பிரெஞ்சு காலனிய காலத்தில் துவக்கப்பட்ட மூன்று தனியார் பஞ்சாலைகளான சுதேசி காட்டன் மில்ஸ்(சவானா ஆலை 1828) ஸ்ரீ பாரதி மில்ஸ்(கேப்ளே ஆலை 1892) ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ்(ரோடியர் ஆலை 1898) காலப்போக்கில் தனியார் முதலாளிகளின் சுயநலத்தால் நட்டமாக்கப்பட்டு, நலிவடைந்து ஒன்றன்பின் ஒன்றாகக் கைவிடப்பட்டு மூடப்பட்டன. சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த இந்த ஆலைகள் மாநிலப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தன. ஆலைகள் மூடலுக்கு எதிரான பஞ்சாலைத் தொழிலாளர்களின் விடாப்பிடியான தொடர் போராட்டம், வெகு மக்களுடன் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் ஐக்கியபட்ட போராட்டங்கள் ஆட்சியாளர்களை நெருக்கி மூடப்பட்ட ஆலைகளை ஒன்றிய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களாக்கின. தேசிய பஞ்சாலைக் கழகம் (தமிழ்நாடு, புதுச்சேரி) துவக்கப்பட்ட 1974 ஆம் ஆண்டிலேயே முதலில் கழகத்துடன் இணைக்கப்பட்டு திறக்கப்பட்ட ஆலை ஸ்ரீ பாரதி மில்ஸ். 1985இல் சுதேசி பஞ்சாலை திறக்கப்பட்டு இணைக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு ஆங்கிலோ பிரெஞ்சு புதுச்சேரி அரசின் கீழ் ஒரு பொதுத்துறை நிறுவனமானது. இத்தகைய போராட்ட வெற்றி மரபுதான் புதுச்சேரி பஞ்சாலைத் தொழிலாளர்களின் மரபு.
இந்த மரபை ஒன்றிய பாஜக அரசு நன்கு தெரிந்திருந்தும், புதுச்சேரியின் மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும் எனில் அது குளவிக் கூட்டில் கை வைத்ததற்கு ஒப்பானது என நிச்சயமாக தொழிலாளி வர்க்கம் தெளிவுபடுத்தும்.
தற்போதைய மின்துறை 1942இல் பிரெஞ்சு இந்தியா எலக்ட்ரிக் கம்பெனி என்று தனியாரிடமிருந்தது. அதை பின்னர் காலனிய அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ‘ரெழி தெ லெக்திரசித்தே’ என்று அரசுடைமையாக்கியது. 1953இல் பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரி விடுதலையின் போது புதுச்சேரி அரசுக்கு மாற்றி ஒப்படைத்தது. அன்று முதல் மாநில அரசின் மக்கள் சொத்தாக நீடித்து வருகிறது. இதர மாநிலங்கள், ஒன்றிய ஆட்சி பரப்புகளில் மின் உற்பத்தி, கட்டுமானம், மின்விநியோகம் அனைத்தும் அரசு வாரியத்திடம் இருக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் மின்சாரம் ஒரு நேரடி அரசு துறை.
285 ஏக்கர் நிலம், 5 லட்சம் நுகர்வோர், அவர்களின் ரூ.300/- கோடி வைப்புத் தொகை, 3000 அரசு ஊழியர்கள், மேலும் நூற்றுக்கணக்கான தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர். 35,000 குடிசை வீடுகளுக்கு கட்டணமில்லா மின்சாரம், 7,100 வேளாண் கட்டணமில்லா மின் இணைப்புகள், ரூபாய் 400 கோடியில் முன் கட்டண மீட்டர்கள், மின் விநியோக உள்கட்டமைப்புகள் கட்டிடங்கள் என சந்தை மதிப்பில் ரூபாய் 2000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பில் இயங்கும் துறை. புதுச்சேரி 1972ஆம் ஆண்டிலேயே நகரம், கிராமம் என 100% மின்மயப்படுத்தப்பட்ட மாநிலம் ஆகும். மேலும் புதுச்சேரி மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் (புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம்) அரசு தொடர்பான அனைத்து மின் வேலைகளையும் மின்துறையே நேரடியாக செயல்படுத்தி வருகிறது.
