“பள்ளிக்கூடத்தில் (பெண்) ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்கள், ஆடிப்பாடிக் கொண்டிருக் கிறார்கள்.” “பேருந்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக அடித்துப் புரள்கிறார்கள்” “பள்ளி மாணவன் ஒருவன் அருவாளை வைத்துக் கொண்டு ஆசிரியரை மிரட்டுகிறான்”. “மாணவர்களுக்குள் மோதல், ஒரு மாணவன் மரணம்”. இவையெல்லாம் இப்போது நாம் காணும் அன்றாடச் செய்திகள். திருநெல்வேலி பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவன் மரணம். மேல் நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 3 பேர் கைது. உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் தற்காலிகப் பணி நீக்கம். இதற்கெல்லாம் யார் காரணம்? பள்ளக்கால் பொதுக்குடியில் மாணவர்கள் மத்தியில் சாதிக் கயிறு கட்டுவதில் மோதல் ஏற்பட்டு அதில் மாணவன் இறந்துள்ளான். பள்ளி மாணவர்கள் அவரவர் சாதியின் அடையாளத்தை கையில், காதில், கழுத்தில், தலையில், கயிறாக, தோடாக, கழுத்தணியாக, ரிப்பனாக அணிந்து கொண்டு வெளிப்படுத்தி வருகிறார்கள். இதை பள்ளி ஆசிரியர் தட்டிக் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால், அவர்கள் தாக்குதலுக் குள்ளாகிறார்கள். மாணவர்கள் சாதி அடையாளத்தைக் காட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள். பெற்றோர்களும்கூட அதை ஊக்கு விக்கிறார்கள். சாதியை, மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் இதைத் தூண்டிவிடுகிறார்கள். சாதி அரசியலுக்கு மாணவர் களைப் பயன்படுத்தியதில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஹிஜாப் அணிந்து மத அடையாளத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக் கூடாது என்று சொல்லும் சங்கிகள் இந்து மத அடையாளத்தையும் சாதி அடையாளத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடாது என்று சொல்லமாட்டார்கள். ஆசிரியர்கள் கூட சாதி அடையாளத்தை வைத்துதான் அவர்கள் வேலை பார்க்கும் கிராமங்களில் அங்கீகரிக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி இந்து மாணவர்கள் செய்யும் தவறைக் கண்டிக்கக்கூட முடியாத நிலை உள்ளது. இன்னொருபுறம் ஆசிரியர்களாக பணிபுரிந்த அனுபவம் ஏதும் இல்லாதவர்கள்தான் மாவட்டக் கல்வி அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்களே பின்னர் பதவி உயர்வு பெற்று இயக்குநர்கள் ஆகிறார்கள். இவர்களுக்கு மாணவர்களின் மன நிலையும் தெரியாது, ஆசிரியர்கள் பற்றியும் தெரியாது. அவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளவும் மாட்டார்கள். அதைவிடக் கொடுமை கல்வியைப் பற்றி அதன் நடைமுறைகள் பற்றி தெரியாதவர்கள்தான் கல்வி மந்திரியாகி றார்கள். தற்போது கொரோனாவினால் இரண்டு ஆண்டுகள் பள்ளிக் கூடங்கள் திறக்காததால், மாணவர்கள் பெரும்பாலானோர், அதையே மறந்து போய்விட்டார்கள் என்பது மட்டுமல்ல, மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார்கள். சமூகச் சூழலை மாற்றி அமைப்பதற்குப் பதிலாக பிரச்சினைக்கு ஆசிரியர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். இன்னொருபுறம் தகுதியில்லா ஆசிரியர்கள், தங்கள் சுயநலத்திற்காக மாணவர்களின் சாதி, மத மோதல்களில் குளிர் காய்வதும் நடக்கின்றது. இதற்குக் காரணம் முறைப்படி தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததும் ஒரு காரணம். கல்விக் சூழலும் கல்வி முறையும், சமூகச் சூழலும் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு ஒப்புக்காக அல்லாமல், சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்களை, சமூகச் செயற்பாட்டாளர்களை, மருத்துவர்களைக் கொண்டு பாடத்திட்டங்களும் கல்விச் சூழலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, கல்வி தனியார்மயம் ஒழிக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தவறாக நடந்தால் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகிறார்கள். அல்லது நடக்கும் சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இப்போது சங்கிகள், திட்டமிட்டு மாணவர்களை, இளைஞர்களை மத ரீதியாக அணி திரட்டி, படிப்பை மறந்து வன்முறைகளில் ஈடுபடச் செய்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்குகிறார்கள். மதவாத அரசியல் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் சாதிய அரசியல் நாணயத்தின் மற்றொரு பக்கம். இதுதான் ஆபத்தானது. இந்த விஷச் சூழல் உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)