கல்ராயன் மலையும், பழங்குடியினருக்கு உரிமை வழங்கப்படாத 50,000 ஏக்கர் நிலங்களும்!
அ.சந்திரமோகன்
10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திர வனங்களுக்கு செம்மரக்கட்டை வெட்டச் சென்று போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், சிறைகளில் சிக்கிச் சீரழிந்தபோதும், பரபரப்புடன் பேசப்பட்ட கல்ராயன் மலைப் பழங்குடியினர் அவலநிலை, மீண்டும் தற்போது ஒரு விவாதப் பொருள் ஆகியுள்ளது.
ஜூன் 2024 ல் கள்ளக்குறிச்சி நகரத்தில் 67 பேர் நச்சுச் சாராயம் குடித்து உயிரிழந்தனர். இதற்குப் பின்னர், ''கல்ராயன் மலையில் காய்ச்சிய கள்ளச் சாராயத்தால் உயிரிழப்பு - கல்ராயன் பழங்குடியினர் வாழ்வாதார சிக்கல்கள் என்ன?'' என்ற விவாதம் பொதுதளத்தில் எழுந்தது. இதை கவனித்த சென்னை உயர்நீதிமன்றம், ' பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்சினை' மீது தானாகவே முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கியுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளான பின்னரும், ஆயிரக்கணக்கான கல்ராயன் மலை பழங்குடியினர் பாரம்பரிய நிலங்களுக்கு பட்டா உரிமையும், அனுபோக உரிமைகளும் பெறமுடியவில்லை என்பது மீண்டும் ஒருமுறை பொது சமூகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
கல்வராயன் மலை பழங்குடியினர் நிலப் பிரச்சினை 'வன உரிமை சட்டம் FRA 2006 அடிப்படையில் நிலங்கள் வழங்கப்பட்டதா என்பது அல்ல; சில நூறு ஆண்டுகளாக உழுது பயிரிட்டு வரும் தங்களுடைய பாரம்பரிய நிலங்களுக்கு வழங்க வேண்டிய "பட்டா" வை வழங்காமல் இழுத்தடிக்கும் தமிழ்நாடு அரசு, நிலங்களை அளந்து சரிபார்த்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
பிரச்சினையின் வரலாறு
கல்வராயன் மலைத் தொடர், கள்ளக்குறிச்சி - சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 57,344 ஹெக்டேர் (சுமார் 1,40,000 ஏக்கர்) நிலத்தின் பரப்பளவை கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பழங்குடியினர் சமூகமான 'மலையாளி' ( மலையில் வாழ்பவர்) என்பவர்கள் இங்கு வாழ்கிறார்கள்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர், கிருஷ்ண தேவராயர் மன்னராட்சி காலத்தில் (கிபி 1509 - 1529) கல்ராயன் மலைப் பழங்குடி விவசாயிகளிடம் இருந்து நில வரி வசூலிக்க "ஜாகீர்தாரி முறை" கொண்டு வரப்பட்டது. அப்போது, ஜடய கவுண்டன் ஜாகீர் (40 கிராமங்கள்), குரும்ப கவுண்டன் ஜாகீர் (40 கிராமங்கள்), அரிய கவுண்டன் ஜாகீர் (11 கிராமங்கள் ) ஆகிய மூன்று ஜாகீர்தார்களிடம் பரம்பரையாக வரி வசூலிக்கும் உரிமை தரப்பட்டது. அவர்களாலும், அதற்குப் பிறகு ஜாகீர்தார்களின் வாரிசுகளாலும், இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட, வரிவசூல் என்ற பெயரால் கல்ராயன் பழங்குடியினர் கடுமையாக சுரண்டப்பட்டனர்.
