தலையங்கம்

கொலைகாரச் சங்கிகளுக்கு விடுதலை

    அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் அதற்காக இளைஞர்கள் அனைவரும் அர்பணிப்பு உணர்வோடு உழைத்து மனித குலத்தின் மேம்பாட்டிற்காகச் செயலாற்ற வேண்டும் என்றும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் மற்றும் மரியாதை வழங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு பெண் சக்தி முக்கிய தூண் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் 75ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதிமொழியாக ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதே நாளில், மோடியின் பாஜக ஆட்சி செய்யும் குஜராத்தில் பில்கீஸ் பானு என்கிற பெண்ணை வன்புணர்வு செய்த, 17 பேரை கொலை செய்த, ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகள், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்போது குஜராத்தின் முதலமைச்சராக மோடியும் உள்துறை அமைச்சராக அமித்ஷாவும் இருந்தபோது, இஸ்லாமியர்கள் இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் வீடுகள் சூறையாடப்பட்டன. இஸ்லாமியப் பெண்கள் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார்கள். அதில் ஒருவர்தான் பில்கிஸ் பானு. அவர் அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் கையில் மூன்று வயது மகள் இருந்தாள். அவருடன் இருந்த 8 பெண்களை வன்புணர்வு செய்து கொன்றார்கள். அவருடன் இருந்த ஆண்களை அடித்துக் கொன்றார்கள். அவரின் 3 வயது மகளை வலுக்கட்டாயமாக அவரிடமிருந்து பிடுங்கி பாறையில் தூக்கி எறிந்து மண்டை பிளக்கச் செய்து கொன்றார்கள். இவர் மட்டும் எப்படியோ தப்பினார். தன்னையும் தன் கூட இருந்தவர்களையும் இந்நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று போராடினார். குற்றவாளிகள் அவரின் ஊரைச் சேர்ந்தவர்கள். நன்கு தெரிந்தவர்கள். பல மிரட்டல்கள் வந்தபோதும் நீதிமன்றங்கள் ஏறி, வழக்கை குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றி, 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தார். அந்த ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளை, 14 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டதால், அவர்களின் குற்றத் தன்மையை! கணக்கில் கொண்டு அவர்களுக்கு தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு, மன்னித்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்துள்ளது குஜராத்தின் பாஜக அரசு. அதேவேளை, பில்கிஸ் போன்றே அந்த வன்முறையில் பாதிக்கப் பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்த டீஸ்டா செதல்வத்தை சிறைக்குள் தள்ளியிருக்கிறது இந்த மோடி அரசு. இவர்தான் சொல்கிறார் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் வழங்க வேண்டும் என்று. இளைஞர்கள் அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என்று வேறு சொல்கிறார். இதுபோன்ற கொடூரச் செயலைச் செய்து தண்டனையும் பெற்றுவிட்டவர்களை, எவ்வித கூச்சமும் இன்றி தைரியமாக விடுதலை செய்கிறது குஜராத் அரசு என்றால், இதுபோன்ற வன்புணர்வு, கொலைக் குற்றங்களை, இஸ்லாமியர்களுக்கு எதிராக, சிறுபான்மை யினருக்கு எதிராக அர்ப்பணிப்போடு செய்யுங்கள் என்று சொல்வதுபோல் உள்ளது. மோடியைப் பொறுத்தவரை, பில்கீஸ் பானுவும் அவர் கண் முன்னே வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களும் டீஸ்டா செதல்வத்தும் பெண்கள் இல்லையா? பில்கீஸ் பானுவின் கொல்லப்பட்ட 3 வயது மகள் பெண் இல்லையா? 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல இஸ்லாமியர்கள் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கிறார்கள் எழுவரில் அறுவர். ஆனால், வன்புணர்வு செய்தவர்கள், குழந்தையைக் கொன்றவர்கள் விடுதலை யாகிறார்கள். சுதந்திர அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, தண்டிக்கப்பட்ட கொடூரக் குற்றவாளிகள் விடுவிக்கப் பட்டுள்ளார்கள் என்றால், இதுபோன்ற பாதகச் செயல்களை பயம் இல்லாமல் செய்யுங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறது பாஜகவும் மோடியும் என்பதுதானே பொருள். யாருக்கு இந்த சுதந்திர அமுதப் பெருவிழா?