சுதந்திரப் போராட்டமும் பிரிவினையும்

அனுபவங்களிலிருந்து இந்தியா என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

கவிதா கிருஷ்ணன்

-கடந்த இதழ் தொடர்ச்சி

இந்திய சுதந்திர போராட்டத்தின் பல்வேறு பிரிவினரை "வன்முறையாளர்கள்" அல்லது "அகிம்சாவாதிகள்" என்று தனித்தனியே பிரித்து உண்மையிலேயே தேய்ந்துபோன, வழக்கொழிந்த வகைப்படுத்தலாகும் அவர்களுடைய குறிப்பான கருத்தியல் ஆதர்சனங்களையும் போர் தந்திரங்களையும் படித்தாராய்வது என்பது சோம்பேறித்தனமாக  முத்திரை குத்துவதை விட மேலான பொருளுள்ளதாக இருக்கும். அவர்கள் வன்முறையை அல்லது அகிம்சையை போதித் தார்களா? இல்லையா என்பதல்ல பிரச்சனை. பிரச்சனை என்னவென்றால் அவர்கள் இந்து மேலாதிக்க தேசியத்தை புறக்கணித்தார்களா இல்லையா என்பதும் அதை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தினார்கள் என்பதும் தான். இது விசயத்தில் போசும் பகத்சிங்கும் காந்தி, நேரு, மவுலானா ஆசாத் பக்கம் நின்று எவ்வித சமரசமும் இன்றி 'மதச்சார்பின்மை'க்காக நின்றார்கள். அதேசமயம் திலக், லஜபதி ராய் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதில் தீர்மானமாக இருந்த அதேநேரம் இந்து மேலாதிக்க கருத்தியல் விசயத்தில் ஊசலாட் டத்துடனிருந்தனர். முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ஆர்எஸ்எஸ் பிரிட்டிஷாருடன் கூடி குலாவியது. அதுபோல், முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்பிலும் உறுதியாக இருந்தது. எனவே ஆர்எஸ்எஸ்ஐ 'லெண்டில்' என்ற கல்லுக்கு உவமையாக கூறுகிறோம். அந்த கல் எங்காவது ஒளிந்து கொள்ளும். உங்கள் கண்ணில் இருந்தே கூட தப்பிவிடும். உங்களுக்குத் தெரியாமல் விழுங்குவதற்கு உங்கள் பல் அதை அனுமதிக் காது. அது சுலபமாக செறிக்க கூடியது அல்ல.

1920 கள்

1921ல் அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் மௌலானா ஹஸ்ரத் மொஹானி என்பவர்தான் முதலில் பூரண சுயராஜ்ஜியம் &- முழு சுதந்திரம் என்ற தீர்மானத்தை கொண்டு வருகிறார். 1929 வரை காந்தியும் காங்கிரசும் அந்தக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை.

1920களில் நடைபெற்ற வேறு வளர்ச்சி மாற்றங்கள் என்ன?

1925ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் உதயமாகி இருந்தது.

தொழிலாளர் வர்க்கப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருந்த வேளையில், 1922&23 காலக்கட்டத்தில், 4 துவக்ககால கம்யூனிஸ்ட் குழுக்கள் எழுந்து வந்த பின்ன ணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. 1917 போல்ஸ்விக் புரட்சியின் அதிகப்படியான தாக்கம், சௌரி சௌரா சம்பவத்தைத் தொடர்ந்து காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப்பெறும் முரண்பாடான முடிவு ஆகிய இரண்டும் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பின்புலமாக அமைந்தன.

தோழர் அரிந்தம் சென்னின்சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பாத்திரம்என்ற பிரசித்தி பெற்ற நூலிலிருந்து...