கல்ராயன் மலை நிலங்கள், 1963 இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின் கீழ், டிசம்பர் 31,1965 ல் வருவாய் துறை அரசாணை 355 ன் கீழ் கொண்டு வரப்பட்டாலும் கூட, இந்திய அரசாங்கம் 23.8.1976 ல் தான் தனது நேரடியான ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டது. அக் காலகட்டத்தில், அங்கே சுமார் 28,250 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்துவந்த பழங்குடியினரில் ஆகப் பெரும்பான்மையோர் , பாரம்பரிய அனுபோகம் மிக்க இந்த நிலங்கள் தொடர்பான எவ்வித ஆவணங்களும் வைத்திருக்கவில்லை. "யார் நிர்வாகம் நடக்கிறது, ஜாகீர்தார் நிர்வாகமா, ரெவின்யூ நிர்வாகமா - யார் வரி வசூலிக்கிறார்கள் " என்பதெல்லாம் தெளிவில்லாத நிலைமையில், பழங்குடிகள் தங்கள் நிலங்களுக்கு எவ்வித நிலவரி ரசீது / ஆவணங்களையும் பெற்றிருக்கவில்லை.
இந்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் வந்தபிறகு, 1.10.77 ல் நிலவரித் திட்டப்பணி மேற்கொள்ளப் பட்டது. அதனடிப்படையில் கல்ராயன் மலையின் நிலவளம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டது.
1) பூர்விக காடுகள் 35,395 ஹெக்டேர் (சுமார் 87,425 ஏக்கர்)
2) உழவு நிலம் (காடு புறம்போக்கு எனச் சொல்லப்பட்டது) 10,113 ஹெக்டேர் (சுமார் 25,000 ஏக்கர்). அதாவது சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயிரிடப்பட்ட உழவு காடுகள் அல்லது புனல் காடுகள் வகைப்பட்டதாகும்.
கல்ராயன் பழங்குடியினர் நில உரிமைகள் முறைப்படுத்தப் படாததால், தமிழ் நாடு வனத்துறை புதிய ஜாகீர்தாரர்களாக மாறியது. 'கல்ராயன் மலை முழுவதும் உள்ளது "காடு" (RF-Reserved Forest) தான், அதில் பழங்குடியினருக்கு எவ்வித உரிமையும் இல்லை' எனத் தொடர்ந்து சித்திரவதைகள், தாக்குதல்கள், நில வெளியேற்றங்கள், வழக்குகள் கைதுகளைத் தொடுத்தது.
நிலவரித் திட்டத்தில் இறுதியாக பட்டா வழங்கப்பட்ட 8154 ஹெக்டேர் (20,000 ஏக்கர்) நிலங்களிலும் கூட, தமிழ்நாடு வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து, 'இவை எல்லாம் காடு RF - இங்கிருந்து வெளியேறுங்கள்!' எனத் தொடர்ந்து பழங்குடி விவசாயிகள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். மற்றொரு புறம், ஆடுமாடுகள் மேய்ப்பது, புற்கள் பறிப்பது, விறகிற்காக காய்ந்த குச்சிகளை சேகரிப்பது - அனைத்தும் குற்றங்கள் ஆக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. கோழி, ஆடுகள், பணம் ஆகியவற்றை ஏழைப் பழங்குடிகளிடம் இருந்து வனக்காவலர்கள் பறித்துச் சென்றனர்.
ஜாகீர்தாரி முறையில் வரி விதிப்பும், பழங்குடியினர் உரிமைகளும்
தமிழக வனத்துறை சொல்வது போல கல்ராயன் மலைப் பகுதி நிலங்கள் முழுவதும் காப்புக் காடுகள் #RF தானா, உழவு செய்யப்பட்ட நிலங்கள் உள்ளதா, இல்லையா ? எது உண்மை என அறிந்து கொள்ள ஜாகீர்தாரி முறையில், பழங்குடியினர் மீது நிலவிய வரிவிதிப்புகளை ஒப்பிட்டு சரிபார்த்து கொள்வோம்.
1) கலப்பாடி வரி- உழுவதற்கு வரி
2) கொடுவா வரி - மரங்கள், கட்டைகள் வெட்ட வரி
3) பில்லு வரி - புல் பறிக்க வரி
4) புனல்காடு வரி - இடம் மாற்றி செய்யும் சாகுபடி நிலத்துக்கு வரி
5) ஆட்டு வரி - ஆடுகளை மேய்ப்பதற்கு வரி
6) கால்நடை வரி -மாடுகள் மேய்க்க வரி
ஆகிய வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன.
