பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்க ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்கிப் பார்க்கிறது. பெருமாள் முருகனின் மாதொரு பாகன் தொடங்கி, வைரமுத்துவின் ஆண்டாள், கருப்பர் கூட்டத்தின் கந்தசஷ்டிக் கவசம், அண்ணாமலையின் வேல் யாத்திரை வரை எதிலும் பருப்பு வேகாததால், இப்போது கந்தமலையா? சிக்கந்தர் மலையா? என கலகத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.     

திருப்பரங்குன்றம் மலையில் ஒருபுறம் அழகன் முருகன் இருக்கிறான். மறுபுறம் சிக்கந்தர் ஷா தர்கா  உள்ளது. இது தவிர காசி விசுவநாதர் ஆலயமும், கருப்பணசாமி கோவிலும் உள்ளன. சிக்கந்தர் ஷா தர்கா திடீரென இப்போது உருவானது அல்ல. 1968 ஆம் ஆண்டில் நெல்சன் என்பவர் எழுதிய மதுரை மேனுவேல் (Madurai Manuel) என்ற புத்தகத்தில், 500 அடி உயர ஸ்கந்த மலையில் முசல்மான் ஒருவரது கல்லறையும் அதையொட்டி மசூதியும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  அதற்கு முன்பே எஸ்.சி.ஹில் 1914 ஆம் ஆண்டு எழுதிய ‘யூசூப் கான் தி ரெபல் கமாண்டண்ட்’ (யூசூப் கான்: கலகத் தளபதி) என்ற நூலில்  சிக்கந்தர் அந்த மலையில் வாழ்ந்து மடிந்ததாகவும் அவ்விடத்திற்கு இஸ்லாமியர்களும் இந்துக்களும் செல்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் யூசூப் கானால் அங்கு மசூதி கட்டப்பட்டதென பாதர் ஸ்வார்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுக் குறிப்புகள் ஒரு புறம் இருக்க, நீதிமன்றங்களும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

1926 முதல் 1931 வரை மதுரை சார்பு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து பின்னர் பிரிவி கவுன்சில் என்ற மன்னர் மன்றத்திலும் வழக்குகள் நடந்துள்ளன. 12.05.1931 ஆம் நாள் சர்.ஜார்ஜ் லவ்ண்ட்ஸ் தனது தீர்ப்பில் கோவில் மற்றும் இசுலாமியார்களின் வழிபாட்டுத்தலங்கள் பற்றி  தனித்தனியே பிரித்துக் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த வழித்தடங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சிக்கந்தர்ஷா தர்ஹாவில் ஆடு பலியிடும் இடம், சமையல் கூடம் இன்றும் காணப்படுகிறது.

