சர்வாதிகார மோடி ஆட்சிக்கு எதிரான
வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
திபங்கர்
- 2024 தேர்தல், இந்திய ஜனநாயகத்துக்கு மிகவும் தேவையானதோர் ஆற்றல்மிக்க உந்துதலைக் கொடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மோடியின் வாய்ச்சவடால் எடுபடவில்லை. இந்திய மக்களின் முக்கிய நிரலாக வாழ்வாதாரப் பிரச்சனைகள், சுதந்திரம், அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது, இந்தியாவின் பன்முகப்பட்ட தன்மையை காப்பது போன்றவை பெருமளவில் அறுதியிட்டு எழுந்தபோது என்ன செய்வதென்றே தெரியாமல் பிஜேபியை திகைக்க வைத்தது இந்தத் தேர்தல். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பு சற்றும் வழங்காத ஒரு தேர்தல் இது. தனது அரசமைப்புச் சட்ட பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றிச் சற்றும் கவலைப்படாத ஒரு தேர்தல் ஆணையத்தால், அரசாங்க நிர்வாகத்தின் ஒரு நீட்சி போல செயல்பட்ட தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல் இது. எதிர்க் கட்சிகள் தாமதமாகவேனும் ஒன்று சேர்ந்தன. ஆனால், சூழலின் தேவைக்கேற்ற ஒருங்கிணைவும், தெளிவும் இயங்காற்றலும் கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும், மக்கள் எதிர்க்கட்சிகளை செயல்பட வைத்தனர். நசுக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் பாசிச புல்டோசருக்கு எதிரான தங்களது ஆற்றலை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு வாகனமாக அதைப் பயன்படுத்திக் கொண்டனர். இந்தியா எனும் கூட்டணி கட்டமைப்பையும் தாண்டி, உண்மையிலேயே களத்தில் ஒரு மக்கள் இயக்கமாக தேர்தல் மாறியது. அத்தகைய மக்கள் இயக்கத்துக்கு, அர்ப்பணிப்பு மிக்க குடிமைச் சமூகமும், மிகவும் திறன்பெற்ற, அர்ப்பணிப்புமிக்க எண்மயப் (டிஜிட்டல்) போராளி சமூகமும் ஆதரவாக இருந்தன.
- 2024ல், 1977 மீண்டும்திரும்பியிருப்பதாக கருதமுடியாது. அதற்கான முக்கிய காரணம், நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்ட பிறகு 1977 தேர்தல் நடந்தது. 2024 தேர்தலோ அதிகாரபூர்வமாக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இடைவிடாது தொடர்ந்து பயங்கரத்தையும் அடக்குமுறையும் கட்டவிழ்த்துவிட்ட ஒரு ஆட்சிக்கு மத்தியில் நடந்து கொண்டிருந்தது. 2024 தேர்தலை 2004 தேர்தல் போன்றது என்றும் கருதமுடியாது. 2004 பிஜேபி, மோடி காலத்து பிஜேபி போல சக்தி வாய்ந்ததாக இருக்கவில்லை; எதிர்க்கட்சிகள் குறிப்பாக, காங்கிரசும், இடதுசாரிகளும், பிராந்திய, சமூக நீதி முகாமைச் சார்ந்த கட்சிகளும், பத்தாண்டு கால மோடி ஆட்சியினால் பலவீனப்பட்டுப் போனதை போல, 2004ல் அவ்வளவு பலவீனமாக இருக்கவில்லை. இருப்பினும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில், நவீன இந்தியாவின் மிகவும் நெருக்கடியானதோர் தருணத்தில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய தேர்தலாக 2024 தேர்தல் நினைவுகூரப்படும்.
