பார்ப்பன வழிபாட்டுமுறையின்படி "இரயில் பயணிகளுக்கு வெங்காயம், பூண்டு சேர்க்காத விரதச் சாப்பாடு நவராத்திரியின் போது கொடுக்கப் படப்போவதாக" இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அவர்கள் கவனம் எங்கே இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்திய அரசின் திட்டமிட்ட செயல் பாட்டால், இந்தியாவில் வேலையுறுதிச் சட்ட வேலை அட்டை வைத்திருக்கும் 15.63 கோடி ஏழை குடும்பங் களுக்குச் சாதாரணச் சாப்பாடே பறிபோகிறது. பார்ப்பன இந்துப் பண்பாட்டைக் காப்பாற்றுவதில், அல்லது அதுபோல நடிப்பதில் உள்ள கவனம் சட்டக் கடமையை நிறைவேற்றுவதில் இந்த அரசுக்கு இல்லை.
மகாத்மா காந்தி வேலையுறுதி சட்டத்தின்படி வேலைக்கான அட்டை வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் ஓராண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை கொடுப்பது அரசின் கடமையாகும். ஆனால், 2020-21 அரசு கணக்கின்படி 50 நாட்களுக்குக் குறைவான வேலைதான் ஓராண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. 50 நாட்கள் என்பது அரசு சொல்லும் சராசரி கணக்கு. மற்றபடி 6 நாள் வேலை பார்த்தவர்கள் வரை இருக்கிறார்கள். 50 நாள் வேலை கொடுத்தோம் என்பதும் ஏமாற்றுதான். ஏனென்றால், அட்டை வைத்துள்ள 15.63 கோடி குடும்பங்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை. மாறாக, அட்டை வைத்திருப்பவர்களில் வேலை கேட்ட 5.48 கோடி குடும்பங்களுக்குத்தான் 50 நாட்கள் சராசரி வேலை கொடுத்தாக அரசின் கணக்கைத் துருவிப் பார்க்கும்போது தெரிய வருகிறது.
அப்படியானால், மீதமுள்ள ஏறக்குறையப் பத்துக் கோடி குடும்பங்கள், அதாவது 20 கோடி நபர்கள், என்ன ஆனார்கள்? ஏன் அவர்கள் வேலை கேட்டுக்கூட வரவில்லை?
இதற்கான விடை அரசியலில் இருக்கிறது. 2014ல் மோடி முதன்முறை பிரதமராகப் பதவியேற்றபோது, 'இது ஒரு தோல்வியான திட்டம் என்று மக்களே சொல்லும்படி வேலையுறுதித் திட்டத்தை அமல்படுத்துவேன்' என்று அறிவித்தார். பிரதமரான ஒருவர் தனது சட்டக் கடமையைத் தோல்வியடையச் செய்வேன் என்று பேசுவது இந்தியா போன்ற நாட்டில்தான் நடக்கும்.
மோடி சொன்னபடி செய்த அரிய நிகழ்வுகளில் ஒன்று வேலையுறுதித் திட்டத்தை விட்டு மக்கள் விலகும்படி செய்தது. மேலே நாம் சொன்ன புள்ளி விவரப்படி ஏறக்குறையப் பத்துகோடி குடும்பங்கள் அட்டை வைத்திருந்தும் வேலை கேட்டு வருவதில்லை. வேலை கிடைப்பது அரிது, அதுவும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது அரிது, அதேசமயம் ஜியோ டே போன்ற ஹைடெக் முறையில் படமெடுத்துக் குறிப்பிட்ட நேரத்தில் நெட்டில் போட வேண்டும் என்பது போல மக்களை மிரட்டுவது போன்ற பல்வேறு முறைகளில் அரசு மக்களை நூறு நாள் வேலையை விட்டு விரட்டி வருகிறது.
இதில் முக்கியமான ஆயுதம் நிதி ஒதுக்கீடுதான். வேலை செய்து சில மாதங்கள் அல்லது வாரங்கள் கழித்துத்தான் சம்பளம் வரும் என்றால் ஏழை மக்கள் வேறு வேலைகளுக்குத் தப்பிச் செல்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?
