சுதந்திரப் போராட்டமும் பிரிவினையும்

அனுபவங்களிலிருந்து இந்தியா என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

                                                                                                           கவிதா கிருஷ்ணன்

ஆர்எஸ்எஸ்-ம் இந்தியாவின் ஒட்டுமொத்த இந்து மேலாதிக்கப் பிரிவும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு தொடர்பில்லாமல் இருந்தது. மாறாக, அது பிரித்தானிய காலனிய ஆட்சியோடு கூட்டு வைத்துக் கொண்டு மக்கள் ஒற்றுமையை இந்து&முஸ்லிம் என்ற அடிப்ப டையில் உடைத்து 'பிரித்தாளும்' திட்டத்தை தேர்ந்தெடுத்திருந்தது.

அந்த பிரித்தாளும் கொள்கையானது இந்தியா & பாகிஸ்தான் உருவாக்கத்தி லான ரத்தக்களறி பிரிவினையில் போய் முடிந்தது. பின்னாளில் பாகிஸ்தானி லிருந்து வங்கதேசமும் பிரிந்தது.

இப்போது மோடி அரசாங்கம் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் சுதந்திர தினத்தை "பிரிவினை துன்பங்களை நினைவு கூறும் நாள்" என அனுசரிக்கப் போவதாக அறிவித்தது. இந்த முயற்சி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலும், இந்தியாவிற்குள்ளும் பிரிவினை வாத போர் தந்திரத்தை நீடித்து நிலைத்திருக்க செய்வதற் கானதாகும்.

இந்தியாவில் 74 ஆண்டுகால சுதந்திரத்தை ஏன் மோடி அரசாங்கம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட அந்த பிரிவினை காலகட்ட பகுதியாக சுருக்குகிறது? (அப்போது எல்லைக் கோட்டின் இருபுறமும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் வெகு மக்களை கொல்வதிலும் பாலியல் வன்புணர்விலும் ஈடுபட்டிருந்தனர்) அது இந்திய சுதந்திர போராட்டத்தில் எக்காலத்திலும் ஈடுபடாத ஆர் எஸ் எஸ் யும் இந்து மேலாதிக்க வாதிகளையும் நுழைத்து வரலாற்றை திருத்தி எழுத எப்படி முற்படுகிறது?

ஆர்எஸ்எஸ் என்பது இந்து மேலாதிக்க கருத்தியலும் திட்டமும் ஆகும். அது எதிர்க்கட்சி அரசியல் இல்லாத இந்தியாவாக மாற்ற கனவு காண்கிறது. அத்திட்டத்தில் இந்துக்கள் பெயரில் ஆர்எஸ்எஸ் ஆட்சி செய்யும், இந்துக்கள் அல்லாத வர்கள் இரண்டாம் தர குடிமக்களாக அல்லது குடியுரிமை அற்றவர்களாக வாழ வேண்டும். இந்தியா பற்றிய இந்த பார்வை சுதந்திர போராட்டத்தின் ஒட்டு மொத்த உணர்வுக்கு எதிரானதாகும்.

இந்திய பாணி தேசியவாதம் 'பொருளாதார' வகை பட்டதல்ல 'கலாச்சார' வகைப்பட்டது என்று சொல்வதால் அது ஐரோப்பிய பாணி தேசிய வாதத்தில் இருந்து மாறுபட்டதா?

