கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், அனைத்து சமயநிறுவனங்களின் சாகுபடி நிலங்களை குத்தகைவிவசாயிகளுக்கு சொந்தமாக்கிட வேண்டும்!
சந்திர மோகன்
2016 இல் வெளியான புள்ளியியல் துறையின் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள 71 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்களில் சுமார் 30% விவசாயிகள் குத்தகை நிலங்களில் பயிர் சாகுபடி செய்கிறார்கள். இவர்களுள் கணிசமானவர்கள் கோவில்கள், மடங்கள், வக்ப் போர்டுகள், தேவாலயங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளிட்ட அனைத்து சமய நிறுவனங்களுக்கும் சொந்தமான இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்பவர்கள்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், 36,615 கோவில்கள்; 56 மடங்கள்; மற்றும் 19 மடங்களுடன் இணைந்த குறிப்பிட்ட கட்டளைகள், மடத்துடன் இணைந்த 57 கோவில்கள்; 1,721 குறிப்பிட்ட அறக்கட்டளைகள்; 189 அறக்கட்டளைகள்; 17 சமண கோவில்கள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக அறநிலையத்துறை தெரிவிக்கிறது.
கோவில்களுக்கு சொந்தமாக மட்டும், 22,600 கட்டடங்கள்; 33, 665 மனைகள் உள்ளன. விவசாய நிலங்கள் 1.23 லட்சம் பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வாடகை, குத்தகை என கோவில்களுக்கு, 10 ஆண்டுகளில் 1,365 கோடி ரூபாய் கிடைத்தது; ஆண்டுக்கு 135 கோடி ரூபாய் மட்டும் வருமானம் கிடைக்கிறது.
கோயில்களுக்குக் கீழே 4,22,000 ஏக்கர் நிலங்களும், 56 மடங்களுக்குக் கீழே கிட்டத்தட்ட 56,000 ஏக்கர் நிலங்களும் உள்ளன. தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் மடங்களுக்குச் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் இருக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், தருமைபுரம் ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், மதுரை ஆதீனம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற ஆதீன மடங்கள் தங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் மனைகள் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டுகின்றன. கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள், குடியிருப்பவர்கள் பிரச்சினைகள் ஏராளமானது.
¶ மடங்களின் நிலப்பிரபுத்துவ ஆதிக்கமும், குத்தகைதார்களின் உரிமைகளற்ற நிலையும் :-
மன்னராட்சி காலத்தில், கோவில்களும், மடங்களும் ஏராளமான நிலங்களை தானங்களாக / நிலமானியங்களாகப் பெற்றன. இத்தகைய நிலங்கள் அல்லாமல் பிற இனாம் நிலங்கள், பஞ்சமி, அரசுப் புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளையும் கூட மடங்கள் ஆக்கிரமித்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. மடாதிபதிகள் அரசியல் கட்சிகள், அரசு நிர்வாகம், நீதித்துறை அனைத்தின் மீதும் செல்வாக்கு கொண்டுள்ளனர்.
கடந்த 1973 ம் ஆண்டில், திருப்பனந்தாள் ஊராட்சி தலைவர், கள்ளபட்டம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள பட்டம், மாராச்சேரி, கோழிகுத்தி கிராமங்களின் 1000 ஏக்கர் இனாம் நிலங்களை திருப்பனந்தாள் காசி மடம் ஆக்கிரமித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பத்தாண்டுகள் கழித்து, 1983 ல், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், "அந்த நிலங்கள் திருப்பனந்தாள் காசி மடத்திற்கு சொந்தம்" எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தது.
