மார்ச் 11 அன்று தேர்தல் பத்திரங்கள் சம்பந்தமாக தேவைப்படும் தகவல்களை வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற ஸ்டேட் பேங்கின் வேண்டுகோள் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இந்த நாடு காத்துக் கொண்டிருந்தது. ஆனால். அதே நாள், குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஐ அமல்படுத்துவதற்கான விதிகளை, மிக நீண்ட காலம் கழித்து, மோடி அரசாங்கம் அறிவித்தது. இச்சட்டம் 2019 டிசம்பர் 11 அன்று நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆனால் அதற்கான விதிகளை அறிவிப்பதற்கு மோடி அரசாங்கத்திற்கு 51 மாதங்கள் ஆகி இருக்கிறது. ஏன்? ஒரே காரணம்தான். 2024 தேர்தல். தேர்தல் நேரத்தில் மீண்டும் குடியுரிமைப் பிரச்சனையைக் கிளப்புவதன் மூலம் வாக்காளர்களை மதவெறியின் அடிப்படையில் பிளவுபடுத்தலாம் என்பதற்காகத்தான். அடிப்படை பிரச்சனைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பலாம் என்பதற்காகத்தான்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம்; இது எவருக்கும் குடியுரிமையை மறுப்பதற்கான கருவியல்ல என்கிறது பிஜேபி. இப்படி சொல்வதன் மூலம் மீண்டும் மக்களை தவறாக வழி நடத்துகிறது பிஜேபி. இதைவிட மிகப்பெரிய புளுகு மூட்டை வேறெதுவும் இருக்கவே முடியாது. நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான (என் ஆர் சி) முன்னோடி தான் இந்த குடியுரிமை திருத்த சட்டம் என நான்கு வருடங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட சமயத்தில் அமித் ஷா தெளிவாகவே கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) 'சோதனை'யில் தவறிய, மொழி மற்றும் மதம் சார்ந்த சமூகங்கள் அனைத்திலும் உள்ள ஏழைகள், போதுமான ஆவணங்கள் இல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது ஏற்கனவே அம்பலமாகி உள்ளது. அசாம் அனுபவம் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. அதே வேளையில், அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கோட்பாடுகளை அடிப்படையில் மீறுகிற இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), குடியுரிமையை தீய மதவெறிமயமாக்குகிறது. இதனை அங்கீகரிக்கும் வண்ணமாக, இந்தக் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) சதிக்கு எதிராக, ஷகீன்பாக் சமத்துவ குடியுரிமை இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக எழுந்தது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஷகீன்பாக்குகள் உருவாகின. கோவிட் பெருந்தொற்று இடையூறு செய்வதற்கு முன்னால் எழுந்த அந்த இயக்கம், நாடு தழுவிய அளவில் பரந்த மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கியது. அந்த இயக்கத்தை நசுக்கிட, அந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய செயல்பாட்டாளர்களை பொய்யாக புனையப்பட்ட வழக்குகளில் கைது செய்தது பிஜேபி அரசு. டெல்லியில் மதவெறி வன்முறையை ஏவி விட்டது.
