நினைவேந்தல் என்றால் அந்த தோழரின் பெருமைகளை பேசுவது, ஒரு நிகழ்ச்சி நடத்துவது எல்லாம் அவசியம்தான். ஆனால், அத்தோடு நின்று போய்விடக் கூடாது. மாறாக, அந்த தோழரின் லட்சியம், கனவு, நோக்கம் என்னவாக இருந்தது, அதை நிறைவேற்றிட நாம் இன்று என்ன பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதே அடிப்படையானது. 

இன்றைய அரசியல் சூழலில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என தோழர் என் கே விரும்பினார். கட்சி அதற்காக அனைத்து விதங்களிலும் முயற்சித்து வருகிறது. அதில் நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமானது.

சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்ட்ர, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை கவனிக்க வேண்டும். பிஜேபியின் நச்சு பரப்புரைக்கு நல்ல பதிலடி கொடுத்திருக்கிறார்கள் ஜார்க்கண்ட் மக்கள். முன்னாள் முதல்வர் சம்பை சோரன் போட்டியிட்ட ஒரு தொகுதியைத் தவிர வேறு எந்த மலைவாழ் மக்கள் தொகுதிகளையும் பிஜேபியால் வெல்ல முடியவில்லை. மலைவாழ் மக்களுக்கு எதிராக முஸ்லீம் மக்களை நிறுத்திட முனைந்த பிஜேபியின் முயற்சி வெற்றி அடையவில்லை. ஆனால், மகாராஷ்ட்ராவில் மிகக் கடும் முயற்சி எடுத்து, பல்வேறு தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றிருக்கிறது பிஜேபி. பதிவான வாக்குகளை விட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. மகாராஷ்ட்ர தேர்தல் முடிவுகள் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கிறது.

பிஜேபி ஆட்சியில் நாடு முழுவதும் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தை அகற்றி அதனிடத்தில் மனு ஸ்மிருதியை நிறுவிட அனைத்துவிதமான முயற்சிகளும் நடந்து வருகின்றன. அதனால்தான், நவம்பர் 26, இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள், முதல் ஜனவரி 26 இந்தியக் குடியரசு உருவாக்கப்பட்ட நாள் வரை “அரசமைப்புச் சட்டம் காப்போம்” எனும் பரப்புரை இயக்கத்தை மா-லெ கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்ட முன்னுரையிலிருந்து ”மதச்சார்பற்ற” எனும் சொல்லும் ”சோசலிசம்” எனும் சொல்லும் நீக்கப்பட வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அப்படி நீக்க முடியாது, அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பாராளுமன்றத்தில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அமெரிக்க நீதி மன்றத்தால் பிடி வாரண்டு வழங்கப்பட்ட அதானியை பாதுகாக்க எத்தனிக்கிறது மோடி அரசு. வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் என்கிற அமெரிக்க சட்டப்படி, லஞ்சம் கொடுத்து ஆர்டர் பெறுவது குற்றம். ஆனால் அதானி, சூரிய மின்சாரம் தயாரிக்கும் ஆர்டர் பெறுவதற்காக  பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு சுமார் 2400 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தார் என அமெரிக்காவின் உளவு நிறுவனம் நீதி மன்றத்தில் நிரூபித்ததனால் இந்த பிடி வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என கூறப்பட்ட அதானி ஊழல் குறித்து ஒரு விசாரணை நடத்தக் கூட மோடி அரசு தயார் இல்லை. அதற்கு எதிராகத்தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பத்து நாட்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன.  ஆனாலும், அதைப்பற்றி மோடி அரசு சற்றும் கவலைப்படவில்லை. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதானியின் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனம் போட்டிருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என எம் எல் கட்சி கோருகிறது.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என ஒரு சட்டம் 1991 ல் இயற்றப்பட்டது. அதன்படி, எந்த ஒரு கோவிலோ, மசூதியோ, தேவாலயங்களோ, எந்த ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதன் தன்மையை மாற்ற முடியாது என அந்தச் சட்டம் கூறுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி ஏற்கனவே இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. உச்ச நீதி மன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான எந்த வரலாற்றுச் சான்றுகளும் இல்லை என ஒத்துக் கொண்டது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்துக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக ஆக்கிரமிப்பாளர்களிடமே மசூதியை விட்டு விடுங்கள், மசூதியை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளுங்கள் என ஒரு அநீதியான தீர்ப்பை வழங்கியது. அதற்குப் பிறகு கியான்பாவி மசூதி முதல் சம்பல் மசூதி வரை அனைத்து முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களிலும் இந்துக் கோவில்கள் இருந்ததாக புனைந்து வெறுப்பு அரசியல் தூபம் போட்டு வளர்க்கப்படுகிறது. அப்படி யார் உரிமை கொண்டாடினாலும் அதை எந்த நீதிமன்றமும் விசாரணைக்கோ, அளவீடு செய்யவோ எடுத்துக் கொள்ளக்கூடாது என சமீபத்தில் வரவேற்கத்தக்கதோர் இடைக்கால தடை விதித்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.