சில தலைமுறைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட குத்தகை ஒப்பந்த பத்திரம் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் ஒருவரிடமும் தற்போது இல்லை. ஒருசிலரிடம் குத்தகை பதிவு உரிமை ( RTR ஆவணங்கள்) முப்பாட்டன், பாட்டன் பெயரில் இருக்கலாம். தற்சமயம், நெல் குத்தகை அளந்து கொடுத்ததற்காக மடங்கள் தரும் ரசீது மட்டுமே குத்தகை விவசாயிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
தொடரும் காவிரி நதிநீர் பங்கீடுப் பிரச்சினையால், தஞ்சாவூர் டெல்டா விவசாயிகள், சாகுபடி காலகட்டத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர். மின்சார மோட்டார்கள் மூலமாக நிலத்தடி நீர் எடுத்து சாகுபடி செய்ய விரும்பும் குத்தகைதாரர்கள், மின் மோட்டார் இணைப்புக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தால், சம்பந்தப்பட்ட மடங்கள் தடையில்லாச் சான்று / NOC தரவேண்டும் என்கிறது. இதற்காக மடங்களை அணுகினால், குத்தகை பாக்கிகள் என்ற பெயரால், இலட்சக்கணக்கான ரூபாய்களை மடங்கள் வாங்கிக் கொள்கின்றன; அவற்றையும் செலுத்தி விவசாயிகள் தடையில்லாச் சான்று / NOC வாங்கினாலும், மின் இணைப்பு மடங்கள் /கோவில்கள் பெயரில் தான் இருக்கும் ! குத்தகை பதிவு உரிமை / RTR மாற்றம் செய்யவும் கூட இலட்சங்களில் பணம் செலுத்த வேண்டும். அதேபோல, மடங்கள், கோவில் நிலங்களில் வீடு கட்டி வாழ்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு பட்டா ஆவணங்கள் எதுவும் வழங்குவதில்லை. வீட்டு மனைகள் பெயர் மாற்றம் செய்வதற்கும் கூட இலட்சங்களில் பணம் செலுத்த வேண்டும்.
பல்வேறு பொது காரியங்களுக்கு கோவில் மட நிலங்கள் கையகப்படுத்தப்படும் போது, குத்தகை விவசாயிகள் அனாதைகள் ஆக்கப்படுகின்றனர். காலங்காலமாக நிலவும், "உழவடை பாத்தியம்" 4 ல் 1 பங்கு கூட அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. உதாரணமாக, கடந்த 2020 ம் ஆண்டில், நெடுஞ்சாலை திட்டத்திற்காக, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உக்கரை, தத்துவாஞ்சேரி, பட்டம், கோழிகுத்தி, திருவாய்ப்பாடி, ஆனைக்கோவில் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் குத்தகை விவசாயிகள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன ; குத்தகை விவசாயிகளுக்கு இழப்பீடுகள் எதுவும் தரப்படவில்லை. திருப்பனந்தாள் காசிமடம் 80 கோடி ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டது!
இயற்கை சீற்றக் காலங்களில் அரசு வழங்கும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரண உதவிகளையும், நலத்திட்டப் பயன்களையும், பயிா்க் காப்பீட்டு திட்ட பலன்களையும் குத்தகை விவசாயிகள் பெற முடியாத அவலநிலை தொடா்கிறது; விவசாய இடுபொருள்கள், கருவிகள், மானியம் பெற இயலவில்லை. வங்கிகளில் கடன் பெற இயலவில்லை.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்திலும் பயன் இல்லை. கடந்த 2019 ல் தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம் (பி.எம் கிசான் சம்மான் நிதி) படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000- ரூபாய் என ஆண்டிற்கு 6000 ரூபாய் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் பயன் பெறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் சுமார் 26 லட்சம் ஏக்கர் சமய நிறுவன நிலங்களை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் உட்பட சுமார் 2.5 கோடி விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்; இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுவதில்லை!
¶ குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டங்கள் :-
மன்னராட்சி கால நிலப்பிரபுத்துவ அமைப்பின் மிச்ச சொச்சமாக கோவில்கள், மடங்கள் இன்னபிற சமய நிறுவனங்கள் இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள், நகர்ப்புற மனைகள் மற்றும் அசையா சொத்துகள் வழியாக சுரண்டல், ஒடுக்குமுறை செலுத்தி வருவது மாபெரும் சமூக அநீதியாகும். தங்களுடைய சமயம் சார்ந்த செயல்பாடுகளுக்காக, சமய நிறுவனங்கள் மிகப்பெரிய பொருளாதார சுரண்டல் நிறுவனங்களாக, இணை அரசாங்கம் போல செயல்படுவது சனநாயக அமைப்பு முறைக்கு முரணானதாகும்.