1920 மற்றும் 1930ன் துவக்க காலத்தில் கம்யூனிஸ்டுகள் மீது புனையப்பட்ட பேஷாவர், கான்பூர், மீரட் இன்னபிற சதி வழக்குகளிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகளை மிகவும் அபாயகரமான எதிரிகள் என்று அங்கீகரித்திருந்ததை அறிய முடியும். மீரட் சதி வழக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களின் உயர்ந்த அலை, தொழிலாளர்கள்,- விவசாயிகள் கட்சியின் வேகமான விரிவாக்கம், சைமன் கமிஷனால் தூண்டிவிடப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் புத்துருவாக்கம், பகத்சிங், அவருடைய தோழர்களின் புரட்சிகர நடவடிக் கைகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் தேசியத் தலைவர்களில் ஒரு பிரிவினர் நெருக்கமாக வந்தது ஆகியவை கண்டு பதட்டம் அடைந்த அரசாங்கம் 1929ல் தொடர் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு திருப்பித் தாக்கியது. அவற்றுள் மீரட் சதி வழக்கு, பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் தொழில் தகராறு மசோதா, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மீதான குற்றவியல் நடவடிக்கையும் அதைத் தொடர்ந்து தூக்கு தண்டனையும் முக்கியமானவையாகும். மார்ச் 1929ல் (மூன்று ஆங்கிலேயர்கள் உட்பட) 31 தொழிலாளர் தலைவர்கள் கல்கத்தா, பாம்பே மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் சதி வழக்கிற்காக மீரட் கொண்டுவரப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தை தங்களது கருத்தியல், நோக்கம், லட்சியங்களை பரப்புவதற்கான களமாக சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டனர். காந்தி,நேரு மற்றும் பலர் மீரட் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் பல்வேறு சிறைச்சாலைகளில் தங்களுக்கு அரசியல் கைதிகள் என அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களை ஆதரித்து செய்திகள் அனுப்பினர்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி அவர்களின் "நாகரீகமான" சட்ட அமைப்பு முறையின் திவால் தனத்தை, பாசாங்குத் தனத்தை கம்யூனிஸ்டுகள் குற்றவாளிக் கூண்டிலிருந்து கடுமையாக தோலுரித்துக் காட்டினார்கள். விசாரணை மற்றும் தண்டனையை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மட்டும் கிளர்ச்சிகளில் ஈடுபட வில்லை, ரோமைன் ரோலண்ட், பேராசிரியர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்களும் கூட நீதிமன்ற விசாரணைக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பினர். காங்கிரசுக்குள் இருந்தவர்கள் பூரண சுயராஜ்யம் என்பதை முன் நகர்த்தியதிலிருந்து முரண்பட்டு கம்யூனிஸ்டுகளும் பிற புரட்சியாளர் களும் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை என்பதோடு கூடவே சமூக பொருளாதார மாற்றம் என்பதையும் முன்நகர்த்தினர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த வகையில் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சொல்லிக் கொள் வதற்கு எதுவும் இல்லை.

அஸ்பகுல்லாவின் எச்சரிக்கை:

ககோரி தியாகிகளான ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்ப குல்லா கான், ராஜேந்திர லகிரி மற்றும் ரோஷன் சிங் ஆகியோர் தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் போதும்கூட இந்துக்களால் நடத்தப்படும் 'சுத்தி' இயக்கம் முஸ்லிம்களை சுத்தப்படுத்தி இந்துக்களாக மாற்றும் மதவாத விசத்தை பரப்பும் முயற்சிகள் குறித்தும், 'சுத்தி'யிடம் போட்டிபோட்டுக்கொண்டு இஸ்லாமை பரப்பும் தப்லிக் இயக்கம் குறித்தும் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தனர். அஸ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்ட டிசம்பர் 19, 1927க்கு 3 நாட்கள் முன்பாக அவர் எழுதிய கடைசி கடிதம் பைசாபாத் சிறையில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டது. அந்தக் கடிதத்தில் அவர் இந்து முஸ்லிம் இருவருக்கும் வேண்டுகோள் விடுத்தி ருந்தார்."இணைந்து வாழுங்கள்.ஒற்றுமையாக இருங்கள்.அல்லது நாட்டின் எதிர்காலத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள். இந்தியாவில் அடிமைத்தனத்துக்கு நீங்கள் பொறுப்பாக்கப் படுவீர்கள்"என்றார் அவர் "சண்டைகளை பின்னுக்கு வையுங்கள்/ அணிகளை நெருக்க மாக்குங்கள்/ இந்து முஸ்லிம் என்ற உங்களின் பாகுபாடு விசித்திரமாக உள்ளது" என கவிதை எழுதினார்.

