பாசிசம் தன்னுடைய திட்டங்களைச் செயல்படுத்த அடிப்படையையே மாற்றும். அதற்காக அவை கல்வித் திட்டத்தை, நிலையங்களை, நூலகங்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை முதன்மையான நடவடிக்கையாக மாற்றும். ஒருபுறம் கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக் கொண்டு இந்தியாவின் சரித்திரத்தை இந்துத்துவாவின் சரித்திரமாக மாற்றும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்ட ஆர்எஸ்எஸ் – பாஜக, கல்வியை காவிமயமாக்கவும் கார்ப்பரேட்மயமாக்கவும் புதிய தேசிய கல்விக் கொள்கையைக்  கொண்டுவந்து எல்லா மாநிலங்களிலும் அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் திணித்துக் கொண்டிருக்கிறது. நீட், கேட் தேர்வுகள் எனக் கொண்டுவந்து ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவை காலி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு, தற்போது பல்கலைக் கழகங்களைச் சிதைக்கவும் அதன் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும்  திட்டத்தை பல்கலைக் கழகங்களின் மானியக்குழுவின் (யுஜிசி) வாயிலாகத் தொடங்கியிருக்கிறது. பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனம் மாநில அரசால் பரிந்துரைக்கப்படுபவரை அம் மாநிலத்தின் ஆளுநர் நியமிப்பார். ஆனால், தற்போது பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்றும் ஆளுநர் பரிந்துரைப்பவரே தேடல் குழுவின் தலைவராக இருப்பார் என்றும் யுஜிசி மற்றும் பல்கலைக் கழக உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களே உறுப்பினர்களாக முடியும் என்றும் புதிய விதிகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மதிக்காமல் ஆளுநர்களின் அடாவடிச் செயல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு சிறந்த உதாரணம். ஆர்எஸ்எஸ்காரரான ஆர்.என்.ரவியால் பல்கலைக் கழக துணைவேந்தர்களாக யார் நியமிக்கப்படுவார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைப் பறித்து ஒரு தனி நபருக்கு ஒரு மாநிலத்தின் உயர் கல்வியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் வழங்குகிறது இந்த விதிகள். இவை ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பது மட்டுல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும். அரசமைப்புக்கு விரோதமாக ஒரு திட்டத்தை ஒன்றிய அரசின் கீழ் உள்ள பல்கலைக் கழக மானியக் குழு போட்டுவிட்டு, அந்தத் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள் யுஜிசியின் திட்டங்களால் பயன்பெற முடியாது என்று அராஜகமாக அறிவித்துள்ளது.  சங்கிகளைத் துணை வேந்தர்களாக நியமித்து, சங்பரிவாரங்களின் இந்துத்துவ பாசிசக் கொள்கைகளை பாடத் திட்டங்களாக மாற்றுவதே இதன் நோக்கம். யுஜிசியின் இந்த விதிகளுக்கு எதிராக, உடனடியாக அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் விதமாக தமிழ்நாடு சட்டப் பேரவையிலிருந்து ஜனவரி 6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். ஜனவரி 8ம் தேதி மாநில அரசின்  அதிகாரத்தை, உரிமையைப் பறிக்கும் விதியை யுஜிசி அறிவித்தது. துணை வேந்தர் நியமனத்தில் மட்டுமின்றி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச நெறிமுறைகள் 2024 மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான நெறிமுறைகள் 2025 ஆகியவற்றையும் உருவாக்கியுள்ளது. இது முற்றிலும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இதுவும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வரவேற்கத் தக்கது. அதேவேளை கல்வியைத் தனியார்மயமாக்கும் விரும்பத்தகாத சில நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுவதும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவை பின்வாங்கப்படுவதும் தமிழ்நாடு அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.