பருவகால அவசர நிலையை, உலகத் தலைவர்கள் புறக்கணித்ததால்

சிஒபி 26 ஏமாற்றத்தில் முடிந்தது

உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரை மட்டுப்படுத்தலாமென, கிளாஸ்கோ நகரில் நடந்த சிஒபி 26 உச்சி மாநாடு நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால், வளர்ச்சிக் கான இலக்குகளையும் பருவநிலைப் பேரழிவின் விளைவுகளையும் சமப்படுத்தத் தவறிய நாடுகளால் அது தோல்வியடைந்தது.

சிஒபி 26 என்று சுருக்கமாகக் குறிப்பிடப் பட்ட, 2021 க்கான பருவநிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாடு, அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை, கிளாஸ்கோ நகரில் நடை பெற்றது. உலகளாவிய வெப்பநிலை உயர்வை, தொழிற்புரட்சி காலத்திற்கு முந்தைய அளவுக்கு அதிகமாக 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் மட்டுப் படுத்துவதை உறுதி செய்வதே இந்த உச்சி மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இந்தக் குறிப்பிட்ட அளவில் இருந்து வெப்பநிலை எந்த அளவு உயர்ந்தாலும், அது உலகத்தை நாசமாக்கும் பேரழிவு மிக்க பருவநிலை மாற்றத்திற்கு இட்டுச்செல்லும் என்பதே அறிவியலாளர்களின் ஒன்றுபட்ட கருத்தாகும். பருவநிலை மாற்றத்தில் திரும்ப இயலாத இடத்தை நோக்கி நாம் மிக விரைவாக சென்று கொண்டிருக்கிறோம். எனவே, 'மனித இனத்திற்கான கடைசி மற்றும் சிறந்த நம்பிக்கை' என இந்த சிஒபி 26க்கு முத்திரை இடப்பட்டது. மேடையில் கூடியிருந்த உலகத் தலைவர்கள், அவர்களிடம் எதிர்பார்த்ததற்கு தகுந்தவாறு நடந்து கொள்வதிலிருந்து தவறிவிட்டனர் என்பது மாநாடு முடிவுக்கு வரும் சமயத்தில் தெளிவானது.

வட அரைக்கோளத்தினை குளிர்காலம் நெருங்கி வரும்போது, இந்த உலகம் ஒரு ஆற்றல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நேரத்தில், மாநாட்டில் பங்கு கொண்டிருந்த நாடுகள், குறுகியகாலச் சிரமங்களைத் தாண்டி, நீண்டகால இலக்குகள் மீதான உண்மையான உறுதிப் பாட்டை வெளிப்படுத்துவது தேவையாக இருந்தது. ஆஸ்திரேலியாவுடனான சீனாவின் வர்த்தகப் போர் காரணமாக, நிலக்கரிக்கான நெருக்கடி உருவானது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரிட்டன் மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டின் காரணமாக, உலகம் முழுவதிலும் நிலக்கரியின் விலை உயர்ந்தது. இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள நிலக்கரிக் கையிருப்பு குறைந்து வருவதால், மின்தடையை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியாவும் கூட உள்ளது. புதை படிம எரிமங்களின் (fossil fuel) வர்த்தக பயனாளர்கள், அதன் அதிகப்படியான பயன் பாட்டிற்கு அழுத்தம் கொடுக்க, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதே நேரத்தில், நம்முடைய ஆற்றல் தேவைகளுக்கான நிலையான, நம்பகமான மூல வளமாக அடிப்படையில் நிலக்கரி இருக்க முடியாதென இந்த நெருக்கடி வெளிப்படுத்தியுள்ளது.

