ஸ்ரீலங்காவில் அந்த நாட்டின் அரசின் வெளிப்படையான ஆதரவுடன் 1983ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக்கொலையை அடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். அதற்கு முன்பே தமிழர்கள் மீது சிங்களர்கள் நடத்திய தாக்குதல்கள் இருந்தபோதிலும் மேற்சொன்ன நிகழ்வுதான் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவு பெருகச் செய்தது. அந்த ஆண்டு முதலே பல்வேறு தமிழீழப் போராளிக் குழுக்களும் தமிழகம் வந்தன. தமிழக மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் போராளிகளுக்குமிடையே பெருமளவிலான தொடர்பும் உறவும் தொடங்கியது அந்த ஆண்டில்தான்.
தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1937ஆம் ஆண்டிலிருந்தே உருவாக்கியிருந்த தமிழ் தேசிய உணர்வின் வெளிப்பாடாகத்தான் அன்று ஈழ விடுதலைப் போராளிகளுக்கான ஆதரவை வழங்கத் தொடங்கியவர்களில் பெரும்பாலும் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பெரியாரின் கருத்துகளின் தாக்கம் பெற்றவர்களாகவோ இருந்தனர்.
அன்று மு.கருணாநிதியின் தலைமையில் இருந்த திமுக, எம்ஜிஆர் தலைமையிலிருந்த அஇஅதிமுக ஆகியவற்றுக்கிடையே இருந்த முரண்பாடும் பகைமையும் ஈழப் போராளிகள் மீது அக்கட்சிகள் கொண்டிருந்த நிலைப்பாட்டிலும் வெளிப்பட்டன. அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளை முற்றிலும் தன்வசமாக்கிக் கொண்டார். ஸ்ரீலங்காவிலுள்ள இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என 1987 ஜூலை இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் இலங்கைக் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஈழப் போராளிகளில் விடுதலைப் புலிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ள மறுத்தனர் (ஈரோஸ் அமைப்பு எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.) அதற்கான காரணம் நியாயமானது: அது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எவரையும் கலந்தாலோசிக்காமல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். எனவே விடுதலைப் புலிகள் ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக இந்திய இராணுவப் படை அங்கு அனுப்பப்பட்டது. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்தின் அமைதிப் படை தமிழீழப் பகுதியில் ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதும், விடுதலைப் புலிகளின் கெரில்லாப் படையால் அவமானகரமான தோல்வியைத் தழுவி , ராஜிவ் காந்தியின் ஆட்சியின் இறுதிக் காலத்திலேயே முடிவு செய்யப்பட்டு வி.பி.சிங் ஆட்சியின் போது திரும்பப்பெறப்பட்டதும் வரலாறு.
ஆனால், இந்தியாவிலுள்ள முக்கிய நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் ஆகிய இரண்டும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தன. மா-லெ கட்சிகள், குழுக்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை மிகத் தாமதமாகவே ஸ்ரீலங்காவிலிருந்த தேசிய இனப் பிரச்சினையைப் புரிந்து கொண்டன. மாவோயிஸ்ட் கட்சி விடுதலைப் புலிகளின் கடைசி மூன்றாண்டுகளில் அவர்களை மிக தீவிரமாக ஆதரிக்கத் தொடங்கியது. இக்காரணங்களால், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் மிகப் பெரும்பாலோர் இடதுசாரி இயக்கங்களைச் சாராதவர்களாகவே இருந்தனர். சிலர் இடதுசாரி இயக்கங்களிலிருந்து வெளியேறியவர்களாகவும் இருந்தனர். 1969இல் நிறுவப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன் முதல் வேலைத்திட்டத்திலேயே இந்தியாவிலுள்ள தேசிய இனங்களின் சுய–நிர்ணய உரிமையைச் சேர்த்திருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது.
முள்ளிவாய்க்காலில் நடந்த இன ஒழிப்புக்குத் துணைபோன மன்மோகன் சிங் அரசாங்கத்தில் பங்கேற்றிருந்த திமுக, மதிமுக, பாமக அமைச்சர்களோ அக்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழகத்தில் இருந்த திமுக அரசாங்கமோ ஒன்றிய அரசாங்கத்தைக் கண்டனம் செய்யும் வகையில் பதவி விலகவில்லை; எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அஇஅதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதாவுக்கு அது சாதகமாயிற்று. ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டதை சாதகமாக்கிக் கொண்டு ஜெயலலிதா தமிழ்நாட்டு முதல்வராக எப்படி வந்தாரோ அதே போல விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வந்த அவர், விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு ஈழ மக்களின் ‘இரட்சகராக’த் தன்னைக் காட்டிக் கொண்டார்.
விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட அழித்தொழிக்கப்படும் தருணத்தில்தான் சீமான் தீவிரமான அரசியலுக்குள் நுழைந்தார். 2009இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 2011இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதாவின் அஇஅதிமுகவை ஆதரித்து பரப்புரை செய்ததுடன் திமுகவைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, கு.இராமகிருட்டிணன் போன்றோர் போல சீமான் எந்த அரசு ஒடுக்குமுறைக்கும் ஆளாகவில்லை; சிறைத் தண்டனை பெறவில்லை. தியாகு, சுப.வீரபாண்டியன், கவிஞர் இன்குலாப், கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் சூரியதீபன் போன்ற அறிவாளிகளைப் போலவோ விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் அவரது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள வன்னி அரசு ஆகியோரைப் போலவோ புலிகளுக்கு நெருக்கமாக இருந்தவரல்லர் சீமான். தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெருஞ்சித்திரனாரின் ஆதரவாளர்கள், மா-லெ இயக்கப் பின்னணியைக் கொண்டிருந்த தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் ஆதரவாளர்கள் போல கொடிய அரசு ஒடுக்குமுறைக்கு ஆளாகியவரல்லர் சீமான்.
ஆகவே தன்னைத் தனித்தன்மை கொண்டவராகவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவராகவும் காட்டிக் கொள்ளும் சீமானின் திரைப்படப் பின்னணியும் வாய்வீச்சுகளும் வரலாற்றறிவு பெற்றிராத புதிய தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை வசீகரித்தன. தன் அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் பெரியாரைப் புகழ்ந்து வந்த அவர், படிப்படியாக அவரை விமர்சிக்கத் தொடங்கினார். திராவிட இயக்க மரபையும் கம்யூனிச மரபையும் கொண்டிருந்தவர்களின் தமிழ் தேசியத்திலிருந்தும் ஈழ ஆதரவுச் செயல்பாடுகளிலிருந்தும் மாறுபட்டதாய் சீமான் போன்றவர்களின் தமிழ் தேசியம் வளரத் தொடங்கியது. அதாவது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறி தமிழ் நிலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்டவர்களுமான சமூகத்தினரை தமிழர்களல்லாத வேற்றினத்தார் என்று அவர்கள் மீது வெறுப்புப் பேச்சு பேசும் பாசிச தமிழ் தேசியத்தை வளர்த்து வந்தார். அந்த தேசியத்தின் அடிப்படையில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறமுடியாது என்று தெரிந்தும் இதுவரை நான்கு தேர்தல்களில் ‘நாம் தமிழர் கட்சி’ வேட்பாளர்களை - எந்தக் கூட்டணியிலும் சேராமல் – போட்டியிட வைத்தார். ஆனால் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடமாட்டார். கட்சிக்கும் அவருக்குமான செலவுக்கு எங்கிருந்து பணம் திரட்டுகிறார் என்பதைச் சொல்லமாட்டார். அவருடைய ஒரே நோக்கம் தன்னைத் தமிழகத்தின் தலைவராக ஆக்கிக் கொள்வதுதான். சங் பரிவாரம் இந்திய மக்களைப் பழங்கால, மூடத்தனமான, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கலாசாரத்தைப் பின்பற்றுமாறு அழைத்துச் செல்வதைப் போலத்தான், சீமான் நடைமுறைக்கு ஒவ்வாத இயற்கை வேளாண்மை போன்றவற்றைப் பரிந்துரைக்கிறார். இயற்கை மீது நேசம் கொண்டவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அவர் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும், வேளாண்மையைத் துடைத்தொழிக்கும் வேதாந்தா நிறுவனம், மீத்தேன் திட்டம் போன்றவற்றுக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார். அவருடைய தமிழ் பாசிசம் அனைத்திந்திய இந்துத்துவ பாசிசத்துடன் எளிதாக ஒட்டிக்கொள்ளக் கூடியது. அதனால்தான் கிறிஸ்தவரான அவர் தற்சமயம் திருநீறு பூசிக் கொள்கிறார். ‘சங்கி’ என்றால் தம்பி என்ற பொருள் என்று விளக்கம் கொடுக்கிறார்.