அதாவது, பருவத்திற்கு ஏற்ப மலைச் சரிவுகளில் மரங்கள் அகற்றப்பட்டு தற்காலிக சாகுபடி செய்யப்பட்ட / இடம் மாற்றி செய்யும் புனல்காடு/பொனக்காடு விவசாயம் துவங்கி, உழவுக் காடு வரையும், பல்வேறு பழங்குடியினர் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் உரிமைகள் தரப்பட்டு இருந்தன; அவை வரிவிதிப்பு மூலமாக சட்டப்பூர்வமானதாக ஆக்கப்பட்டிருந்தன. எனினும், 1977 க்குப் பிறகு, இத்தகைய அனைத்து உரிமைகளும் தமிழக வனத்துறையால் பறிக்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுகளை அலட்சியப்படுத்திய அரசு நிர்வாகம்
தமிழ்நாடு வனத்துறையின் அட்டூழியங்கள் தொடர்ந்ததால், கல்ராயன் பழங்குடியினர் கடந்த 1985 ல் சென்னை உயர்நீதிமன்றத்தில், 'தங்களுடைய நிலம் மீதான உரிமையில் நீதி வேண்டும்' என ஒரு ரிட் மனு தாக்கல் செய்தனர். (மனு எண் 1210/85). இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது, தமிழ்நாடு வருவாய் துறை ஆணை எண் 1168 (தேதி 25.7.89) மூலம், 'பழங்குடியினர் நில அடமானம் செய்யக் கூடாது' என்று அவர்களது வாழ்வாதார நடவடிக்கைகளை முடக்கியது.
நிலம் மீது உரிமை கோரிய ரிட் மனு 1210/85 ன் மீது, ஒன்பது ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் 24.2.94 ல் தான் தீர்ப்பு வழங்கியது. "கல்ராயன் மலைப் பழங்குடியினர் மூன்று மாத காலத்தில், நிலம் ஒப்படைக்க கோரி விண்ணப்பிக்க வேண்டும்; அவற்றை பரிசீலித்து தமிழ்நாடு அரசாங்கம் ஆறுமாத காலத்தில் முடித்து தர வேண்டும்." என உத்தரவு இட்டது. ஆனால், இத்தகைய உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் மீது எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத அன்றைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்/ நிர்வாகம், 13.6.95 ல் "கல்ராயன் பழங்குடியினரிடம் இருந்து மனுக்கள் எதுவும் வரவில்லை" என உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியமும் செய்தது. இப்பிரச்சினை அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்திலும் எழுப்பப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 5.8.95 ல் தமிழ்நாடு நிலநிர்வாக ஆணையர் ( திரு இளங்கோவன் IAS) அவர்கள், தமிழ்நாடு அரசு வருவாய் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். 'மனிதாபிமானத்துடன் பழங்குடி மனுதாரர்களை நேரில் சந்தித்து பட்டா வழங்க ஏற்பாடு செய்யுங்கள்' எனவும், அக் கடிதத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை கோரியிருந்தார். மேலும், விழுப்புரம் ஆட்சியர் சரிபார்ப்புக்கு பின்னர் நில ஒப்படை செய்ய வேண்டும் எனவும், "கல்ராயன் மலை நிலப் பிரச்சினையை பிற மலைகளில் உள்ள நிலவுரிமை பிரச்சினை மாதிரி அணுகக் கூடாது எனவும், தமிழகத்தில் மலை நில விற்பனை மீதுள்ள பொதுவான தடை இங்கு பொருந்தாது எனவும், கல்ராயன் மலை பழங்குடியினர் பயன்பாட்டில் உள்ள நிலங்களை, தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் இருந்து நீக்க வேண்டும்" எனவும் தெளிவாக பரிந்துரைத்தார். எனினும், அன்றைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செயல்படவில்லை.
