கோ.கேசவன் நூல்கள் மறுவெளியீடு காலத்தின் தேவை!
தமிழகம் அறிந்த மார்க்சிய அறிஞர் கோ.கேசவன், 1978 முதல் 1998 வரை எழுதி அளித்த அவரது கட்டுரைகள், நூல்கள் மூன்று தொகுதிகளில் (2652 பக்கங்கள்) கடந்த மே 28ம் நாள், சென்னையில் வெளியிடப்பட்டது. (மேலும் ஒரு தொகுதி வரவுள்ளது). சென்னையிலுள்ள ஹாலிடே இன் நட்சத்திர விடுதியிலுள்ள அரங்கில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி, உலகம் முழுவதுமுள்ள பழங்குடி இசைக் கருவிகள், இசை நுணுக்கங்கள், பழந்தமிழரது பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டங்களுடன் கோலாகலமாக தொடங்கியது.
தமிழ்ச்சமூக வரலாறு இலக்கியம் (ரூ 400), தலித்தியம் (ரூ 450), மார்க்சியம் (ரூ 410) ஆகிய இந்த மூன்று தொகுதிகள் வெளியீடு நிகழ்ச்சிக்கு பேரா.கோச்சடை தலைமை தாங்கினார். வரவேற்புரை நிகழ்த்திய பேரா.சிவக்குமார், கேசவன் காலத்து சிந்தனைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு கொண்டு செல்வதன் நோக்கத்துடன் இந்த நூல்கள் மறுவெளியீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டார். மக்கள் கவிஞர் உள்ளிட்ட எண்ணற்ற பேராசிரியர்கள் மார்க்சிய-லெனினிய படைப்பாளிகளாகவும் போராளிகளாகவும் இருந்ததை சுட்டிக்காட்டியும் பேசினார். தலைமை உரை ஆற்றிய பேரா. கோச்சடை, கேசவனது படைப்புத் தோழனாக, இயக்கத் தோழனாக பயணப்பட்டதன் அனுப வங்களை பகிர்ந்து கொண்டார். கேசவனது உருவப்படத்தை திறந்து வைத்து நீதிநாயகம் சந்துரு உரையாற்றினார். கோ.கேசவன் அறக்கட்டளையைத் துவக்கி வைத்து, கேசவனோடு கல்லூரி ஆசிரியராக பணியாற்றியவரும் இருளர் பழங்குடி மக்களது உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டுவருப வருமான பேரா.பிரபா கல்விமணி பேசினார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன், மூன்று தொகுதிகளையும் வெளியிட, மார்க்சியம் தொகுதியை இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் (டாக்டர் அம்பேத்கர் கல்லூரியில் கேசவன் பணியாற்றியபோது அவரது மாணவராக இருந்தவர்) பெற்றுக் கொண்டார். மற்ற இரண்டு தொகுதிகளுள் ஒன்றை கேசவனது மாணவர் சாம்ராஜ் அவர்களும் மற்றொரு தொகுதியை சரவணபாலு பதிப்பகத்தின் சந்திரசேகரன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். நூல்களை வெளியிட்டு பேசிய திருமாவளவன், கேசவனோடு தனக்கு ஏற்பட்ட சந்திப்பு, உரையாடல்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார். தற்போதுள்ள சமூக, அரசியல் சூழலில் மார்க்சியர்கள், பெரியாரிய உணர்வாளர்கள், அம்பேத்கரியவாதிகள் ஒரு புள்ளியில், நேர்க் கோட்டில் சந்தித்து செயல்படவேண்டுமென வலியுறுத்திப்பேசினார். அம்பேத்கரியம்தான் மார்க்சிசம், மார்க்சிசம்தான் பெரியாரியம் என்றும் எனவே இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் சேர்ந்து செயல்படவேண்டுமென்ற தனது கருத்தை வலியுறுத்திப் பேசினார்.
பேரா.பிரபா கல்விமணி, சரவணபாலு பதிப்பகத்தின் சந்திரசேகரன், சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மேனாள் தலைவர் வீ.அரசு, பேரா.சிவக்குமார் ஆகியோர், கேசவனோடு பயணப்பட்டதன் நினைவுகளையும் அவரது படைப்புகளின் நோக்கும் போக்கும் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியராக, கல்லூரி ஆசிரியர் சங்க களப்பணியாளராக, 'மார்க்சியம் தோற்காது' என்ற மார்க்சிய லெனினிய நம்பிக்கையாளராக, அரசு, காவல்துறை அச்சுறுத்தல்களுக்கு சற்றும் அஞ்சாதவராக, அயராத உழைப்பால், குறுகிய காலத்துக்குள் ஏராளமான நூல்களை எழுதிக் குவித்தவராக, கலாநிதி கைலாசபதியின் ஆராய்ச்சித் தோழனாக அவரது 52 ஆண்டுகால வாழ்வுப் பயணத்தின் பன்முக ஆற்றலை எடுத்துக்காட்டி பேசினர். திரு சந்துரு கேசவனது மொழி ஆளுமை குறித்துப் பேசினர்.
மூன்று நூல்களும், பேரா. கோச்சடை, பேரா. பா.செயப்பிரகாசம், பேரா.சிவக்குமார், பேரா. கனல்மைந்தன், பேரா.சுதந்திரமுத்து, சரவணபாலு பதிப்பகம் சந்திரசேகரன் ஆகியோரது கடந்த நான்கு ஆண்டுகால முயற்சியாலும் கேசவனது புதல்வர்கள், "மகன்தந்தைக்காற்றும்" சீரிய செயலாக கோ. கேசவன் அறக்கட்டளையை நிறுவி அதன் முதல் வெளியீடாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த படைப்புகள் தமிழ்நாட்டின் தற்காலத்தைய சமூக, அரசியல், பண்பாட்டு சூழலில் காலத்தின் தேவையை ஈடு செய்வதாகவே இருந்தது. மிகமிக எளிமையான வாழ்வை வாழ்ந்து சென்ற கேசவனது நூல்வெளியீட்டை பேரா. அரசு கூறியதுபோல கொண்டாட்டமாக நடத்திக்காட்டிய அவரது மகன்களது முயற்சியை பலரும் பாராட்டிப் பேசினர். தற்கால இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக ஆளுமைகள், கட்சிகள், அமைப்புகள், இந்த நூல்களை இன்றைய இளம் தலைமுறையினரிடம், பேரா. சிவக்குமார் கூறியதுபோல, விரிவாக எடுத்துச் செல்வதும் விவாதிக்கச் செய்வதும் அவசரத் தேவையாகும். ஆளுமைகள், அமைப்புகள் இந்த நூல்களை வாங்கி பரப்புவதன் மூலம் இந்தக் கடமைக்கு பங்களிக்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். 80கள், '90களின் மார்க்சிய-லெனினிய நீரோட்டத்தைச் சேர்ந்தவர்கள், அம்பேத்கரிய, பெரியாரிய உணர்வாளர்கள் திரண்டிருந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கேசவனது இளைய மகன் மதுபாலன் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்து வைத்தார். கேசவனது துணைவியார் மல்லிகா உடல்நலக் குறைவால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை.]
தொகுப்புகள் கிடைக்குமிடம்: கோ.கேசவன் அறக்கட்டளை, சென்னை. 603103 அலைபேசி: 89257 06664
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)