ந்தியா ஒரு இந்து ராஜ்யமாக இருக்க வேண்டும்; அதற்கு மனுஸ்மிருதி அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டுமென்று சங்கிப்படைகள் எப்போதுமே விரும்பின. அம்பேத்கர் இந்திய அரசமைப்புச்சட்ட வரைவுக்கமிட்டிக்கு தலைமை தாங்கினார். அது, இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வழங்கும் உறுதிப்பாடு கொண்ட இறையாண்மை உள்ள சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு இந்தியா என்று பிரகடனம் செய்த அரசமைப்புச்சட்டத்தை வழங்கியது. ஆனால், அரசமைப்புச்சட்டம் இறுதி செய்யப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே அம்பேத்கர், மனுஸ்மிருதி சமூக அடிமைத்தனத்திற்கான இந்தியாவின் சட்டம் என்று கூறி அதை பகிரங்கமாக நிராகரித்தார், எரித்தார். ஆகவே, தவிர்க்க முடியாமல் சங்கி-பாஜக படைக்கு அம்பேத்கர் மீதும் அவரது மரபு குறித்தும் வெறுப்பைத்தவிர வேறெதுவும் இருக்க வாய்ப்பில்லை. அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சமீபத்திய மாநிலங்களவை பேச்சு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி குறித்த சங்கிகளது பெருவெறுப்பை விடவும் கூடுதலான வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

இப்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குவதுவரை, அம்பேத்கர் பற்றி உதட்டளவில் உச்சரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பது பாஜகவுக்கு முற்ற முழுக்கத் தெரியும். உண்மையில், அது அம்பேத்கர் சிலைகள் சிலவற்றை ஏற்படுத்தியும் அவரது நினைவையும் மரபையும் பாதுகாப்பது என்ற பேரால் சில நினைவகங்களை உருவாக்கி அம்பேத்கரை அபகரிக்க முயன்றும் வருகிறது;  இன்னும் சொல்லப்போனால் வெறுப்பு, பொய்கள் எனும் அதன் பாசிச நிகழ்ச்சிநிரலுக்கு உதவும் விதம் கூட அவரது பெயரை வெட்கமின்றி பயன்படுத்தியும் வருகிறது. ஆனால் அரசமைப்புச் சட்டம்,  பாசிச எதிர்ப்பில் பரந்துபட்ட வெகுமக்கள்  அணிதிரட்டலுக்கான ஆற்றல்மிக்க ஆயுதமாக முன்னெழுந்ததை அடுத்து, முதலில் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புக் கிளர்ச்சிகளின் போதும், பின்னர் 2024 மக்களவைத்தேர்தலின் போதும், அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை நமது காலத்தின் கொள்கை அறிக்கையாக மாறியதை அடுத்து பாஜகவின் ‘அம்பேத்கரை அகற்றும்’ திட்டம் தரைதட்டிப் போனது. இதன்காரணமாக, எரிச்சலடைந்துபோன அமித்ஷாவால் அவரது வெறுப்பை மூடிமறைத்துக் கொள்ளமுடியவில்லை, அவரது ‘மனதின் குரல்’ நாடாளுமன்றத்திலேயே வெளிப்பட்டுவிட்டது.

