இனி தனித்து வாழும் பெண்ணும் குடும்பமாக கருதி ரேஷன் அட்டை வழங்கப்படும் -

தமிழக அரசு அறிவிப்பு!

-ஒரு பார்வை

மதிவாணன்

தனித்து வாழும் பெண்ணுக்கு ரேஷன் அட்டை இல்லை என்பது தமிழக அரசின் விதியாக இருந்து வந்தது. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமான விதியாகும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படையாகத் தனி மனிதரும், அவரின் உரிமைகளும், கடமைகளும் தான் இருக்கிறது. குடும்பத்திற்கு வாக்குரிமை என்றில்லை. தனிமனிதனுக்கு வாக்குரிமை என்றுதான் இருக்கிறது.

ஆணாதிக்க சிந்தனை ஆதிக்கத்தில் இருப்ப தால், ஒவ்வொருவருக்கும் உணவை உத்தரவாதம் செய்யும் உணவு அட்டை குடும்ப அட்டை யானது. எனவே, குடும்பம் இல்லாதவர்களுக்கு உணவு உத்தரவாதம் இல்லை என்றானது.

'ஆணாதிக்க குடும்ப' அட்டை

தனித்து வாழும் அனைவரும் பாதிக்கப் பட்டனர். இருந்தாலும், கூடுதல் பாதிப்புக்கு ஆளானவர்கள் பெண்கள்தான். தந்தையோடு இருப்பது, கணவனோடு இருப்பது, மகனோடு இருப்பது என்பதுதான் பெண்ணின் வாழ்க்கைக் கட்டங்கள் என்று ஆணாதிக்க குடும்பம் விளக்கமளிக்கிறது.

இதன் அடிப்படையில் தனித்து வாழும் பெண்களுக்கான ரேஷன் அட்டைகளை பறிப்பது என்ற அரசியல் சட்ட விரோத காரியத்தைத் தமிழக அரசு இருபது ஆண்டுகளுக்கு மேலாக செய்து வந்திருக்கிறது. எதிர்த்து சண்டையிட்டு அட்டையைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

கணவனைப் பிரிந்த பெண்ணின் பெயரை ரேஷன் அட்டையிலிருந்து நீக்குவதற்கு கணவன் விடுவதில்லை. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்த பெண்ணைத் தண்டிப்பதற்கான ஓர் ஆயுதமாக ரேஷன் அட்டையில் பெயர் நீக்க மறுப்பது இருந்தது. இயற்கை மரணங்களால் தனி மரமாக்கப்பட்ட பெண்ணுக்கும் ரேஷன் அட்டை மறுக்கப்பட்டது. விதவை, கைவிடப்பட்ட பெண், திருமணமாகாத பெண், என்று பல வகை வாழ்நிலையில் உள்ள பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஆணின் பிடியில் துன்புறும் பெண்ணுக்கு உணவு உத்தரவாதமும் இல்லை என்ற கொடூரம் நிகழ்ந்ததுதனித்து வாழும் பெண்களுக்கு ரேஷன் அட்டை இல்லை என்பதால், கொரோனா நிவாரணமாக அரசுகள் வழங்கிய நிவாரணம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை.

இப்படியான அவல நிலை இருப்பது கூட எந்த கட்சிகள், ஆட்சிகள் கண்ணுக்கும் தெரிய வில்லை. பெண்கள் இயக்கங்கள்/அமைப்புகள் மட்டும் தனித்து வாழும் பெண்ணுக்கு ரேஷன் அட்டை என்று குரல் கொடுத்து வந்தன.