மாறாக , தமிழ்நாடு அரசு வருவாய் துறை அமைச்சர் தலைமையில் 17.8.98 ல் நடைபெற்ற கூட்டத்தில் இப்பிரச்சினை பரிசீலனை செய்யப்பட்டு, தீர்வு காண்பதற்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ் தகுதிவாய்ந்த வருவாய், நிர்வாக, வனத் துறைகளைச் சார்ந்த ஏழு அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. மெத்தப்படித்த அந்த உயர்நிலைக் குழு அதுவரையிலான கல்ராயன் மலை பழங்குடியினரின் நிலங்கள் மீதான உரிமைகள் பற்றிய மொத்த விவகாரத்தையும் ஒதுக்கி தள்ளிவிட்டு, 'வெறும் 4217 பழங்குடி குடும்பங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களுக்கு தலா 1 ஹெக்டேர் வீதம் மட்டும் நிலம் வழங்கலாம்' எனவும் பரிந்துரைத்தது.
மேற்படி உயர்நிலைக் கமிட்டி கூட்டத்தின் குறிப்புகள் (minutes), தமிழ்நாடு வருவாய் துறை மற்றும் வனத்துறை கல்ராயன் பழங்குடியினர் வாழ்வாதாரப் பிரச்சினையில் அநீதி இழைத்துள்ளதை அம்பலப்படுத்தும் வகையில் உள்ளது.
இப் பிரச்சினையில், இதற்குப் பிறகு விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற டாக்டர் பரம்ஜித் சிங் சித்து அவர்கள் தனது பரிந்துரைகளை வருவாய் துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய பரிந்துரை கடிதம் / அறிக்கை ( எண் பி 8/7218/98-2 தேதி 7.3.99), அரசு நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியங்களை, தவறுகளை, பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.
டாக்டர் பரம்ஜித் சிங் சித்து அறிக்கையின் முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு
1) கல்ராயன் மலை ஜாகீர்தாரர்களின் கொடுஞ் சுரண்டலுக்கு உள்ளான பழங்குடியினர், 1975 க்குப் பின்னர் தான், கொத்தடிமை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
2) இங்குள்ள பழங்குடியினர் தங்கள் சாகுபடி நிலங்களை "காடு" என்ற பெயரிலேயே அழைக்கின்றனர். ஆனால், கல்ராயன் மலை நிலத்தை செட்டில்மண்ட் செய்த அதிகாரிகள், உழவு செய்த "காடு" என்பதை தவறாக வனம்/ Forest என வியாக்கியானம் செய்து, அதாவது காடு புறம்போக்கு என்பதை, காப்புக் காடுகள் (RF Reserve Forest) என கிராம ஆவணங்களில் தவறாக வகைப்படுத்தி விட்டனர்.
3) "காடு புறம்போக்கு" என வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னமும் பழங்குடியினர் சாகுபடியில் உள்ள 3274 ஹெக்டேர் (8087 ஏக்கர்) நிலங்களை தரிசாக மறுவரை செய்து பழங்குடியினருக்கு வழங்க வேண்டும்.
4) மேலும் கூடுதலாக, எந்த நிலமெல்லாம் சாகுபடிக்கு தகுதியானதாகவும், பழங்குடியினர் பயன்பாட்டிலும் இருக்கிறதோ, அவை எல்லாம் "காடு புறம்போக்கு " என்ற வரையறை யிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
5) ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட 4217 குடும்பங்கள் அல்லாத பிற நிலமற்ற பழங்குடியினர் பற்றிய ஆய்வு /சர்வே மேற்கொள்ள வேண்டும்.
6) இரண்டு ஆண்டு காலத்தில், இப் பணிகளை முடித்து தர, சிறப்பு அலுவலர்கள் (தாசில்தார் முதல் கடைநிலை ஊழியர் வரை) 78 பேர் புதிதாக ஆளெடுக்கப்பட வேண்டும். இதற்கு சம்பள ஒதுக்கீடு ரூ.1,09,43,250 - தேவைப்படும்.
இவை அனைத்திற்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும்"என அவ்வறிக்கையில் நில நிர்வாக ஆணையரிடம் கோரிக்கையும் விடுத்திருந்தார்.