முதலாளித்துவத்தின் வரலாற்றுத் தேவையை நிறைவு செய்வதற்காக முதலாளித் துவம் எழுந்தபோது ஐரோப்பாவில் ஒரு கற்பனாவாத அடையாளமாக தேசிய அரசு என்பது எழுந்து வந்தது. ஒரு ஒன்றுபட்ட உள்நாட்டு சந்தையை உருவாக்குவதாகவும் மன்னராட்சிக்கு இருந்த விசுவாசத்தை தேசிய அரசுக்கான விசுவாசமாக மாற்றியமைக்கக் கூடிய புதிய வடிவத்திலான அரசாளுகைக் கான பிணைக்கும் சக்தியாகவும் தேச அரசு தேவைப்பட்டது. மொழி, மதம் ஆகியவையும் கூட தேசியத்திற்கான அடிப் படைக் கூறுகளாக கையாளப்பட்டன எழுந்து வரும் முதலாளித்துவத்தின் பொருளாதார அரசியல் வேட்கைகள் 16&18ஆம் நூற்றாண்டின் முதல் கட்ட தேசியத்தின் சாரமான அம்சமாக இருந்தன.

19ம் நூற்றாண்டு இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் புதிய காலகட்ட தேசியம் எழுந்து வந்தது. முதல் தலைமுறை முதலாளித்துவ நாடுகளின் காலனிய அடிமை தளையிலிருந்து விடுதலைக்கான போர்க்குரல் காலனிய நாடுகளில் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்தது. இந்த கட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பும், இறையாண்மைக்கான தாகமும் காலனிய நாடுகளின் தேசியத்தின் சாரமாக இருந்தன. இந்திய தேசியம் என்பது பல மத நம்பிக்கைகளில் பரஸ்பர ஒருங்கிணைந்த உணர்வின் அடிப்படையில் உருவானதல்ல. மாறாக, காலனிய ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் ஒருமித்த நோக்கத்தின் அடிப்படையில் உருவானதாகும்.

இந்திய தேசியம்: கம்பெனி இராஜ்ஜியத்தை எதிர்த்த போராட்டத்தில் பிறந்தது. மொகாலய ராஜ்யத்தை எதிர்த்து அல்ல.

1857ல் கம்பெனி ராஜ்யத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் (பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக) தான் காலனிய எதிர்ப்பு தேசியத்தின் முதல் வெளிப்பாடு. அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வையும் தந்த நிகழ்வு. சிடோ & கன்ஹு தலைமையில் நடைபெற்ற பெருமைக்குரிய சந்தால் ஹூட் நிகழ்வைத் தொடர்ந்து 'சீருடையில் இருந்த விவசாயிகள்' மதவாத குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டு இந்தியர்களாக பிரித்தானியருக்கு சவால் விட்டார்கள். அதேபோல ஹிந்துஸ்தா னியர்களாக அதாவது இந்துஸ்தானத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர்கள் என்ற பொருளில் 1857இல் தேசியகீதம் எழுதிய அஸிமுல்லாக் கானின் வார்த்தைகளில் (நாங்கள்தான் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் இந்துஸ்தான் எங்களுக்குரியது) 1857 பலதரப் பட்ட போராட்டக்காரர்களை உள்ளடக்கியதாக இருந்தது. ராஜபரம்பரை நிலப்பிரபுத்துவ பின்னணி கொண்டவர்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. அதில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள், பெண்கள் இருந்தனர். அதன் மூலம் அது இந்திய தேசிய காங்கிரஸ் பிறப்பதற்கு 30 வருடங்களுக்கு முன்பே வெகுமக்கள், போர்க்குணமிக்க, ஏகாதிபத்திய எதிர்ப்பின் வருகையை அறிவித்தது.

1857க்கு முன்பாக பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக விவசாயிகள், பழங்குடி மக்களின் பல கலகங்கள் நடைபெற்றன. 1857 கலகம் தான் நாங்கள் இந்துஸ்தான் என்ற ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள், எங்கள்  நாட்டைக் கொள்ளை யடிக்க வந்த பிராங்கிகளிடமிருந்து( அந்நியர் களிடமிருந்து) நாட்டை காப்போம் என்ற மொழியில் பேசத் துவங்கிய முதல் நிகழ்வு ஆகும்.