இதற்காகப் பொது நிதி நிர்வாகக் கட்டமைப்பு (Public Fund Management System- PFMS) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. வேலையுறுதித் திட்டத்தில் சம்பளப் பட்டுவாடா அலுவலர் வட்டார வளர்ச்சி அதிகாரிதான். அவர் ஒரு வாரத்துக்கான வேலை முடிந்தவுடன் சம்பளப் பட்டுவாடா செய்வதற்கான பட்டியலை மத்திய அரசு நிர்வகிக்கும் பொது நிதி நிர்வாகக் கட்டமைப்புக்கு அனுப்பிவிடுவார். அத்தோடு அவரின் வேலை முடிந்தது. அதாவது சம்பளத்துக்கு உத்தரவு போட்டுவிட்டார். கிடைக்காவிட்டால் நானா பொறுப்பு அவர் விலகிக்கொள்வார். மொத்தத்துக்கும் பொறுப்பு நிதிநிருவாகக் கட்டமைப்பு எனப்படும் PFMS தான்.
மேற்படி நிதிநிருவாக முறையைப் பொறுப்பானது, தேவைக்கேற்பச் செயல்படுவது, வெளிப்படையானது (accountable, responsive and transparent) என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 44வது பொதுமக்கள் கணக்கு தினமான 01 மார்ச் 2020 உரையில் குறிப்பிட்டார். உண்மையோ தலைகீழானது. அதிகாரத்தின் கைத்தாளத்திற்கு ஏற்பப் பணப் பட்டுவாடா செய்வது, சாதாரண மக்களுக்கு விவரங்களை மறைப்பது, பொதுமக்களின் பணம் மக்களின் கைக்கு வராமல் தள்ளிப்போடுவது உள்ளிட்ட அதிகாரத்துவக் கட்டுப்பாட்டு கருவியாக இந்த நிதிநிருவாக முறை செயல்படுகிறது. மிக முக்கியமாக வட்டார வளர்ச்சி அதிகாரி அனுப்பிய சம்பளப் பட்டியலுக்கு எப்போது பணம் அனுப்புவது என்பதை ஒன்றிய அரசுதான் தீர்மானிக்கிறது. நவராத்திரிக்கு விரதச் சாப்பாடு போடுவது போன்ற முக்கியமான காரியங்களெல்லாம் முடிந்த பின்னர்தான் ஏழைகளின் 100 நாள் வேலை கூலியை ஒன்றிய அரசு விடுவிக்கிறதோ என்று
தோன்றுகிறது.
உண்மை இன்னமும் கொடுமையானது. வேலை கோரும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஏதோ ஒரு அளவுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் 3.62 லட்சம் கோடிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று NREGA Sangharsh Morcha (NSM) என்ற அமைப்பு கணக்கிட்டுச் சொல்கிறது. ஆனால், 2021-22 ஆண்டுக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி வெறும் 73,000 கோடி மட்டுமே. இதனைக் கொண்டு வேலை கோரும் ஒரு குடும்பத்துக்கு 21 நாட்கள் மட்டும்தான் வேலை அளிக்க முடியும் என்று People's Action for Employment Guarantee (PAEG) என்ற அமைப்பு கணக்கிட்டுச் சொல்கிறது.
மோடி அரசின் இந்தத் திருட்டுத்தனத்தின் காரண மாக, அதாவது ஏழை மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதன் காரணமாக, அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமும், வேலை நாட்களும் குறைந்து வருகின்றன. உதாரணமாக, மே 2021ல் தமிழ்நாட்டில் வேலையுறுதித் திட்டத்தில் வேலை செய்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்து 17 ஆயிரத்து 622 பேர். இந்த எண்ணிக்கை மே 2022ல் 33 லட்சத்து 10 ஆயிரத்து 400 ஆக அதிகரித்தது. (தகவல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 29, ஜூன் 2022, Jump in demand for NREGS: 2.6 cr families covered in May) திராவிட மாடலில் காரணமாக 'முன்னேற்றம்' கண்ட தமிழ்நாட்டிலேயே இந்தக் கதி என்றால், பீன்தங்கிய வட மாநிலங்களின் கதையை நீங்கள் கற்பனை செய்துகொள்ள முடியும்.
இதன் விளைவாக, வேலையுறுதித் திட்டத்தை நம்பியிருப்பதால் மக்கள் கடனாளி ஆகிறார்கள் என்றும் பிழைப்புக்காக வேறு ஊர் செல்கிறார்கள் என்றும் ஸ்க்ரோல் (scroll.in) என்ற பத்திரிகை எழுதியது.