அரசு அலட்சியம் தொடர்கிறது
தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர், மேற்கண்ட இக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு செயலாளருக்கு 28.4.99 ல் ஒரு அறிக்கை அனுப்பி வைத்தார். அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
இதற்கு பின்னர், பத்தாண்டுகள் கழித்து, 20.7.2008 ல் திரு. M.குழந்தைவேல், தனி வட்டாட்சியர் (கல்வராயன் மலை) - (வெள்ளிமலை, சங்கராபுரம் வட்டம்) அவர்கள் மீண்டும் ஒரு குறிப்புரையை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பினார்; 3274 ஹெக்டேர் நிலங்களை மீள தரிசாக மாற்றம் செய்து பழங்குடியினருக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் அதில் கோரியிருந்தார்.
10,000 பழங்குடியினர் தொடர்ந்து 3 நாட்களாகப் போராடியும்அலட்சியம் செய்தது அரசாங்கம்!
கடந்த 1998 ல், தமிழ்நாடு அரசாங்கம் அமைத்த உயர்நிலைக் கமிட்டி ஆய்வு செய்து, 4170 கல்ராயன் பழங்குடியினருக்கு தலா 1 ஹெக்டேர் ( சுமார் 2.5 ஏக்கர்) நிலம் தருவதாக ஒப்புக் கொண்டு 20 ஆண்டுகளான பின்னரும் கூட வழங்கவில்லை என, கடந்த 2018 ஏப்ரல் 19, 20, 21 தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக வெள்ளிமலையில் சுமார் 10,000 பழங்குடியின மக்கள் அணிதிரண்டு போராடினார்கள்; தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம் அன்றைய ஒன்றிணைந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அல்லது கீழ்மட்ட அதிகாரி எவர் ஒருவரும் கூட நேரில் வந்து பழங்குடி மக்களை சந்திக்கவில்லை; மொத்த தமிழக அரசு இயந்திரமும், ஆட்சியாளர்களும் அவர்களை அலட்சியம் செய்தது.
இப்படியாக பல்வேறு வகையில், பரிந்துரைகள் செய்யப்பட்ட பிறகும், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, கல்ராயன் பழங்குடியினருக்கு நிலவுரிமை வழங்க வேண்டிய தமிழ்நாடு அரசின் செயற்பாட்டில் எந்தவிதமான
முன்னேற்றமும் இல்லை.
வழக்குகளும், நீதிமன்ற உத்தரவுகளும்
2015 ம் ஆண்டில், கல்ராயன் மலை பழங்குடியினர் நிலப் பிரச்சினை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி அவர்கள் ஒரு பொதுநலவழக்கு தொடுத்தார். இதன் மீது விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கல்ராயன் மலை பழங்குடியினர் நிலை பற்றி ஆய்வு செய்ய ஒரு அட்வகேட் கமிஷன் அமைத்தது. இதனடிப்படையில், கல்ராயன் மலை பழங்குடிகள் மேம்பாட்டுக்காக, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். சுரேஷ் கமிட்டி பரிந்துரைகளை சமர்ப்பித்தது; இவற்றை அமலாக்க வேண்டும் என 2016 ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, எட்டு ஆண்டுகளான பின்னரும், இன்று வரையும் தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை.
தற்போது இப்பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து எடுத்த வழக்கு வழியாக, மீண்டும் ஒருசுற்று முன்வந்துள்ளது. இதுதொடர்பாக, 2023 - 24 ம் ஆண்டுகளில் கல்ராயன் மலை பழங்குடியினர் சார்பாக, மலையாளி பேரவை அமைப்பு தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினடிப்படையில், ஒரு சிறப்பு தாசில்தார் நியமனம் செய்யப்பட்டு, பழங்குடியினர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பழங்குடி விவசாயிகளுக்கு பட்டா உரிமைகள் வழங்கும் தீர்வுக்காணும், காத்திரமான நிர்வாக நடவடிக்கைகளில், சமூகநீதி பேசும் தமிழ்நாடு அரசாங்கம் விரைவாக ஈடுபட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)