இப்போது தமிழக அரசு 'ரேஷன் அட்டை கோருகின்ற தனித்து வாழும் பெண்கள் குடும்பமாக கருதப்படுவார்கள்' என்று அறிவித் துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (27.10.21 மதுரை பதிப்பு) செய்தி வெளியிட்டுள்ளது. 'திராவிட முற்போக்கு' ஆணாதிக்க குடும்பத்தைத் தூக்கி பிடிப்பதில் அதிர்ச்சியடைய ஒன்றும் இல்லை! இருந்தாலும், இந்த அளவுக்காவது லட்சக்கணக்கான பெண் களின் துயரத்திற்கு முடிவுக்கு வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைய வேண்டியி ருக்கிறது. தனியொருவருக்கும் உணவு உறுதி என்று தமிழக அரசு அறிவித்திருந்தால், நாம் முழு மனதோடு வரவேற்றிருப்போம்! பால் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவர்களும், தனித்து வாழும் ஆண்களும் கூட பயன் பெற்றிருப்பர். முக்கிய மாக குடும்பம் என்பது ஒரு அரசியல் வரையறை அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.

தற்போது நடப்பில் இருக்கும் நிலவரம் என்ன?

திருமணமான பெண் ஒருவர், தனியாகவோ, பிள்ளைகளுடனோ, அல்லது தன்னை சார்ந்து வாழும் பிறருடனோ வாழ்ந்துகொண்டிருக்க, அவருக்கு சட்டப்படியான விவாகரத்து கிடைக்கவில்லை என்றால், அவர் ரேஷன் அட்டைக்குத் தகுதியானவர் அல்ல. அவருக்கும் அவரைச் சார்ந்திருக்கும் அவல நிலையில் உள்ளவர்களுக்கும் உணவு உரிமை கிடையாது. உணவு அட்டை வேண்டும் என்றால், விவகா ரத்து செய்து, அந்த நீதிமன்ற உத்தரவை வைத்து முந்தைய கார்டிலிருந்து  பெயர் நீக்கம் செய்த பின்னர் புதிய அட்டைக்கு மனு அளிக்க வேண்டும்.

திருமணமாகாத பெண்ணுக்கு ரேஷன் அட்டை கிடையாது. ஏனென்றால், அவர் எப்போதும் 'தன் தந்தையோடு வாழ்கிறார்'!

இப்போது அரசின் இந்த ஆணாதிக்க நிலைப்பாட்டில் மாற்றம் வந்துள்ளது. தனித்து வாழும் எந்தப் பெண்ணும் ரேஷன் அட்டை பெற முடியும்.

தனித்து வாழும் பெண் ரேஷன் அட்டை பெற என்ன செய்ய வேண்டும்?

தனித்து வாழும் பெண்ணுக்கு ஒரு சமையலறையும் எரிவாயு இணைப்பும் இருக்க வேண்டும். (மோடியின் அரசாட்சியால்) எரிவாயு வாங்க வழியில்லாதவர்களுக்கு சமைக்கும் வசதி இருந்தால் போதும்.

தான் ஒரு வீட்டில் தனித்து வாழ்வதாக அந்தப் பெண் தானே பிரகடனம் செய்து, அதனை வருவாய் நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும். அதன்பின் வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்து ரேஷன் அட்டைக்கு வழி ஏற்பாடு செய்வார். மேலும், ஆதார் அட்டை, எரிவாயு வாங்கியதற்கான ரசீதையும் (இருந்தால்) அளிக்க வேண்டும்.

அவிகிதொச, முற்போக்கு பெண்கள் கழகத் தோழர்கள் உள்ளிட்ட அமைப்புகள் இவ்வகைப் பெண்களைக் கணக்கில் எடுத்து அமைப்பாக்கி ரேஷன் அட்டை பெறுவதற்கு வழியேற்படுத்த வேண்டும். இல்லையென்றால், ஆணாதிக்க மனோபாவத்தின் காரணமாக, அறியாமையின் காரணமாகப் பெண்களுக்கு அட்டை மறுக்கப் படலாம். மேலும், தரகர்கள், அதிகாரி களின் லஞ்ச ஊழலுக்குப் பெண்கள் பலியாவார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளால் மட்டுமே இது தடுக்கப்பட முடியும்.