1857 காலத்தில் பலதரப்பட்ட சமூக மக்கள் வெளிப்படுத்திய உறுதியான ஒற்றுமை கண்டு பிரிட்டிஷார் வெறுப்படைந்திருந்தனர். மூத்த பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் லோவே "பசுவை கொல்பவர்களும் பசுவை வழிபடுபவர்களும், பன்றியை வெறுப்பவர்களும் பன்றி சாப்பிடுப வர்களும், அல்லாதான் கடவுள், முகமது அவரின் வழித்தோன்றல் நபி என்று உரக்க சொல்பவர் களும், பிரம்மாவின் லீலைகள் பற்றி உச்சாடனம் செய்பவர்களும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக் கிறார்.

புரட்சிகர படையை வழி நடத்துபவர்களாக பக்த கான், சிர்தாரிலால், ஹவுஸ் முகமது மற்றும் ஹீரா சிங்க் இருந்தனர். முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர். ராணி லட்சுமிபாய் படையில் ஆயுதப் படை தளபதியாக குலாம் கௌஸ் கானும், காலாட்ப்படைத் தளபதியாக பக்ஸ்சும் இருந்தனர். சிவாஜியினுடைய தனிச் செயலாளராக  அவரோடு போர்க்களத்தில் உயிர் நீத்தவர் &'உண்டர்' என்ற முஸ்லீம் பெண் ஆவார்.

1857 லிருந்து இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கும் தியாகத்துக்குமான எண்ணற்ற சான்றுகளை காட்ட இயலும். கொடிய முறையில் கலகத்தை ஒடுக்கிய பிறகு பிரிட்டிஷார் தங்களது 'பிரித்தாளும்' கொள்கையை உருவாக்குகின்றனர். அது குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு விஷத்தன்மை கொண்டதாக இருந்தது.

ஆட்சியாளர்களுக்கு இடையிலான போரா அல்லது மதத்திற்கிடையி லானதா?

முகலாயர் ஆட்சி, அன்னியர் ஆட்சி என்றும் அதை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை, எதிர்த்துப் போரிட்டார்கள் என்றும் ஆர்எஸ்எஸ் கதையாடல் சொல்கிறது. ஆகவே, இந்திய தேசியம் என்பது பழங்காலத்தில் இருந்தே குணாம்சத்தில் இந்துவாக இருந்திருக் கிறது. அது இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்கிறது. ஆர் எஸ் எஸ்ஸின் கருத்தியலாளர் கோல்வால்கர், காலனிய எதிர்ப்பு தேசியத்தை இந்து தேசியம் என்று மாற்றி அமைப்பதில் ஆர்வம் காட்டினார். அது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைக் கொண்டதாக இருந்தது. அவர் "பிரித்தானிய எதிர்ப்பு என்பது தேசப்பற்று மற்றும் தேசியத் தோடு ஒப்பிடப்படுகிறது. இந்த பிற்போக்குத் தனமான பார்வை மொத்த சுதந்திரப்போராட்டம் நெடுகிலும், தலைவர்கள் மீதும் சாமானிய மக்கள் மீதும் பேரழிவு விளைவுகளையே கொண்டிருக்கும்" என்று எழுதினார்.

 இந்த ஆர்எஸ்எஸ் கதையாடல் பிரித்தானிய வயப்பட்டது என்பதில் நமக்கு வியப்பேது மில்லை. ஜேம்ஸ் மில் என்பவர் இந்திய வரலாற்றை இந்து காலகட்டம், முஸ்லிம் காலகட்டம், பிரித்தானிய காலகட்டம் எனப் பிரித்தார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 'முகலாயர்களை நினைவு கூர்வது என்பது அடிமைத்தன மனோபாவத்தின் அடையாளம்' என்று சொல்லும் போது உண்மையிலேயே அவர் காலனிய பொய்யுரையை பிரதிபலிக்கிறார்.