இந்து மகாசபா பிரிட்டிஷ் படைக்கு ஆள் சேர்த்து கொண்டிருந்தபோது, நேதாஜி ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு இயக்கத்தை கட்டிக் கொண்டிருந்தார்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக ஆயுத நடவடிக்கை மேற்கொள்ள 'ஆசாத் ஹிந்த் போஜ்' என்ற அமைப்பை போஸ் ஏற்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜப்பான் மற்றும் பாசிச ஜெர்மனியோடு தன்னை இணைத்துக் கொண்டதற்காக விமர்சிக்கப்பட்ட அதேவேளை, அவர் மதச்சார்பற்றவராக இருந்தார் என்பதும் மறுக்க முடியாதது.

இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களை பிரிட்டிஷார் நிறுத்துகின்றனர் என்றும் பிரிட்டிஷார் போகும்போது மதவாத பதற்றமும் சென்றுவிடும் என்றும் போஸ் கூறியிருந்தார். ஒவ்வொரு தனிநபருக்கும் குழுக்களுக்கும் மதச் சுதந்திரமும் கலாச்சார சுதந்திரமும் உத்தரவாதப் படுத்த வேண்டும் என்றும் 'அரச மதம்' என்ற ஒன்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்தார். ஆசாத் ஹிந்த் பாஜ் தலைவர்கள் ஷாநவாஸ் கான், பிரேம் குருபக்ஸ் சிங், தில்லான், அப்துல் ரசீத், சிங்கார சிங், பதே கான் கேப்டன் மற்றும் மாலிக் முனவர் கான் அவான் ஆகியோரின் வழக்கு விசாரணையே காலனிய எதிர்ப்பு ஒற்றுமைக்கும் மதவாத அரசியலை  முறியடிப்பதற்கு ஆகப் பெரும் ஆதர்சமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முரணாக இந்து மகாசபா தலைவராக இருந்த சாவர்க்கர் இரண்டாவது உலக யுத்தத்தின் போது பிரிட்டிஷ் படைக்கு ஆட்களை தேர்வு செய்து கொண்டிருந்தார்.

" இந்தியாவின் பாதுகாப்பை பொருத்தவரை எவ்வித தயக்கத்திற்கும் இடமில்லாமல் பிரதிபலனுடன் கூடிய ஒத்துழைப்பு என்ற உணர்வின் அடிப்படையில் இந்துக்கள் நலனின் பால் உறுதியாக இருக்கும் வரை இந்திய அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளில் இணைய வேண்டும். காலாட்படை, கப்பற்படை, விமானப்படை என அனைத்திலும் எவ்வளவு பெரிய எண்ணிக்கையில் முடியுமோ அவ்வளவு எண்ணிக்கையில் கலந்து கொள்வதன் மூலம் ஆயுத தளவாட உற்பத்தி, வெடிமருந்து மற்றும் யுத்த கருவிகள் உற்பத்தி ஆலைகளில் நுழைவதை இந்துக்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும். இந்து மகா சபாகாரர்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக் காமல் குறிப்பாக வங்காளம், அசாமிலுள்ள இந்துக்களை தட்டி எழுப்பி ராணுவப் படையின் எல்லா பிரிவுகளிலும் செயலூக்க மிக்க விதத்தில் கூடுமானவரை சேர்க்கவேண்டும். (வி.டி.சாவர்க் கர், சமக்ரா சாவர்க்கர் வஸ்மயா, இந்து ராஷ்டிரா தர்ஷன் தொகுப்பு 6 மகாராஷ்டிரா பிரதேச இந்து சபா, புனே 1963. பக்கம் 460)

மற்றொரு இந்து மகா சபா மதவெறியரும் இப்போதைய சங் கும்பலின் கதாநாயகனுமான சியாம பிரசாத் முகர்ஜி வங்காளத்தின் பிரதம மந்திரியாக இருந்த முஸ்லிம் லீக்கின் பஸ்லுல் ஹக்கிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருந்த வங்காளத்தின் நிதி அமைச்சர் ஆவார். லீகும் மகா சபாவும் மதவாத அரசியலை வைத்து கடும் போட்டா போட்டியில் இருந்தாலும் பிரிட்டிஷாரின் யுத்த நடவடிக்கைகளில் இருவரும் பங்கேற்றனர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு ஆதரவளித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பிரதிநிதி ராஜினாமா செய்தபோது இந்து மகா சபாவும் முஸ்லிம் லீக்கும் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டன. ஜூலை 26,1942 அன்று வங்காளத்தின் பிரிட்டிஷ் கவர்னர் ஜான் ஹெர்பர்ட்டுக்கு முகர்ஜி எழுதிய கடிதத்தில் "யுத்த நேரத்தில் யாராவது உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் உணர்வுகளை கிளப்பிவிடும் வேலையில் ஈடுபட திட்ட மிட்டால், அது அப்போது இருக்கும் அரசாங்கத் தால் திட்டவட்டமாக எதிர்க்கப்படும்" என்று சொல்லி அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்திருந்தார்.

இந்திய மூவர்ணக் கொடியை ஆர்எஸ்எஸ் அவமதித்தது. அதே நாளில் ஒரு முஸ்லிம் தம்பதிகள் தேசியக் கொடியை வடிவமைத்தனர்:

ஆகஸ்ட் 14, 1947 அன்று ஆர்எஸ்எஸ்&ன் ஆங்கில  ஏடு ஆர்கனைசர் மூவர்ணக் கொடியை அவமதித்து "தலைவிதியின் காரணமாக அதிகாரத்துக்கு வந்தவர்கள் நமது கைகளில் மூவர்ணக் கொடியை கொடுக்கலாம். ஆனால், அது ஒருபோதும் மதிக்கப்படாது என்பது மட்டுமல்ல, இந்துக்கள் அதை உரிமை கொள்ளவும் மாட்டார்கள்.  3 என்ற வார்த்தையே சாபக்கேடானது. கொடி,மூன்று வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும் போது அது நிச்சயமாக மிக மோசமான உளவியல் தாக்கத்தை கொடுப்பதோடு நாட்டுக்கு கேடாக அமையும்." என்றார்.

அதே நாளில் சுதந்திரத்தை முன்னிட்டு 28 வயது சுரையா தியாப்ஜியும் அவர் கணவர் பத்ருதீன் தியாப்ஜியும்  தேசிய மூவர்ணக் கொடியை வடிவமைப்பு செய்ததற்கு பின் சுவையான கதை உள்ளது.

