கடந்த 8 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியரான இவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறையிலடைக்கப்பட்டார். 90% மாற்றுத் திறனாளி இவர். சக்கர நாற்காலி இல்லாமல் இவரால் நகர முடியாது. தன்னுடைய தேவைகள் அனைத்திற்கும் அவர் அடுத்தவர்களை நம்பித்தான் இருக்க வேண்டும். சிறையில் இவருக்கு குளிர் தாங்குவதற்கான போர்வை கூட கொடுக்கப்படாமல் விரைவில் நான் செத்துவிடுவேன் என்று தன் இணையருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதினார். 2017ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில நீதிமன்றம் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஆயுள் தண்டனை வழங்கியது. இவ்வளவிற்கும் நேரடியான, வலுவான சாட்சியங்கள் எதுவும் இவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்படவில்லை. கம்யூனிச புத்தகங்கள் வைத்திருந்தார். கடிதங்கள் இருந்தன என்று பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டது. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இவருக்கு பிணை தருவதற்குக் கூடத் தயாராக இல்லை. பாலியல் வன்புணர்வு குற்றவாளிகள், கொள்ளைக்காரர்கள், மக்கள் விரோதிகள் என எல்லாருக்கும் பிணை வழங்கப்படும்போது சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் பேராசியருக்கு பிணை கொடுக்க மறுத்தது நீதிமன்றம். இவர் வேலை பார்த்த கல்லூரி நிர்வாகமோ எவ்விதக் காரணமும் சொல்லாமல் பேராசிரியர் சாய்பாபாவை பணி நீக்கம் செய்து அவருடைய வீட்டிற்கு கடிதம் அனுப்பியது. பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான், மேல் முறையீட்டு வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 14.10.2022 அன்று பேராசிரியர் சாய்பாபாவையும் இவருடன் அந்த வழக்கில் தண்டனை பெற்ற 5 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பேராசிரியர் ஒரு வழியாக வெளியே வந்து விடுவார் என்று அனைவரும் அவரை வரவேற்கக் காத்திருந்த நிலையில், மகாராஷ்டிர அரசும் காவல்துறையும் உடனடியாக, ஒரு சில மணி நேரங்களிலேயே உச்ச நீதிமன்றத்தில் பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலைக்குத் தடை கோரி மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமோ உடனடியாக அந்த மனுவைக் கோப்புக்கு எடுக்கிறது. கோப்புக்கு எடுத்தது மட்டுமில்லாமல் மனுவை விசாரிக்க, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்து மறுநாளே அதாவது 15.10.2022 அன்றே விடுமுறை நாளில், சிறப்பு விசாரணையும் நடத்தி பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலை உத்தரவை நிறுத்தி வைக்கிறது. வழக்கைவிசாரித்த இரண்டு நீதிபதிகளும் குஜராத் நீதிபதிகள். ஒருவர் எம்.ஆர்.ஷா மற்றொருவர் பெலா எம்.திரிவேதி. விசாரணையின் போது பேராசிரியர் சாய்பாபாவின் தரப்பில் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, 90% மாற்றுத் திறனாளி, அவர் நீண்ட காலம் சிறையில் இருந்துவிட்டார், அவரை சிறையில் இருந்து விடுவித்து, எந்தவொரு நிபந்தனையும் விதித்து வீட்டுக் காவலில் வேண்டுமானாலும் வையுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். அதை நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல. பயங்கரவாத நடவடிக்கைகளைப் பொறுத்தவரை நேரடியான ஈடுபாடு என்பது அவசியமில்லை, மூளை மிகவும் ஆபத்தானது என்று நீதிபதி எம்.ஆர்.ஷா கூறியுள்ளார்.
இந்த நீதிபதி எம்.ஆர்.ஷா, குஜராத் உயர்நீதிமன்ற வைர விழா கொண்டாட்டத்தின் போது, தான் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி என்பது பற்றியெல்லாம் கவலையே படாமல் அரசியல்வாதியான பிரதமர் மோடியை கதாநாயகன் என்றும் முன்மாதிரியானவர் என்றும் வானளாவப் புகழ்ந்து பேசியவர். மோடிக்கும் அமித் ஷாவிற்கும் நெருக்கமானவர் இந்த நீதிபதி எம்.ஆர். ஷா என்று சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தனி சிறை மட்டுமே ஒரே நிபந்தனை என்று ஈவிரக்க மில்லாமல் பேசினார்.