புல்டோசர்  நீதி

மோடி – யோகி ஆட்சியின் சின்னமாக புல்டோசர் மாறி இருக்கிறது. பிஜேபி ஆட்சிக்கு எதிராக எழுதிவந்த ஒரு பத்திரிகையாளர், 3.4 சதுர மீட்டர் பொது இடத்தை ஆக்கிரமித்து விட்டார் என்று காரணம் கூறி அவரது வீடு முழுவதையும் உத்தரபிரதேச யோகி ஆட்சி புல்டோசர் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது. இது சட்டத்துக்கு விரோதமானது. ஒரு வேளை தவறாக இருந்தாலும் முழு வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கும் உரிமை அரசுக்கு கிடையாது. அது குற்றவாளியை தண்டிக்காமல் எந்த குற்றமும் செய்யாத அந்த குடும்பத்தையே தண்டிப்பதாகும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்தப் புல்டோசர் அநீதி மோடி-யோகி ஆட்சிகளுக்கு எதிராக நாம் தீவிர போராட்டங்கள் கட்டமைக்க வேண்டி இருக்கிறது.

நாடு முழுவதும் சுமார் 18 கோடிக்கும் மேலான விவசாயிகள் கடனில் உழன்று கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. விவசாய கடன் தொகையிலும், கடன் வாங்கிய  விவசாயிகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அந்த கடன்கள் எதையும் தள்ளுபடி செய்ய ஒன்றிய மோடி அரசோ, தமிழக திமுக அரசோ தயாராக இல்லை. அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகளும் விவசாயிகளை கடன் பொறியிலிருந்து விடுவிக்கப் போதுமானதாக இல்லை. மாறாக, நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிறது திமுக அரசு. ஆந்திர பிரதேசத்தில் ஜகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் சி பி கட்சி கடந்த சட்டமன்றத்  தேர்தலில் படுமோசமாக தோற்றதுக்கு இது போன்றதொரு சட்டத்தை நிறைவேற்றியதும் முக்கிய காரணமாகச்  சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட இதே மாதிரியான சட்டம் ஏற்கனவே பீகாரில் நடைமுறையில் இருக்கிறது. எப்படி ஒரே மாதிரியான சட்டம் எல்லா மாநிலங்களிலும் அமுலாகி வருகிறது எனப் பார்த்தால், ஒன்றிய அரசு ஏற்கனவே தயாரித்து இருக்கும் ஒரு சட்ட முன்மாதிரிதான் அதற்கு காரணம் என தெரிகிறது. அத்துடன் அதை அமுல்படுத்த மறுக்கும் மாநிலங்களுக்கு நிதி தர ஒன்றிய மோடி அரசு மறுக்கிறது. ஒன்றிய மோடி அரசின் அந்தச் சட்ட முன்மாதிரி ஏழை எளியவர்களின், சிறு குறு விவசாயிகளின் நிலங்களை கபடத்தனமாக கைப்பற்ற வழிவகுக்கிறது. அந்த நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகள் கையில் கொடுக்கிறது. அது தான் மகாராஷ்ட்ராவில் நில ஒருமுகப்படுத்தல் என்றும் ஆந்திராவில் நில உரிமை வழங்குதல் என்றும் பீகாரில் நில அளவெடுப்பு என்றும் தமிழகத்தில் நில ஒருங்கிணைப்பு என்றும் வெவ்வேறு நாமகரணங்களைக்  கொண்டிருக்கிறது. இது தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும். சமீபத்தில் பிகாரில் எம் எல் கட்சி நடத்திய நடை பயணங்கள் இதை ஒரு முக்கிய பிரச்சனையாக எழுப்பி உள்ளன. தமிழகத்திலும் இந்த நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தீவிரமாக எதிர்த்திட வேண்டும். நீர்நிலைகளில் நூறாண்டுகளாக வாழும் மக்களுக்கு பட்டா வழங்க மறுக்கும் அரசாங்கம், நீர்நிலைகளையும் கூட சீரழிக்க இந்தச் சட்டத்தின் மூலம் தயாராகி வருகிறது.