மக்களால் மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படும்,  அம்பேத்கர், அரசமைப்புச்சட்டம் குறித்து அமித்ஷா, பாஜகவின் ஆழமான மனச்சங்கடத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை; இதன் போக்கில் சங்கிகளின் மனுவாத மனநிலையையும் நிகழ்ச்சி நிரலையும்கூட வெளிப்படுத்தியிருக்கிறார். அம்பேத்கரை அடிக்கடி கூறுவோரை கிண்டல் செய்யும் விதமாக, அம்பேத்கர் பெயரை அடிக்கடி உச்சரிப்பதற்கு பதிலாக ஆண்டவன் பெயரை உச்சரித்தால் அவர்கள் ஏழ்பிறப்பும் நீங்கி ( ஏழேழு பிறப்பிற்கும்) சொர்க்கத்தில் நிச்சயமாக ஒரு இடத்தைப் பெறமுடியும் என்று கூறினார். அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் நிச்சயமான ஒரு இடம் உண்டு என்ற வாக்குறுதியானது, ஏமாற்றப்பட்ட மக்களைப் பார்த்து உங்களுக்கு இந்தப் பிறவியில் நரகம்தான் என கண்டனம் செய்வதாகும். இதுநாள் வரையிலும் மறுபிறவி என்ற பேரால், சாதி முறையும் இன்னபிற அநீதிகளும் எப்போதுமே நியாயப்படுத்தப்படுகின்றன; சாமான்ய மக்களின் மத நம்பிக்கைகள் கேடாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும், சாதி, பால் ஒடுக்குமுறை தளைகளில் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க மதத்தை தவறாக பயன்படுத்தி வந்ததை எதிர்த்துப் போராடி வந்தார். இங்கே, இப்போதே ஒடுக்கப்பட்டோருக்கு நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தைப் பெற்றுத்தருவதே அம்பேத்கரின் ஒரே அக்கறையாக இருந்தது. இங்குதான் அம்பேத்கரை அதீதமாக உச்சரிப்போரை குற்றம் சுமத்தும் வகையில் கேலிபேசும் விதமாக அமித்ஷா, சொர்க்கம், மறுபிறப்பு என்ற கருத்துகளை அழைக்கிறார்! அம்பேத்கரை அடிக்கடி அழைக்கும் இந்த மக்கள் யார்? இவர்கள் முதன்மையாக இந்தியாவின் ஒடுக்கப்பட்ட, வறுமையில் வாடும், பெரும்பான்மை மக்கள்; இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் பிழைத்திருப்பதற்காகவும் கவுரவத்துக்காகவும் போராடிக் கொண்டிருப்பவர்கள். வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்வது தொடங்கி ஏதோ ஓரளவான இட ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம் பெற்றுக்கொள்வதுவரை, அவையாவும் அரசமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளுக்கான போராட்டமும் அறுதியிடலும் இல்லாமல் வரவில்லை. 

அமித்ஷாவின் காணொலி துணுக்கு சூழல் பொருத்தத்திலிருந்து திசைதிருப்பப்பட்டு விட்டதாக கூறுகிறார். பாபாசாகேப் அம்பேத்கரை அவதூறாக பேசிய அமித்ஷாவின் அந்தக் கருத்தைத் தொடர்ந்து விஷமத்தனமான முயற்சியாக அம்பேத்கரை நேருவுக்கு எதிராக நிறுத்தவும் நேருவின் அமைச்சரவையிலிருந்து அம்பேத்கர் விலகியதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பாளி என்றும் பேசியுள்ளார். இது, அம்பேத்கரது பதவி விலகலுக்கான சூழ்நிலை குறித்த அப்பட்டமான பொய்யாகும். நேரு அரசாங்கத்துடனும் காங்கிரசுடனும் சில பிரச்சனைகளில் அம்பேத்கர் தனது மாறுபாடுகளை எழுப்பியிருந்தபோதும், 1952 தேர்தலுக்கு முன்பாக இந்து சட்டத்தொகுப்பு மசோதாவைக் கைவிடுவதென நேரு எடுத்த முடிவே அம்பேத்கரது பதவி விலகலைத் தூண்டியது. இந்து சட்டத்தொகுப்பு மசோதாவின் உள்ளடக்கம் குறித்தும் இந்துப் பெண்களிடையே சமநிலையையும் நீதியையும் கொண்டுவர இது அவசரமாக சட்டமாக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும் நேரு, அம்பேத்கர் கருத்தோடு முழுமையாக உடன்பாடு கொண்டிருந்தார். ஆனாலும் இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் சமூகத்திலும் எழுந்த பெரியளவிலான எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதாவை காப்பாற்றுவதற்காக இதை கைவிடுவதும், தள்ளிப்போடுவதும் ஒரு செயல்தந்திர கட்டாயமாக ஆகிப்போனது.

