திமுக 75; அதிமுக 53 !?
1949 ல் தொடங்கப்பட்ட திமுக, பவளவிழாவை கொண்டாடியுள்ளது. 1972ல் உருவாக்கப்பட்ட அதிமுக, 53 வது ஆண்டில் நுழைந்ததை கொண்டாடியுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் உருவான திராவிட இயக்கத்திலிருந்து கிளைத்த இந்தக் கட்சிகள்தான் கடந்த 57 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கோலோச்சி வருகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியிருந்தன. அநேகமாக தமிழ்நாட்டில்தான் சமூக சீர்திருத்த பின்புலத்திலிருந்து அரசியல் கட்சியாக திமுக உருவானது.
அப்போதிருந்த பொது எதிரி காங்கிரசுக்கு எதிராக, எதிரும் புதிருமான -ராஜாஜியின் சுதந்திரா கட்சி உள்ளிட்ட- கட்சிகளைக் கொண்ட கூட்டணியை அறிஞர் அண்ணாதுரை உருவாக்கினார். காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாரை பின்பற்றியவர்கள், ஆட்சியிலிருந்து காங்கிரசையே வெளியேற்றினார்கள். அகில இந்திய அளவிலும், மாநிலத்திலும் மக்கள் மத்தியில் உருவாகியிருந்த காங்கிரஸ் எதிர்ப்பை ஆட்சி அதிகாரமாக அறுவடை செய்து கொண்டது திமுக.
திமுக தனது பயணத்தில், தமிழக, அகில இந்திய அரசியல் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டு 75 வது ஆண்டிலும் வெற்றிகரமாக அரசியல், பண்பாட்டுத் தளங்களில் உயர்ந்து நிற்பதாக, திமுக தலைவர்கள் பவளவிழா உரைகளில் முழங்கினர். மூன்று பிளவுகளைக் கண்டிருந்தாலும், தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் போயிருந்தாலும், மீண்டும் ஆட்சியை பிடித்து, ஆறாவது முறையாக ஆட்சியிலிருக்கிறது; அகில இந்திய அரசியலிலும் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தையும் பெற்றுள்ள திமுக, அடுத்த “நூறாண்டுகளுக்கு அசைக்கமுடியாத சக்தியாக” இருக்குமென்று திமுக தலைவர்கள் இடிமுழக்கமிட்டனர். திராவிட மாடல் அரசாக வளர்ச்சி பெற்று இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குவதாகவும் போர்ப்பரணி பாடினர்.
1967ல் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த திமுக அதன் ஆட்சிக் காலங்களில், தமிழ்நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் மிக முக்கியமான பல செயல்களைச் செய்தது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டல், சீர்திருத்தத் திருமணங்களுக்கு அங்கீகாரம், கை ரிக்ஷா ஒழிப்பு, பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக குரல் கொடுத்து ஆட்சியை பறிகொடுத்தது. இந்திரா சுயேச்சாதிகாரத்தை முறியடித்து ஜனநாயகத்தை மீட்ட அகில இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றியது.
திமுகவிற்கு மறுபக்கமும் உண்டு. அதன் தொழில் வளர்ச்சி கொள்கை, ஆட்சியிலும் கட்சியிலும் முதலாளிகள் செல்வாக்குபெற இடமளித்தது. பிற்படுத்தப்பட்ட சாதி, கிராமப்புர ஆதிக்க சக்திகளே கட்சியை ஆக்கிரமித்துக் கொண்டனர். தொழிலாளர் போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறை, தாமிரபரணி படுகொலை போன்ற மோசமான அடக்குமுறைகள், குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஒன்றிய அரசின் ஆட்சிக் கலைப்பால் அதிகாரத்தை இழந்த திமுக, ஜனநாயக விரோதமாக ஒன்றிய ஆட்சியை வலியுறுத்தி எம்ஜிஆர் ஆட்சியைக் கலைக்கச் செய்தது.
