பாசிச எழுச்சியை தடுத்து நிறுத்திய பிரான்ஸ் மக்கள்
2024 ஏப்ரல் - மே மாதங்கள் இந்தியாவிற்கு சோதனைக் காலமாக அமைந்திருந்தது. அதனை இந்த உலகம் கவனித்துக் கொண்டிருந்தது. ஜூன் 4 இல் பாஜக என்ற ’மாபெரும்’ சக்தி, 240 என்ற எண்ணிக்கையோடு தடுத்து நிறுத்தப்பட்டது. உலகம் முழுவதுமுள்ள ஜனநாயக நேசர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் பாசிச சக்திகளை ஓரளவுக்கேனும் பின்னுக்குத் தள்ளுவதில் இந்தியா வெற்றி பெற்று விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில், அதிதீவிர வலதுசாரிகள் அடுத்தடுத்த நாடுகளில், பெரும் வெற்றி பெற்றனர். அந்நிய நாட்டவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். ஜெர்மனியின் ஏஎஃப்டி, பிரான்சின் ஆர்என் கட்சி, ஆட்சியிலிருக்கும் 'பிரதர்ஸ் ஆஃப் இட்டலி' (இத்தாலியின் சகோதரர்கள்), மற்றும் அது போன்ற அதிதீவிர வலதுசாரி கட்சிகள் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றன. பிரான்சின் மையவாத இமானுவேல் மேக்ரான் ஆட்சி இந்த அதிதீவிர தேசியவாத, அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சியை கவனத்தில் கொண்டது. ஜூன் 30, ஜூலை 7இல் திடீர் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. ஜூன் 4 இல் பிரிட்டன் தேர்தல்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு தேர்தல்களின் கதைகளில் வெளிப்படும் சங்கேத மொழியை புரிந்து கொள்ள ஒட்டுமொத்த உலகமும் பரபரப்பாக உள்ளது.
பிரான்சின் தேர்தல் முறைப்படி, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் 50% க்கும் அதிகமான வாக்குகளை பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே, தேர்தல்கள் இரண்டு சுற்றுகளாக நடைபெறுகின்றன. ஜூன் 30 அன்று நடைபெற்ற முதல் சுற்று தேர்தல்களில், பாசிச ஆர்என் கட்சி, 76 தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்று முன்னிலை பெற்றது (மொத்தமுள்ள 577 இடங்களில் மீதமுள்ள 501 இடங்களுக்கு இரண்டாவது சுற்றில் தேர்தல்கள் நடைபெற்றன). நியூ பாப்புலர் ஃபிரண்ட் (என்எஃப்பி) என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டு போட்டியிட்ட இடதுசாரிகள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். ஆட்சியிலிருக்கும் மையவாத என்செம்பில் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இரண்டாம் சுற்றில், மாபெரும் எச்சரிக்கையுணர்வையும், செயல்தந்திர நெளிவுசுழிவையும், அரசியல் முதிர்ச்சியையும் வெளிப்படுத்திய என்எஃப்பி கூட்டணி, பாசிச எதிர்ப்பு வாக்குகளில் எவ்வித பிளவையும் தவிர்க்க என்செம்பில் கூட்டணியுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கையை எட்டியது. இந்த பாசிச எதிர்ப்பு தேர்தல் ஒருங்கிணைப்பை எளிதாக்கிட, சுமார் 130 என்எஃப்பி வேட்பாளர்களும் 82 என்செம்பில் வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர்.
