தை 1, பொங்கல் நாளன்று சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா தொடங்கியது. முதலமைச்சர் ஸ்டாலின் முரசடித்து தொடங்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வாழ்வியலின் சிறப்புகளை மாபெரும் விழாவாகக் கொண்டாடுவது நோக்கம் என்று அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அமைப்பாக்கிய நிகழ்ச்சி இதுவாகும். தமிழகத்தின் பல்வகை கலைகளையும் ஒருங்கிணைத்துக் காண்கின்ற வாய்ப்பு சென்னை மக்களுக்கு கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கைவிடப்பட்டிருந்த சென்னை சங்கமம், திமுக ஆட்சியில் மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.
நாட்டுப்புற கலைகளைப் பாதுகாத்து, வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். அதேவேளை நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வேண்டும். அவர்களின் கலைகளை உலகளாவிய கலையுலக அரங்கிற்கு கொண்டு செல்லவும் வேண்டும். அதற்கு இந்த முயற்சிகள் பயன்படலாம் என்பதால் இதை வரவேற்கலாம்.
மார்கழி இசைக் கச்சேரிகளில் இனிமேல் பாடப் போவதில்லை என பத்தாண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்த டி.எம்.கிருஷ்ணா, டிசம்பர் 25 அன்று சங்கீத வித்வத் சபாவில் பல சச்சரவுகளுக்குப் பின் கொண்டாட்டமாகப் பாடினார். பிராமணர்களுக்கானது எனவாகிப் போன கர்னாடக இசையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதே அவரின் போராட்டம். பெரியார், அம்பேத்கரின் கருத்துகளைப் பாடி அவர்களுக்கு எரிச்சலூட்டினார். இயேசு, அல்லா பற்றியும் பாடி அதிர்ச்சி ஏற்படுத்தினார். ஆல்காட் குப்பம் போன்ற சேரிகள், குப்பங்களில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரிகளுக்குச் சென்று பாடினார். சாதிய ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவம் கர்னாடக இசைப்பரப்புகளில் நிகழ வேண்டும் என்றார். அவரது இசைக்குரல் கலகக் குரலானது.
சென்னை மியூசிக் அகாடெமியால் 2024 ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது அவருக்கு வழங்கப்பட்டது. “அவர்கள் என்னோடு உரையாட அழைக்கிறார்கள். அவர்களோடு உரையாடலை நிகழ்த்துவதன் மூலம் எனது போராட்டம் தொடரும்” என்கிறார்.
டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் அன்று மார்கழி இசைக் கச்சேரியில் பாடிய கிருஷ்ணா, சாரம் அணிந்து வந்து, எழுத்தாளர் பெருமாள் முருகனின் "சுதந்திரம் வேண்டும்" என்ற பாடலைப் பாடினார். அரங்கத்திற்கு உள்ளும் வெளியும் இசை ரசிகர்களின் பெருங்கூட்டம். அவர் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செய்தனர். இந்த ஆதரவு அவரது இசைக்குரலுக்கு மட்டுமல்ல; கலகக் குரலுக்கும் தான் என்பது நிரூபணமானது, மகிழ்ச்சிக்குரியது.
மறுபுறம் மார்கழி மக்களிசை. கடந்த அய்ந்தாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் இந்த இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் அரிய பணியை செய்து வருகிறது. இதில் ஒடுக்கப்பட்ட, விலக்கி வைக்கப்பட்ட சமூகத்தின் கலைப்பிரவாகம் இசையொலியாய் அதிர்கிறது. அவர்களது வாழ்வை, வாழ்வின் வலியை, துயரத்தை, மகிழ்வை, உழைப்பை எதிரொலிக்கும் இசைக்கு அரங்கேற்றம் நிகழ்ந்து வருகிறது. பறை இசை, ஒப்பாரிப் பாடலிசை உள்ளிட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் இசை சுதந்திரமாகப் பரவிப் பாய்கிறது. “இது சாதாரண இசை நிகழ்ச்சியல்ல; பண்பாட்டுத் தலைகீழாக்கம்; திரும்பச் செய்தல். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விழிப்புணர்வுக்கான அடையாளம்” என்கிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம். பாரம்பரிய இசைக் கருவிகள் தாண்டி நவீன இசைக் கருவிகளின் வழியே அம்பேத்கரை பற்றிய பாடல்கள் ஒலிக்கின்றன. முற்போக்கு கருத்துகள், ராப் பாடகர் அறிவு மூலம் கேட்பவர்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.
எத்தகைய கலைகளும் அன்றைய காலகட்டத்தின் சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, வெளிப்படுத்த வேண்டும். அவற்றின் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறைகளிலும் கால மாற்றத்திற்கேற்ப தகவமைதலும் வேண்டும். பிற இரு போக்குகளும் இதனை எதிரொலிக்கும் போது, சென்னை சங்கமம் இந்த அம்சத்தில் பரிணமிக்குமா என்ற கேள்வி எழுகிறது. கலாச்சாரத் தளத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்து கலகம் செய்த திராவிட இயக்கம் அண்மைய காலத்தில் அதிலிருந்து பின்வாங்கி விட்டது. அந்த இடத்தை வேறு பல இயக்கப் போக்குகள் நிறைவு செய்ய முயற்சிக்கின்றன என்பது நல்ல செய்தி. மார்கழி மக்களிசை பற்றி டி.எம்.கிருஷ்ணாவிடம் கேட்கும் போது, “வேறு வேறு கூடைகளில் இருக்கும் இந்த இரு இசைகளும் ஒன்றாக சங்கமிக்க வேண்டும்” என்கிறார். அதுவும் “சம பலத்துடன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். அவர் சொல்வது முற்றிலும் சரியே.
சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே நிகழும் இந்த கலை விழாக்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் வெள்ளமாகப் பரவிப் பாய வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பல்வேறு கலைகளும் சமத்துவமாக ஒன்று கலக்க வேண்டும். அவை மக்களின் வாழ்வையும் போராட்டங்களையும் சமத்துவத்தையும் விடுதலையுணர்வையும் வெளிப்படுத்த வேண்டும். அதுவே உண்மையான கலைச் சங்கமத்தின் மக்கள் இசையொலியாக இருக்கும். பேரழிவு பாசிச கலைப் பண்பாட்டுத் தாக்குதலை எதிர்த்துக் களமாடி வீழ்த்த இது மிக மிக அவசியமாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)