தமிழ்நாட்டில் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் பெயரளவிலானதாகவே இருக்கிறது. தமிழ்நாடு சாகுபடி குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் - 1955 ல் உருவாக்கப்பட்டது; 1965 ல் இந்தச் சட்டம் நிரந்தர சட்டமாக்கப்பட்டு, குத்தகை விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளில் தீர்வு காண்பதற்கான அடிப்படைச் சட்டமாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு சாகுபடி குத்தகைதாரர்கள் (வெளியேற்றத்தில் இருந்து பாதுகாப்பு) சட்டம் 1983 ஜூலை 1 ல் உருவாக்கப்பட்டது.
நீதிமன்ற வழக்கில் ஒரு பிரதிவாதி குத்தகை விவசாயி ஆக இருந்தால், அவர் சட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவராக இருந்தால், நீதிமன்றம் வழக்கை வருவாய் கோட்ட அதிகாரிக்கு மாற்ற வேண்டும். இச் சட்டத்தின் கீழ், ஒரு விண்ணப்பம் போல அந்த அதிகாரி வழக்கை கையாளுவார்; மேலும், குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் அல்லது பொது அறக்கட்டளைச் சட்டத்தின் அத்தியாயம் III இன் கீழ் குத்தகை விவசாயிகள் விண்ணப்பம் செய்தால், நில உரிமையாளர்கள் சாகுபடி செய்யும் குத்தகைதாரர்களை அவர்களது நிலங்களில் / சொத்துகளில் இருந்து வெளியேற்ற முடியாது. இச்சட்டத்தில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு தமிழ்நாடு சாகுபடி குத்தகைதாரர்களை வெளியேற்றத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் -1997 உருவாக்கப்பட்டது.
சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் தொடர்பாக அவ்வப்போது உருவாக்கப்பட்ட புதிய சட்டங்கள், திருத்தங்கள் அனைத்தும் குத்தகை பாக்கிகளை வசூலிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக இருக்கின்றன ; குத்தகை விவசாயிகளுக்கு உரிமைகள் அளிப்பதாக சட்டங்கள் இல்லை. குத்தகை தொகை / வாடகை பன்மடங்கு உயர்த்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.
¶ நில உச்சவரம்பு சட்டங்களால் பயன் இல்லை :-
இதுகாறும், ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்றிய பல்வேறு நில உச்சவரம்பு சட்டங்களால், சமய நிறுவனங்களின் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் எவ்விதப் பலன்களையும் அடையவில்லை. சொந்தமாக நிலங்களைப் பெறுவதற்கு வழியில்லாதவர்களாக, பல தலைமுறைகளாக சுரண்டப்பட்டு வருகின்றனர்.
மடங்கள், கோவில்கள் மற்றும் சமய நிறுவனங்கள், அறக்கட்டளைகள் கட்டுப்பாடுகளில் கட்டுண்டு இருக்கும் குத்தகை விவசாயிகளுக்கு சாகுபடி செய்யும் நிலங்கள் மீதான சுதந்திர உரிமைகள் இல்லாததால், அவர்களால் ஊக்கமாக விவசாய சாகுபடியிலும் ஈடுபட இயலவில்லை; உற்பத்தி திறனையும் உயர்த்த முடியவில்லை.
மடங்கள், கோவில்கள் அவற்றின் நிலங்களை மாறாமல் / யாருக்கும் மாற்றாமல் வைத்திருக்க வேண்டும் என்று சட்டங்கள், விதிகள் எதுவும் இல்லை. தங்களுடைய தேவைகளுக்காக, மடங்கள், கோவில்கள் அவற்றின் நிலங்களை விற்பதற்கு, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 34 அனுமதியளிக்கிறது. எனவே, கோவில்கள், மடங்கள் நிலப்பிரபுத்துவ பாணியில் விவசாய நிலங்களைத் தங்களிடம் குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. காலம் காலமாக குத்தகை விவசாயிகள் உழைத்துச் சாகுபடி செய்து பண்படுத்திய நிலங்களை அவர்களுக்கே வழங்கி விடலாம்!