ஒரு தொங்கு நாடாளுமன்றத்தில் 188 இடங்களுடன் என்எஃப்பி மிகப்பெரிய கூட்டணியாக எழுந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மையவாத என்செம்பில் கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாசிச ஆர்என் கட்சி 142 இடங்களுடன் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது. எனினும் பிரான்ஸ் முழுமையாக பாசிசத்தால் கைப்பற்றப்படும் அச்சுறுத்தலில் இருந்து தற்காலிகமாக மட்டுமே தடுத்து நிறுத்தபட்டுள்ளது. இளம் ஆர்என் கட்சித் தலைமையைப் பொறுத்தவரையில் (கட்சித் தலைவர் ஜோர்தான் பார்டெல்லா இன்னும் 30 வயதை எட்டவில்லை; அதேவேளையில் கட்சியினுடைய அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மெரைன் லே பென் வயது 50), இந்தத் தோல்வி, அவர்களது வெற்றியை தற்காலிகமாக தடுத்துள்ள நிகழ்வு மட்டுமே. பிரான்சில் மையவாத - இடதுசாரி கூட்டணிகளின் வரலாற்றைப் பார்த்தால், அது நீடித்திருக்கக் கூடிய கூட்டணியாக இதுவரை இருந்ததில்லை. தொங்கு நாடாளுமன்ற சூழ்நிலையை என்எஃப்பி கூட்டணியும் என்செம்பில் கூட்டணியும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரான்சிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக பிரிட்டன் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. 14 ஆண்டுகள் நீடித்த கன்சர்வேட்டிவ் கட்சியின், நீண்டகால, பேரழிவுமிக்க அரசாட்சி, ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தொழிலாளர் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஆனால் பிரான்சை போலவே, அண்டை நாடான பிரிட்டனையும் அதிதீவிர வலதுசாரி மீட்சி எனும் சவால் பிடித்தாட்டுகிறது.
வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் தொழிலாளர் கட்சி கடந்த 2017, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களோடு ஒப்பிடும்போது இந்தமுறை குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. இருப்பினும் 650 இடங்கள் கொண்ட அவையில் 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளது. இதற்கான முக்கிய காரணம் கன்சர்வேட்டிவ் வாக்கின் பங்குகளில் ஏற்பட்ட மாபெரும் சரிவாகும். தீவிர வலதுசாரி சீர்திருத்தக் கட்சியினுடைய வாக்கின் பங்கு கிட்டத்தட்ட கன்சர்வேடிவ் கட்சியின் வாக்கு அளவுக்கு அதிகரித்துள்ளதும் ஆகும். ஆனால் கெய்ர் ஸ்டார்மர்-இன் தற்போதைய தலைமையின் கீழ் தொழிலாளர் கட்சியும் கூட வலதுசாரி கொள்கைகளை நோக்கி வெளிப்படையாகத் திரும்பி வருகிறது. அது பொருளாதார கொள்கைகளில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வாய்ச்சவடால்களை ஏற்றுக் கொள்வதிலும், காசாவின் மீது இஸ்ரேலின் போருக்கு ஆதரவளிப்பதிலும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான உலகளாவிய அழைப்பினை ஆதரிக்க மறுப்பதிலும் வலதுசாரி கொள்கைகளை நோக்கி திரும்புகிறது. எனவே தொழிலாளர் கட்சியின் இடதுசாரி வாக்காளர்கள் பல்வேறு இடங்களில், சுதந்திர இடதுகள், பாலஸ்தீன ஆதரவு வேட்பாளர்கள், பசுமை கட்சியின் வேட்பாளர்கள் போன்றோருக்கு வாக்களித்துள்ளனர். இதற்கு மாறாக பிரான்சின் என்எஃப்பி கூட்டணி, பொருளாதார மற்றும் சமூக கொள்கைகளிலும், சர்வதேச வெளியுறவு கொள்கைகளிலும், குறிப்பாக காசா, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரின் பின்னணியில், இடதுசாரி நிகழ்ச்சி நிரலை உயர்த்தி பிடித்துள்ளது. இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலமும் இரண்டாம் உலகப்போரும், போரினால் ஏற்பட்ட பெரும்நாசத்தைக் கண்டன. பாசிசத்தின் விஷம் தோய்ந்த வன்முறையால் விளைந்த பேரழிவு, ஐரோப்பா முழுவதும் பெருந்துயரத்தையும் பேரழிவையும் உருவாக்கின. இந்த பாசிசப் பேரழிவை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பாவும் ஒட்டுமொத்த உலகமும் எண்ணிலடங்காத மனித உயிர்களை பலியாக கொடுக்க வேண்டியதாயிற்று. 60 லட்சம் உயிர்களை காவு வாங்கிய, ஒட்டுமொத்த யூத சமூகத்தினரையும் கொன்றொழிப்பதாக அச்சுறுத்திய இந்தப் பேரழிவின் காயங்கள், யூத எதிர்ப்பு பாசிச ஆபத்தை கண்டு ஒட்டு மொத்த உலகமும் விழித்தெழ செய்தது. ஆனால் கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் மீதான போர், பருவநிலை நெருக்கடி, அதிகரித்துக் கொண்டே போகும் வாழ்க்கை செலவு ஆகியவற்றால் விளைந்த பெரும் நாசம், அதனால் தூண்டப்பட்ட முதலாளித்துவ தீவிர நெருக்கடி ஆகியன பாசிச அரசியல் மீண்டும் ஒருமுறை மேலெழுந்து வருவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஐரோப்பாவில் புதிய பாசிசத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சி அதைத்தான் வெளிப்படுத்துகிறது. அது இந்தமுறை தீவிர இனவெறிவாதம், இஸ்லாமிய வெறுப்பு, புலம் பெயர்ந்தோருக்கு எதிரான வெறுப்பு ஆகியவற்றின் மீது கட்டி எழுப்பப்படுகிறது. மைய நீரோட்ட வலதுசாரி கட்சிகளால் ஊக்குவிக்கப்படுகிறது.
