கோவை பள்ளி மாணவியின் மரணத்திற்கு

நீதி வேண்டும்

கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளியின் பெயரே அதனுடைய பின்புலத்தை சொல்லும். இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி  வயது 17, ஏழை குடும்பம். கோவை கோட்டை மேடு பகுதியில் குடியிருக்கிறார்கள். கோட்டை மேடு 1998ல் குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூலம் பிரபலமானது. இது இந்து, கிறித்தவர்கள், இசுலாமியர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிற பகுதி. பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர் கள் ஆகும். அவருக்கு ஒரு தங்கை உண்டு. அப்பா டீ கடையில் வேலை செய்யும் தொழிலாளி. தாய், வீட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளி. தாங்கள் கூலித் தொழிலாளியாக இருந்தாலும் நன்றாக படிக்கின்ற மகளை ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம்.

இப்பள்ளியில் இயற்பியல் பாட ஆசிரியராக பணி புரிந்து வருகிறவர் வயது 36 மிதுன் சக்ரவர்த்தி. இவர் மனைவியும் இதே பள்ளியில் ஆங்கில ஆசிரியர். பொன்தாரணி வகுப்பில் முதல் மாணவியாக இருப்பதால் ஆசிரியர்களுக்கு அவர் மேல் பிரியம் உண்டு. அந்த வகையில் மிதுனும் இவரிடம் பழகினார். நாளடைவில் அவருடைய பழகும் விதம் மாறியிருக்கிறது. ஆசிரியர் மிதுனால் பல நேரங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார். இந்த பாலியல் துன்புறுத்தல் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆசிரியரின் குற்றத்தை மறைக்க முயற்சித்தது மட்டுமல்லாமல், மாணவியிடம், ‘பஸ்சில் பயணம் செய்யும்போது யாராவது இடித்தால் கண்டுகொள்வதில்லையோ அதேபோல் இதையும் கண்டுகொள்ளாதே மறந்துவிடுஎன்று கூறியிருக்கிறார். தவறு செய்த மிதுனைத் தட்டிக்கேட்காதது மட்டுமின்றி, தொடர்ந்து பாடம் எடுக்க தலைமை ஆசிரியர் அனுமதியும் வழங்கியிருக்கிறார். இதுவும் மாணவிக்கு பல்வேறு மன அழுத்தம் ஏற்பட காரணமாயி ருந்திருக்கிறது. வீட்டில் மாணவியின் நடவடிக் கையில் சில மாறுதல் இருப்பதை கவனித்த பெற்றோர்கள் மகளிடம் கேட்டதற்கு ஒன்றும் இல்லை என்று தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். தொடர்ந்து பள்ளியில் வகுப்பில் ஆசிரியர் மிதுனால் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தலால் மன உளைச்சலாலும் அச்சத் தாலும் மேற்கண்ட பள்ளியில் படிக்க விருப்பம் இல்லை என்றும் தன்னை வேறு பள்ளியில் சேர்த்து விடும்படி பெற்றோரிடம் கூறியிருக் கிறார்.

ஏழை தந்தையோ மகளின் பிரச்சனையை பற்றி தெரியாமல் மகளின் கல்வி எந்த வகையிலும் பாதிப்பு அடைந்துவிடக் கூடாது என்பதால் மகளை அழைத்துக் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியிடம் மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். அவரை வெளியே நிற்க வைத்துவிட்டு தலைமை ஆசிரியர் மாணவியிடம் ஆங்கிலத்தில் உரையாடுவதை கேட்ட தந்தை தன் மகளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் உணர்ந்து இருக்கிறார்.

பெற்றோருக்கு தெரியாமல், பிரச்சனையை சொல்லாமல் தலைமை ஆசிரியர் மாணவிக்கு கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். இதெல்லாம் கூட மாணவியின் தற்கொலைக்குக் காரணமாகியுள்ளது. மாணவியின் தற்கொலை மீது காவல்துறை வேகமான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பொதுமக்கள், மாணவர்கள், இகக(மாலெ) உள்ளிட்ட கட்சிகள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் 3 நாள்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இகக(மாலெ) தோழர்கள் பாலசுப்பிரமணியன், பெரோஸ்பாபு, நவாஸ், பாபு கலந்து கொண்டனர். ஆசிரியர் மிதுனும் தலைமை ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்துக்களின் ஒட்டுமொத்த  பிரதிநிதி தாங்கள்தான் என்று சொல்லும் பாஜக, இந்துத்வா அமைப்புகள் இப்பிரச்சனையில் வழக்கை திசை திருப்புகின்ற வகையில் செயல்பட்டது. மாணவி  மரணத்திற்கு நியாயம் கேட்டு நடந்த போராட்டத்தில் இசுலாமிய மக்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் தலையீட்டிற்கு அனுசரித்துப் போகாமல் உறுதியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கோவை பாலு