1991 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பிற்கு முன்னர், வழிபாட்டுத்தலங்கள் சிறப்புச் சட்டம் (Places of worship special provisions 1991)  எனும் மிக முக்கியமான சட்டம் இயற்றப்பட்டது. இந்தியா விடுதலையடைந்தபோது 15.08.1947 அன்று ஒரு வழிபாட்டுத்தலம்  என்னவாக,எப்படி  இருந்ததோ அதே நிலையில் அது தொடர்ந்து இருக்க வேண்டும். மாறாக அதை இன்னொரு வழிபாட்டுத் தலமாக  மாற்ற முயற்சித்தால் அவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என அச் சட்டம் கூறுகிறது. அயோத்தியில் பாபர் மசூதியைக் குறிவைத்து, தகர்த்து பிரச்சனை செய்து ஆதாயம் அடைந்ததுபோல் தமிழ்நாட்டையும் உத்தரப்பிரதேசம் போல் ஆக்கப்பார்க்கிறது சங்கிகள் கூட்டம். அதற்கு அவர்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றம் மலை மீது மாமிசம் சாப்பிட்டார்கள் இஸ்லாமியர்கள். மலையின் புனிதம் கெட்டுவிட்டது. திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம்! இந்து கோவில்களின் புனிதம் காப்போம்! அணி திரளுங்கள் என அழைப்பு விடுப்பது மட்டுமின்றி, சிக்கந்தர் தர்காவை மலையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிறார்கள் பாஜக-சங்கிகள். இதுநாள் வரை இல்லாமல் இப்போது திட்டமிட்டு, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில்,  கையிலெடுக்கிறார்கள் என்றால் மதக் கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகர்  ஆகலாம் என்ற உத்தரவுக்கு நேரெதிராக அனைத்து சாதியினரும் இந்து அல்ல, மாமிசம் சாப்பிடுபவர்கள் முட்டாள்கள், அவர்கள் இந்து அல்ல எனச் சொல்லும் சங்கிக் கூட்டம்தான் திருப்பரங்குன்றத்தைக் காக்க, இந்து பக்தர்கள் அனைவரும் திரளுங்கள் என  அழைப்பு விடுக்கிறார்கள். இதே மதுரையில் அனைத்து சாதி மக்களும் கோவிலுக்குள் நுழைந்தபோது மீனாட்சி அம்மன் கோவிலை இவர்கள்தான் பூட்டினார்கள்.  அரிட்டாப்பட்டியில் உள்ள தொன்மையான குகைக் கோவில்கள், டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் அழிக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பது தெரிந்தும் அக் கோவில்களைக் காப்பாற்ற இந்துக்களே வாருங்கள் என்று அழைப்பு விடுக்காமல், டங்ஸ்டனுக்கு ஆதரவாக நின்றவர்கள் இந்தச் சங்கிகள்தான். சங்கிகளின் நோக்கம் மதத்தை வைத்து அரசியல் செய்வதுதான். அண்ணாமலையின் வேல் யாத்திரைக்கு உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரிய வழக்கில் வழக்குரைஞர் வீ.ராகவாச்சாரி இது ஆன்மீக யாத்திரை என வாதாடினார். ஆனால், குருமூர்த்தியோ தந்தி தொலைக் காட்சி நேர்காணலில் இது அரசியல் யாத்திரைதான் என்று வெளிப்படையாகச் சொன்னார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு மூல காரணமாய் இருந்தவர் அயோத்தியின் கீழமை நீதிமன்ற நீதிபதி. இரவோடு இரவாக மசூதிக்குள் நுழைந்து ராமர் சிலையை வைத்தற்கு ஆதரவாய் தீர்ப்பளித்தார். அதுவே மசூதி இடிப்புக்கு வாய்ப்பாகிப் போனது. அதே போன்றுதான் திருப்பரங்குன்றம் கோட்டாட்சியர் இஸ்லாமியர் வழிபாட்டு முறைகளுக்கு தடை போட்டார். மதுரை மாவட்ட ஆட்சியரோ பிரச்சினையை கோட்டாட்சியர் கையாள்வார் என ஒதுங்கி நின்று கொண்டார். திருப்பரங்குன்றம் மலையில் நடைபெற்று வந்த தொடர் தற்கொலைகளைத் தடுக்க பத்தாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள காவலர்கள், 144 தடை  உத்தரவையும் மீறி கோவில் வளாகத்திற்குள்  நுழைந்த இந்து முன்னணி, சங்கிக் கும்பல்களை தங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் காரணமாகத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார்கள். தமிழ்நாடு அரசாங்க அதிகாரிகளும் காவல்துறையும் காவி மயமாகியிருப்பது தெரிகிறது. வேங்கை வயல் கிராமத்திற்குள் இறப்புக்குக் கூட யாரும் செல்ல முடியாதபடி காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்போது திருப்பரங்குன்றத்தில் மட்டும் ஏன் அவ்வாறு தமிழ்நாடு காவல்துறை தடை ஏற்படுத்திடவில்லை. திமுக அரசும் “இந்துக்கள் வாக்கு” என்பதற்காக இவற்றை அனுமதிக்கிறதா? பழங்கா நத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மதக் கலவரத்தை உண்டு பண்ணும் விதத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எச்.ராஜா பேசியதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஒரு பொறுப்புள்ள தலைவர் இப்படிப் பேசலாமா? என்று நயந்து பேசுகிறார் அமைச்சர்  சேகர் பாபு. நீதிமன்றம் சொன்னதால் பாஜகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியதாகச் சொல்லும் திமுக அரசு, சங்கிகளின் சதித் திட்டத்திற்கு எதிராக மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக நடக்கவிருந்த நிகழ்ச்சியை எதற்காகத்  தடுத்து நிறுத்த வேண்டும்.?  இதுநாள் வரை இல்லாத ஒரு பிரச்சனையைப் புதிதாக கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அதற்காக எதிர்வினையாற்றுபவர்கள் மீது நடவடிக்கை என்பது இந்துத்துவா சக்திகளுக்குத் தானே சாதகமாகும். 

