கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணாவிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி பட்டம் மியூசிக் அகாடமியால் வழங்கப்பட இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அவருடைய "ஆற்றல்மிகு குரலுக்கான" அங்கீகரிப்பாக, கர்நாடக இசைக் கலையை "அதன் இறுக்கமான சட்டகங்களுக்குள் வைத்திருப்பதற்கு மாறான பரிசோதனை முயற்சிகளுக்காக", மேலும், கர்நாடக இசையை "சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக" பயன்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என மெட்ராஸ் மியூசிக் அகாடமி தலைவர் என் முரளி குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கர்நாடக குரலிசைக் கலைஞர்கள் விதூசி சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி, ஹரிகதை நிகழ்த்து கலைஞர்களான துஷ்யந்த் ஶ்ரீதர், விஷாகா ஹரி உள்ளிட்ட கர்நாடக இசை உலகின் முக்கிய கலைஞர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் இந்த ஆண்டிற்கான மார்கழி இசைவிழாவில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் அறிவித்தனர். இந்திய அளவிலும் சர்ச்சை உருவானது. குறிப்பாக வட இந்திய ஆங்கில ஊடகங்கள் டிஎம் கிருஷ்ணா மீது சேற்றை வாரி இறைக்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் என்ற புத்தகம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்டிருப்பதாகக் கூறி அதன் வெளியீட்டு விழாவிற்கு அளித்திருந்த அனுமதியை கலாக்ஷேத்ரா விலக்கிக் கொண்டது. 'வேத வாத்தியம்' எனப்படும் மிருதங்க இசைக் கருவி, கர்நாடக இசையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதனைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தலித்துகளுக்கும், கர்நாடக இசைக்கலைஞர்களான உயர்சாதி பார்ப்பனர்களுக்கும் இடையிலான பாகுபாடான சாதிய உறவு குறித்து இப்புத்தகம் விரிவாகப் பேசுகிறது. மிருதங்க உருவாக்கக் கலைஞர்களான தலித்துகள் இந்த இசைப் பிரமிடின் (கீழே விரிந்ததாகவும் மேலே கூர்முனையும் கொண்ட கோபுரம் போன்றது பிரமிட்) மிகவும் கீழ் மட்டத்தில் அழுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கர்நாடக இசை பங்களிப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என்பதை, இப்புத்தகத்தின் வாயிலாக டிஎம் கிருஷ்ணா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்.
2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள மீனவர் கிராமமான ஊரூர் ஒல்காட் குப்பத்தில் மார்கழி இசைவிழாவை நடத்தியவர் டிஎம் கிருஷ்ணா. 'ஷ்வானுபவ' என்ற மற்றொரு இசைவிழாவின் மூலமாக, முதன்மை கர்நாடக இசைக் கலைஞர்களால் அங்கீகரிக்கப்படாத, பல்வேறு கலை வடிவங்களும் நிகழ்த்தப்படுவதற்கான மேடையை உருவாக்கித் தந்தவர்.
2018 ஆம் ஆண்டு வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் அவர்களின் சீடரான சாமுவேல் ஜோசப்-பால் உருவாக்கப்பட்ட 'இயேசுவின் சங்கம சங்கீதம்' என்ற இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டதற்கு குரலிசை கலைஞர் ஓஎஸ் அருண் மிரட்டப்பட்டார். அதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்து அல்லாத கடவுள்களின் புகழ் பாடுவதற்கு கர்நாடக இசை பயன்படுத்தப்படக் கூடாது என சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியது. இதற்கு எதிராக குரல் கொடுத்த டிஎம் கிருஷ்ணா, இயேசு, அல்லா குறித்த கர்நாடக இசைப் பாடல்களை ஒவ்வொரு மாதமும் வெளியிடுவேன் என அறிவித்தார்.