சுமார் 95,000 ஈழத் தமிழர்கள், சட்டரீதியாகவும் சட்டத்திற்கு அப்பாலும், தமிழ்நாட்டில், இந்தியாவில், அடைக்கலம் புகுந்துள்ளனர் என அரசு அமைத்த கமிட்டியின் அறிக்கை சொல்கிறது. அதில் சுமார் 58,500 பேர் மாநில அரசின் மறுவாழ்வு முகாம்களிலும், சுமார் 33,500 பேர் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட வெளி முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அதில் சுமார் 45 சதவீதம் பேர் இந்தியாவிலேயே பிறந்தவர்கள் என அரசு புள்ளிவிபரம் கூறுகிறது. அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு குடியுரிமை வழங்க மோடி அரசு தயாராக இல்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஒடுக்கப்படும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக பம்மாத்து காட்டும் மோடியும் பிஜேபியும், தமிழ்நாட்டிலேயே பல ஆண்டுகளாக முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை ஏன் வழங்கக் கூடாது? பலமுறை தமிழ்நாட்டு மக்கள் வாக்குகளைப் பெற ஓடோடி வரும் மோடியோ, அண்ணாமலைகளோ அதைப் பற்றி வாயே திறப்பதில்லையே ஏன்? எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது மதவெறியின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல, தேசிய இன அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்துகிறது. அசாம் மக்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் கூட குடியுரிமை மறுப்பதன் மூலம் பிஜேபி தமிழ் மக்கள் விரோதி, தேசிய இன விரோதி என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம், மக்களைப் பிளவுபடுத்திட பிஜேபி தொடுக்கும் பொய்ப் பரப்புரைகளை நாம் நிச்சயமாக முறியடித்தாக வேண்டும். மேலும் சிஏஏ - என்ஆர்சி தொகுப்பின் பேரழிவுமிக்க பாதிப்புகளுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். சிஏஏவின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. ஆனால், குடியுரிமை கோருபவர்கள் முதலில் தாங்கள் சட்டவிரோத குடியேறிகள் என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது. குடியுரிமை வழங்கப்படும் என்ற மாயையான வாக்குறுதி வழங்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே அதற்குத் தேவையான ஆவணங்களை அளிக்க முடியும், சிஏஏ சோதனையைக் கடக்க முடியும். இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த, எப்படியாவது வாழ்வில் ஒரு பிடிமானத்தை பெற்றுவிட வேண்டும் என ஏங்குகிற, அதற்காகப் பல இடர்ப்பாடுகளையும், வறுமையையும் எதிர்கொண்ட மக்களின் துயரங்களோடும் உணர்வுகளோடும் கொடூரமாக விளையாடுகிறார் மோடி. அத்தகைய கொடுங்கோன்மை மோடியின் மற்றுமொரு வெற்று வாக்குறுதிதான் குடியுரிமை வாக்குறுதிகள். தாமதமாகவேனும் நீதியை வழங்குவது என்னும் பெயரில் இந்த சிஏஏ அவர்களுடைய வாழ்வை இடையூறுக்கு உள்ளாக்க மட்டுமே செய்யும்; நிச்சயமற்ற, பாதுகாப்பற்ற நிலைக்கு மீண்டும் அவர்களைத் தள்ளிவிட மட்டுமே செய்யும்.
மோடியின் தொடர் வெற்று வாக்குறுதிகளைக் கண்டு மயங்கிடாமல், பண மதிப்பிழப்பு முதல் முழு முடக்கம் வரை மோடி தலைமை தாங்கிய தொடர் பேரழிவுகளை எதிர்த்து நின்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் கேட்ட விவசாயிகள் இயக்கம், பழைய ஓய்வூதிய திட்டம் திரும்ப கொண்டு வரப்பட வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் இயக்கம், தனியார்மயம், ஒப்பந்தமயத்திற்கு எதிரான இளைஞர்கள் இயக்கம், தங்களின் வேலைக்கான அங்கீகாரமும் சிறந்த ஊதியமும் கேட்ட திட்டப் பணியாளர்களின் இயக்கம், சாதிவாரி கணக்கெடுப்பும் விரிவாக்கப்பட்ட இட ஒதுக்கீடும் கோரிய தலித் - பகுஜன் இயக்கம் போன்ற ஆற்றல் வாய்ந்த ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டி எழுப்பிய இந்திய மக்கள், தங்களைப் பிளவுபடுத்துகிற இந்த சிஏஏ-என்ஆர்சி சூழ்ச்சியை நிச்சயமாக உறுதியுடன் நிராகரிக்க வேண்டும். சங்கிப் படையின் ஒவ்வொரு சதிகார சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் காலம் வந்துவிட்டது; ஒவ்வொரு வாக்கையும் பயன்படுத்தி மோடி ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய காலம் வந்து விட்டது.
(2024 மார்ச் 12 - 18 எம்எல் அப்டேட், தலையங்கத்தை தழுவி எழுதப்பட்டது)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)