அவர்களின் மகள் லைலா தியாப்ஜி எழுதுகிறார்... சுதந்திரத்திற்கு 2 மாதங்கள் முன்பு அவரின் அப்பா பத்ருதீன் தியாப்ஜியை கொடி வடிவமைக்குமாறு நேரு கேட்டுக் கொண்ட தற்கிணங்க "ராஜேந்திர பிரசாத் தலைமையில் கொடி வடிவமைக்கும் குழுவை உருவாக்கி கொடி வடிவமைத்து தருமாறு கேட்டு எல்லா ஓவியப் பள்ளிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப் பட்டன. வடிவமைப்பு செய்து அவசரகதியில் நூற்றுக்கணக்கில் கொடிகள் அனுப்பி வைக்கப் பட்டன. ஆனால், அனைத்தும் திருப்திகரமாக இல்லை. பிரிட்டிஷ் தேசிய சின்னத்தின் தாக்கம் பெருமளவில் இருந்தது. பிரிட்டிஷ் கிரீடத்தின் இருபக்கமும் இருந்த சிங்கம் ஒற்றைக்கொம்பு குதிரை (uஸீவீநீஷீக்ஷீஸீ) என்பதற்குப் பதிலாக புலி, யானை அல்லது மான் மற்றும் அன்னங்கள் என்பதாக வடிவங்கள் வந்தன. கிரீடமே கூட தாமரை அல்லது கலசம் அல்லது அது போன்ற வடிவில் ஒன்று கொண்டு மாற்றி அமைக்கப் பட்டது" நேருவும் மற்ற அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க நேரம் கடந்து கொண்டிருந்தது."அசோக ஸ்தூபியின் மேல் சிங்கங்களும் சக்கரமும் கொண்ட அமைப்பு (லைலாவின்) பெற்றோர்கள் மூளையில் உதித்தது" (அவர்கள் இருவரும் அந்த சிற்பத்தை அந்தக் காலகட்ட நற்பண்புகளை ஆராதித்தார்கள்) எனவே எனது அம்மா அதை படமாக வரைந்தார், வைஸ்ரீகல் லாட்ஜில் (இப்போதைய ஜனாதிபதி மாளிகை) இருந்த ஒரு அச்சகத்தினர் அதை அச்சு வடிவில் கொண்டு வந்தனர். அதை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொண்டனர். அந்த நான்கு சிங்கங்கள் என்பது பின்னர் நமது சின்னம் ஆயிற்று.

அதற்குப் பிறகு சுரையாவும் பத்ருத்தினும் சேர்ந்து உருவாக்கிய கொடி தான் இன்று தேசியக் கொடியாக உள்ளது. பிங்காலி வெங்கையா வடிவமைத்த காங்கிரஸ் கட்சியின் மூவர்ணக் கொடியில் ராட்டை சின்னத்திற்கு பதிலாக அதே அசோகச் சக்கரத்தை கொண்டு கொடி மாற்றி அமைக்கப்பட்டது.

"எனது அம்மாவின் மேற்பார்வையில் ரைசினா மலை மேல் கன்னாட் பிளேசிலிருந்த எட்டி டைலர்ஸ் & டிராப்பர்ஸ் கடையில் கொடி தைக்கப்பட்டது. அந்த முதல் கொடி உருவானதை எனது அப்பா கவனித்துக் கொண் டிருந்தார். இந்த அன்பு, தனிப்பட்ட பங்களிப்பு, ஒவ்வொரு நுணுக்கமான விசயத்திலும் கவனம் ஆகியவை தேசிய மூவர்ணக் கொடியை சிறப்பாக்கியது." என்று லைலா எழுதுகிறார். லைலாவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் பிளவின் வடுக்கள் இருந்தாலும் ஒற்றுமையும் பகிர்தலும் இருந்தது. சுதந்திரத் திற்கான போராட்டம் பல்வேறுபட்ட மக்களை ஒன்றாகக் கட்டிப்போட்டது.

அதிலிருந்து மக்கள் சாதி, சமூகம் என்றில் லாமல் பரந்த அடையாளமான இந்தியர்கள் என்பதில் தங்களை பிணைத்துக் கொண்டார்கள்.

நாட்டின் பிளவை ஊக்குவித்தது யார்? எதிர்த்தது யார்?

மோடி ஆகஸ்ட் 14 பிரிவினை துயர நினைவு நாளாக அறிவித்தார். அந்த நாளை, பிரிவினை துயரங்களுக்கு பாகிஸ்தானும் முஸ்லிம்களுமே காரணம் என காட்டுவதற்காக வும் இன்று முஸ்லிம்களுக்கு அதுபோல் ஒரு துயரை இந்துக்கள் மீண்டும் நிகழ்த்திக் காட்ட வெறுப்பைத் தூண்டும் விதமும் அதை பயன்படுத்த நினைத்தார்.

டெல்லியிலும் ஹரியானாவிலும் பாஜகவும் அதைச் சார்ந்த தீவிர இந்து மேலாதிக்க அமைப்புகளும் முஸ்லிம்களை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து நடத்திய பெரும் பேரணிகளுக்கு எவ்வித வரம்பும் இல்லாமல் அனுமதி அளித்தது. அது போல் இந்து மேலாதிக்க இணையதளக் குழுக்கள் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்களை இணையவழியில் ஏலம் நடத்தியது ஆகியவற்றை வெறுப்பு தயாரிப்புகள் நடந்து வந்தமைக்கான ஆதாரங் களாகப் பார்க்க முடியும்.

