முக்கியத்துவம் வாய்ந்த 2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மே 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இந்த ஆண்டு மேலும் ஆறு சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கடந்த இரண்டு பத்தாண்டுகளாக, பாசிசப் படை யணியின் தெற்கு நோக்கிய பயணத்திற்கான முக்கிய ஆய்வகமாக கர்நாடகம் உருவாகி யுள்ளது. 2014ல் மத்தியில் மோடி ஆட்சி அரியணை ஏறியதன் மூலம் அதிகாரம் பெற்ற பாசிச சக்திகள், புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையின் மூலம் தங்கள் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத் தினர். 2018 தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் மோடி இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, கட்சி மாறிய எம்எல்ஏக்கள் மூலம் மாநில அரசு கவிழ்க்கப்பட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் முதலில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியிலும், பின்னர், பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியிலும் கட்டுக்கடங்காத ஊழல், தலித்துகள் பழங்குடியினர் மீது அதிகரித்து வரும் கொடுமைகள், முஸ்லிம் களுக்கு எதிராக தங்கு தடையற்ற வெறுப்பும் வன்முறையும் என்பவற்றால் குறிக்கப்படும் மிக மோசமான காலகட்டத்தை கர்நாடகா கண்டு கொண்டிருக்கிறது.

இன்று மோடி அரசாங்கம் ஒவ்வொரு முனையிலும் கடினமான கேள்விகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வெட்கக்கேடான துன்புறுத்தலுடன் கூடிய திமிர்பிடித்த மௌனம் என்ற ஒரே ஒரு பதில்வினையை மட்டுமே அது வெளிப்படுத்துகிறது. "இனச் சுத்திகரிப்புக்கான அனைத்து அறிகுறிகளையும்" கொண்டிருந்த, 2002 குஜராத் படுகொலையின் கொடூரத்தை பிபிசி காணொளிகள் நமக்கு நினைவூட்டின. மேலும் அவை, இந்தப் படுகொலைக்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் நேரடி பொறுப்பானவர் எனக் கண்டறிந்த பிரிட்டிஷ் தூதரக அறிக்கையைப் பற்றி நமக்குத் தெரிவித்தன. அதற்கு, அந்தக் காணொளிகளைத் திரையிடுதல் அல்லது பகிர்தலுக்குத் தடையும், டெல்லியிலும் மும்பையிலும் உள்ள பிபிசி அலுவலகங்களில் வரிச் சோதனையுமே பதில் வினையாக இருந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கை அதானியின் மாபெரும் கார்ப்பரேட் மோசடியை அம்பலப்படுத்தியது, இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரியது, மோடி-அதானி தொடர்பை ராகுல் காந்தி வெளிச்சம் போட்டுக் காட்டியது, இவற்றிற்கு பதில் சொல்லும் விதமாக பாஜக மக்களவை உறுப்பினர்களால் ஒட்டு மொத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரும் இடையூறுக்குள் ளானது; ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியும் தகுதி நீக்கத்திற்குள்ளானது.

நரேந்திர மோடி தனது தேர்தல் உறுதி மொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த பட்டப் படிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் பார்க்க வேண்டு மென்று கேட்டார். அதனால் டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதமும், ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிறையிலடைக்கப்பட்டுள்ள மதுபான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அழைப்பும் பதிலாகக் கிடைத்தது. பிரதமரோ அல்லது அதுபோன்ற உயர் பதவி வகிக்கும் எந்த அரசியல்வாதியோ கட்டாயம் உயர்மட்டக் கல்விப் பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி வலியுறுத்துவதை ஒருவர் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இங்கு பிரச்சினை என்னவென்றால், பிரதமர் எவ்வளவு அதிகம் படித்திருக்கிறார் என்பதல்ல. ஒரு தேர்தல் வேட்பாளராக அவர் தாக்கல் செய்த உறுதி மொழிப் பத்திரத்தின் உண்மைத்தன்மை பற்றி தான். எந்தவொரு பொதுச் சேவையையும் உரிமையையும் பெறுவதற்குத் தங்களுடைய தனிப்பட்ட அடையாள விவரங்களைத் தருமாறு விடாப்பிடியாக பொதுமக்களை கேட்டுக்கும் போது, ஆவணமில்லாத குடிமக்கள் தங்கள் குடியுரிமையையே இழக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்படும் போது, தனது அந்தரங்க விசயம் எனக்கூறி தனது கல்லூரிப் பட்டத்தை மறைக்க பிரதமருக்கு நிச்சயமாக எந்த சிறப்பு உரிமையும் கிடையாது. மேலும், செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷா காட்டிய பிரதமரின் பட்டமானது முற்றிலும் முரண்பாடுகளால் ஆனது என்பதும் அம்பலமாகிவிட்டது.