மகாராஷ்டிரத்தின் நண்டூர்பார் என்ற ஊரைச் சேர்ந்த கிரீதர் என்ற விவசாயியின் கதையை ஸ்க்ரோல் இதழ் விரிவாகச் சொல்கிறது. கோடையில் வேலை செய்து மழைக்காலத்தில் தன் நிலத்திற்கான இடுபொருளை வாங்கிவிடலாம், வீட்டில் சாப்பிடுவதற்குத் தானியம் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் கிரிதர் என்ற விவசாயி நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வேலையுறுதித் திட்ட வேலைக்குச் சென்றார். அவருக்கு 2 ஏக்கர் அளவுக்கு நிலமிருக்கிறது. ஒரு நாளைக்கு 248 ரூபாய் கூலியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 12 நாள் வரை கிரிதர் வேலை செய்தார். அவருக்கு அளிக்கப்பட வேண்டிய கூலி 2,976 ரூபாய் ஆகிறது. ஆனால், மழைக்காலம் வந்து கடந்து சென்ற பின்னரும், ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் உழைத்த பணம் அவரின் கைக்கு வரவில்லை. அதனால், அவர் வேலையுறுதித் திட்ட வேலைக்குச் செல்ல விரும்பவும் இல்லை. இப்போது அவர் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டார்.
இப்போதைய நிலையில் இந்தியா முழுமைக்கும் 2,982 கோடி ரூபாய் சம்பளப் பாக்கியாக நிற்கிறது என்று People's Action for Employment Guarantee y சொல்கிறது. எவ்வளவு சம்பளம் என்பதை மாநிலங்கள் உடனுக்குடன் தெரிவித்து விடுவதாகவும், பணம் அளிக்காமல் தாமதம் செய்வது ஒன்றிய அரசுதான் என்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த ராம் என்பவர் குறிப்பிடுகிறார்.
ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதை விரும்பவில்லை என்று ஸ்க்ரோல் கட்டுரை வாதிடுகிறது.
2020-21ல் ஒன்றிய அரசு 63 ஆயிரம் கோடியை
ஒதுக்கியது. ஆனால், கொரோனாவின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்ச்சி, வேலையிழப்பு காரணமாக அந்தத் தொகை போதவில்லை, மேலும் கூடுதலாக 40 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விளைவாக அந்த ஆண்டு அரசின் மொத்தச் செலவி 1.01 லட்சம் கோடி ரூபாய் ஆனது. ஆனால், அதுவும் ஆவியாகிப் போனது, கடைசியில் கணக்கு பார்த்தபோது ஒன்றிய அரசு 1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது.
இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கூடுதல் தொகையை ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 2021-22 ஆண்டுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய தோகை வெறும் 63 ஆயிரம் கோடிதான்.
இதன் விளைவாக, வேலை கோருபவர்களுக்கு வேலை அளிப்பதிலும், அளித்த வேலைக்குச் சம்பளம் அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுக்கொண்டே இருக் கிறது. விளைவாக, வேலையுறுதித் திட்டத் தொழி லாளர்கள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள், ஒரு கட்டத்தில் வயிற்றைக் கழுவ, கடன் அடைக்க ஊரைவிட்டு வெளியேறு கிறார்கள் என்று (செப்டம்பர் 24, 2022) ஸ்க்ரோல் எழுதியிருக்கிறது.
இதைவிட மோசம் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு பாக்கி வைக்கிறது என்பதுதான். திட்டத்தை அமல் செய்வதைத் தணிக்கை செய்வதற்கான தொகையை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். இதற்கான தணிக்கை அமைப்பை மாநில அரசு ஏற்படுத்தும். திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை ஊழலில் தொலைந்துபோகாதிருக்கவும், திட்டம் முறையாக அமலாவதைக் கண்காணிக்கவும் தணிக்கை அமைப்பு தேவையானதாக இருக்கிறது. ஆனால், மாநிலத் தணிக்கை அமைப்புகளுக்கான நிதியை ஒன்றிய அரசு அளிக்காதிருக்கிறது.
