கேரளா ஸ்டோரி திரைப்படமும் - லவ் ஜிஹாத் கட்டுக் கதையும், இந்தியாவில் காணாமல் போன ஆயிரக்கணக்கான பெண் சிறுமிகளும்
கடந்த ஏப்ரல் 22, 23 தேதிகளில், கேரள மக்களவை தேர்தல் பரப்புரையிலும், அதற்கடுத்து கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்ட தமிழ்நாடு பாஜக எம்எல்ஏ திருமதி வானதி சீனிவாசன் அவர்கள், ' கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் 5338. சிறுமிகள் லவ் ஜிஹாத் சதி வழியாக கடத்தப்பட்டுள்ளனர்' என்ற அவதூறு பரப்புரை மேற்கொண்டார். அவருடைய கேரளப் பிரச்சார நாளில், ஏப்ரல் 22ல், எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவும் செய்தார். "கடந்த 4 ஆண்டுகளில் கேரளாவில் 5338 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். ஆயினும்கூட, இந்த ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, திரு பினராயி விஜயன் அவற்றை வெறும் பாஜக பிரச்சாரம் என்று ஒதுக்கித் தள்ளுகிறார்!"
¶கேரளா மற்றும் இடது அரசாங்கத்தின் மீதான தாக்குதல் :-
பாஜக கட்சி மற்றும் தலைவர்கள், கேரளாவை ஜிகாதி மாநிலம் என்று நாடு முழுவதும் முத்திரை குத்தும் ஆபத்தான பிரச்சாரத்தின் மூலம் கேரளாவை, இடது அரசாங்கத்தை அவமதித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே இத்தகைய பரப்புரை தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும், சமூக ஊடகங்களிலும் கட்டமைக்கப்படுகிறது. அதாவது கேரளா தேச விரோத மாநிலம் என சித்தரித்து அதற்கு காரணம் இடது சனநாயக முன்னணி அரசாங்கம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முஸ்லீம் லீக் உடனான UDF கூட்டணி என்பதாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராகத் தொடர் பிரச்சாரம் கட்டமைக்கப்படுகிறது; கேரளாவை ஜிகாதி நாடாக சித்தரித்து இந்து வாக்குகளை தங்களுக்கு ஆதரவாக அணிதிரட்டும் முயற்சி நடக்கிறது. இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேனலில் 'கேரளா ஸ்டோரி' என்ற மூன்றாம் தர பிரச்சாரத் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த கேரளா ஸ்டோரி கதையை தான், '5338 கேரளப் பெண்கள் லவ் ஜிகாத் சதிவழியாக காணாமல் போனதாக' வானதி சீனிவாசன் போன்றவர்கள், பாஜக பேச்சாளர்கள் தூசு தட்டி மீண்டும் முன்வைக்கிறார்கள். இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவதன் மூலம் இந்து வாக்குகளை பாஜக பக்கம் துருவப்படுத்த தீவிரமான முயற்சிகள் நடக்கிறது
¶தி கேரளா ஸ்டோரி என்ற கட்டுக்கதை திரைப்படம்:-
‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 2023 ம் ஆண்டு மே 5 ந் தேதி வெளியிடப்பட்டது. கேரளாவில் உள்ள இளம் இந்து, கிறித்துவப் பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, லவ் ஜிஹாத் வழியாக அவர்கள் தீவிரவாதிகளாகவும் மாற்றப்படுகிறார்கள் !? என்பதுதான் திரைப்படத்தின் கதையாகும்.