----- தனித்துவாழும் பெண்களது பிரச்சனை வெகுதாமதமாகவே பொது வெளியின் கவனத்தைப் பெற்றது. இந்தியாவில் மணமான குடிமக்கள் தொகை 46.3% என்றும் அதில், தனித்து வாழும் பெண்கள் 5.5% என்றும் தெரியவருகிறது. 2001 ல் 51.2 மில்லியனாக இருந்த தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை 2011 ல் 71.4 மில்லியனாக உயர்ந்தது. 2018 கணக்கெடுப்பின்படி, மொத்த பெண்கள் எண்ணிக்கையில் தனித்து வாழும் பெண்கள் எண்ணிக்கை 73 மில்லியனாகவும்21% மாகவும் இருந்துள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இது அகில இந்திய நிலவரம்.

மாநிலங்களிலுள்ள நிலமைகளைப்பார்த்தால் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை விழுக்காடு  (அகில இந்திய அளவில் 3.5% மாக இருக்கும் போது), கேரளாவிலும் தமிழ்நாட்டிலும்தான் இந்தியாவிலேயே அதிகமாக இருப்பது வியப்பளிப்பதாக இருக்கிறது. கேரளாவில் 9.3%, தமிழ்நாட்டில் 9.2%.-----

------2016 விவரப்படி தமிழ்நாட்டிலுள்ள 1.84 கோடி குடும்பங்களுள் 8.11 லட்சம் பேர் தனித்துவாழும் பெண்கள். (குறைந்தபட்சம் 10 லட்சம் ரேஷன் அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டாக வேண்டும்).

2016ல் ஒன்றிய அரசின் அமைச்சர் மேனகா காந்தி, பெண்கள், குழந்தைகளுக்கான ஒரு தேசிய வரைவுக் கொள்கையை முன்வைத்தார். நாடுமுழுவதும் கருத்து கேட்கப் பட்டது. 24 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கையில் இரண்டு இடங்களில்தான் தனித்துவாழும் பெண்கள் பற்றிய குறிப்பு வருகிறது. அவர்கள் பற்றி குறிப்பிடும் போது, “கணவனை இழந்தவர், விவாகரத்து பெற்றவர், பிரிந்து வாழ்பவர், திருமணமே செய்து கொள்ளாதவர், கைவிடப் பட்டவர்என அய்ந்துவகைப் பட்டியலை முன்வைக்கிறது. இந்த வகைப்படுத்தலே இவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்துப் பார்க்கிற பார்வையை அப்பட்டமாக காட்டுகிறது. எனவேதான் இந்த அறிக்கையை பெண்கள் அமைப்புகளும் பெண்ணிய ஆளுமைகளும்அறிக்கை பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக பார்க்கிறதுஎன்று சாடினர். அந்த வரைவு அறிக்கை என்னவானது என்று தெரியவில்லை. ஒருவேளை மோடியின்மகள்களை பாதுகாப்போம்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.----

-----சேர்ந்து வாழ்வது () குடும்பத்துடன் வாழ்வதுதான் பெண்ணின் நியதி, தனித்து வாழ்வது பெண்ணின் தேர்வாக இருக்கமுடியாது என்று கூறும் ஆணாதிக்க சமூக நியதிதான் அந்த கொள்கை அறிக்கை மூலம் வெளிப்படுகிறது.

தனித்துவாழும் பெண்களுக்கும் பொதுவிநியோக அட்டை (ரேஷன் அட்டை) வழங்குவது எனும் திமுக அரசின் முடிவு நிச்சயம் வரவேற்கத் தக்கமுடிவுதான். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள் இதை வரவேற்றிருப்பது இயற்கைதான். ஆனால், தனித்து வாழும் பெண்களைகுடும்பம்எனும் அடைப்புக்குள் அடைக்காமல் சொல்லமுடியாதா? தனித்துவாழ்வதும் வாழ்க்கைமுறைதான் என்பதை சட்டமும் சமூகமும் ஒப்புக்கொள்வதுதான் அடிப்படை மாற்றத்துக்கு வழிவிடும்.

சீர்திருத்தங்கள் பலவற்றுக்கு முன்னோடி என்று கூறப்படும் தமிழ்நாடு இப்படி ஒரு உண்மையான சீர்திருத்தத்திற்கு தயாராக வேண்டும். அது சமூகநீதிக்கும் அணிசேர்க்கும்.-----