அவருடைய பாசிசக் கருத்தியலுக்கு எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டில் நிலவும் மூன்று முக்கியமான முரண்பாடுகளின் மூன்றாவது முரண்பாடு என்று ‘நாம் தமிழர் கட்சி ஆவண’த்தின் 37ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டவையாகும்: “தமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்கும் இடையே முரண்பாடு”. 39ஆம் பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளவை: “ 3ஆம் முரண்பாடுகளான முகமதியமும், கிறித்துவமும் தமிழ் தேசியத்தை ஒவ்வொரு காலத்திலும் ஆளுமை செலுத்தியவை; சட்டப்பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழி தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்துவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்”.“முகமதியத் தமிழரும் கிறித்தவத் தமிழரும் ஒவ்வொரு காலத்திலும் தமிழ்த் தேசியத்தில் ஆளுமை செலுத்தினர்”.
இதற்கு ஏதேனும் சான்றுகள் உண்டா? எந்தக் காலத்தில் தமிழ் இஸ்லாமியர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தினர்?
இவைபோன்ற ஆதாரமற்ற, அறிவுக்கொவ்வாத கூற்றுகளின் தொகுப்பாகக் கொண்டுள்ள ‘நாம் தமிழர் கட்சி ஆவண’த்தை வைத்துக் கொண்டு , திமுக, அஇஅதிமுக மற்றும் அவற்றுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் பிற கட்சிகள் மீது அதிருப்தி கொண்ட, வேலையில்லாத, வரலாற்றறிவு இல்லாத இளைஞர் கூட்டத்தை இன்றைய திராவிட அரசியல் கட்சிகள் என்ற லென்ஸின் மூலமாகப் பெரியாரை பார்க்கும்படி செய்கிறார் சீமான்.
இப்படி ஒவ்வொரு படியாக ஏறிவந்து அண்மையில் பெரியார் மீது மிக அருவருப்பான அவதூறொன்றைக் கூறியுள்ளார் சீமான். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் நாட்டுடைமையாக்கினால் தான் தனது அவதூறுக்கான ஆதாரத்தைக் காட்ட முடியும் என்கிறார். அப்படியானால் அந்த அவதூறை எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று கேட்பதற்குக்கூட பத்திரிகை நிருபர்களுக்கு நேர்மையும் தைரியமும் இல்லை. ஆனால் அண்ணாமலையும் தமிழிசை சவுந்திரராஜனும் தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் ஆனால் அது அருவருப்பானதாக இருப்பதால் பொதுவெளியில் வெளியிட முடியாது என்று கூறுகிறார்கள். ஏற்கெனவே பொதுவெளியில் ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட, கேட்கப்பட்ட அந்த அவதூறுக்கான ஆதாரம் பெரியார் நடத்திய ‘குடி அரசு’ ‘ விடுதலை’ போன்ற ஏடுகளில், இன்ன இதழில், இன்ன தேதியில் உள்ளது என்று சொல்வதற்கு அவர்கள் தயங்குவது ஏன்?
அம்பேத்கரை தன்வசமாக்க முயன்று, பின்னர் அவரை அமித்ஷாவை விட்டு இழிவுபடுத்தியது ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றைத் தவிர (அது அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகிய இருவரையும் இணைக்கும் கட்சி) இந்தியாவிலுள்ள வலுவான அம்பேத்கரியக் கட்சிகள் அனைத்தையும் தன்வசமாக்கியுள்ளது.
சங் பரிவாரத்தால் (கம்யூனிஸ்டுகளைத்) தவிர செரிக்கவே முடியாத, கிட்ட நெருங்கவே முடியாத சக்தியாகப் பெரியார் திகழ்கிறார். சங் பரிவாரத்தின் கருத்துநிலையின் முக்கிய கூறுகளான சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, இவையனைத்துக்கும் நியாயம் கற்பிக்கும் இந்து சாஸ்திரங்கள், கடவுள்கள் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிராக இருப்பவர் பெரியார். சீமான் பரப்பிவரும் அவதூறு பெரியாரை மட்டும் இழிவு செய்யக்கூடியது அல்ல; மாறாக தமிழகத்தில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் சமூக நீதி, மதச்சார்பின்மை, அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் அரசியல் மரபு ஆகியவற்றுக்குக் குழிபறிக்கும் நோக்கம் கொண்டது. சீமானின் அரசியலையும் அதன் வளர்ச்சியையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனவே இதைக் கூர்ந்து கவனித்து, சீமான் வடிவத்தில் இன்று நிலவுகிற சங் பரிவார கருத்துகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை ’இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளும் அதற்கு வெளியே உள்ள முற்போக்குச் சக்திகளும் வகுத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)