'சுற்றுச்சூழல் மீதான மானுடத் தாக்கங்கள் பருவநிலையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள்' குறித்து பெருமளவு அறிவியல் சான்றுகள்உள்ளன. இருந்தபோதிலும், முதலாளித்துவ வட்டாரங்கள், இதுகுறித்து அதிகரித்த சந்தேகத்துடன் அணுகுவது ஒரு வளர்ந்து வரும் போக்காக உள்ளது. இந்த வட்டாரங்களில், டோனால்ட் டிரம்ப் முதன்மையானவராக வெளிப்பட்டார். கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் 'உலகளாவிய' சதியாக முத்திரை குத்தினார். மேலும், பாரிஸ் உடன்பாட்டில் இருந்தும் விலகிக்கொண்டார். அமெரிக்காவில் (எல்லா இடங்களிலும் இருப்பது போலவே) உள்ள சில சமூகங்கள், பாரம்பரியமாக நிலக்கரித் தோண்டுவதை முதன்மை பொருளாதார உயிர்நாடியாக கொண்டுள்ளன என்பது உண்மைதான். மேலும், பசுமை ஆற்றலுக்கு மாறுவதால் அவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப் படுவார்கள் என்பதும் உண்மைதான். ஆக, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முடிந்தவரை சிக்கலின்றி மாறிச் செல்வதை உறுதி செய்ய வேண்டியது, சம்பந்தப்பட்ட அரசாங்கங்களின் பொறுப்பாகும். உலகம் முழுவதுமுள்ள பழமைவாத மற்றும் தீவிர வலதுசாரிக் குழுக்கள், கரிம உமிழ்வைக் குறைப்பதற்கு எதிராக, அதிகரித்த அளவில் குரல் கொடுக்கிறார்கள். இதனால், பருவநிலை மாற்றம் மீதான எந்த ஒரு உலகளாவிய புரிந்துணர்வும் அதிகரித்த அளவிற்கு, பாகுபாடான அரசியல் அழுத்தங் களைச் சார்ந்துள்ளது. மேலும், திடீர் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுக்கும் உள்ளாகிறது. அக்டோபர் 2021 ல் கசிந்து வெளிவந்த சில ஆவணங்கள், செல்வச் செழிப்பு மிக்க நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் செல்வாக்கு செலுத்தி புதை படிம எரிபொருள் பயன்பாட்டிலிருந்து அவசரமாக மாறி செல்வதற்கான தேவையை குறைத்துக் காட்டும்படி கேட்டுக்கொண்டதாக சொல்கின்றன.

இந்தியாவின் இராஜதந்திரத் தோல்வி

பருவநிலை மாற்றம் என்ற வடிவத்தில், பிழைத்திருக்கும் பேராபத்தை இந்தியா எதிர்கொள்கிறது. புயல்கள், மேக வெடிப்பு பெருமழை, நிலச்சரிவுகள், கடும்வறட்சி, போன்ற வடிவங்களில் நிகழும், அதிதீவிர பருவநிலை நிகழ்வுகள் என்றழைக்கப்படுபவற்றின் மூலம் நாம் ஏற்கனவே பாதிக்கப்படுகிறோம். என்றாலும்கூட, இந்திய அரசாங்கம் (சீனாவுடன் சேர்ந்து கொண்டு) கடைசி நேரத்தில் இடையூறு செய்து, நிலக்கரி மின்னுற்பத்தி மற்றும் புதை படிம எரிமங்களுக்கான மானியங்களை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது. 'தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொண்ட' செயலாகவே இதனை விளக்க முடியும். இது, வளரும் நாடுகளில் $10லட்சம் கோடி நிதி முதலீடு செய்ய, உலகின் வடபகுதியிலுள்ள பணம்படைத்த நாடுகளை உறுதியளிக்கச் செய்வதில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாகும்.

2014 இல், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் மேற்கொண்ட எண்ணற்ற அந்நிய நாட்டு பயணங்களால், உலக அரங்கில் இந்தியாவின் பெயர் மேம்பட்டுள்ளது என மோடியின் அரசாங்கம் அடிக்கடிப் பீற்றிக் கொள்கிறது. என்றாலும்கூட, உண்மை ஒரு மாறுபட்டத் தோற்றத்தைக் காண்பிக்கிறது. இந்தியாவின் நலன்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. மாறாக, ஒரு அவசியமான ஒப்பந்தத்தைத் தகர்த்ததற்காக, உலக அரங்கில் நாம் எதிரியாக்கப்பட்டு விட்டோம். அப்போதிருந்து, இந்திய அரசாங்கம் தன்னைப்பற்றிய எதிர்மறை ஊடக செய்தி வெளியீட்டை எதிர்க்கிறது. நிலக்கரியைப் 'படிப்படியாக நிறுத்தும்' என்னும் பரிந்துரைக்கு மாறாக, நிலக்கரியைப் 'படிப்படியாக குறைக்கும்' என்று வலியுறுத்தப்படும் குறிப்பிட்ட நிலையானது, அமெரிக்க-&சீன அறிக்கையில் இருந்தே எடுக்கப்பட்டது என்றது.

ஆனாலும், தான் ஏற்றுக்கொள்ளாத அறிக்கை ஒன்றை சர்வதேச அரங்கில் வாசித்த தாக சொல்லப்படும், இந்திய அதிகாரிகளின் அப்பாவித்தனம் பற்றி ஒருவர் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். பருவநிலை மாற்றத்தை தடுப்பது இந்தியாவின் நலன்களுக்கு உகந்ததாகும். அதே நேரத்தில், மோடியின் நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவரான அதானி குழுமத்தினர், ஆஸ்திரேலி யாவின் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் பெருமளவு முதலீடு செய்துள்ளனர் என்பதையும் கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனித இனத்திற்கான கடைசி நம்பிக்கை

