ஆட்சியாளர்களும் அரசு நிர்வாகமும் முன்னெச்சரிக்கை எடுக்காததே மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிழப்புக்கும் மக்களது பெரும் துயரத்துக்கும் காரணம்
மஞ்சள் வண்ண அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும்; நிவாரணத்தொகையை ரூ. 7000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்;
மேலும் ஒரு மழை, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்
மழை, வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று
இகக(மாலெ) ஆய்வு செய்து அறிக்கை!
கடந்த ஒரு வார காலத்துக்கு மேலாக பெய்து ஓய்ந்துள்ள மழையால் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நேரில் சென்று பார்க்கத் தவறிவிட்டனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதுவை மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், மத்தியக் கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக புதுவை மாநிலச் செயலாளர் விஜயா, ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் புதுவை மாநிலச் செயலாளர் ஆறுமுகம், சக்திவேல், முருகன் ஆகியோரைக் கொண்ட குழு புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதிக்கப் பட்ட பகுதிகளைப் பார்வையிட்டது.
அஜீஸ் நகர், முத்தியால்பேட்டை உள்ளிட்ட நகர்ப்புர பகுதிகள், மண்ணாடிப்பட்டு, வில்லியனூர், பாகூர் கொம்யூன்களுக்கு உட்பட்ட கிராமப்புர பகுதிகளிலும் ஆய்வுமேற்கொண்டது. சுல்தான் பேட்டை,அரசூர்பேட்டு, கோர்க்காடு புதுநகர், செம்பியம்பாளையம், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளன. குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான குடிசைவீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதுவரை கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளோ முதல்வர், அமைச்சர்கள், ஆளுநர் உள்ளிட்ட ஆட்சியாளர்களோ வந்துபார்க்கவில்லை என்ற தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை மக்கள் தெரிவித்தனர். பாதிப்பு பற்றி முதல்வர் அறிவித்திருப்பது உண்மை நிலையை மறைக்கிறது. நேரில் வந்து பார்க்காமல் மேலோட்டமாக விடப்பட்ட அறிக்கையாகவே உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.
எனவே, முதலமைச்சர், ஆளுநர் நேரடியாக ஆய்வுசெய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை அனுப்பி உண்மை விவரங்களை கணக்கெடுக்கச் செய்ய வேண்டும்.
மேலும் ஒரு மழை, வெள்ள அறிவிப்பு வந்துள்ள சூழலில் போர்க்கால அடிப்படையில் மீட்புக் குழு, தங்குமிடம், உணவு ஏற்பாடு, மருத்துவ வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கிராமப்பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. வயல்களில் தாறுமாறாக வீடு கட்ட அனுமதிப்பது, ஊருக்கு, ஏரிக்கு அருகிலேயே பெரிய தொழிற்சாலைகளை அனுமதிப்பது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு. டிவிஎஸ் நிறுவனம் கோர்க்காடு ஏரிக்கு அருகிலேயே பெரிய ஆலையை வைத்து இயக்கி வருகிறது. இது விதிமுறைகளுக்கு புறம்பானது. ஒருபக்கம் குருவிநத்தம் கிராமத்து மக்கள் பாலம் இல்லாமல் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றைதாண்டி சுடுகாட்டுக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மறுபக்கம் பெரிய பெரிய கம்பெனிகள் ஊரை வளைத்து ஏரியை ஆக்கிரமித்து வைத்துள்ளன.
புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளுள் 40 மட்டுமே அரைகுறையாக தூர்வாரப்பட்டுள்ளன. நாங்கள் பார்த்த கோர்க்காடு ஏரியும் ஊசுடு ஏரியும் தூர் வாரப்படாததால் இவ்வளவு மழைபெய்த பிறகும் தண்ணீர் பிடிப்பின்றி உள்ளது. நாலு வழிச்சாலை என்ற பேரால் திருபுவனை ஏரியையும் கரையிலுள்ள பனைமரங்களையும் அழிக்க நினைப்பதுபோல் ஏரிகளை தூர்வாராமல் விட்டு ரியல்எஸ்டேட்டு காரர்களுக்கும் பெரிய ஆலைச் சொந்தக்காரர்களுக்கும் விற்றுவிடுகிற நோக்கத்துடன் ஆட்சியாளர்கள் செய்து வருவதாகவே தெரிகிறது.
குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட புதுவை, காரைக்கால் பகுதிகளில் ரியல் எஸ்டேட், ஆலைகள் துவக்கம் இரண்டையும் மிகுந்த கட்டுப்பாடுடன் செயல்படுத்திட வேண்டும்.
