மோடியின் பேரழிவுவாத நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலனிலிருந்து தான் என சொல்லப்படுகிறது. தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காகத்தான் தேர்தல் பத்திரம், விவசாயிகளின் நலனில் இருந்து தான் வேளாண் சட்டங்கள், காஷ்மீர் மக்களின் நலன் காக்கத் தான் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலனில் இருந்து தான் புதிய குற்றவியல் சட்டங்கள், பெண்கள் நலனிலிருந்து தான் பொது சிவில் சட்டம், தொழிலாளர்களை பாதுகாக்கத் தான் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் என்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக பெற்ற, அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக பெற்ற மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகிறார்கள்.
இப்போது தேர்தல் நேரத்தில் "மோடியின் உத்தரவாதம்" என்ற விளம்பரத்தினை செய்து வருகிறார்கள்.எல்லாவற்றையும் பறித்து விட்டு எல்லோருக்கும் எல்லாம். கிடைக்கச் செய்வோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும் இணைந்து இந்த நாசகர ஆட்சி வெளியேற்றப்பட வேண்டும் என்று வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த விவாதத்தையும் ராமர் கோவில், சனாதனம் என மாற்றி, வளர்ச்சி வளர்ச்சி என கூக்குரலிட்டு 2024 ஆட்சி கட்டில் கனவில் கவனமாக சங்கி கூட்டம் காய் நகர்த்துகிறது.
படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை, வேலைக்கேற்ற கூலி இல்லை.
மக்களின் அடிப்படை பிரச்சனைகளான வேலை வாய்ப்பு பற்றி இடைக்கால பட்ஜெட்டில் தேடிப் பார்க்க வேண்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வு, மாதம் ரூபாய் 25000க்கு கீழ் ரூபாய் 10,000, ரூபாய் 5000 ஊதியம் பெறும் குடும்பங்கள் சொல்லொணா துயரத்தில் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதுவரை இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம் உச்சபட்சமாக உயர்ந்திருக்கிறது. அரசுத் துறை, ரயில்வே, வங்கி, பொதுத்துறை நிறுவனங்கள் என பல லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையிலும் கூட பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் தூக்கி வீசப்படுகின்றனர். சுய தொழில் புரிவோர் கடும் நெருக்கடியில் உள்ளனர். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. கடைவீதிகளை பார்த்தாலே தெரியும்.
சமூகப் பாதுகாப்புக்குப் பிரியா விடை!.
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் எண்ணிக்கை உயர்வை வைத்து வேலை வாய்ப்பு உயர்ந்திருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். அவ்வப்போது தொடங்கப்படும் வைப்பு நிதி கணக்குகளால் எந்த சமூகப் பாதுகாப்பு பலனும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை ஒப்பந்ததாரர்கள் கட்டுவதில்லை. ஒப்பந்ததாரர்கள் மாறும் போது கணக்குகள் தொடர்வதில்லை, அப்படியே வைப்பு நிதி பணத்தை செலுத்தினாலும் அந்த பணத்தை தொழிலாளர்கள் எடுத்து பயன்படுத்த முடிவதில்லை. பெங்களூரு தூய்மை பணியாளர்கள் வைப்பு நிதி உள்ளிட்ட தங்களுக்கு பாத்தியப்பட்ட தொகைக்காக உயர் நீதிமன்றம் வரை சென்று ரூபாய் 90 கோடி நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். இதுபோல் தொழிலாளர்களின் பணம் பல லட்சம் கோடிகள் கிடப்பில் கிடக்கின்றன. தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்திற்கும் இதே நிலைதான். பணத்தை மட்டும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்து விட்டு, திட்டத்தை முறையாக அமல்படுத்துவதில்லை அல்லது தொழிலாளர்கள் பணியிடத்திற்கு அருகிலேயோ அல்லது குடியிருப்புக்கு அருகிலேயோ இ எஸ் ஐ மருத்துவமனைகள் இல்லாததால் அதனால் பெரும்பாலும் தொழிலாளர்களுக்கு பயன் இல்லை
காலம் காலமாய் இந்திய தொழிலாளர் மாநாடுகள் மூலம் குடும்ப உறுப்பினர்களையும் கலோரி தேவையையும் கணக்கில் கொண்டு பட்டியலிடப்பட்ட தொழில்களுக்காக கொண்டுவரப்பட்ட குறைந்தபட்ச ஊதியக் கொள்கை கூட ஒழித்துக்கட்டப்படுகிறது. நாளொன்றுக்கு ரூபாய் 176 தரைமட்ட கூலியாக கொடுத்தால் போதுமானது என்கிறது அரசு. ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் புதிய வகை ஜிக் தொழிலாளர்கள் போல மாற்றப் பார்க்கிறது. அன்றாட வேலை அதன் அளவுக்கு ஏற்ப வழங்கப்படும் சொற்ப கூலி. குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, போனஸ், பணி நிரந்தரம் பற்றி பேசாதே என்கிறது. விபத்துக் காப்பீடு, உயிரிழப்பு காப்பீடு மட்டுமே உள்ள இ-ஷ்ரம் போர்ட்டல் தான் சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்தப்படுகிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை, மக்கள் மீது சுமை.