இந்து சட்டத்தொகுப்பு மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பை தலைமைதாங்கி நடத்தியது யார்? முதன்மையாக, ஆர்எஸ்எஸ் ஹிந்து மகாசபாவால் வழிநடத்தப்பட்ட இந்துத்வா படைகள்தான் எதிர்ப்பு தெரிவித்தன; நாடுமுழுவதும் வெறித்தனமான எதிர்ப்பை விசிறிவிட்டது, மசோதாவை தீயிட்டு எரித்தனர்; அம்பேத்கர், நேருவின் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். காந்தி படுகொலையை அடுத்தும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் ஆர்எஸ்எஸ் அய் தடைசெய்து அறிவித்திருந்ததாலும் படுமோசமாக தனிமைப்பட்டுப் போயிருந்த இந்துத்துவாப் படைகள், இந்து மசோதாவுக்கான பழமைவாத எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்டு மீண்டு எழ ஒரு வாய்ப்பாக இந்து சட்டத்தொகுப்பு மசோதாவைக் கண்டு கொண்டது. மசோதா திரும்பப் பெறப்பட்டதானது, ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா, ஜனசங் இவற்றின் நிகழ்ச்சி நிரலை களவாடியது, இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 364 இடங்களையும் இடது-சோசலிஸ்ட்கள் 34 இடங்களையும் பெற்றிருக்க அவர்கள்(ஜனசங், இந்து மகாசபா) ஏழு இடங்களுக்கு மேல் பெற முடியவில்லை. தேர்தல் முடிந்தது, மசோதாவை நான்கு தனித்தனிச் சட்டங்களாக அரசாங்கம் நிறைவேற்றியது.

இந்து சட்டத்தொகுப்பு மசோதாவை திரும்பப் பெற்றது தொடர்பாக அம்பேத்கரது பதவி விலகலானது, முற்போக்கான சமூகசீர்திருத்தத்திற்கும் பால்நீதி நடவடிக்கைகளுக்கு உக்கிரமான பழமைவாத எதிர்ப்புக்கு எதிரான வெளிப்படையான நிலைப்பாடு, எதிர் அழுத்தத்தின் வெளிப்பாடு. பெண்கள் அதிகாரப்படுத்தல் எனும் அவசரக் கடமைக்கு அம்பேத்கர் அளித்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. பார்ப்பனிய ஆணாதிக்கத்தை தோற்கடித்து, சாதியை அழித்தொழிக்கும் பாதையானது பால் நீதி இல்லாமல் சமூக நீதி முழுமைபெறாது என்பதை நமக்குச் சொல்லுகிற அவரது வழியாகவும் இருந்தது. சமூக நீதி நிகழ்ச்சி நிரலானது அதன் சாரமான மாற்றம், சமத்துவத்துக்கான அழுத்தம் திட்டமிட்ட ரீதியில் களவாடப்பட்டு வெறும் சமூக பொறியியலுக்கான, இருப்பதைக் கட்டிக்காக்கும் நடவடிக்கையாக மாறிப்போயுள்ள சமயத்தில், பெண்கள் உரிமைக்கான அம்பேத்கரது பேரார்வமும் சமூக சமத்துவத்துக்கான போராட்டத்தில் பால்நீதிக்கு அவரளித்த கவனக்குவிப்பையும் நாம் கிரகித்துக் கொள்ள வேண்டும்.

மோடி அரசாங்கமும் ஒட்டுமொத்த சங்கிப்படைகளும் அமித்ஷாவுக்காக வரிந்துகட்டிக் கொண்டு இறங்கியுள்ளன; உண்மையான பிரச்சனையிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக, ராகுல்காந்தி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கிவிட்டாரென்று சொல்லப்படும் வழக்குப் பதிந்திருக்கிறது. இது, அம்பேத்கர், அரசமைப்புச் சட்டம் குறித்து கையும் களவுமாக பிடிபட்டுவிட்ட சங்கி-பாஜக முகாமில் ஏற்பட்டுள்ள அச்சத்தையே காட்டுகிறது. அம்பேத்கர் குறித்த அவர்களது வெறுப்புக்கும் அரசமைப்புச்சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம் மீதான அவர்களது தாக்குதலுக்கும் பதிலளிக்கும் விதமாக, அம்பேத்கரது முற்போக்கு மரபை பற்றிக்கொள்ளவும் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் தீர்மானகரமாகவும் சமூக சமத்துவத்துக்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்தியாக வேண்டும்.