தலையங்கம்

மதவெறி பாசிஸ்டுகள் மாறிவிட மாட்டார்கள்

வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டத்தின் முன்பு விவசாயச் சட்டங்களை ரத்து செய்வோம் என்று பின் வாங்கிய மோடி அரசு, அந்தச் சட்டங்களை இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்து விட்டு எவ்வித விவாதமும் இன்றி, மூன்று விவசாயச் சட்டங்களையும், எப்படி தான்தோன்றித்தனமாக சட்டமாக்கியதோ அதே வழியில் இப்போது ரத்து செய்வதற்கான மசோதாவையும் விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. விவாதம் நடத்தினால் வீரமிக்க விவசாயிகளின் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய நியாயமான கோரிக்கைகள் பற்றி நாட்டு மக்கள் தெளிவாக அறிந்திட வழி வகுக்கும் என்பதால், இன்னொருபுறம் இவர்களுடைய குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால் எதையும் விவாதம் இல்லாமலேயே முடித்து விட முனைகிறது மோடி அரசு. விவசாயச் சட்ட மசோதாவின் நோக்க ஆவணத்தில் தவறானவற்றை தனக்குச் சாதகமானவற்றைச் சேர்த்துள்ளது. இது வெளிப்பட்டுவிடும் என்று அஞ்சுகிறார் 56 இஞ்ச் நெஞ்சு கொண்ட மோடி அரசர். ‘மன் கி பாத்என்று மக்கள் மனதோடு! மாதாமாதம் பேசும் மோடி கடந்த நவம்பர் 28ஆம் தேதி வானொலியில் வழக்கம் போல் பொய்களை அள்ளி வீசினார். இந்திய பெற்றோர்கள் இப்போது தங்கள் பிள்ளைகள் ஓர் இடத்தில் வேலை பார்ப்பதைவிட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு தொழிலதிபர்களாக மாறுவதையே விரும்புகிறார்களாம். கொரோனா தொற்று காலத்திலும் 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கி பெரும் சாதனை புரிந்துள் ளார்களாம். 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 கோடி டாலராம். இந்திய இளைஞர்கள் வேலையை எதிர் நோக்கி இருப்பவர்கள் அல்ல, மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பவர்களாக பரிமளிக்கின்றனர் என்று அளந்து விடுகிறார். எல்லாரும் வேலை கொடுப்பவர்கள் என்றால் யார் வேலை பார்ப்பவர்களோ? மோடிக்குத்தான் வெளிச்சம். உண்மையில் யதார்த்தம் என்னவென்றால், 2016லிருந்து இப்போது வரை 7,77,049 நிறுவனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே காலத்தில் நாடு முழுவதும் 5,06,000 நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டபின் 2017&18 காலக்கட்டத்தில்தான் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதாவது ஓர் ஆண்டு காலத்தில் 2,36,262 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில்  மோடி அரசால் கொடுக்கப்பட்டதுதான். இப்படி ஏற்கனவே செயல்பட்டு வந்த நிறுவனங்கள் லட்சக்கணக்கில் மூடப்பட்டதால் வேலை இழந்த இளைஞர்கள் எண்ணிக்கை கோடியை நெருங்கும். இதில் 70 நிறுவனங்களை இளைஞர்கள் தொடங்கி ஏராளமானவர்களுக்கு வேலையளிக்க உள்ளார்கள் என்கிறார் மோடி. எங்கிருந்து எல்லாருக்கும் பணம் வரும் தொழில் தொடங்க. வங்கிகளில் இருக்கிற பணத்தையெல்லாம் நீரவ் மோடி, மல்லய்யா, அதானி, அம்பானி என்று எடுத்துக் கொண்டு திரும்பச் செலுத்தாமல் இருக்கும்போது, இந்த இளைஞர்களுக்கு எங்கிருந்து பணம் வரும். மோடிக்கு எப்போது பேசினாலும் தமிழ்நாட்டுப் பாசம் வந்துவிடும். இந்த முறை தூத்துக்குடியைப் பற்றி பேசியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்ட மக்கள் பனை மரம் நட்டு மண் சரிவைத் தடுக்கிறார்கள் என்று பாராட்டி யிருக்கிறார். மோடி பாராட்டுகிறார் என்றாலே அடுத்து அதள பாதாளத் திற்குள் தள்ளப் போகிறார் என்று அர்த்தம். தமிழக கடற்கரைகளை அதானிக்குத் தாரை வார்த்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு பக்கத்தில்உள்ள கூடங்குளத்தில் அணுஉலைகளை அமைத்து கடற்கரைகளை சுடுகாடாக்கும் மோடி அரசு இயற்கையைப் பாதுகாப்பது பற்றிப் பேசுகிறது. பொய்யையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். மாறிவிட மாட்டார்கள் மதவெறி பாசிஸ்ட்டுகள்.