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த பின்பும் பெட்ரோலிய பொருள்களுக்கான கலால் வரியை ஒன்றிய அரசு குறைக்க மறுக்கிறது. எரிவாயு நிறுவனங்கள் தான் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கின்றன என்று சொல்லி வந்த பிரதமர் மோடி, தேர்தல் நேரத்தில் மட்டும் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 100 குறைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பெண்கள் தினத்தில் அறிவிக்கிறார். 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை இரு மடங்குக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. அனைத்து அத்தியாவசிய பொருள்களின் மீது சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் 35 சதவீதமாக இருந்த கார்ப்பரேட் வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது திவாலான நிறுவனங்களை எடுத்து நடத்த முன்வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஹேர் கட் என்ற பெயரில் சுமார் 14 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக ஒரு சில தினங்களிலேயே ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலே பல நாடுகளின் உணவு வகைகள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒவ்வொன்றாக பரிமாறப்பட்டனவாம். கிரிக்கெட், சினிமா நட்சத்திரங்கள் துவங்கி உலக அளவில் அனைத்து பிரபலங்களும் அங்கு குழுமி இருந்தனர். மிகப்பெரும் ஆடம்பர விழாவாக அது நடந்தேறியது. அரசு சலுகை சார் முதலாளித்துவம் அரியணையில் இருக்கும்போது மலை போல் செல்வம் குவிவதும் மறுபக்கம் கடல் போல் வறுமை நிலவுவதும் நடக்கத்தானே செய்யும். இந்த பின்னணியில் கிராமப்புற மக்களுக்கு ஓரளவு உதவியாக இருந்த 100 நாள் வேலை திட்டமும் முற்றாக ஒழித்து கட்டப்பட்டிருக்கிறது.
உத்திரபிரதேசம், ஹரியானாவிலிருந்து யுத்த களமாக இருக்கும் இஸ்ரேலுக்கு மாநில அரசுகளே கட்டுமானத் தொழிலாளர்களை அனுப்புவதும், குஜராத் மாதிரி வளர்ச்சி என்று பம்மாத்து காட்டும்போது குஜராத்திலிருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவுக்குள் நுழைய ஆயிரக்கணக்கானோர் முயற்சித்து சிக்கிக் கொண்டதும், ரஷ்ய உக்ரைன் போரில் ரூ1-1/2 இலட்சம் சம்பளத்துக்கு கூலிகளாக சேர்ந்து இன்னுயிரை மாய்ப்பதும் இந்த ஆட்சியின் அவலங்களாகும்.
புல்டோசர் ராஜ்ஜியம்
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆட்சியின் புல்டோசர் மாடல் ஆட்சி தேசியத் தன்மை பெறுகிறது. அரசை எதிர்க்கும் சிறுபான்மை மக்கள் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்கும் கலாச்சாரம் யோகி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 41 பேரை எலி வளை தொழில்நுட்பம் கொண்டு மீட்ட தொழிலாளர்களில் ஒருவர் வக்கீல் ஹசன். டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அவர் வீடு புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப் பட்டது. தனது உயிரை பணயம் வைத்து 41 பேரை காப்பாற்றியவருக்கு பாஜக செலுத்தும் நன்றி கடன் இதுதான். வக்கீல் ஹசனின் குடியிருப்பு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களின், உழைக்கும் மக்களின், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மோடி அரசு பறித்து வருவதற்கு முடிவு கட்ட வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டம்
2004 க்கு பிறகு அரசு பணிகளில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஒருவர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% உத்தரவாதமான ஓய்வூதியமாக கிடைக்கும். நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய பின்னணியில் சில எதிர்க்கட்சி மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கும் ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மாநில அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்து பென்ஷன் நிதியத்துக்கு வழங்கி உள்ள நிதியை திருப்பித் தர முடியாது என்கிறது.
கார்ப்பரேட் சுதா மூர்த்திக்கு ராஜ்ய சபா!
இந்தியா முன்னேறவேண்டுமானால் தொழிலாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசிய இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் துணைவியார் தான் சுதா மூர்த்தி. அது மட்டுமல்ல, வெளிநாடு வாழ் இந்தியரான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாரும் ஆவார். மாநிலங்கள் நலன்களை பிரதிபலிப்பதற்காக அமைக்கப்பட்ட மாநிலங்களவையில் சுதா மூர்த்தி நியமன உறுப்பினராக்கப்பட்டுள்ளார். மோடி அரசாங்கம் கார்ப்பரேட்டுகளின் அரசாங்கம் என்று அப்பட்டமாக மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறது.
உழைக்கும் மக்களுக்கு எதிரான, சாமானிய மக்களுக்கு எதிரான, மோடி ஆட்சியை தொழிற்சாலை தோறும் குடியிருப்புகள் தோறும் அம்பலப்படுத்துவோம்.2024 தேர்தலில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)