வேலை உறுதிக்கான மக்கள் செயல்பாடு என்ற தனியார் நிறுவனத்தின் ஆய்வின்படி, 2020-21 மற்றும் 2021-2022 நிதியாண்டுகளில் எட்டு மாநிலங்கள் சமூகத் தணிக்கை செலவிற்கான தொகையில் பாதியை மட்டுமே பெற்றுள்ளன. மேலும், பீகார், ஜார்கண்ட், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, சத்தீஷ்கார், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கடைசியாக நிதி பெற்றது 2021ல்தான். அதற்கப்புறம் சமூகத் தணிக்கைக்கான நிதி இதுவரை கொடுக்கப்படவில்லை. இவற்றில் மிகவும் பரிதாபத்துக்குரிய பீகார்தாள். அந்த மாநிலத்தின் சமூகத் தணிக்கைக்கு 2020 ஏப்ரல் 20க்குப் பிறகு நிதியே கொடுக்கப்படவில்லை. இந்த விவரங்களைச் செப்டம்பர் 3, 2022 தேதியிட்ட தி ஹிந்து விரிவாக எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் என்ன என்ன நிலைமை என்பதை வாசகர்கள் அறிவார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அட்டைகளில் மூன்றில் இரண்டு பங்கு அட்டைகள் கூட இப்போது மக்கள் கையில் இல்லை. இந்த ஆண்டு அட்டை பெறுவதற்கான நடை முறைகளைக் கடுமையாக்கி அட்டைகளின் எண் ணிக்கை மாநில அரசு சுருக்கி விட்டது. உதாரணமாக, சென்ற ஆண்டு குறைவான வேலை செய்த வர்களுக்கு அட்டையை, சில பஞ்சாயத்துகளில், மறுத்தனர்.வேலை செய்து சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் சென்ற ஆண்டே கூலி கையில் கிடைக்கும் வேலைக்குச் சென்றுவிட்டனர். எனவே, இந்த 'புது அட்டை ஆண்டான 2021-2022ல் கணிசமான தொழிலாளர்கள் வேலை உறுதித் திட்டத் திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதுபோன்ற வலி மிகுந்த சூழலில் 100 நாள் வேலையை 150 நாள் ஆக்குவேன் என்றும், நகர்புரத் துக்கும் வேலையுறுதித் திட்டம் கொண்டுவருவோம் என்று சொல்லிப் பதவிக்கு வந்த முற்போக்கு திராவிட அரசு என்ன செய்கிறது? ஒன்றுமில்லை என்பதுதான் பதில்.
100 நாள் வேலையை 150 நாள் ஆக்குங்கள் என்று ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அத்துடன் அவர் சொன்ன உறுதிமொழிகளில் ஒன்று நிறைவேறிவிட்டது. வேலையுறுதித் திட்டத்தை அமலாக்கம் செய்வதில் நேரடி பங்கை மாநில அரசு ஆற்றுகிறது என்பதையும், ஒன்றிய / மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் தவறான நடவடிக்கைகளைக் களைவது மாநில அரசின் வேலை என்பதையும், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் கை வைக்கும்போது மாநில உரிமைகளுக்காக மட்டுமல்லாமல் கிராமப்புர ஏழைகளுக்கு மோடி இழைக்கும் துரோகத்தை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும் என்பதையும் விடியல் அரசு கண்டுகொள்ளவில்லை.
நகர்புர வேலை உறுதித் திட்டத்தையும் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல அடையாளத் துக்காகக் கொண்டுவந்துள்ளார் ஸ்டாலின். கொசு கடித்த அளவு கூடத் திட்டத்தின் வருகை உணரப்படவில்லை.
மோடி அரசின் கிரமப்புர வறியர்களுக்கு எதிரான போக்கையும், அதானிகளுக்கு ஆதரவான நிதிக் கொள்கையையும் நாம் ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். காவிப் பாசிசத்தின் தொழிலாளர் விரோத அடித்தளத்தை அம்பலப்படுத்திட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலின் மையப் பிரச்சனைகளின் ஒன்றாக, 300 நாள் வேலை கேட்கும்போது, 500 ரூபாய் சட்ட சம்பளம் என்பதைத் தேர்தல் முழக்கமாக்கிட நாம் காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். மக்களின் கோப அலையைத் தட்டியெழுப்பி காவிப் பாசித்தைப் பின்னுக்குத் தள்ளும் அணிதிரட்டல்களை நாம் செய்திட வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறையில் மலிந்துள்ள ஊழல்கள், நிர்வாகச் சீர் கேடுகளைக் களைய வேண்டும் என்று நாம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்தாக வேண்டும். ஸ்டாலின் சொன்ன கூடுதல் 50 நாள் வேலை என்பதை மாநில அரசு வழங்க வேண்டும் என்று நாம் கோரலாம். ஒன்றிய அரசு வேலை உறுதித் திட்ட நிதியைச் சுருக்குவதற்கு எதிராக மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று நாம் கோரலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)