தலையங்கம்

மோடி பேசும் புதிய மதச்சார்பின்மை

78வது சுதந்திர நாள் அன்று டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மிக நீண்ட உரையாற்றினார். 98 நிமிடங்கள் பேசினார். மோடி கடந்த 10 ஆண்டுகளாக பேசி வந்த "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தையும் "பொது சிவில் சட்டத்தையும்" வேறு வார்த்தைகளில் மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார். "ஒரே மதம், ஒரே மொழி" என்பதை இம்முறை நேரடியாகச் சொல்லவில்லை. நாட்டில் அடிக்கடி தேர்தல் நடக்கிறது, 3லிருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது, எல்லா பணிகளும் தேர்தலோடு தொடர்புடையதாக இருக்கிறது, இதற்குத் தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் முறைதான் என்கிறார். அதற்காக நாடு முழுவதும் கலந்து ஆலோசித்துவிட்டார்களாம். எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் கருத்துகளை தந்துவிட்டார்கள் என்கிறார். ஆனால், எத்தனை கட்சிகள் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்று அவர் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார். ஏனென்றால், பாஜகவும் அதன் கூட்டாளிகளில் சிலவும் தவிர வேறு எந்தக் கட்சிகளும் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான இந்த முறைக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள். அடுத்து நாட்டில் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் நேரம் வந்து விட்டது என்கிறார். இது நாள் வரை அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், அவர்களின் ஒரே மதம் கோட்பாட்டிற்கு இப்போது புதிய வார்த்தைப் போடுகிறார். கடந்த 75 ஆண்டுகளாக வகுப்புவாத சிவில் சட்டத்தைப் பின்பற்றி வந்துள்ளோம், தற்போது நடைமுறையில் உள்ள சிவில் சட்டம் வகுப்புவாத சிவில் சட்டம் என்று சமூகத்தில் பெரும்பான்மையோர் நம்புகிறார்கள், அது நாட்டை மத ரீதியாகப் பிரித்து சமத்துவமின்மையை ஊக்குவிக்கிறது. அதனால் மதச் சார்பற்ற சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது என்கிறார். இந்திய நாட்டின் அரசமைப்பு சட்ட முகவுரையில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று சொன்னவர்கள், இந்த நாடு இந்துக்களுக்கானது, இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிற்குப் போய்விடுங்கள் என்றவர்கள் மதச் சார்பின்மை சட்டம் வேண்டும் என்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு என அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பின்பற்றவும் இந்துத்துவ சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்டும் நோக்கத்துடனும் அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டமும் பல்வேறு சட்டங்களும் உருவாக்கப்பட்டன. அம்பேத்கர் உருவாக்கிய சட்டங்களை, அரசியலமைப்புச் சட்டங்களை அழித்தொழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசுகிறார் மோடி. ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தண்டனைக்குப் பதிலாக நீதி என்று சொல்லி மிகக் கொடூரமான குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியுள்ளதுபோல், மதச் சார்பற்ற சட்டம் என்ற பெயரில் ஒரே மதம் ஒரே சட்டம் என்று கொண்டு வர, தனிப் பெரும்பான்மை இல்லாதபோதும் தைரியமாகப் பேசுகிறார். இந்திய சுதந்திரப் போருக்கும் இந்த சங் பரிவார் கூட்டத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. ஆனால், 40 கோடி மக்கள் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள், இப்போது 140 கோடி பேர் இருக்கிறோம். 2047ல் வளர்ச்சியடைந்த நாடாகி விடுவோம் என்கிறார். இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் குறிப்பாக இஸ்லாமியரின் வாழ்க்கையை அழிக்க புதுச் சட்டங்களைக் கொண்டு வருகின்ற, வக்பு வாரியச் சொத்துகளை சட்டத் திருத்தத்தின் மூலம் அபகரிக்க நினைக்கின்ற மோடி, வங்க தேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு பற்றி இந்திய மக்கள் அக்கறை கொண்டுள்ளார்கள் என்கிறார். வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாகச் சொல்லி, இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திடத் திட்டமிடும் சங்கிகளின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே இந்திய பிரதமரின் பேச்சும் இருக்கிறது. இது மிக மிக ஆபத்தானது. மைனாரிட்டி அரசு என்றாலும், தங்களுடைய ஆர்எஸ்எஸ் திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்து வதில் அதிக அக்கறை கொண்டுள்ள மோடி அரசை அண்டை

நாடுகளைப் போலவே மக்கள் போராட்டங்கள் விரைவில் வீழ்த்தும்.