- இந்தத் தீர்ப்பு அவ்வளவு வலுவானதாக இருக்க முக்கிய காரணம், நாடாளுமன்ற பலம் என்கிற முறையில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் ஆகிய இந்தியாவின் மூன்று பெரிய மாநிலங்களில் பிஜேபிக்கு விழுந்துள்ள பெரும் அடிதான். ராஷ்ட்ரீய லோக் தள் கட்சி, பிஜேபியோடு சேர்ந்துவிட்ட போதும் கூட, பகுஜன் சமாஜ் கட்சி, பிஜேபியின் உத்தரவின் பேரில் மிகவும் சந்தேகத்திற்குரிய விதத்தில் செயல்பட்ட போதும் கூட, சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் தேர்தலில் சிறந்த வெற்றியைப் பெற்றன. அதுதான், மோடி-ஷா-யோகி ஆட்சிக்கு எதிரான மக்கள் அறுதியிடலின் உச்சகட்டம் ஆகும். அயோத்தியாவிலேயே இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது, அந்த பொதுத் தொகுதியில் ஒரு மூத்த தலித் தலைவர் வெற்றி பெற்றது, சங்கிப் படையின் நோக்கத்தை, பரந்த மக்கள் முற்றிலுமாக மறுதலித்ததன் ஆற்றல்மிக்க சின்னமாகத் திகழ்கிறது. அது மட்டுமல்லாமல், வாரணாசியில் மோடியின் வெற்றியையே வெட்டி சுருக்கியதும், மோடி ஆட்சியின் மிகவும் அகங்காரம் பிடித்த சில முகங்களை, லக்கிம்பூரில் அஜய் மிஸ்ரா டேனி, அமேதியில் ஸ்மிருதி இரானி போன்றோரை, தோற்கடிக்கப் பட்டதும் இன்னும் இனிப்பான செய்தியாக இருக்கிறது. விவசாயிகள் இயக்கத்தின் ஆற்றல், மிகப்பெரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிரான, குறிப்பாக அக்னிவீர் திட்டத்திற்கு எதிரான, இளைஞர்களின் கோபம், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட வேண்டும் என்கிற தலித்-பகுஜன் சமூகங்களின், சுதந்திர தாகம் கொண்ட குடிமக்களின் உறுதி ஆகிய அனைத்தும் ஒன்றுசேர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் இந்தத் தேர்தலை ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக மாற்றி இருக்கிறது.
- தோற்றத்தில், முற்றிலும் வேறுபட்டதாகவும், பலவண்ணம் கொண்டதாக காணப்பட்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகளை, பல மாநிலத் தேர்தல் முடிவுகளின் கூட்டுத்தொகையாக கருதுவது தவறாகும். மாநில சட்டமன்றத் தேர்தல்களும் சேர்ந்து நடந்த ஒடிஷா, ஆந்திரா போன்ற மாநில மக்களின் மாற்றத்திற்கான தேடுதல், அங்கு நிலவிய அரசியல் வெற்றிடம் ஆகியவற்றை பிஜேபி பயன்படுத்திக் கொண்டது என்பது உண்மைதான். ஆனால், தேர்தல் முடிவுகள் மோடி ஆட்சிக்கு எதிரான ஒரு தெளிவான அகில இந்திய செய்தியைச் சொல்கின்றன.
- யாருக்காவது அதை நிரூபிக்க வேண்டுமானால், மேற்கு வங்க தேர்தல் முடிவுகளை, அதன் வலுவான செய்தியைச் சுட்டிக்காட்டலாம். மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி உணர்வுகள் வலுவாகவே இருந்தன; இந்தியா கூட்டணி பிளவுண்டு கிடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசாங்கத்தின் செயல்பாடு பற்றியதோர் பொது வாக்கெடுப்பாக முடிந்துபோகக் கூடும் என நம்பப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் தெட்டத்தெளிவாக மோடி ஆட்சிக்கு எதிராக அமைந்தன. உண்மையில், மாநில அரசாங்கங்கள் தோற்கடிக்கப்பட்ட ஆந்திரா, ஒடிஷா போன்ற மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் வாக்குகளையும் தொகுதிகளையும் பிஜேபி இழந்திருக்கிறது. பிஜேபிக்கு வாக்கு எண்ணிக்கை மட்டுமே அதிகரித்துக் கொண்டிருந்த, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களில் இப்போது அது தொகுதியாகவும் மாறத் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் பாசிசத்தின் வளர்ச்சிக்கும் உறுதிப்பாட்டுக்கும் மையமான மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பிஜேபி பெற்ற பலத்த அடிதான் 2024 தேர்தல் முடிவுகளின் கருவான அம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிற செய்தியாகும்.
