக தமிழ்நாடு கேட்ட தொகைக்காக அல்ல. ஒன்றிய அரசு ஒரவஞ்சனை செய்து கொண்டிருக்க, தமிழக அரசோ தட்டிக் கழித்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் டிசம்பர் 12,13,14 தேதிகளில் 2023 டிசம்பர் போலவே தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்கள் வெள்ளக்காடானது. குளங்கள் உடைந்தன. தரைப்பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் வீடுகள் தண்ணீரில் தத்தளித்தன. ஜெயலலிதாவுக்கு ஒரு செம்பரம்பாக்கம் என்றால், ஸ்டாலினுக்கு ஒரு சாத்தனூர் என்றானது. எந்தவொரு அரசும் கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பருவ மழைகள் பொய்த்து புயல் மழைகளே அதிகம் பெய்கின்றன. ஏரி, குளங்கள் தூர் வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளாலும் மழைத் தண்ணீர் எல்லாம் கடலை நோக்கிப் போகின்றன. இயல்பாக தண்ணீர் போய்க் கொண்டிருந்த கால்வாய்கள், வாய்க்கால்கள் எல்லாம் சுருங்கிப்போய் தண்ணீரின் போக்கையே மாற்றிவிட்டுள்ளது. நீர் நிலைகளும் தண்ணீர் வழிகளும் கட்டடங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன. இவைகள் எதுவுமே சரி செய்யப்படவில்லை. நீர் நிலைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, எளிய உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளுகிற வேலைதான் நடக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் கல்வித் தந்தை! என்று சொல்லிக் கொண்டு நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள கனவான்களும் அரசாங்கத்தால் கண்டு கொள்ளப்படுவதில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது ஒப்புக்கானதாகவும் வெறும் அறிவிப்பு என்பதாகவுமே இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவு 51 செ.மீ. மழை ஒரே நாளில் பெய்தால் யார்தான் என்ன செய்யமுடியும் என்று சொல்பவர்கள், அதனால் ஏற்பட்ட பேரழிவும் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் உணரமுடியும்தானே. அப்படியிருக்கும்போது வெறும் ரூ.2000மும் ரூ.5000மும் ஒரு குடும்பத்திற்கு எந்த மூலைக்கு? கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிவாரண உதவிகள் பெயரளவிற்கே கொடுக்கப்படுகின்றன. மீண்டும் அடுத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி வட தமிழகத்தில் கன மழை பெய்யும். தமிழ்நாடு ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி செப்பனிட்டால் 200 டிஎம்சி தண்ணீர் சேமிக்கமுடியுமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் முழுமையான மாற்று நடவடிக்கைகள் எடுக்காமல் வெறும் நிவாரணங்கள் வேலைக்காகுமா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)