நாட்டுப் பிரிவினை மற்றும் சுதந்திரத்தின் பின்னணியில் ஆர்எஸ்எஸ்ம் இந்து மகா சபாவும் பிரிவினைக்கு காந்திதான் காரணம் என்று சொல்லி அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தன. இந்த வெறுப்புதான் கோட்சேவை தீவிரவாதி யாக்கி காந்தியை, அவர் சுட்டுக் கொலை செய்யும் வரை சென்றது. இப்போது, மோடி தலைமையின் கீழ் கழிவறை தூய்மை திட்டத்தின் திருஉருவாக காந்தி சுருக்கப்பட்டிருக்கிறார். மேலும்  இப்போது பிரிவினைக்கு நேருதான் காரணம் என்று சொல்லப்பட்டு வெறுக்கப் படு கிறார். படேல் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்று தவறாக சொல்லப்படுகிறது. உண்மை யிலேயே, மவுண்ட்பேட்டனின் பிரிவினைத் திட்டத்தை படேல்தான் முதலில் ஏற்றுக் கொண்டார்.

ஜின்னாவுக்கு முன்னதாகவே சாவர்க்கர் இரண்டு தேசம் கோட்பாட்டை முன்மொழிந்தார்.

1937ல் அகமதாபாத் கர்னாவதியில் நடைபெற்ற அகில இந்திய இந்து மகாசபா கருத்தரங்கின் தலைமை உரையில் சாவர்க்கர் "இன்று இந்தியாவை ஒற்றைத் தன்மை உள்ள ஒரே மாதிரியான தேசம் என்று கருதப்படக் கூடாது. ஆனால், அதற்கு மாற்றாக இந்தியா இந்து, முஸ்லிம் என்ற இரண்டு முக்கியமான தேசங்களைக் கொண்டதாக இருக்கிறது எனக் கூறினார். (சமக்ரா சாவர்க்கர் அட்மின் பகுதி 6, பிராந்திக் இந்து மகா சபா வெளியீடு 1963&65 பக்கம் 296)

1940ல்தான் ஜின்னா, பாகிஸ்தான் மற்றும் இரண்டு தேசம் என்னும் கோட்பாட்டையும் உருவாக்கினார்.

சியாம பிரசாத் முகர்ஜி பிரிவினைக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் உறுதிபடக் கூறுவதுபோல் "எதார்த்தத்தில் 1944லிலிருந்து முகர்ஜி பிரிவினையை ஆதரித்து வந்தார். ஒருமுறை கல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் வங்கத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினார். 1947 மே 2 அன்று இந்தியா ஒற்றுமையாக இருந்தால் கூட வங்கதேசத்தை பிரிக்க வேண்டும் என கேட்டு ரகசியமாக வைஸ்ராய் மவுண்ட் பேட்டனுக்கு கடிதம் எழுதினார். வங்காள பிரதம மந்திரி ஹுசைன் சுக்ரவர்த்தியும் இரண்டு பெரும் காங்கிரஸ் தலைவர்களான சரத் சந்திர போஸ் (சுபாஷ் சந்திரபோஸின் அண்ணன்) கிரன் சங்கர் ராய் ஆகியோர் ஒன்றுபட்ட சுதந்திர வங்காளம் என முன் நகர்த்திய போது, முகர்ஜி அதை மூர்க்கமாக எதிர்த்தார். மாறாக அவர் இரண்டு தேசம் என்ற அடிப்படையில் மத ரீதியிலான பிரிவினையை விரும்பினார்.

பிரிவினைக்கு எதிராக முஸ்லிம்கள்.

