பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் இட ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு
ஆகஸ்ட் 1, 2024 அன்று உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளின் இட ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு வழங்குவதன் சட்டபூர்வ தன்மையை அங்கீகரித்து 6:1 என்ற பெரும்பான்மை தீர்ப்பை வழங்கியுள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தால் இதற்கு 'வரம்பிலா அதிகாரம்' வழங்கப்படவில்லை. பின்தங்கிய நிலையின் மட்டம், அரசுக்கு பணிபுரிவதில் உள்ள பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கொண்டுள்ள, அளவிடப்படக்கூடிய, நிரூபிக்கத்தக்க தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்த உள் ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கதாகும்; ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்க முடியாது; மேலும் அரசு அதனுடைய விருப்பத்திற்கு ஏற்பவோ அல்லது அரசியல் லாபங்களைக் கணக்கில் கொண்டோ மட்டும் வெறுமனே செயல்படவும் முடியாது; என்றெல்லாம் கூறி, உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான சட்ட வரையறைகளையும் நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. இந்த அதிகாரங்களுக்கு எல்லை வகுத்தும் கொடுத்திருக்கிறது. இறுதியில் முழுமையான, அறிவியல்பூர்வமான, வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பின் தேவையை இது சுட்டிக் காட்டுகிறது. தலித், பழங்குடி சமூகத்தினரின் மத்தியிலுள்ள உள்ளார்ந்த பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து மட்டுமல்ல, அனைத்து சாதி வகையினருக்கு இடையேயும் உள்ளேயும் இருக்கிற ஏற்றத்தாழ்வுகள் குறித்த தரவுகளையும் இந்தக் கணக்கெடுப்பு வழங்கும். அது இல்லாமல் இவ்விசயத்தில் முன்னோக்கி செல்வது கடினமாகும்.
சமூக நீதியையும் சமத்துவத்தையும் அடைவதற்கான வழிகளையும் முறைகளையும் குறித்து நீண்டகாலமாக நடந்து வரும் விவாதங்களை இந்தத் தீர்ப்பு முன்னுக்கு கொண்டுவந்துள்ளது. இட ஒதுக்கீடு யாருக்கு மிகவும் அதிகமாகத் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு, அது சென்றடைவதை உறுதி செய்வதற்கான வழிமுறையே உள் ஒதுக்கீடு; அது நீண்டகாலமாகவே செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது என சிலர் வாதிடுகிறார்கள். உள் ஒதுக்கீடு என்பது அரசியல் ரீதியில் பிரித்தாளும் தந்திரமாகும்; அது தலித்துகளும் பழங்குடிகளும் எதிர்கொள்கிற வரலாற்று ரீதியான அநீதியையும், தற்போதும் தொடர்கிற அவமானங்களையும் நீர்த்துப்போகச் செய்யக் கூடியதாகும்; அவர்களுடைய கூட்டு அடையாள உணர்வை வலுவிழக்க செய்யக் கூடியதாகும்; பெரும்பான்மை அரசியலில் அவர்களை இணைத்துக் கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிற ஒன்றாகும்; என மற்றவர்கள் முன்வைக்கிறார்கள். இருந்தபோதிலும் இந்த இரண்டு நிலைப்பாட்டினரும் தங்களால் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு நம்பிக்கையில் ஒன்றிணைகிறார்கள். இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறையில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு மாற்றமும், விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் செயல்முறையை வலுவிழக்கச் செய்யாமல், வலுப்படுத்தும் நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதே அதுவாகும்.
உள் ஒதுக்கீடுகளை வடிவமைக்கும் அதிகாரங்களை மாநில அரசாங்கங்களுக்கு வழங்கிய அதேவேளையில் பட்டியல் சாதி இட ஒதுக்கீட்டுக்குள்ளேயே 'கிரீமி லேயர்' என்ற கருத்தாக்கத்தின் பொருத்தப்பாட்டை இணைப்பது குறித்த தனது கருத்தையும் இந்தத் தீர்ப்பு முன்வைத்துள்ளது. இதன்மூலம் இந்தத் தீர்ப்பு இந்த வழக்கின் எல்லைகளைத் தாண்டியும் சென்றுள்ளது. நீதிமன்றத்திற்கு முன்னால் இருக்கும் பிரச்சனை இதுவல்ல என்பதால், நீதிமன்றம் இதற்குள் மூக்கை நுழைப்பதற்கான தேவையோ அதிகாரமோ இல்லை. கூடுதலாக சமூக நீதியை நோக்கமாகக் கொண்ட அனுசரணை நடவடிக்கையின் சாரத்தை இது வலுவிழக்கச் செய்யும். அதே வேளையில் வரலாற்று ரீதியாக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது, சமூகத்தில் பின்தங்கிய நிலையின் அதிக அருவருக்கத்தக்க வடிவங்களை தலித்துகள் எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படை உண்மையை இது புறக்கணிக்கிறது. மேலும் பொருளாதார அந்தஸ்தின் மூலம் சாதி மாற்றப்பட முடியாதது.