மில்லின் வகைப்படுத்தலை பின்பற்றுப வரும் ஆர்எஸ்எஸ் இந்து தேசிய கருத்தியலை பகிர்ந்து கொள்பவருமான வரலாற்று ஆய்வாளர் ஆர் சி மஜூம்தார், "இந்தியா அல்லது பாரதம் என்ற தேசம் பற்றிய கருதுகோள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் 60,70கள் காலகட்டம் வரை எதார்த்த அரசியலில் பயன்படுத்தப்படவில்லை" என்று ஒத்துக் கொள்கிறார். அப்படியென்றால் 'இந்து' ஆட்சியாளர்களும் படைவீரர்களும் 'இந்தியா'வை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்திருக்கவில்லை.முஸ்லிம் ஆட்சியாளர் களும் அவரது படைவீரர்களும் இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களோ அல்லது ஆக்கிரமிப்பாளர் களோ அல்ல.

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1576ல் ஹால்டிகாடியில் நடைபெற்ற யுத்தத்தில் அக்பருடைய படையின் தலைமைத் தளபதியாக இருந்து வழிநடத்தியவர் மான் சிங். அவர் ஒரு இந்து. அவர்கள் மகாராணா பிரதாப் படையுடன் மோதினர். அந்தப் படை ஹக்கிம் கான் சுர் என்ற முஸ்லிமால் வழிநடத்தப் பட்டது.

சிவாஜி அப்சல்கானைத் தோற்கடித்தது எப்படி? சிவாஜி எந்த ஆயுதமும் இல்லாமல் கானை சந்திக்கச் சென்றதாகவும் ஆனால், அவருடைய மெய்க்காப்பாளர் அவரை பிரசித்தி பெற்ற "இரும்பு நகம்" ஆயுதத்தை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்த ஆயுதம் தான் சிவாஜியை தாக்க முற்பட்டபோது கானை கொல்ல உதவியது. சிவாஜியின் மெய்க்காப்பாளர் யார்? ருஷ்டம் ஜவான் என்ற முஸ்லிம். கானை சிவாஜி கொன்றபின் கானின்  கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி என்ற இந்து தனது குருவின் மரணத்துக்கு காரணமான சிவாஜியை பழி தீர்க்க முயன்றார்.

அடுத்த 3வது உதாரணம் - 1700 களில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானுக்கு எதிராக பிரிட்டிஷார் மராத்திய படையை அமர்த்தினர்.பிரிட்டிஷார் சொன்னபடி சிருங்கேரி மடாலயத்தை இந்து மராத்திய படை கொள்ளையிட்ட உடன் திப்பு சுல்தான் அங்குள்ள பெண் தெய்வத்துக்கு குடமுழுக்கு செய்ய தன்னுடைய பொருட்களை வழங்கினார். அங்குள்ள சிலைக்கு பரிசுகள் வழங்கினார். இந்து படை கோவிலை அழித்தது. அதை புனர் நிர்மாணம் செய்ய முஸ்லிம் ஆட்சியாளர் பணமும் பொருட்களும் வழங்கினர்.

இந்திய தேசியம் காலனிய ஒடுக்குமுறைக் கும் கொள்ளைக்கும் எதிராக, கம்பெனி ராஜ்யத்துக்கு எதிராக பிறந்தது. முகலாய ஆட்சிக்கு எதிராக அல்ல. அது பல வேறுபட்ட மதங்கள், சாதி, சமூகங்களின் ஒற்றுமையை குறிப்பதாக இருந்தது.

முகலாய ஆட்சி பற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கணிப்பு அதன் துல்லியத்திற்காக நினைவில் கொள்ளப்பட வேண்டும். 'முகம்மதி யர்களின் வருகையை ஒட்டி புதிய ஒன்று கலத்தல் படிப்படியாக நிகழ்ந்தது. அவர்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்தியாவை தங்கள் வாழிடமாக ஏற்றுக் கொண்டார்கள். மக்களின் பொதுவான சமூக வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்கள். இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒருவருக்கொருவர் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் புதிய கலை, புதிய கலாச்சாரம் உருவானது.

