வேங்கைவயல் கொடுங்குற்றம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மூன்று தலித்துகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு, பாதிக்கப்பட்டவர்களையே, புகார் கொடுத்தவர்களையே குற்றம் சுமத்தியிருக்கிறது. முத்துராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் இம் மூவரும் சேர்ந்து ஊராட்சித் தலைவரின் கணவரைப் பழி வாங்கும் நோக்குடன் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் குடிக்கும் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தார்கள் என்று சிபிஐசிஐடி போலீஸார், மர்மமாகச் சென்று கொண்டிருந்த வழக்கிற்கு முடிவு எழுதியுள்ளார்கள். தங்கள் முடிவுக்கு ஆதரவாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் பேசிக்கொள்வதாக ஆடியோவும் சிரித்துக் கொண்டே அந்த மலத்தை படம் பிடிக்கும் வீடியோவும் காட்டப்படுவது மட்டுமின்றி அவை சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. நீதிமன்றத்தின் சான்றாவணங்கள் எப்படி, எதற்காக யாரால் பரப்பப்படுகின்றன? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் வழக்கில் தீர்ப்பு வரும் வரை குற்றம் சுமத்தப்பட்ட எவரும் குற்றவாளிகள் அல்லர். குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள், தண்ணீர்த் தொட்டியில் மலம் மிதப்பதை வெளியுலகிற்குக் காட்ட வீடியோ எடுத்தோம். அதையே தலைகீழாக மாற்றியுள்ளது போலீஸ் என்கிறார்கள். தாங்கள் செய்யும் குற்றத்தை தாங்களே யாராவது வீடியோ எடுத்துக் கொள்வார்களா? வேங்கை வயல் கிராமம் காவல் துறையால் முற்றுகையிடப்பட்டுள்ளது. வெளியாட்கள், அரசியல் கட்சியினர் அங்கு செல்ல முடியாது. செல்லக் கூடாது. அங்கு குடியிருப்பவர் கூட ஆயிரம் சோதனை, விசாரணைகளுக்குப் பின்புதான் அனுமதிக்கப்படுகிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அங்கு கெடுபிடி இன்னும் அதிகமாகியுள்ளது. வேங்கை வயலில் இறந்த மூதாட்டி ஒருவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்லக்கூட முடியவில்லை. அடக்கம் செய்வதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பது எதற்காக? இவையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குற்றப்பத்திரிகையை மறுத்து போராட்டம் நடத்துவதற்கு கூட உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கிறது. உயர்நீதிமன்றமோ வேங்கை வயல் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாமென்று கூறி அரசியல் செய்கிறது.
இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி, அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கியுள்ளதை கண்டித்துள்ள நிலையில், திமுகவும் தமிழ்நாடு அரசும் அமைதி காப்பது ஏன்? மலம் கலந்த கொடூர குற்றத்தை செய்தவர்கள் தலித்துகள் தான் என்று கூறுகிறதா திமுக அரசு? அரசு அப்படி கூறுமென்றால் இரண்டாண்டுக்குமுன் நடந்த குற்றத்தைவிட இது கொடுங்குற்றமாகும். எனவேதான், சிபிஐ விசாரணை கோரிக்கைகள் எழுகின்றன. நீதிமன்றம், அரசின் குற்றப்பத்திரிகையை நிராகரிக்க வேண்டும். உயர்நீதிமன்ற கண்காணிப்பில் மறுவிசாரணை நடத்த வேண்டும். உண்மை வெளிச்சத்துக்கு வரவேண்டும்.
உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் காப்பாற்ற, மூவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள் என்றே பொதுச்சமூகம் குற்றம் சுமத்துகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். உடனடியாக வேங்கைவயலில் இருந்து போலீஸ் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
வேங்கைவயல் தலித்துகளுக்கு நீதி வேண்டும், ஜனநாயகம் வேண்டும். இது வேங்கைவயலுக்கான நீதிமட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கான நீதி, தமிழ்நாட்டிற்கான ஜனநாயகம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)