ஸ்வீடனைச் சார்ந்த சூழலியல் செயல் பாட்டாளரான கிரேட்டா தும்பெர்க், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, "சிஒபி 26&ன் தோல்வியொன்றும் இரகசியமல்ல. நாம் முதலில் எந்த வழிமுறையால் நெருக்கடிக்குள் தள்ளப் பட்டோமோ, அதே வழிமுறையில் நம்மால் அதனைத் தீர்க்க இயலாது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார். கரிம உமிழ்வைப் பெருமளவு குறைப்பது  என்பதை சாத்தியமாக்க முடியவில்லை என்றால், பருவநிலை மாற்ற நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் மாயையே ஆகும். ஆனாலும் கூட, உலகத் தலைவர்கள் 'வழக்கம் போல் செயல்படுவது' என்ற அணுகு முறை யையே பின்பற்றுகிறார்கள். இது மிகத் தெளிவாகவே போதுமானதல்ல.

இந்த உச்சி மாநாட்டின் இறுதியில் எட்டப்பட்ட புதிய உடன்பாடு, கிளாஸ்கோ பருவநிலை ஒப்பந்தம் ஆகும். இதன்படி, பாரிஸ் ஒப்பந்த இலக்கான, வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ்-ஸில் நிறுத்த கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான திட்டங்களை 2022 இல் மீள்பார்வை செய்வதென ஏற்றுக் கொள்ளப் பட்டது. நிலக்கரி உபயோகத்தைப் 'படிப்படியாக குறைப்பது' மற்றும் வளரும் நாடுகளுக்கு பருவநிலை நிதியுதவி வழங்குவது ஆகியவற் றிலும் கவனம் குவித்தது. சிலி, போலந்து, இந்தோனேசியா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் 2030 திலிருந்து 2040 க்குள் நிலக்கரியைப் படிப்படியாக நிறுத்துவது என்ற உறுதிமொழியை அளித்துள் ளார்கள். அதேநேரத்தில், உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார நாடுகள் அதாவது இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியன, அதைப் போன்ற எந்த ஒரு உறுதிமொழியையும் அளிக்கத் தவறிவிட்டனர். இந்தியா 2070, நிகர-பூஜ்ய கரிம உமிழ்வுக்கான இலக்காக நிர்ணயித்துள்ளது. இது, 2060 , நிகர-பூஜ்ய கரிம உமிழ்வுக்கான இலக்காக நிர்ணயித்துள்ள சீனாவை விட மேலும் பின்தள்ளியுள்ளது. இந்தியா, சீனா மற்றும் வேறுபல நாடுகளும் மீத்தேன் உமிழ்வைக் கட்டுக்குள் வைப்பதற்கான உறுதியை அளிக்கத் தவறிவிட்டன.

இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள், நீடித்த இயற்கை முறையிலான விவசாயத்திற்கு மாறிச்செல்ல, $400 கோடி நிதியை முதலீடு செய்வதாக உறுதிபூண்டுள்ளனர். மிகவும் அற்ப சொற்ப பிரச்சினைகளில் கூட, விவசாயிகளுடன் இணைந்து செயலாற்ற நரேந்திர மோடி தயங்கும் போது, உறுதி பூண்டதற்கேற்ப விளைவுகளை கொண்டு வரும் இந்திய அரசாங்கத்தின் திறன் பற்றி ஒருவர் சந்தேகம் கொள்ள மட்டுமே முடியும். பொதுப் போக்குவரத்து மற்றும் மிதி சைக்கிள் வண்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு மாற்றாக, மின்னூர்திகளை இயற்கைச் சார்ந்த போக்குவரத்துக்கான வழிமுறையாக, இந்த மாநாடு கவனத்தில் கொண்டதும் விமர்சனத்திற்குள்ளானது.

உலகம் முழுவதுமுள்ள இளைஞர்கள் மட்டுமே மனித இனத்திற்கான கடைசி மற்றும் சிறந்த நம்பிக்கை எனத் தெளிவாகத் தெரிகிறதுநமது கிரகத்தில் மனித இனம் தொடர்ந்து உயிர் வாழ்வதற்காக, கெட்டி தட்டிப்போன பெரு நிறுவன நலன்களுக்கு எதிராகப் போராட, அவர்கள் அணிதிரண்டார்கள். இலாப நோக்கத் திற்கு மேலாக, மனித இனத்தின் கூட்டு நலனை முன்வைக்கும் நோக்கத்துடன், ஒருங்கிணைப் பிற்கான கூட்டணிகளை கட்டி எழுப்ப வேண்டும். அவை உள்ளூர் மட்டங்களில் இருந்தும், தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி மட்டங்களிலும், ஒவ்வொரு தெருக்களிலும், ஆலைகளிலும் வேர்கால் மட்ட போராட்டங் களில் ஒன்றிணைய வேண்டும்.

லிபரேஷன்டிசம்பர் 2021

தமிழாக்கம்செந்தில்