நூறு நாள் வேலைத் திட்டம் ஆறு நாள் வேலைத் திட்டமாக சுருங்கிப் போயிருப்பதை பல மாவட்டங்களில் காண்கிறோம். கிராமப்புரத்தில் இருக்கும் மக்களை நகர்ப்புரங்களை நோக்கி விரட்டுவதை நோக்கமாகக்  கொண்டு, பெரு முதலாளிகளுக்கு மலிவான உழைப்பு கிடைத்திட வழிவகை செய்யும் விதத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தயவுதாட்சண்யமின்றி குறைத்து வருகிறார் மோடி. தமிழக திமுக அரசும் அதே வழியைத்தான் கடைப்பிடித்து வருகிறது.

மதுரை அருகே டங்ஸ்டன் கனிம சுரங்கப் பணிகள் ஹிந்துஸ்தான் ஜின்க் என்கிற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே சுரங்கப் பணிகளை வழங்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இந்தச்  சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்திற்கு அதிமுக எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திமுக இதைத் தடுத்து நிறுத்தியே தீருவோம் என்கிறார்களே தவிர எப்படி என திட்டவட்டமாக எதுவும் தெரிவிக்கவில்லை. பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று அதைத் தடுக்கப் போவதாக தம்பட்டம் அடித்திருக்கிறார். ஆனால், டங்க்ஸ்டன் மட்டுமல்ல, கன்னியாகுமரி தாது மணல் சுரங்கம் உள்ளிட்ட அனைத்து புதிய திட்டங்களும் சாமான்ய மக்களின் வாழ்வாதாரங்களை அபகரிப்பது, விவசாயிகளை நிலத்தை விட்டு விரட்டி அடிப்பது, கார்ப்பரேட் மூலதனத்தின் கைகளில் மொத்த நிலங்களையும் அளிப்பது என்பதாகவே இருக்கின்றன. இதை மோடி தீவிரமாக செய்து வருகிறார். மாநில அளவில் அத்தகையவற்றை செய்வதில் திமுக ஆட்சியும் விதிவிலக்கல்ல என்பதைத் தான் பல நிகழ்வுகளும் நமக்கு உணர்த்தி வருகின்றன. மிகச் சமீபத்திய உதாரணம் சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் திமுக அரசு நடந்து கொண்ட விதமும், அதனை கையாண்ட விதமும் ஆகும். அறுதிப் பெரும்பான்மை தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்த சங்கத்திற்கு சங்கப்பதிவு பெறுவதற்கு கூட உயர் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைமைதான் கூட்டணி கட்சிகளுக்கே இருக்கின்றன என்பது மிகவும் அவலமான நிலைமை ஆகும். கார்ப்பரேட் ஆதரவு என்றால் அதில் பிஜேபி முதல் திமுக வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதற்கு இது ஒரு மிகப்பெரும் உதாரணம் ஆகும்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அனைவருக்கும்  கல்வி திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுக்கு நிதி தர முடியாது என ஒன்றிய மோடி அரசு கொக்கரிக்கிறது. மும்மொழிக் கொள்கை வேண்டாம், இரு மொழிக் கொள்கை வேண்டும் என்பது தாண்டி திமுக அரசுக்கு அதில் பெருத்த முரண்பாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, ஒன்றிய மோடி அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையே தனியாருக்கு கல்வியைத் தாரை வார்ப்பதுதான். ஆனால், மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதாக கூறும் திமுக அரசின் கல்விக் கொள்கையும் தனியாரிடம் கல்வியை வழங்குவதை நிறுத்துவதாகத்  தெரியவில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவு, கல்வி மாபியாக்கள் ஆதரவு, மது மாபியாக்கள் ஆதரவு போன்றவற்றில் இடதுசாரி கட்சிகள் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் பெருத்த முரண்பாடு இருப்பதாக தெரியவில்லை.

ஆர் எஸ் எஸ் – பிஜேபிக்கு எதிராக, அதன் மதவெறி அரசியல், வெறுப்பு அரசியல் போன்றவற்றுக்கு எதிராக, மாநில உரிமை பறிப்புக்கு எதிராக, கூட்டமைப்புவாதத்தை குலைப்பதற்கு எதிராக, திமுக உள்ளிட்ட பல தரப்பட்ட அரசியல் சக்திகளோடு இணைந்து குரல் கொடுப்பது என்பது பிஜேபி அல்லாத கட்சிகளின் மக்கள் விரோத அரசியலை ஆதரிப்பதாக பொருளாகாது. மாறாக, அத்தகைய மக்கள் விரோத அரசியலுக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் சிபிஅய் எம் எல் கட்சி எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறது.