பண்ணையடிமைகளின் அடிமைத்தளைகளை அறுத்தெறிய பச்சை வயல்வெளிகளுக்குள் விளைந்திட்ட செங்கொடிகளை நெஞ்சுரமிட்டு வளர்த்தெடுத்த தஞ்சை மண்ணில் பிப்ரவரி 1 அன்று காலை நுழையும் போதே சாலைகள் எங்கும் செங்கொடிகள் பறந்து 'வீழ்க பாசிசம் வெல்க இந்தியா' என்ற முழக்கத்துடன் நடக்கவிருக்கும் பாசிச எதிர்ப்புப் பேரணி, பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன. தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப் பட்டிருந்த திடலில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, சாருமஜூம்தார், வினோத்மிஸ்ரா, பகத்சிங், அம்பேத்கர், பெரியார் மற்றும் பொதுச் செயலாளர் திபங்கர் ஆகியோர் படங்கள் மேடையை அலங்கரித்தன.