பாலஸ்தீனியர்களின் விடுதலை வேட்கையை ஒடுக்குவதற்கான சாக்குபோக்காக இஸ்ரேல் தற்போது யூத எதிர்ப்பை பயன்படுத்துவது வரலாற்றின் விந்தைமுரணாக இருக்கிறது. பாலஸ்தீனியர்களின் நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் உலகளாவிய ஒருமைப்பாட்டை மௌனமாக்க அது முயற்சிக்கிறது. மத்திய கிழக்கிலும் அதனைத் தாண்டியும் ஏகாதிபத்திய கொள்ளைக்கு ஒரு அரணாகத் திகழும் இஸ்ரேலுக்கு, பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்வதற்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி செய்கின்றன. பாலஸ்தீனத்திற்காக ஒருமைப்பாடு தெரிவிப்பவர்கள் மீதும் மேற்கத்திய நாடுகளின் அடக்குமுறை ஏவப்படுகிறது. இஸ்லாமிய வெறுப்பு கருத்தியலை தமக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். இஸ்ரேல் தனது பாசிச பயணத்திற்கு, யூத எதிர்ப்புக்கு எதிரான பொதுமக்களின் கோபத்தை ஒரு கவசமாக பயன்படுத்துகிறது, நியாயப்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் மீதான, அதன் அரசமைப்பு அடிப்படையின் மீதான தாக்குதலை நியாயப்படுத்திட, 'காலனிமயமகற்றுதல்' என்பதை ஒரு கவசமாக பயன்படுத்துகிறது மோடி ஆட்சி. மோடி ஆட்சியின் பாசிச செயல்திட்டத்தை, அதன் தாக்குதலை எதிர்த்து எழுப்பப்படும் ஒவ்வொரு விமர்சனத்தின் மீதும் 'இந்து வெறுப்பு', தேச விரோத குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறது. அது போலவேதான் இஸ்ரேலும் செய்கிறது. ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம், இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் காலனிய எதிர்ப்பு பாரம்பரியம், ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியம் ஆகியவற்றை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாகவும், சமத்துவமான, சமூக - பொருளாதார அமைப்புக்கான மக்களின் வேட்கை மூலமாகவும், இந்தியாவில் பாசிசத் தாக்குதலை நாம் தடுக்க முயற்சிக்கிறோம். அதுபோலவே ஐரோப்பிய இடதுசாரிகளும் பாசிசத்திற்கு எதிரான தமது வரலாற்று பாத்திரத்தை புதுப்பித்து வருகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு, 1789இல், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்துக்கான உரத்த குரலை எழுப்பிய பிரான்ஸ், 1871 இல் வரலாற்று சிறப்புமிக்க பாரிஸ் கம்யூன் வாயிலாக சோசலிசம் முதன்முதலாக தோன்றிய நிலமான பிரான்ஸ், இடதுசாரிகள் தலைமை ஏற்று நடத்தும் பாசிச எதிர்ப்பு போராட்டத்தின் முதன்மை அரங்கமாக மீண்டும் ஒருமுறை எழுந்து வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)