இந்து மகாசபையும் முஸ்லிம் லீக்கும் இந்து மற்றும் முஸ்லிம் சமூக மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சித்தபோது, பல பிரசித்திபெற்ற முற்போக்கு முஸ்லிம்கள் பிரிவினை முன்வைப்புக்கு எதிராக மிகுந்த ஈடுபாட்டுடன் பிரச்சாரம் செய்தனர். அவர்களுள் முதன்மையானவராக மௌலான அபுல் கலாம் ஆசாத் இருந்தார். இந்தப் பிரிவினை முன் வைப்பை படேல் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரை இணங்க வைக்க ஆசாத் எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லைசுதந்திரத்தை வென்ற இந்தியா என்ற புத்தகத்தில் ஆசாத், "இந்த அடிப்படையில் சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்டு அதை நோக்கி நேர்மையாக உழைத்தால் மதவாத சந்தேகங்களும் தப்பெண்ணங்களும் விரைவிலயே மறையும். நாட்டின் உண்மையான பிரச்சனை பொருளாதாரம். மதவாதம் அல்ல. வேறுபாடு வர்க்கங்களுக்கு இடையிலானதே ஒழிய  குழுக்களுக்கிடையிலானதல்ல. நாடு சுதந்திரம் அடைந்து விட்டால் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகிய எல்லோருமே உண்மைலேயே என்னதான் பிரச்சினை என்பதை உணர்ந்து கொள்வார்கள். அப்போது மதவாத வேற்றுமைகள் தீர்க்கப்பட்டு விடும். படேல் பிரிவினைக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் மற்ற கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட தயாராக இல்லை. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நான் அவருடன் விவாதித்திருக்கிறேன். நாம் பிரிவினையை ஏற்றுக்கொள்வோமானால் அது இந்தியாவுக்கு நிரந்தர பிரச்சினையை உருவாக்கும் என்று நான் அவரிடம் குறிப்பிட்டேன். பிரிவினையால் மதவாத பிரச்சினையை தீர்க்க முடியாது. பிரிவினை மதவாதத்தை நாட்டில் நீடித்து நிலைத்தி ருக்கக்கூடிய ஒரு அம்சமாக ஆக்கிவிடும்" என்று எழுதினார்.

மௌலானா ஆசாத் எப்படி ஒரு தீர்க்க தரிசியாக இருந்திருக்கிறார்? ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் மோடி ஆட்சி, பிரிவினையை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வடுவாக மாற்ற முயற்சிக்கிறது. 1946, ஜூலை 17 அன்று தீர்க்க தரிசனத்தோடு ஆசாத் சொன்ன வார்த்தைகள் அபாயகரமாக நிஜத்தை நெருங்கிக் கொண்டிருக் கிறது. “முஸ்லிம்கள் ஒரு இரவு கடந்து விழித்து பார்க்கும் போது தாங்கள் சம்பந்தம் இல்லாதவர் களாக, அந்நியர்களாக, தொழில்துறையில், கல்வியில், பொருளாதாரத்தில் மாறிவிட்டதை கண்டுகொள்வார்கள். உருவாக்கப்படும் கலப் படமற்ற இந்து ராஜ்ஜியத்தின் தயவிற்கு அவர்கள் (முஸ்லிம்கள்) விடப்படுவார்கள்”.

அல்லா பக்ஸ்:

"மதவாதிகளை கூண்டுக்குள் அடையுங்கள்"

ஏப்ரல் 27, 1940 அன்று டெல்லியில் துவங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அகில இந்திய சுதந்திர (விடுதலை) முஸ்லிம் மாநாட்டில் 75000க்கும் குறைவில்லாத முஸ்லிம்கள் கூடினர் என்று பத்திரிகைகள் பதிவு செய்துள்ளன. சிந்து பகுதியின் பிரபல தலைவரான அல்லா பக்ஸ், முஸ்லிம் லீக்கின் பிரிவினை முன்வைப்பை நிராகரிக்கும் படி கூட்டத்தினருக்கு உணர்வூட்டினார். அன்றைய தினம் பத்திரிகையாளர் களிடம் பேசிய அவர் "மதவாதிகளை கூண்டுக்குள் அடைத்து வைப்பது நல்லது அப்போதுதான் அவர்கள் இந்துக்க ளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே வெறுப்பைப் பரப்பாமல் இருப்பார்கள்" என்றார்.