இப்படியாக, கர்நாடக இசை பார்ப்பன மேட்டுக் குடியினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல; இந்து மத கடவுளர்களின் புகழ்பாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தத்தக்கதுமல்ல; கர்நாடக இசையோடு தொடர்புடைய சாதியவாதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் போன்றவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர், செயலாற்றுபவர் டிஎம் கிருஷ்ணா. 'பார்ப்பனர்களின் எதிரி'யான பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். 'சிந்திக்கச் சொல்பவர் பெரியார்' என பெரியார் குறித்து பாடுகிறவர்; கர்நாடக இசையின் வழியே சமூக மாற்றத்திற்கான கருத்துக்களைப் பாடிவருபவர். எனவேதான் இந்துத்துவ சக்திகளால் டிஎம் கிருஷ்ணா தீவிரமாக தாக்கப்படுகிறார்.
இத்தகைய தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. 1930ல் சுயமரியாதை மாநாட்டில் நம்ம பிள்ளைகள் இசை கற்க வேண்டும் என்ற தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்த போதே பார்ப்பனிய சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ”இசையை யார் வேண்டுமானாலும் இசைக்கலாம் என்றால் அது சனநாயகப் போக்கிற்கு தீங்கு விளைவிக்கும். கர்நாடக இசை, சாதி மேலாண்மை வலியறுத்தப்படுவதை காலம் காலமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது” என்றார் செம்மங்குடி சீனிவாச ஐயர். அத்தகைய கருத்தின் தொடர்ச்சிதான் இப்போது நடக்கும் விவாதம் எனலாம். இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும். இசை, கலை, இலக்கியங்களை சாதீய, மதச் சட்டகங்களுக்குள் வைத்துப் பூட்டும் முறையை ஒழிப்பதே ஜனநாயகப் போக்கை வலுப்படுத்தும் என்பது தமிழக மரபு.
எதிர்க் கருத்துகளை, மாற்றுக் கருத்துகளை அதிலும் குறிப்பாக மதச்சார்பற்ற, முற்போக்கு, ஜனநாயக கருத்துகளை, அவை எந்தத் தளத்தில் வெளிப்பட்டாலும் அவற்றை நசுக்கி, ஒழித்துக் கட்டிவிட இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவ பாசிச சக்திகள் முழுமூச்சாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த செயல் திட்டத்தின் வெளிப்பாடு தான் டிஎம் கிருஷ்ணா மீதான இப்போதைய தாக்குதல்.
டிஎம் கிருஷ்ணா மீதான தாக்குதலுக்கு எதிராக மெட்ராஸ் மியூசிக் அகாடமி அவருடன் நிற்கிறது. "கர்நாடக இசையோடு தொடர்புடைய சாதிப் பாகுபாடு ஒழித்துக் கட்டப்பட வேண்டும்" எனக் குரல் கொடுத்ததற்காகவே டிஎம் கிருஷ்ணா தாக்கப்படுகிறார் என, மீ டூ இயக்க செயற்பாட்டாளர், பாடகி சின்மயி கிருஷ்ணாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். கர்நாடக இசை வளர்ச்சிக்கு ஆபிரகாம் பண்டிதர் போன்ற பார்ப்பனரல்லாத ஆளுமைகள் பங்களித்திருப்பதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன் எடுத்துக்காட்டி காயத்ரி, ரஞ்சனி உடன்பிறப்புகளை விமர்சிக்கிறார்.
"அவருடைய முற்போக்கு அரசியல் நிலைப்பாட்டிற்காகவும், தொடர்ந்து ஏழைகளுக்காக குரல் கொடுப்பதற்காகவும் டிஎம் கிருஷ்ணா தாக்கப்படுகிறார்" என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்துத்துவ வலதுசாரி கருத்துகளை தமிழகம் தடுத்து நிற்கும் என்பதன் வெளிப்பாடாக இவற்றைக் கொள்ளலாம்.
இடதுசாரி, திராவிட மரபுகளின் விளைவாக தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கும் முற்போக்கு ஜனநாயக விழுமியங்களை ஒழித்துக் கட்ட சங்கிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இந்தப் பின்னணியில் டிஎம் கிருஷ்ணா மீதான தாக்குதலுக்கு எதிராக, இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் உறுதியாக குரல் கொடுக்க வேண்டும். பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சூழலால் ஊக்கமடைந்துள்ள பாசிச கருத்துகள் தமிழகத்தில் வேரூன்றுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். வர இருக்கிற 2024 மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சியை தோற்கடிப்பது இதுபோன்ற பழமைவாத பிற்போக்கு சக்திகளுக்கும் தக்க அடியாக இருக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)