கொரோனா நோய் காலத்திற்குப் பின்னர் 2022 மே 12 ஆம் நாள் ஒன்றிய நிதி அமைச்சர் ஆத்ம நிர்பார் பாரத் அபியான்( சுயசார்பு இந்தியா) என்ற திட்டத்தை அறிவித்து, ஒன்றிய ஆட்சி பரப்புகளின் மின்விநியோகத்தை நூறு விழுக்காடு தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற தடாலடி அறிவிப்பு செய்தார். கொரோனா காலத்திலும் அதற்குப் பின்னரும் புதுச்சேரி மின்துறைக்கு ஏற்பட்ட மின் இழப்பு, நட்டத்தையும் மேற்கோள் காட்டி ஒன்றிய மின் அமைச்சர் மின்துறையை தனியார்மயமாக்க புதுச்சேரி அரசை கட்டாயப்படுத்தி வருகிறார். அவர்் பல வகையிலும் மின்னிழப்பு (AT&C) தேசிய சராசரியை விட 2.2% அதிகம் என்கிறார். {தேசிய சராசரி 15.3%} தனியார் துறையில் 8% என்று வாதிட்டு புதுச்சேரியில் மின் நுகர்வு வசூல் 92.59% என்றும் இது அகில இந்திய சராசரியை விட 4.68% குறைவு என்றும் தெரிவிக்கிறார். 2021-2022இல் ரூபாய் 23 கோடியாக இருந்த நட்டம் 2022-2023இல் ரூ.131 கோடியாக உயர்ந்துவிட்டதால் செலவினங்களைக் குறைத்திட தனியார்மயம் அவசியம் என்று போதனை செய்கிறார். ஒன்றிய உள்துறை செயலரோ, மின் துறையின் சந்தை சொத்து மதிப்பை ரூபாய் 2000 கோடியிலிருந்து சுமார் 1000 கோடியாக குறைத்துக் காட்டுகிறார். தேய்மானம் போக வெறும் ரூபாய் 500 கோடிதான் என்று மக்கள் சொத்தை தங்கத் தாம்பாளத் தட்டில் வைத்து தனியாருக்கு தாரை வார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார். 2012ஆம் ஆண்டிலேயே புதுச்சேரி மின்துறையை தனியார்மயப்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்தை புதுச்சேரி அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்து ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது.
ஒன்றிய நிதி அமைச்சரின் தனியார்மய அறிவிப்பினால் கோபமடைந்த ஊழியர்கள் 2020ஆம் ஆண்டில் ஐந்து நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்த அழுத்தத்திற்குப் பணிந்து 31-12-2020, 20-1- 2021 தேதிகளில் மாநில முதல்வர் மீண்டும் ஒன்றிய அரசின் தனியார்மய திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி கடிதங்கள் எழுதுகிறார். ஒன்றிய அரசு அசைந்து கொடுக்காததால் 2021 ஜனவரி மாதம் மின்துறை ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர்களின் கடும் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்குப் பின்னாலும் ஒன்றிய பாஜக அரசு தனியார்மயத்தில் முனைப்புக் காட்டி மின்துறை விற்பனைக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரியபொழுது 2022இல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் மீண்டும் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகி ஒப்பந்த புள்ளி கோருதலுக்கு எதிராக தொழிலாளர்கள் தடையாணை பெறுகின்றனர்( WP 26692/22 WMP25757/2022) .
போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் சிபிஐ (எம்-எல்), சிபிஐ (எம்), சிபிஐ, திமுக, காங்கிரஸ், விசிக 2022ஆம் ஆண்டிலேயே மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. கடுமையான போராட்டங்களுக்குப் பின்னர், மின் துறையில் நூறு விழுக்காடு பங்குகள் தனியார் மயம் இல்லை; 51% பங்குகளே தனியாருக்கு விட உள்ளோம் என்று ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் திசை திருப்பி வருகிறது. இந்தத் திசை திருப்பும் முயற்சிக்கு எதிராக சிபிஐ (எம் எல்) பங்கேற்கும் இந்தியா கூட்டணிக் கட்சிகள், 5-9-2024இல் கடுமையாக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், தனியார்மயத்திற்கு எதிராகவும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு சுமார் ஆயிரம் பேர் கைதாகினர். மக்களின் கோபத்தை புரிந்து கொண்ட என் ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மின் கட்டண உயர்வில் 200 அலகுகள் வரை மானியம் அறிவித்தது. தனியார்மயப்படுத்துவதை திரும்பப் பெறுவது பற்றி மாநில பாஜக கூட்டணி அரசு கருத்து தெரிவிக்காததால், இந்தியா கூட்டணிக் கட்சிகள் 17.09.2024இல் நடத்திய மாநில அளவிலான கதவடைப்பு, மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் கைதாகி, என் ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, ஒன்றிய அரசு ஆகியவைகளுக்கு புதுச்சேரி மக்கள் எச்சரிக்கை செய்துள்ளனர் . புதுச்சேரியில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வெற்றி மரபை பின் தொடர்ந்து, மின் ஊழியர்கள் உழைக்கும் மக்களுடன் இணைந்து உயர்த்திப் பிடிக்கும் தொடர் போராட்டங்கள், ஆட்சியாளர்களுக்கு உறுதியாக அச்சமூட்டத் துவங்கிவிட்டது .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)