பகத்சிங் எதிர் சவார்க்கர்; தியாகம் எதிர் சரணடைதல்;

ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர் கோல்வால்கர் தன்னுடைய சிந்தனை கொத்து புத்தகத்தின் ஒரு அத்தியாயத்திற்கு "தியாகிகள் மிகச் சிறப்பான வர்கள். ஆனால், இலட்சியமானவர்கள் அல்ல" என தலைப்பிட்டு இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகளை அவமதிக்கும் விதமாக தியாகத்தை "தோல்விகள்" என அழைத்தார்.அது போன்ற மனிதர்களை சமூகத்தில் இலட்சியமிக்கவர்கள் என்று உயர்த்திப் பிடிக்க வேண்டியதில்லை. அவர்கள் செய்த தியாகம் உயர்ந்த மட்டத்திலான மிகச் சிறப்பானது என்று சொல்லி மற்ற மனிதர்களும் அதுபோல் தியாகத்துக்கு முன்வர வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் இலட்சிய குறிக்கோள்களை அடைய தவறிவிட்டார்கள். தோல்வி நடக்கிறது என்றால் அது அபாயகரமான அளவு பெரிய இடைவெளி இருப்பதை அர்த்தப்படுத்தும் என்றார்.நாட்டின் விடுதலை நோக்கத்திற்காக ஒருவர் தன்னுடைய உயிரை தியாகம் செய்யவும் விரும்புகிறார் என்றால், அது முழுமையான தேச நலனிலிருந்து அல்ல என்று இந்தியர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.

இது விடுதலைப் போராளிகள், தியாகிகள் பற்றிய கோல்வால்கரின் நோக்குநிலையில் விலகல் என்பது மாத்திரமல்ல, இதுதான் இந்து மேலாதிக்க கருத்தியலாளர்களிடத்திலுள்ள விதியாகவே நிலவுகிறது. இந்துத்துவ கருத்தி யலாளர் சவார்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட போது அவர் நடந்து கொண்ட  விதத்துக் கும் புரட்சியாளர் பகத்சிங் தனது தூக்கு தண்ட னையை எதிர்கொண்ட விதத்துக்கும் உள்ள முரண்பாட்டை பார்த்தால் அவை நிறைய செய்திகள் சொல்லும்.

1911ல் அந்தமான் தனிமைச்சிறையில் சவார்க்கர் அடக்கப்பட்டவுடன் 50 ஆண்டு சிறைத்தண்டனை துவங்கிய சில மாதங்களி லேயே தன்னை சீக்கிரமாக விடுதலை செய்யச் சொல்லி முதலில் பிரிட்டிஷாருக்கு மனு கொடுத்தார். பிறகு 1913 ல் பின்பு 1921ல் என அவர் இந்திய சிறைக்கு மாற்றப்படும் வரையும், அதன்பின்பு 1924ல் கடைசியாக அவர் விடுதலை செய்யப்படும் வரையும் பல மனுக்களைக் கொடுத்திருந்தார். தன்னுடைய விசுவாசத்திற்கு பிரதிபலனாக தன்னை விடுவிக்குமாறு அவர் பிரிட்டிஷாரிடம் இறைஞ்சினார். அவர் சுதந்திரப் போராட்டத்தை தான் கை விட்டுவிடுவதாக மட்டும் உறுதி அளிக்கவில்லை. கூடவே, சுதந்திரப் போராட்டத்தில் தவறாக வழிநடத்தப் படும் இளைஞர்களை பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருக்கும்படி இணங்க வைப்பேன் என்றும் உறுதியளித்தார்.

சிறைக்குள் தான் 'டி' பிரிவு கைதியாக இருக்கும்போது மற்ற கைதிகளை விட மேலான, தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும் சிறப்பாக தன்னை நடத்தவில்லை என்றும் புகார் அளித்தார். அவர் தன்னை அரசியலமைப்புச் சட்ட முன்னேற்றத்தை மிகவும் வலுவாக முன் நிறுத்துபவர் என்றும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருப்பதுதான் அந்த முன்னேற்றத் திற்கான முன்நிபந்தனை என்றும் அறிவித்தார்.