வலது திசையில்அதிமுக
திமுக எதிர்ப்பில் உருவான அதிமுக, எம்ஜிஆர் தலைமையிலும் பின்னர் ஜெயலலிதா தலைமையிலும் பிறகு எடப்பாடி தலைமையிலும் திமுக எதிர்ப்பையே தனது கொள்கையாக கொண்டிருந்தது. வெற்றியும் பெற்றது. தமிழ்நாடு இரு துருவ அரசியலில் அடி எடுத்து வைத்தது. எம்ஜிஆர் ஆட்சியில் மிக மோசமான ஜனநாயக ஒடுக்குமுறை, ஜெயலலிதா ஆட்சியில் கொடியங்குளம் கொடூரம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் மீது அடக்குமுறை, அரசு ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட வரலாறு காணாத தாக்குதல், பரமக்குடி துப்பாக்கிச்சூடு, எடப்பாடி ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலியவற்றை இந்த தலைவர்கள் ஆட்சிகாலத்தின் மக்கள் விரோதத் தன்மையை அடையாளப்படுத்தலாம். அதிமுக ஆட்சிக் காலங்கள் பெரிதும் மக்கள் விரோத கொள்கைகளால் அறியப்பட்டன. ஆனாலும் அதிமுகவை திராவிடக் கட்சியாக முன்னிறுத்திக்கொள்ள இட ஒதுக்கீடு, இருமொழிக்கொள்கையை இக்கட்சி தொடர்ந்தது, தொடர்கிறது. தமிழ்நாட்டுக்கு 69% இட ஒதுக்கீட்டை அரசமைப்புசட்ட ரீதியாக உறுதிசெய்ததில் ஜெ. ஆட்சிக்கு முதன்மைப்பங்குண்டு. அதிமுக சமூகநீதி அடையாளத்தை அணிந்து கொள்வதற்கு இது உதவியது. திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து தள்ளிவைக்க, இலவச பற்பொடி உள்ளிட்ட மக்கள்மயக்கு திட்டங்களையும் கூட மேற்கொண்டது. ஆனாலும் வரலாற்று மரபான திராவிட கருத்தியல், அரசியல் கொள்கைகளிலிருந்து வலது திசையில் விலகிய அதிமுக, எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பித்து ஜெயலலிதா காலத்தில் உச்சம் தொட்டது. இன்றுவரையிலும் தொடர்கிறது. கட்சியில் பிளவுகள், தொடர் தோல்விகள், பாஜகவோடு சேர்ந்து பயணித்ததால் ஏற்பட்ட மதிப்பிழப்பு இவற்றால் அது கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நூற்றாண்டுகளுக்கான கட்சி என்று மார்தட்டிக் கொண்டாலும் அரசியல் களத்தில் ஒரு கட்சியாக எந்த அளவு தாக்குப்பிடிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
திராவிட வானில்புதிய நட்சத்திரங்கள்
திமுக, அதிமுகவின் தவறான கொள்கைகள், ஆட்சிமுறைகளாலும் புறக்கணிக்கப்பட்ட சமூக சக்திகள், புதிய புதிய சமூக இயக்கங்களாக, அரசியல் கட்சிகளாக தோன்றி வருகின்றன. திராவிட அரசியலை நிராகரிக்கும் இந்த அரசியல் நட்சத்திரங்கள் திராவிட பாணியிலேயே தோன்றி வருகின்றன. அதனாலேயே சில மங்கி வருகின்றன. சில மறைந்து வருகின்றன. (அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகமும் வந்துள்ளது). இந்த மாற்றங்கள் பல துருவ அரசியலுக்கு வழியேற்படுத்திக் கொடுத்தன. ஆனாலும் இவை திமுக, அதிமுகவுடன் கூட்டணி காண்பதை விதியாகவே மாற்றிவிட்டன. கூட்டணி அரசியல் என்ற பேரால், இருமுகாம் அரசியலுக்கே வழியேற்படுத்திக் கொடுத்துள்ளன. தேர்தலில் கூட்டணி, ஒரு கட்சி ஆட்சி என வெற்றிகரமான வாய்ப்பாட்டை திமுக, அதிமுக கட்சிகள் ஏற்படுத்தி தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டன.
பாஜக முயற்சியும்கூட்டணி ஆட்சிக்கான உரத்த குரலும்!?
2026 க்கான தேர்தல் வேலைகளை கட்சிகள் இப்போதே துவங்கி விட்டன. திமுக 200 தொகுதிகளில் வெற்றி என பேசிவருகிறது. திமுக கூட்டணியில் விரிசல், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என அதிமுக பேசிவருகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் திமுகவும், தொடர் தோல்விகளிலிருந்து தப்பிப்பிழைத்தாக வேண்டிய நெருக்கடியில் அதிமுகவும் உள்ளன. மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளால் ஊக்கம் பெற்றுள்ள பாஜக, பலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அவற்றுள் ஒன்று, கூட்டணி ஆட்சி. மத்தியில் கூட்டாட்சி கேட்கும் இக்கட்சிகள் மாநிலத்தில் தனிஆட்சியை மட்டும் நடத்துவது ஏன்? ஏன் மாநிலத்தில் கூட்டாட்சி நடத்த கூடாது? என்று கேட்டு வருகின்றனர். இது குறித்து பாஜக ஆதரவு பத்திரிகையாளர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர். மக்களின் வாக்குகளை பகிர்ந்து கொள்ளும் கட்சிகள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தவறில்லை. ஆனால், பாஜகவின் குறைந்தபட்ச திட்டம் திமுக கூட்டணியில் மாற்றத்தைக் கொண்டு வருவது, அதிகபட்ச திட்டம், பாஜக திட்டத்துக்கு ஆதரவான ஒரு கூட்டணியை கொண்டுவருவது என்பதாகும். சாம்சங் போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்ததற்காக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கூட்டணிகட்சித் தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். இது கூட்டணி விரிசலை சரிசெய்யும் முயற்சியாகவும் அதிமுகவுக்கு பதில் சொல்லும் நடவடிக்கை யாகவும் காணலாம்.
75 ஆண்டுகால திராவிட அரசியல் பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பாஜக தொடர்வதும் அகில இந்திய அளவிலான பாஜக பெரும் அச்சுறுத்தலாக இருப்பதும் 75 ஆண்டுகால திராவிட அரசியலுக்கு சவாலாகவே இருக்கிறது. பாஜக எதிர்ப்பு அரசியல் சக்தி, வலுவான கூட்டணி என திமுக இருந்தாலும் மக்கள் விரோத கார்ப்பரேட் செல்வாக்கிலிருந்து வெளியே வரவேண்டியுள்ளது, ஜனநாயக அரசியலில் ஊன்றி நிற்க வேண்டியுள்ளது. அதிமுக, தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கடியில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்கும் உத்தியை மேற்கொண்டு மேலும் நெருக்கடியை எதிர்கொள்ளுமா என்பது இந்த தேர்தலில் முக்கிய காட்சியாக இருக்கும். அந்த வகையில் 2026 தேர்தல் முற்றிலும் புதிய களமாக இருக்கும்.
-இளவழகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)