ராமனின் வில்லும் முருகனின் வேலும் அனைவரையும் காக்குமென்றால் இராணுவத்திற்கும், காவலர்களுக்கும் நவீன ரக ஆயுதங்களும் தளவாடங்களும் எதற்கு?  இப்படிக்  கேள்வி எழுப்பாமல் தன்னலம் சார்ந்த வழிபாட்டு நம்பிக்கைகளில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் எளிய மக்களின் நம்பிக்கையை அரசியல் மூலதனமாக்கப் பார்க்கிறார்கள் இந்துத்துவ சங்கிகளும் அவர்களுக்கு வால்பிடிக்கும் சீமான்களும். வெறுப்பு அரசியலை சங்கிகள் தமிழ்நாட்டில்  விதைத்திடும்போது தமிழ்நாடு ஆட்சியாளர்கள் பகுத்தறிவு பெரியாரை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். மாறாக, சங்கிகளுக்குப் போட்டியாக முத்தமிழ் முருகன் மாநாடும், அம்மன் மாநாடும் நடத்திக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு.

திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் பிப்.18ல்  வேல் யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது இந்துத்துவ அமைப்பு. “இந்துக்களின் ஒற்றுமை மற்றும் உரிமையை நிலை நாட்டும் வகையில் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் அமைதியான முறையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  வேலை வைத்துக்கொண்டு அமைதிப் பேரணியாம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க சென்னையில் வேல் யாத்திரை நடத்த முடியாது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை நாட்டின் இறையாண்மை, மத நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தும் காரணத்திற்காகப் பயன்படுத்த முடியாது. சென்னையில் வேல் யாத்திரை நடத்தினால் பொது அமைதிக்கும் மத நல்லிணக்கத்துக்கும்  பாதிப்பை ஏற்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நமது பலம். எனவே, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் மத ரீதியிலான எந்தவொரு பேரணி, யாத்திரை, ஆர்ப்பாட்டங்களுக்கு போலீஸார் ஒரு போதும் அனுமதி அளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.  அதே நேரம் வழிபாடு தொடர்பான உரிமைக்குத் தடையில்லை என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் வசிக்கும்  மக்கள் இந்துத்துவா சக்திகளின் சதியை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள். மத ஒற்றுமைக்கு ஊறு விளைக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். திருப்பங்குன்றம், நாகூர், வேளாங்கண்ணி இவை மத நல்லிணக்கத்தை அடையாளப்படுத்துகின்றன. தமிழக மக்களும் மதச்சார்பின்மை மரபு கொண்டவர்கள். எனவேதான் சங்கிகள் திருப்பரங்குன்றத்தை தகர்க்க திட்டமிடுகிறார்கள்.

அதனால்தான் சங்கிகள் வெளியில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள்.  இந்துத்துவ மதவெறி சக்திகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சங்கிகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அதிகமான கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்குவார்கள். பெரியார் மண் பெரும் கலவர மண்ணாக மாறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசிற்கு இருக்கிறது.