- பீகாரில் இந்தியா கூட்டணி செயல்பாடு எதிர்பார்ப்பைவிட பின்தங்கி இருந்தாலும்கூட, தெற்கு பீகாரின் ஷாகாபாத், மகத் பிராந்தியங்களில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்து இருக்கிறது. இறுதிக் கட்டத்தில் தேர்தல் நடந்த எட்டில் ஆறு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற இரண்டு தொகுதிகளிலும் கூட போட்டி கடுமையானதாக இருந்தது. ஜனநாயகம், சமூக நீதிக்காக போராடும் சக்திகளின் அறுதியிடலை, ஒற்றுமையை வடிவமைப்பதில் சிபிஐஎம்எல் ஒரு நங்கூரமாக பங்காற்றி இருக்கிறது. அந்த எட்டு தொகுதிகளில் மூன்றில் போட்டியிட்டு இரண்டில் வென்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல், அரசியல் உள்நோக்கத்துடன் புனையப்பட்ட ஒரு பொய் வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட தோழர் மனோஜ் மன்சிலின் எம்எல்ஏ தகுதி நீக்கத்தால், போஜ்பூரின் ஏகியோன் (தனி) தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலிலும் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணி ஆதரவோடு சிபிஐஎம்எல் போட்டியிட்ட மற்றொரு மாநிலம் ஜார்க்கண்ட் (கோடர்மா தொகுதி) ஆகும். ஆனால் அங்கு தொலைதூர இரண்டாம் இடமே கிடைத்தது. ஜார்க்கண்ட் மக்களின் பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் மலைவாழ் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகளுக்குள் மட்டுமே கட்டுண்டு போனதற்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும். பிஜேபிக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர தேர்தல் பரப்புரை இயக்கத்தில் ஈடுபட்ட அதே வேளையில், பீகார், ஜார்க்கண்டில் போட்டியிட்ட தொகுதிகளில் கட்சி சிறப்பு கவனம் செலுத்தியது.
- தெற்கில், தமிழ்நாடு - கேரளாவில், ஏற்கனவே இருக்கும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு, கூடுதலாக தற்போது, பீகாரில் சிபிஐஎம்எல் இரண்டு தொகுதிகளிலும், ராஜஸ்தானில் சிபிஐஎம் ஒரு தொகுதியிலும் வென்றிருப்பது, அதாவது இந்திப் பிரதேசத்தில் மூன்று தொகுதிகளில் இடதுசாரிகள் வென்றிருப்பது, நாடாளுமன்றத்தில் இடதுசாரி பிரதிநிதித்துவத்துக்கு ஓர் உற்சாகமிக்க உந்துதலைக் கொடுத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியை விட்டு அகற்றுவதற்கான எண்ணிக்கையில் சற்று குறைந்து இருந்தாலும் கூட, மோடி ஆட்சிக்கு பலத்த அடி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் மேலும் உறுதியான, ஒன்றுபட்ட, எதிர்க்கட்சி அணியின் உதயம்தான் 2024 தேர்தலின் மிகப்பெரும் பலனாகும். தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவினால் அரசு அமைப்பதற்கான எண்ணிக்கை தேசிய ஜனநாயக கூட்டணியிடம் இருக்கலாம். ஆனால், மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி-ஷா-யோகி போன்றவர்கள் புதிய அரசாங்கத்தின் தலைமை பீடத்தில் அமரும் தார்மீக உரிமையற்றவர்கள். சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சை அனுமதித்ததன் மூலம், ஜனநாயக விவாதங்கள், வேறுபாடுகளை நசுக்கியதன் மூலம், அத்தகைய ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மூலம், முந்தைய சபாநாயகர் அந்தப் பதவியையே அசிங்கப்படுத்தி விட்டார். எனவே, நாடாளுமன்ற கண்ணியத்தை, ஜனநாயகத்திற்கான மதிப்பை, ஆரோக்கியமான சூழலை மீட்பதற்காக, புதிய நாடாளுமன்றத்தில் பிஜேபி அல்லாத ஒரு சபாநாயகர் வேண்டும்.
- அரசு நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவது, அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை மீட்பது, இந்திய சமூகத்தின் (பன்முக) கட்டமைப்புக்கு, கூட்டமைப்புத் தத்துவத்திற்கு இழைக்கப்பட்டுள்ள சேதத்தை சீர் செய்வது என்பதற்கான போர், ஒரு மாபெரும் ஒற்றுமையுடன், துணிச்சலுடன், உறுதியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- பிஜேபி தனிப் பெரும்பான்மையை இழந்ததால் இந்த நாடே ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது. பாசிசத்தை மண்ணைக் கவ்விடச் செய்வதற்கான, அதனை முற்றாக வீழ்த்திடுவதற்கான, போர் தொடர வேண்டும்.
- (எம் எல் அப்டேட் 4-10 ஜூன் 2024)