பிறப்பின் அடிப்படையிலான சமூக வகைப்படுத்தலின் நான்கு அடுக்குகளைக் கொண்ட வர்ண முறையால் கட்டமைக்கப்பட்டது தான் வேதகால இந்துத்துவம் ஆகும். இதில் சாதியப் படிநிலையின் அன்றாட வெளிப்பாடாக சாதிகள் இருக்கின்றன. இதற்கு மாறாக வாதிடும் எவரொருவரும் ஒன்று வேதகால இந்துத்துவம் குறித்து தகவல் தெரியாதவராக இருக்கிறார்; அல்லது அரசியல் நலன்களுக்காக அதனை புனிதப்படுத்த முயற்சிக்கிறார். அப்படி இருக்கும் போது, இந்தத் தீர்ப்புடன் உடன்படும் ஒரு நீதிபதி சாதியின் தொடக்கம் என நம்பப்படுவதைப் பற்றி கவலையளிக்கிற பார்வையை எழுதியிருக்கிறார். பகவத் கீதையையும் கந்த புராணத்தையும் மேற்கோள் காட்டி பழங்கால இந்தியாவில் சாதிய முறை இல்லை என அவர் வாதிடுகிறார். அவர்களுடைய குணங்களையும் இயல்பையும் (பிறப்பினால் அல்ல) பொறுத்தே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரின் கடமைகள் நிர்ணயிக்கப்பட்டன என்கிறார். இந்த அதிர்ச்சி தரத்தக்க வரலாறற்ற கருத்துரைகள் ஆழமான பிரச்சனைக்குரிய பிராமணிய மனநிலையை பிரதிபலிக்கிறது. இந்தக் கருத்துரைகள் டாக்டர் அம்பேத்கராலும் அனேக ஆய்வாளர்களாலும் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. வேதகால இந்துத்துவத்தின் புனித நூல்களிலும் நடைமுறையிலும் மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள அனைத்து மதங்களிலும் அன்றாட நடைமுறைகளிலும் கூட, பின்னிப்பிணைந்துள்ள அநியாயங்களை புறக்கணிக்க, முயற்சிக்கிற பெரும்பான்மை அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் இந்தக் கருத்துரைகள் பொய்யுரைக்கின்றன.
இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு புதிய மறு ஆய்வு தேவைப்படுகிறது எனவும் முதல் தலைமுறைக்கு மட்டும் அல்லது ஒரு தலைமுறைக்கு மட்டும் அது வழங்கப்பட வேண்டும் எனவும் கூட அதே நீதிபதி முன்வைக்கிறார். பட்டியல் சாதியினரும் பிற விளிம்பு நிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினரும் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பங்கு பெறுவதை உறுதி செய்வதே இட ஒதுக்கீடு என்ற அனுசரணை நடவடிக்கையின் முக்கிய அம்சமாகும். இதற்கு மாறாக இட ஒதுக்கீடு குறித்த மோசமான புரிதல் கொண்டிருப்பதையே இந்தக் கருத்துரைகள் காட்டிக் கொடுக்கின்றன. மேலும் கூடுதலாக கிராமப்புற, நகர்ப்புற கட்டமைப்பு முழுவதற்கும், பல தலைமுறைகள் முழுவதற்கும், இந்தியாவின் தலித், பழங்குடிகள் எதிர்கொள்ளும் சமூக விலக்கம், விளிம்பு நிலைக்கு தள்ளப்படுதல் என்ற தொடரும் யதார்த்தத்தை எதிர்கொள்வதற்கு, மட்டுப்படுத்துவதற்கு ஒரு அனுசரணை நடவடிக்கையாகவே பட்டியல் சாதிகளின் இட ஒதுக்கீடு உள்ளது என்ற உண்மையையும் இது புறக்கணிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகளாக, வரலாற்று ரீதியாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்களை ஒரு தலைமுறைக்குள் சரி செய்து விடலாம் என போகிற போக்கில் குறிப்பிடுவது, அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் பணியில் உள்ள ஒருவர், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கருத்துரைப்பது தேவையற்ற ஒன்றாகும். புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி மையங்களிலும், மருத்துவ, பொறியியல் கல்லூரிகளிலும் பட்டியல் சாதி மாணவர்களும் ஆய்வாளர்கள்/அறிஞர்களும் தொடர்ந்து பெரும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்ற இந்திய யதார்த்தத்தை இந்தக் கருத்துரைகள் முற்றிலும் அலட்சியம் செய்கின்றன.