¶ குத்தகை விவசாயிகளுக்கு சாகுபடி நிலங்களை, குடியிருப்பவர்களுக்கு மனைகளை சொந்தமாக்கிடுக !
இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 34 கோவில்களின் நிலங்களை விற்பதற்கு அனுமதி அளிப்பதால், முந்தைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசாங்கம் கடந்த 30.8.2019 ல் அரசாணை 318 யை வெளியிட்டது; நீண்டகாலமாக கோயில் இடத்தில் குடியிருப்பவர்களுக்குத் தகுதி அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. இதை செயல்படுத்தக் கூடாது என இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன; சேலம் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இடைக்கால தடை உத்தரவு பெற்றார்.
அரசாணை 318-க்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரியும், இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்யச் கோரியும், தமிழக அரசும், 10க்கும் மேற்பட்ட பயனாளிகளும் தனித்தனியாக வழக்குத் தொடுத்தனர்; அக். 2020 ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற கோயில் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சம்பந்தப்பட்ட அந்த வழக்கிற்கான ஒரு உத்தரவைப் பிறப்பிக்காமல், ஒட்டுமொத்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் குறித்தும், "கோயில் இடங்கள் கோயில் பயன்பாட்டிற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்" என்று உத்தரவைப் பிறப்பித்தார். இது இப் பிரச்சினையில் நீதிமன்ற முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
#எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து அரசாணை 318 க்கு உள்ள தடையை நீக்கி கோவில் நிலத்தில் உள்ள ஏழைகளுக்கு பட்டா கொடுக்க வழிவகை செய்திட வேண்டும்!
#குத்தகை விவசாயிகளுக்கு குத்தகை பதிவு உரிமை RTR வழங்கிட வேண்டும் !
#பல்வேறு சட்டச் சிக்கல்கள், நீதிமன்ற முட்டுக்கட்டைகள் நிலவுவதால், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலமாக, தாமதமின்றி உடனடியாக கணக்கெடுத்து, தமிழ்நாடு அரசு குத்தகை விவசாயிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கிட வேண்டும்!
# தமிழ்நாடு அரசின் மின் வாரியம் குத்தகை விவசாயிகள் கோரும் மின் இணைப்புகளுக்கு, கோவில், மடங்கள், அறக்கட்டளைகள் இன்னபிற சமய நிறுவனங்களிடம் இருந்து தடையில்லாச் சான்று / NOC வாங்கித்தர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்காமல் மின்சார மோட்டார் இணைப்பு வழங்க வேண்டும்!
# உயர்த்தப்பட்ட குத்தகை தொகைகளை குறைத்திட வேண்டும்! குத்தகை பாக்கிகள் மற்றும் வட்டிகளை தள்ளுபடி செய்திட வேண்டும்!
# அனைத்திற்கும் மேலாக, சமய நிறுவன நிலங்களில், பல தலைமுறைகளாக குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அவரவர் அடிமனைகளை/ இடங்களை, விவசாயநிலங்களை இழப்பீடு பெறாமல் சொந்தமாக்கிட வேண்டும்!
குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம், குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டங்களுக்காக உரிமை கொண்டாடி வருகிறது திமுக அரசாங்கம். செத்துப்போன அந்த சட்டங்களுக்கு உயிர் கொடுக்க, கோவில், மடம் உள்ளிட்ட சமய நிறுவனங்களின் நிலங்களை அவற்றை பயிரிடும் விவசாயிகளுக்கு சொந்தமாக்கும் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்திட வேண்டும். திராவிட ஆட்சிகளில் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்ட கதை பேசப்பட்டு வருகிறது. அது உண்மையானால், இந்து சமய அறநிலையத் துறை ஆதரவுடன் கோவில், மடங்கள், சமய நிறுவன நிலப்பிரபுத்துவம் நீடிக்கலாமா? கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)