ரெட்டியார்பாளையம் தொடங்கி வில்லி யனூர் வரை நீர்தேங்கி சாலைகள் ஆறுகளாக மாறிவிடுகின்றன. இதுபோன்ற நகர்ப்புர பகுதிகளில் வடிகால் வசதி, பாதாளசாக்கடை திட்டம் போன்றவை இல்லாததின் விளைவாகும். ரெட்டியார் பாளையத்திலுள்ள லாம்பே சரவணன் நகர் அடுக்குமாடி அரசு குடியிருப்பு, வடிகால், பாதாள சாக்கடை இல்லாததால் தண்ணீர்சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நகர்ப்புர திட்டமிடுதலில் அரசின் தோல்விக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பொறுமை யிழந்த மக்கள் போராடத் தயாராகிவிட்டனர். நகரத்திலுள்ள குடிசைப்பகுதிகளின் நிலமையோ இன்னும் படுமோசம். புதுவையை சர்வதேச சுற்றுலா நகரமாக மாற்றுவதற்கு திட்டமிடும் ஆட்சியாளர் கள் அதற்குப் பதிலாக புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலுள்ள நகர்ப்புர, கிராமப்புர மக்கள் இயற்கை சீற்றங்களுக்கு மத்தியிலும் அச்சமற்று, பாதுகாப்புடன் வாழத்தகுந்த மாநிலமாக மாற்றுவதற்கு முதலிடம் தரவேண்டும்.
ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் துயருறும் மக்களுக்கு:
1. மஞ்சள், சிவப்பு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ 7000 நிவாரணம் வழங்க வேண்டும்.
2. புதுவை, காரைக்கால் பகுதிகளில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள 2,500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ35,000 இழப்பீடு வழங்கிட வேண்டும்.
3. கொரோனாவாலும் இப்போது மழை வெள்ளத்தாலும் வேலை இழந்துள்ள அமைப்பு சாரத் தொழிலாளர், கட்டுமான தொழிலாளர், மீனவர்கள் அனைவருக்கும் தலா ரூ 5000 உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
4. மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கா லத்துக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை இன்னும் வழங்கப் படவில்லை. அதை உடனடி யாக வழங்கிட வேண்டும்.
5. வீழ்ந்து போன குடிசை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ 50,000 இழப்பீடு வழங்கிட வேண்டும். குடிசை வீடுகள் அனைத்தையும் தரமான வாழத்தகுந்த வீடுகளாக அரசு செலவில் கட்டித்தர வேண்டும்.
6. தீபாவளி சமயத்தில் அறிவிக்கப்பட்ட, கட்டுமான தொழிலாளருக்கு தலா ரூ 3000 க்கான பொருள் இன்னும் வழங்கப்படவில்லை. டோக்கன்கள் முழுமையாக வழங்கப்பட வில்லை. வழங்கப்பட்ட டோக்கன்களுக்கும் இன்னும் பொருட்கள் கிடைத்தபாடில்லை. டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பொருள் வழங்கிட அரசு ஆவன செய்திட வேண்டும். அதுமிட்டுமின்றி, தகுதியுள்ள கட்டுமான தொழிலாளர் 35,000 என்பது குறைவானது. எனவே பாகுபாடின்றி அனைத்து கட்டுமானத் தொழிலாளருக்கும் இந்த உதவித்தொகை ரூ 5000 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். மட்டுமின்றி அமைப்புசார தொழிலாளருக்கும் நலவாரியம் அமைத்து அரசு நிதி ஒதுக்கீடு அளித்து நலத்திட்டங்களை வழங்கிட வேண்டுமென ஏஅய்சிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கோரி வருகின்றன. அதன் துவக்கமாக அமைப்புசாரா தொழிலாளர் அனைவருக்கும் தலா ரூ 5000 உதவித்தொகை வழங்கிட வேண்டும்.
7. கொரோனா, மழைக்கால வேலையின்மையை கவனத்தில் கொண்டு புதுவையில் உள்ள உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவர்களது கல்வி, தேர்வுக் கட்டணங்களை ரத்து செய்திட வேண்டும்.
8. அரசு, தனியார் நிறுவனங்களில் உள்ள ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும். புதுவை மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
9. மீண்டும் மீண்டும் ஏற்படும் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து புதுச்சேரி மாநில மக்களை பாதுகாக்கிற வகையில் பல்துறை வல்லுநர்கள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், அறிஞர் களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்து அதன் அறிவியல்பூர்வமான பரிந்துரைகளைப் பெற்று செயல்படுத்திட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)