அனைவருக்கும் வணக்கம்!
தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள கட்சி சிவகங்கை மாவட்டத் தலைமைக் குழுவுக்கு பாராட்டுகள்.
தோழர் செந்தமிழ், இது கந்தக பூமி என்று சொன்னார். இந்த பூமியை எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்படி வேண்டுமானாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்போது வேண்டுமானாலும் தீப்பிடித்துக் கொள்ளும் என்று சொன்னாரா? தெரியவில்லை. அவர்தான் சொல்ல வேண்டும்.
ஆனால் இந்த மண்ணின் வரலாறு பற்றி எரிந்த வரலாறு. போராட்ட வரலாறு. வெள்ளையரை எதிர்த்துப் போராடிய வீர வரலாறு. நமக்குத் தெரியும். மருது சகோதரர்கள், ராணி மங்கம்மாள், குயிலி என்று பலரைக் கூறலாம். 1942, ஆகஸ்ட் புரட்சியில் எழுச்சி பெற்ற தேவகோட்டை புரட்சி! தலித்துகளின் சமத்துவம், சுயமரியாதைக்காக கர்ஜித்த தியாகி இமானுவேல் சேகரன். உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்காக செங்கொடி தூக்கி போராடிய தோழர் மாடக்கோட்டை சுப்பு, தோழர் நமசு என பலரை நினைவு கூறலாம்......
இந்த வரிசையில் தோழர் சந்திரபோசையும் குறிப்பிடலாம். தோழர்கள் பலரும் பேராசிரியர் களும் தோழர் சந்திரபோகடன் தங்களுக்குள்ள நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டனர். எனக்கும் கூட சில முறை அவருடன் ஊடாடிய அனுபவமுண்டு.
நானும் எமது கட்சியும் அவரது பொது வாழ்வை வேறு ஒரு தளத்தில் பார்க்கிறோம். தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளை ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றிக் காட்டினார். 1989 தொடங்கி ஆண்டு தோறும் இமானுவேல் சேகரனது நினைவுநாளை ஒரு அரசியல் அணிதிரட்டலாக மாற்றிக் காட்டியதில் அவரது பங்கு முதன்மையானது.
தியாகி இமானுவேல், தனது இளமைக் காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். அதனால் பள்ளிப் படிப்பு மறுக்கப்பட்டு தண்டிக்கப் பட்டார். கல்வி வாய்ப்பை பறிகொடுத்த அவர், ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்திலிருந்து திரும்பிய அவர், ஒடுக்கப்பட்ட தலித்துகள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை கண்டு பொங்கி எழுந்தார். அவர்களது சுயமரியாதைக்காக, கவுரவத்துக்காக பாடுபடுவதென்று முடிவுசெய்து களத்தில் இறங்கினார். அதை தனது போராட்ட வாழ்க்கையாகவே மாற்றிக்கொண்டார். அந்த போராட்டத்தில் அவர் எதிரிகளால் கொல்லப் பட்டார். தியாகியானார் இமானுவேல் சேகரன்.
அந்த இமானுவேல் சேகரனது நினைவு நாளைத்தான் ஒரு அரசியல் நிகழ்ச்சியாக, மாநிலம் முழுவதுமிருந்து தலித்துகள் அணி திரளுகிற ஒரு அரசியல் நிகழ்வாக தோழர் சந்திரபோஸ் மாற்றிக் காட்டினார். இந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிற "ஜெயந்தி" நிகழ்வுக்கு இணையாக இமானுவேல் சேகரனது நினைவுநாளை மாற்றிக் காட்டினார். அக்டோ பரில் ஆண்டுதோறும் நடக்கிற அந்த நிகழ்வுக்கு அரசியல் தலைவர்களுள் யார் முதலில் செல்வது என்பதில் கடும் போட்டியிருக்கும். அதற்கு இணையாக, அரசியல் கட்சிகள், தலைவர்கள் இமானுவேல் சேகரனது நினைவு நாளுக்கு செல்வது என்ற முக்கிய அரசியல் நிகழ்வாக மாறியது. மனுநீதி வருணாசிரம தருமத்தை அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்ட பாஜக கூட தியாகி இமானுவேல் சேகரனது நினைவு நாளில் அவரது நினைவிடத்துக்கு செல்லுகிற நிலையும் உருவானது. அதனால் இமானுவேல் சேகரனை, அவரது கொள்கைகளை பாஜக ஏற்றுக் கொண்டு விட்டது என்று யாரும் நம்ப மாட்டார்கள். தலித்துகளது வாக்குகளை வாங்கி விடலாம் என்ற முயற்சிதான் என்பது அனைவ ருக்கும் தெரியும்.
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை எவரும் மறந்திருக்க முடியாது. ஏழுபேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இந்த துப்பாக்கிச் சூடுபற்றி சட்டப் பேரவையில் விளக்கமளித்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. கலவரக்காரர்கள் மீது 'அந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்காவிட்டால் ஏராளமான பொருள் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இருந்தி ருக்காது' என்று பேசினார். செப்டம்பர் 11, இமானுவேல் சேகரனது நினைவு நாளில் அணிதிரண்டவர்கள், ஜெயலலிதாவுக்கு 'கலவரக் காரர்களாகி' விட்டார்கள். வன்முறையாளர்களாகி விட்டார்கள்.