நீதிமன்றங்களும் நீதிபதிகளும் எங்கே சென்று கொண்டிருக்கின்றனர்? யாருக்காக செயல் படுகின்றன என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுகின்றது. மோடிக்கும் அமித் ஷாவிற்கும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை வெறியாட்டம், இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, இஸ்லா மியப் பெண்கள் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட தற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றது உச்சநீதிமன்றம். பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை அரசு நினைத்தால் விடுவித்துக் கொள்ளலாம் என்றது உச்ச நீதிமன்றம். குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நியாயம் கிடைக்கப் போராடிய டீஸ்டா செதல்வத் மீது திடீர் வழக்கு போடப்பட்டு சிறையிலடைக் கப்பட்டார். பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து, அவரின் மூன்று வயதுக் குழந்தையை பாறையில் அடித்துக் கொன்ற குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனைதான் கொடுக்கப் பட்டது. அந்த தண்டனையும் உச்சநீதிமன்றம் வரை சென்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்தக் கொடூரக் குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டனர். அந்தக் கொடூரக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது நீதியல்ல என்று நாடே கொதித்தெழுந்தது. அவர்கள் விடுவிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று இதே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கொடூரக் குற்றவாளிகளின் விடுதலைக்கெதிரான வழக்கை அவசர வழக்காக உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை. பில்கிஸ் பானுவை சிதைத்த, அவர் குழந்தை யைக் கொன்ற, குற்றத்தில் நேரடியாக ஈடுபட்ட கொடூரர்கள் இப்போது வீதியில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்து கொண்டிருக் கிறார்கள். ஆனால், 90% மாற்றுத் திறனாளி, எந்தக்குற்றமும் செய்யாதவர், உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவரை சிறையில் இருந்து ஒரு நாள் கூட வெளியே வரவிடாமல், சில நேரங்களிலேயே மேல் முறையீடு செய்யப்பட்டு, மணி அது உடனடியாக கோப்புக்கு எடுக்கப்பட்டு விசாரித்து, விடுதலைக்குத் தடையும் வழங்கப் படுகிறது.
ஒரு சங்கி அமைச்சர் சொன்னார் பில்கிஸ் பானு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பிராமணர்கள், அதாவது சங்கிகள். பேராசிரியர் சாய்பாபாவோ சங்கிகளுக்கு எதிரானவர், கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவானவர். முற்றிலும் உடலளவில் முடங்கிப் போனவர் என்றாலும் அவரது மூளை ஆபத்தானதாம். மூளை இருந்தும் இல்லாமல் மொத்த உடம்பும் கொழுத்துப் போய் மிருகங்கள் போல் (மிருகங்கள் கூட குழந்தை களிடம் அன்பு காட்டும்) செயல் பட்டவர்கள் ஆபத்தில்லாதவர்களாம். இதுதான் இன்றைய நீதிமன்றங்களின் நீதியாக இருக்கின்றது.
மலைவாழ் பழங்குடி மக்களுக்காக தன் வாழ் நாள் முழுவதையும் செலவிட்ட 80 வயது பாதிரியார் ஸ்டேன்சாமியை சிறையிலடைத்து, தண்ணீர் குடிக்க (நடுங்கும் கரங்களால் தம்ளரை பிடிக்க முடியாதவர்) அவருக்கு ஸ்டிரா கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி சிறையிலேயே சாகடித்துவிட்டார்கள். அவருக்கு ஸ்டிரா கொடுப்பதற்காக நீதிமன்றத்தில் மனு செய்த போது அதை விசாரிக்க, காவல் துறை பதிலளிக்க வாரக் கணக்கில் வாய்தா போட்டார் ஒரு நீதிபதி. சுரேந்திர கட்லிங், சுதிர் தாவாலே, ரோனா வில்சன், சுதா பரத்வாஜ், வரவரராவ், சோமா சென், அருண் பெரெரா, மகேஷ் ராட், கவுதம் நல்லகா, ஆனந்த் டெல்டும்டே, வெர்னாம் கன்சல்வேஸ், ஹனி பாபு, ஜோதி ஜக்தப் போன்ற மனித உரிமைப் போராளிகளை, தலித் உரிமைக்கான செயற்பாட்டாளர்களை பீமா கொரேகான் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது காவிப் பாசிச அரசு. அதில் பலருக்கும் இன்று வரை பிணையை மறுத்து வருகின்றன உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும்.
குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது திட்டமிட்டு கலவரங்களை நடத்தி இஸ்லாமியர்கள் வீடுகளைச் சூறையாடிய மிஸ்ராக்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று ஆட்சியாளர் களைக் கேள்வி கேட்கும் நீதிபதி முரளிதர் ராவை உடனடியாக இடம் மாற்றம் செய்து தன் நீதி!யை நிலை நாட்டிக் கொண்டது சங்கி அரசு.அத்தி பூத்தாற்போன்று இதுபோல் வருகிற நீதிபதிகளை முடக்கிப் போடவும் தயங்குவ தில்லை இந்த காவிப் பாசிச (அ)நீதிமான்கள். ஆர்எஸ்எஸ் சங்கிகளை கைது செய்யச் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த பின்னரும் நீதிபதி முரளிதர் ராவ்வை அப்பதவியில் அமர்த்தாமல் நிறுத்தி வைத்துள்ளது மோடி அரசு. உச்சநீதி மன்றமும் மவுனம் காக்கிறது.
காக்கி உடைகளுக்குள்ளும் கருப்பு அங்கிகளுக்குள்ளும் காவி ஒழிந்து கொண்டு நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக் கின்றது. இந்தக் காவிப் பாசிசத்தை இந்திய நாட்டை விட்டு விரட்டி அடிக்கவில்லை என்றால், சத்தியம் என்றால் காந்தி என்று கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நீதி என்றால் கோட்சே என்று கற்பிக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)