பல்வேறு மத, இன அடையாளங்களுடன் ஒற்றுமையாக பெருமைப்படும் வகையில் மக்கள் வாழும் கேரளாவில், தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை முழுக்கமுழுக்க இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
"மூன்று பெண்களின் உண்மைக் கதை என இந்தப்படம் குறிப்பிடுகிறது. கதாநாயகி 'கேரளாவில் தங்கள் நர்சிங் கல்லூரி காலத்தில் அறைத்தோழியான ஆசிஃபா, தான் உட்பட மூன்று பேரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், அதற்காக போதை மருந்துகளை பயன்படுத்தியதாகவும், தனது ஆண் நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஆசிஃபா இதை நிகழ்த்தியதாகவும்' படத்தில் கதை சொல்கிறார். மேலும், படத்தின் கதைப்படி, 32000 கேரள இளம் பெண்கள் இஸ்லாமிய தீவிரவாத ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர கடத்தப்படுகின்றனர்.மேலும், இந்தப் படம் இந்திய முஸ்லீம்கள் எப்படி எல்லாம் ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பில் சேர்ந்தார்கள் என்று பல்வேறு கட்டுக்கதை காட்சிகளையும் கொண்டிருக்கின்றது; கேரளாவின் காசர்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளை தீவிரவாத ஆட்சேர்ப்பு முகாம்களாகவும் சித்தரிக்கிறது. கேரளா அடுத்த 20 ஆண்டுகளில், முஸ்லீம் மாநிலமாக மாறும் என துணை முதலமைச்சரே தெரிவித்ததாகவும் படத்தில் சொல்லப்படுகிறது. ‘ஒட்டுமொத்த கேரளாவும் ஒரு வெடிகுண்டின் மீது அமர்ந்திருப்பதாக’ படத்தில் சொல்லப்படுகிறது.
இசுலாமியர் வெறுப்பின் உச்சமாக திகழ்கிற இந்தப் படத்திற்கு எதிராக, உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 18.5.23 ல், உச்சநீதிமன்றமானது, கேரளா ஸ்டோரி திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பின்வரும் உத்தரவு பிறப்பித்தது.
"படம் கற்பனையே ! மதம் மாற்றப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 32000 மோ அல்லது வேறு எதுவோ என்பதற்கு உண்மையான தரவு இல்லை!" என்ற பொறுப்புத்துறப்பை படத்தில் வெளியிட வேண்டும் என்றது.எனினும், உச்சநீதிமன்ற உத்தரவு இப்படி இருந்தபோதிலும், நாடுமுழுவதும் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் சங்கிகள் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மை சம்பவமாகவும், " கேரளாவில் காணாமல் போனதாக NCRN யில் பதிவான பெண்கள் எல்லாம் கடத்தப்பட்டு ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பில் சேர்க்கப்பட்டார்கள்" என்பதாகவும் தொடர்ந்து அரசியல் செய்தார்கள்; தற்போதைய மக்களவை தேர்தல் பிரச்சாரத்திலும் தொடர்கிறார்கள்.
¶நாடுமுழுவதும், குசராத்தில், கேரளாவில்
காணாமல் போனவர்கள் பற்றி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சொல்வது என்ன?
கடந்த பத்தாண்டு மோடி ஆட்சியில், தினந்தோறும் பெண்கள், சிறுமிகள் மீதான அனைத்துவிதமான வன்கொடுமைத் தாக்குதல்களும் நடந்துகொண்டிருக்க, மல்லாந்து படுத்துக்கொண்டு, பாஜக தன்மீது காறி உமிழ்ந்து கொள்கிறது.
நாடு முழுவதும் காணாமல் போனவர்கள் பற்றிய கணக்கு எடுப்பது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழியாக 2016 ல் இருந்து தான் துவக்கப்பட்டது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB) என்பது, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து தொடர்ந்து வெளியிடுகிறது.
என்சிஆர்பி தரவுகளின்படி, இந்தியாவில்
2016 முதல் 2021 வரையிலான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 20.36 லட்சம் பேர் காணாமல் போயுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3.4 லட்சம் பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 2016ல் 2.9 லட்சமாக இருந்த காணாமல் போனவர்களின் எண்ணிக்கை, 2021ல் கிட்டத்தட்ட 3.9 லட்சமாக அதிகரித்தது. காணாமல் போனவர்களில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். 2016 இல் 60% ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை
2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் 68% க்கும் அதிகமாக உயர்ந்தது.
பொதுவாக, காணாமல் போனதாக காவல்துறையில் புகார் தரப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. இவற்றை தொகுத்து தான் புள்ளிவிவரங்கள் உருவாக்கப்படுகின்றன. தங்கள் வாழ்விடத்தில் இருந்து மக்கள் காணாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதன்மை காரணமாக, காதல், கடன், கல்வி தோல்வி, வாழ்விடத்தில் தாக்குதல்கள் அல்லது சிக்கல்கள் ஆகியவற்றால் சொல்லாமல் கொள்ளாமல் தானாக வெளியேறுதல் / ஓடிவிடுவது என்பது நடைபெறுகிறது. இதுவல்லாமல் விபச்சாரத்திற்காக பெண்கள் கடத்தப்படுவது நடைபெறுகிறது. வெவ்வேறு காரணங்களும் சொல்லப்படுகிறது. காணாமல் போனவர்களில் பாதிக்கும் அதிகமானோர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் NCRB கூறுகிறது.