பாசிச மோடி ஆட்சியின் கீழ், முரட்டுத்தனமான தனியார்மயமாக்கலும், சுருங்கிக் கொண்டிருக்கிற மக்கள் நல அரசும், அரசு கல்வியை, வேலையை வழங்குகிற வாய்ப்புகளை கடுமையாக குறைத்துவிட்டன. வேலைக்கு ஆளெடுப்பதை காலவரையின்றி நிறுத்தி வைத்திருக்கும் அரசாங்கத்தின் உணர்வுபூர்வமான கொள்கைகள், வேலையிலும் கல்வியிலும் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டிற்கு தற்போது இருக்கும் விதிகளை போதுமான அளவு அமல்படுத்தாத நிலை, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வாய்ப்புகளை கண்டறியாமல் இருப்பது, சமத்துவத்தை, சமூக நீதியை ஊக்குவிக்கும் கொள்கைகளை பொதுவாக பலவீனமாக்குதல் ஆகிய அனைத்தும் இதோடு இணைக்கப்படுகிறது. இதன் விளைவாக இந்த ஆட்சியின் நோக்கம் போல சில காலத்திலேயே இந்த வாய்ப்புகள் அனைத்தும் முழுவதுமாக வறண்டு போய்விடும்.
பொருத்தமானவர்கள் கண்டறியப்படவில்லை என்ற தந்திரத்துடன் இட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதை முறையான சட்ட, அரசியல் தலையீட்டுடன் ஒழித்துக் கட்ட வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும். விடுதலை பெற்று 77 ஆண்டுகளுக்கு பிறகும் கூட, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தீவிர விளிம்பு நிலையில் இருப்பதை பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிக்கொண்டு வந்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு 50% வரம்பை நிர்ணயித்திருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இட ஒதுக்கீட்டின் வரம்புகளை விரிவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதுபோல தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.
சமூக நீதிக்கான, சமூக சமத்துவத்திற்கான ஒரு கருவியாக அரசமைப்புச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இட ஒதுக்கீடு அதிகரித்த அளவு தாக்குதலை எதிர்கொள்கிறது; அரசமைப்பு சட்டமும் கூட அப்படியான தாக்குதலை எதிர்கொள்கிறது. இவ்வேளையில் சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள, ஒடுக்கப்படுகிற, வறுமை நிலையிலுள்ள அனைத்து மக்களிடையேயும் அதிகரித்த அளவில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நமக்கு தேவையாக உள்ளது.
ஒடுக்கப்படுகிற, வறுமை நிலையிலுள்ள மக்களிடையே அதிகரித்த பிரிவினையையும் பகைமையுணர்வையும் ஊக்குவிக்க உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இடம் கொடுத்துவிடக்கூடாது; தங்களது சமூக, பொருளாதார மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள, அதிகாரமிக்கவர்கள், சலுகை பெற்றவர்களின் பிரித்தாளும் தந்திரத்திற்கு சேவை புரிவதாகவும் இந்தத் தீர்ப்பு அமைந்து விடக்கூடாது. அதற்கு மாறாக சமூக விலக்கம், விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரான கூட்டு போராட்டத்தை வலுப்படுத்துவதாகவும் சமூக நீதியின், சமத்துவத்தின் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவும் இந்த தீர்ப்பு பயன்பட வேண்டும். இதனை செய்ய வேண்டியது சமத்துவ சமூகத்திற்காக பாடுபடும் அனைத்து சக்திகளின் கடமையாகும்.
ML Update Vol. 27, No. 33 (06-12 August 2024)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)