ஆனால், அதிலிருந்து முரண்பட்டு காலனிய அரசுக்கு எதிராக யுத்தம் தொடுத்ததற்காக தூக்கில் ஏற இருந்த பகத்சிங்கும் அவரது தோழர்களும் "யுத்தச் சூழல் நிலவுகிறது என்றும் இந்திய உழைக்கும் மக்களும் இயற்கை வளங்களும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒட்டுண்ணிகளால்  சுரண்டப்படுவது தொடரும் வரை யுத்தம் தொடரும்" என்றும் துணிச்சலாக அறிவித்தார்கள். மேலும், அவர்கள் தாங்கள் "போர் கைதி"களாக இருப்பதால் தங்களை போர் கைதிகள் போல் நடத்த வேண்டும் என்றும் எங்களை தூக்கில் போடுவதற்கு பதிலாக சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் கேட்டார்கள். எங்கள் மரணத்தை நிறைவேற்ற படைப்பிரிவில் இருந்து குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் அனுப்புவீர்கள் என்று நம்புகிறோம் என்று சொல்லி தங்கள் கடிதத்தை முடித்திருந்தார்கள்.

பிரிட்டிஷார் சார்பு ஆர்எஸ்எஸ் எதிர் பல மாறுபட்ட கருத்தியல்களை கொண்டிருந்த சுதந்திர போராட்ட வீரர்கள்

ஆர்எஸ்எஸ்ம் இந்து மகா சபாவும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் பிரிட்டிஷாருடன் ஊக்கமாக கூடி குலாவினார்கள் என்பது பரவலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் இப்போது ஆர்எஸ்எஸ்ஐ சுதந்திர போராட்ட சித்திரத்தில் தந்திரமாக நுழைக்க முயற்சிக்கிறார்கள்.

சமீபத்தில் ஆர்எஸ்எஸ் பிரதிநிதி ராகேஷ் சின்கா எழுதிய கட்டுரை அப்படி ஒரு முயற்சி. ஆகஸ்ட் 15, 2021 இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரை "இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தில் சுதந்திர போராட்ட திருஉருக்களையும்  சம்பவங்களையும் மிகைப்படுத்தி புகழக் கூடாது" என்ற எச்சரிக்கையுடன் துவங்குகிறது. யார் இந்த திரு உருக்களும் சம்பவங்களும்? யாருடைய "மிகைப்படுத்தப்பட்ட புகழ்தலை" சின்கா மறுதலிக்கிறார்? முன்னர் காந்தி மீதான அவர்களின் வெறுப்பு, சமீப காலங்களில் நேரு மீதான வெறுப்பு உள்பட சங்பரிவாரத்தின் வரலாறு தெரிந்தவர்கள் இதை இலகுவாக கணிக்கமுடியும்.