புல்வாமா படுகொலை நடந்தபோது, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநில அந்தஸ்தி லிருந்து இறக்கி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது, 2019இன் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், பிரதமரைப் பற்றி எழுப்பியிருக்கும் கேள்விதான் அநேகமாக பெரும் அதிர்வை ஏற்படுத்தக் கூடியதாகும். புல்வாமா படுகொலை மூலம் சிஆர்பிஎஃப்க்கு இழப்பை ஏற்படுத்திய, மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டிற்கும் உளவுத்துறை தோல்விக்கும் பிரதமர் மீதும், அவரது மூத்த அமைச்சரவை சகாக்கள் மீதும் சத்தியபால் மாலிக் கடுமையாக குற்றம் சுமத்தினார். சிஆர்பிஎஃப் தனது வீரர்களை ஏற்றிச் செல்ல விமானங்களைக் கேட்டது. ஆனால் மோடி அரசாங்கம் அதை நிராகரித்தது. நாற்பது வீரர்களின் உயிரை பலிகொண்ட பெரும் வெடிப்பிற்கு காரணமான வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம், சிஆர்பிஎஃப் வாகன வரிசையை இடைமறித்ததை தடுத்திருக்கக்கூடிய, சாலைகள் பாதுகாப்புக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டிஸ்கவரி தொலைக்காட்சி நிறுவனத்தின் கார்பெட் பார்க் படப்பிடிப்பில் பிரதமர் மும்முரமாக இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் ஆளுநரிடம் பேசியபோது, பாதுகாப்பு குறைபாடு குறித்து அமைதி காக்கும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார் என மாலிக் நேர்காணலில் தெரிவித்தார். அதே 'அமைதியாக இருங்கள்' என்ற செய்தியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் ஊழலை ஊக்குவிப்பதாக குறிப்பிட்ட குறிப்புகளுடன் மாலிக் தனது நேர்காணல்களில் குற்றம் சாட்டியுள்ளார். நேர்காணல் முடிந்து பல வாரங்கள் ஆகியும், குற்றச்சாட்டுகள் குறித்து இந்த ஆட்சி இன்னும் வாய்மூடி மௌனம் சாதிக்கிறது.

நிர்வாகத்தின் உக்கிரமான ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளால் அதிகாரம் தொடர்ந்து மையப்படுத்தப்படும் இயக்கப்போக்கு, ஜனநாயகத்தின் அரசியலமைப்பு அடித்தளத்தின் இருத்தலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆட்சியை விமர்சிக்கும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தேச விரோத கும்பல் என்று சட்ட அமைச்சர் வர்ணிப்பது, நீதித்துறைக்கு எதிராக நிர்வாகத் துறை மக்களை தூண்டிவிடுவதன் வெளிப் பாடாகும். நிர்வாகத்துறை அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதை, நீதித்துறை தடுத்து சரிசெய்யும் ஊக்கமளிக்கும் முயற்சிகளின் சில அறிகுறிகளை நாம் சில காலம் முன்பு பார்த்தோம். உதாரணமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தால் செல்லாமல் ஆக்கப்பட்ட மலையாள தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே 10, 1857 என்பது, இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விரிவான இந்து முஸ்லிம் ஒற்றுமையால் சாத்தியமான ஒரு மக்கள் எழுச்சி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிப் பேரரசின் அடித்தளத்தை அசைத்தது. நூற்று அறுபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கிணையான தீர்க்கமான போரின் நடுவில், நவீன இந்தியா தன்னைக் காண்கிறது. இந்திய மக்களை அடக்கி, அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்து, அவர்களின் நிலங்களையும் வளங்களையும் கொள்ளையடிப்பதற்கு வசதியாக இந்துக் களையும் முஸ்லிம்களையும் ஒருவருக்கு மற்றொருவரை போட்டியாளராக முன்னிறுத்திய காலனிய ஆட்சியாளர்களைப் போல இந்தி யாவை ஆள முயலும், பாசிச சக்திகளுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். மே 10, 1857 அந்நிய ஆட்சியில் இருந்து விடுதலை என்ற பதாகையை மேலேற்றி யது. மே 10, 2023 வகுப்புவாத வெறுப்பு, கார்ப்பரேட் கொள்ளை ஆகியவற்றின் கொடிய கலவையிலிருந்து இந்தியாவை விடுவிக்க பாசிசத்திலிருந்து விடுதலை என்ற முழக்கத்தை ஒலிக்கட்டும்.