¶ஆயிரக்கணக்கான சிறுமிகள் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குசராத்தில் காணாமல் போனார்கள்:-
இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் சிறுமிகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் NCRB தெரிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் ஒரு புதிய அறிக்கையும் வெளியிட்டது. இதில் 2021-ல் மட்டும் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்களில் 3,75,058 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் காணாமல் போகும் குற்றம் நடைபெறும் மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த இரு மாநிலங்களில் தான் 2019 முதல் 2021 வரை அதிகளவிலான பெண்கள் காணாமல் போயுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2019-ஆம் ஆண்டு 52,119 பெண்கள், 2020 ஆம் ஆண்டு 52,357 பெண்கள், 2021-ஆம் ஆண்டு 55,704 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிராவில் 2019-ல் 63,167 பெண்கள், 2020-ல் 58,735 பெண்கள், 2021-ல் 56,498 பெண்கள் காணவில்லை எனப் பதிவாகியுள்ளது.
குசராத்தில் 2016 - 20 ஆண்டுகளில் மட்டும் 41,321 பெண்கள் காணாமல் போனதாக NCRB தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சொல்கிறது. கடந்த ஆண்டில், 'கேரளா ஸ்டோரி' மீதான விவாதத்தை சங்கிகள் கட்டமைத்த காலத்தில், குசராத்தில் காணாமல் போனவர்கள் பிரச்சினை மீது மாபெரும் விவாதம் உருவாக, 41,321 பெண்களில் 1,328 பேர்கள் தவிர மீதி எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டதாக குசராத் காவல்துறை சொன்னது; ஆனாலும், இதுகுறித்து எந்தத் தரவுகளையும் குசராத் வழங்கவில்லை.
¶கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுமிகள் இதுவரை மீட்கப்படவில்லை :-
ஒட்டுமொத்தமாக, 2022 ஆம் ஆண்டில் 62,099 சிறுமிகள் கடத்தப்பட்டதாகவோ அல்லது கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக என்சிஆர்பி புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு முந்தைய கடந்த ஆண்டுகளில் கடத்தல் அல்லது கடத்தலுக்கு ஆளான மீட்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கை 40,219 ஆகும். ஆக, 2022ஆம் ஆண்டுக்குள் கடத்தப்பட்ட அல்லது கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 1,02,318 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரே கட்டுரை தலைப்புகள் வீதம் பிரித்தாலஆண்டில்[1] 63,513 சிறுமிகள் உயிருடன் மீட்கப்பட்டதோடு 590 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர் என்பதாகவும் NCRB சொல்கிறது. கடத்தப்பட்ட அல்லது கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 38,215 சிறுமிகளை 2022 ம் ஆண்டின் இறுதிக்குள் மீட்க முடியவில்லை.
'காணாமல் போன கண்டுபிடிக்கப்படாத பெண்கள்' பட்டியலில் 2023 ஆம் ஆண்டில் மேலும் காணாமல் போன 62,946 சிறுமிகள் இணைந்துள்ளனர். காணாமல் போன சிறுமிகளின் மொத்த எண்ணிக்கை 94,079 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 60,281 சிறுமிகள் ஒரே ஆண்டில் மீட்கப்பட்டனர் அல்லது கண்டுபிடிக்கப்பட்டனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2023 ம் ஆண்டின் இறுதிக்குள் 33,798 சிறுமிகள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது மீட்கப்படவில்லை.
¶ லவ் ஜிஹாத் தான் காரணமா?
கேரளா ஸ்டோரி கதை போல, குசராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர என அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன பெண்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆகிவிட்டார்களா என்பதை சங்கிப் பரிவாரங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
பெண்கள் காணாமல் போவது என்பது வெறும் கேரளா ஸ்டோரி அல்ல - இந்தியாவின் ஸ்டோரி ! இந்தியா முழுவதும் காணாமல் போன சிறுமியர் பிரச்சினைக்கு மாநில அரசுகள் தான் காரணமா? பாஜக ஒன்றிய அரசின் பொறுப்பு என்ன? மோடி பதில் சொல்ல வேண்டும் !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)