அகிம்சை, வன்முறை என்ற செயல் தந்திரங்கள் பற்றி அல்லது இயக்கத்தில் மதரீதியிலான அடையாளங்களை, உருவ பிரதிகளை பயன்படுத்துவது பற்றி சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கிடையே பல வித்தியா சங்கள் இருந்தன என ராகேஷ் சின்கா விவாதிக்கிறார். இதே விசயங்களை இவருக்கு முன்னர் பலரும் சொல்லி இருக்கின்றனர்.திபங்கர் பட்டாச்சாரியா எழுதி 1997ல் இகக(மாலெ) வெளியிட்ட "இந்தியாவில் விடுதலைக்கான பயணம் மற்றொரு பரிமாணம்" என்ற புத்தகத்தில் இந்தியா எப்படி சுதந்திரத்தை வென்றது என்ற வரலாற்றுப் பதிவில் சாமானிய மக்கள், தொழி லாளர்கள், விவசாயிகள் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் வெறும் எண்ணிக்கையாக முகமற்ற வர்களாக பெயரற்ற எண்ணிக்கையாக இருந் தனர். ஆனால், அவர்கள் தங்களது சொந்த யுத்தத்தை சொந்த பார்வையோடு செயல் துடிப்பு, முன் முயற்சியோடு நடத்தினார்கள் என்றோ, தங்களது சொந்த கூட்டு இலட்சியத்தின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்களாக ஆக முயன்றார்கள் என்பது பற்றியோ எங்கும் ஒருபோதும் காண்பிக்கப்படவில்லை. இப்படியாக, உழைக்கும் மக்களுக்கு உரிய இடம் இப்போது மட்டும் மறுக்கப்படவில்லை, கடந்த காலத்திலும் அவர்கள் பாத்திரம் மறுக்கப்பட்டே வந்திருக் கிறது என்று எழுதுகிறார்.

ஆனால், இந்திய சுதந்திர போராட்டத்தில் முரண்பட்ட ஒரு போக்காக ஆர்எஸ்எஸ் இருந்தது என்று ராகேஷ் சின்கா சொல்கிறார். அது போலியானது என இதுவரை மறுதலிக் கப்பட்டுள்ளது. "சமூக பொருளாதார நோக்கு நிலை பற்றி மாறுபட்ட கருத்து இருந்தபோதும், புரட்சியாளர்களோடு சுபாஷ் சந்திரபோசும் ஆர்எஸ்எஸ்ம் இணைந்துதான் பார்வர்ட் பிளாக் அணியையும் இந்திய தேசிய படையையும் உருவாக்கி பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிய வன்முறையை தார்மீக ரீதியிலதானதாக்கி பிரச்சாரத்திலும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார் கள். அதேநேரத்தில், மையநீரோட்ட தலைமை யின் கருத்தியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எதிராக மக்களை ஒரு எதிர் கருத்தியல்படுத்துதல் என்பதும் அப்போது இருந்து வந்தது" என்கிறார். ஆக சின்கா அமைதியாக எந்த ஆதார குறிக்கோளும் இல்லாமல் ஆர்எஸ்எஸ், சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை, பார்வர்ட் பிளாக் மற்றும் பகத்சிங்கின் ஹெச்எஸ்ஆர்ஏ ஆகிய அணியோடு இணைத்து இவர்கள் மைய நீரோட்ட அகிம்சை கருத்துகளுக்கு எதிராக வன்முறையை முன் மொழிந்தவர்கள் என்று சொல்லி ஆர்எஸ்எஸ்ஐ நம் கண்களிலிருந்து கடந்து செல்ல வைக்கிறார். இது முழுவதுமாக நகைப்புக்குரியது ஏனென்றால் ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமே வன்முறையை பிரயோகித்தது. ஒருபோதும் பிரிட்டிஷாருக்கு எதிராக அல்ல. எந்த ஆர்எஸ்எஸ் தலைவரும் பிரிட்டிஷாரை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்று பறை சாற்ற வில்லை. பதிலாக, பிரித்தானிய எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பையும்  வன்முறையையும் பரிந்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சுபாஷ் சந்திரபோஸும் பகத்சிங்கும் காந்தி, நேரு, ஆசாத் ஆகியோரோடு ஒரு விசயத்தில் ஒன்றுபட்டு நின்றார்கள் என்றால், அது எவ்வித மாற்றமும் இல்லாமல் உறுதியாக நேர்மையாக இந்து மேலாதிக்க தேசியத்தையும் மதவாத அரசியலையும் புறக்கணிப்பது என்பதுதான்.      - தொடரும்                                                                                                                                                                                                                                                                                          

                                                                                                  லிபரேஷன், செப்டம்பர் 2021

                                                                                                            தமிழாக்கம் - தேசிகன்