ஆக, இமானுவேல் சேகரன் நினைவு நாளில் ஆண்டுதோறும் திரளும் தலித்துகளின் அணி திரட்டலை சிதறடிக்க வேண்டும்; தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திட்டம்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு க்குப் பின்னால் இருந்த 'அரசியல் காரணம்'. இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னால் இருந்த அரசியல் சதித்திட்டம்தான் பரமக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னாலும் இருந்தது. இதை அறிந்துகொள்ள பெரிய அரசியல் ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தலித்துகள் படுகொலை மாநிலம் முழுவதும் தலித்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் ஒருபகுதியாகத்தான் அதிமுக ஆட்சியின் ஒடுக்கு முறையைக் கண்டித்து, தோழர் சிம்சன் சுட்டிக்காட்டியது போல, 10,000க்கும் மேற்பட்ட பெண்களை பரமக்குடியில் திரட்டி ஜெ ஆட்சிக்கு எதிராக கடும் எதிர்ப்பைக் காட்டினார் தோழர் சந்திரபோஸ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) இந்த எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பங்கு பெற்றது.
எங்கெல்லாம் அநீதியும் அடக்குமுறையும் இருக்கிறதோ அவற்றை எதிர்த்து அங்கெல்லாம் இமானுவேல் சேகரன், சுப்பு, சந்திரபோஸ் இருப்பார்கள். இருக்க வேண்டும்.
தோழர் சந்திரபோசும் என்னைப் போன்ற வர்களும் 80,90 களில் இணைந்து பயணித்தோம். அதை நினைவுகூரும் வகையில் மட்டும் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தவில்லை. மேலே குறிப்பிட்டது போல தலித்துகளுக்கு எதிரான அநீதியை, அடக்கு முறையை முடிவுக்கு கொண்டு வரும் உறுதியுடன் களமாடினார். அவரது இந்த போராட்ட பதாகையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அந்த முயற்சியின் ஒரு நிகழ்வாக இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கும் கட்சியின் மாவட்டக் கட்சியை பாராட்டுகிறேன். இதே சிவகங்கை மாவட்டத்தில்தான் கீழடி இருக்கிறது. அங்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பே மேம்பட்ட நகர நாகரிகம், பண்பாடு இருந்ததாக பெருமை கொள்கிறோம். பக்கத்திலுள்ள புதுக்கோட்டை, வேங்கைவயலில் தான் தலித்துகள் குடிக்கும் நீரில் மலம் கலந்த கொடூரம் நடந்திருக்கிறது. இது என்ன வகையான நாகரிகம்? எந்த வகைப்பாட்டில் பண்பாடு? குற்றவாளிகள் இன்னும் கூட கைது செய்யப் படவில்லை! எனவே தியாகி இமானுவேல், சுப்பு, சந்திரபோஸ் இவர்களது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எல்லாவற்றையும் விட நாட்டை இன்று மாபெரும் ஆபத்து கவ்வியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் பாஜக ஆபத்து. நேற்று மோடி ஒரு பத்திரிகை மாநாட்டில் பேசியிருக்கிறார். இந்தியாவில் 'ஜனநாயகமும்' அமைப்பு முறைகளும் வெற்றி பெற்றிருப்பதாக பேசியிருக்கிறார். மோடி, பாசிசத்தை 'ஜனநாயகம்' என்று கூறியிருக்கிறார். ஒருவேளை அதனால் தானோ என்னவோ பேராசிரியர் ராகுலதாசன் ஜனநாயகத்தின் மீது "நம்பிக்கை இல்லை" என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். இன்று ஜனநாயகம் காப்பாற்றப் பட வேண்டும். அதனால்தான் இகக(மாலெ) அதன் 11வது அகில இந்திய மாநாடு, "ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்" முழக்கத்தை செயலாக்க தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டது. ஜனநாயகம் காப்பது என்றால் ஏதோ எதிரில் உட்கார்ந்து பேசுவது என்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மோடி ஆட்சி சிதைத்துக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் பல அறிஞர்களுடன் சேர்ந்து உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை சீரழித்து சின்னாபின்னமாக்க வேலை செய்து கொண்டி ருக்கிறது. எனவே அரசமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை காக்க வேண்டியது அவசர அவசியமாக இருக்கிறது. ஜனநாயகம் இல்லாவிட்டால் கோரிக்கைகள் எழுப்ப முடியாது. போராட்டமே நடத்த முடியாது. பெண்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் உரிமைகள், நலன்கள்தான் ஜனநாயகம். மோடிஅதானியின் அடக்குமுறையும் கொள்ளை யும் ஜனநாயகமல்ல. நாம் நமது ஜனநாயகத்திற் காகப் போராடியாக வேண்டும். அநீதி, அடக்குமுறையை எதிர்த்து முன்னேற ஜனநாயகம் வேண்டும். பல வண்ணங்கள், அமைப்புகள், தலைவர்கள் இங்கே கூடியிருக்கிறோம். ஆனால், அனைத்தும் ஒரு வண்ணத்திற்கு எதிராக, மோடி அதானி பாசிச சர்வாதிகாரத்துக்கு எதிராக கரம் கோர்க்க வேண்டும். அதுதான் பாட்னா மாநாட்டின் செய்தி. அந்த அடிப்படை யில்தான் விசிக தலைவர் தோழர் தொல். திருமாவளவனும் அந்த மாநாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.
நீதிக்கான போராட்டத்தில், ஜனநாயகத்துக் கான போராட்டத்தில் ஒன்று சேருவோம். அதுதான் தோழர் சந்திரபோசுக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)