 

மதவாதிகள் -"நல்ல செய்திகளை மட்டுமே நம் ஆட்சியாளர்களுக்குச் சொல்வார்கள்"

ஆசம்கர் சிப்லி கல்லூரி நிறுவனரான சிப்லி நோமானி முஸ்லிம் லீக் அரசியலை அம்பலப் படுத்தி ஒன்றுபட்ட இந்தியாவுக்கு கடப்பாடு கொண்டவராய் இருந்தார். 'முஸ்லீம் லீக்' என்று தலைப்பிட்ட கவிதையில் அவர் அக்கட்சியை நையாண்டி செய்திருந்தார்.

அது அரசாங்க ஆதரவு பெற்றிருந்தது; பணக்காரர்களிடம் பிரசித்திபெற்றிருந்தது;

அது சமூகத்தின் புரவலராக இருந்தது; ஆட்சியாளர்களுக்கு கீழ்படிந்திருந்தது;

நம் அவல நிலை பற்றி அரசாங்கத்திடம் எடுத்து கூறும்படி லீக்கை கேட்டிருந்தேன்.

போலீஸ் ஒடுக்குமுறை பற்றி; நீதிமன்ற வழக்குகள் பற்றி;

துன்பம் நிறைந்த விவசாயிகள் வாழ்வு பற்றி;

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு லீக் சொன்னது:

ஆட்சியாளர்களிடம் நல்ல விசயங்களை மட்டுமே சொல்வது என்னுடைய இயல்பு என்றது;

இந்து மகா சபா பற்றியும் ஆர்எஸ்எஸ் பற்றியும் இதேபோல் சொல்லலாம்.

பிரிவினைக்கு எதிரான உருது கவிதை:

பிரிவினைக்கு எதிராக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் வேண்டுகோள் விடுத்து முஸ்லிம்கள் உருது மொழியில் ஏராளமான கவிதைகள் எழுதி இருக்கின்றனர். சமீம் கர்ஹானியின் 'பாகிஸ்தான் வேண்டும் என கேட்பவர்களுக்கு' என்ற கவிதையில், 'பாகிஸ் தான் புனிதமான நிலம் என்றால் என்ன அர்த்தம்? என்று சொல்லுங்கள். இப்போது முஸ்லிம்கள் இருக்கிற இந்த இடம் புனிதத் தன்மையற்றதா?' என்று கேட்டார்.

கர்ஹானியின் "இந்தியப் போர் வீரர்கள்"- மதவாத வெறுப்புக்கு எதிராக போர் தொடுக்க அழைப்பு விடுத்தது 'பசு பற்றியும் ஒலிபெருக்கி பற்றியுமான சண்டைகள் ஒழியட்டும்'. ஹமாரா இந்துஸ்தானில் -'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று யாராவது கேட்டால் நான் கம்பீரமாக இந்துஸ்தான் என்று சொல்வேன்' என்று கர்ஹானி அறிவித்தார். பிரிவினைக்கு எதிரான முஸ்லிம்கள் என்ற சம்சுல் இஸ்லாமின் புத்தகத்தில் இது போல் பல கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டில் பிரிவின் வலியை, வேதனையை, குற்ற உணர்வை வெளிப்படுத்தும் படைப்புகளையும் ஆவணங் களையும் நாட்டு எல்லையின் இருபுறமிருந்தும் சேகரிப்பது முக்கியமானதாகும். அப்படி செய்யும்போது தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து மக்கள் பிரிவினையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மதவாத வன்முறையை, பாரபட்சத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் யுத்த வெறி கூச்சலால் துணைக்கண்டம் மீண்டும் கறை படிய அனுமதிக்கமாட்டோம் எனவும் உறுதி ஏற்பார்கள்.

லிபரேஷன்செப்டம்பர் 2021

தமிழாக்கம் -தேசிகன்