ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) ஒழித்துக் கட்டும் நேரம் வந்துவிட்டது!

நாகாலாந்து மாநிலம்,மோன் மாவட்டம், ஓடிங் கிராமத்தில் ராணுவத்தின் சிறப்புப் படை பிரிவு சுரங்க தொழிலாளர்களை படுகொலை செய்ததோடு மட்டுமல்லாது அதை மூடிமறைக்க போலி மோதல் படுகொலைகள் நாடகமாடியதும் படுபாதக குற்றச் செயலாகும். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவருடைய ராணுவ அதிகாரிகளும் சம்பவத்தை நடந்து விட்ட 'தவறு' என்று விளக்கமளிக்க எடுக்கும் முயற்சிகளால் பாஜகவின் சொந்த உறுப்பினர்களையும் அவர்களின் வடகிழக்கு மாநில கூட்டாளிகளையும் கூட இணங்க வைக்க செய்யமுடியவில்லை.

போராளிகள் நடமாட்டம் குறித்து 'நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்' கிடைக்கப் பெற்றதால் ஒரு வாகனத்தில் நிறைத்துக் கொண்டு சென்ற சிவிலியன்கள் மீது அதிரடி தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் நடத்தியதில்  வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் சொல்லும் சாக்குப்போக்கு பல காரணங்களால் அற்பத்தனமானதாக உள்ளது.

முதற்கட்டமாக இந்த கொலை பட்டப்பகலில் ஜன நெருக்கடி நிறைந்த சாலையில் நடந்தேறியுள்ளது. இரண்டாவதாக,உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்களையும் நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் தவறியதன் மூலம் உரிய கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை துருப்புகள் மீறி இருக்கின்றன. மேலும் (எதிர்த் தரப்பிலிருந்து) எவ்வித தூண்டுதலும் இல்லாத நிலையில் துருப்புகள் எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியுள்ளனர். வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்திப் பார்ப்பதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை உண்மையிலேயே அந்த வாகனம் போராளிகளை ஏற்றிக்கொண்டு வந்திருந்தால் கூட நடந்த சம்பவம் மனித உரிமை மீறலாகவே கொள்ளப்படும்.

உள்ளூர் மக்கள் இந்த படுகொலை பற்றி கேள்விப்பட்டு விசாரிக்கச் சென்றபோது ஆயுதப்படை துருப்புகள் "மோதல் படுகொலை"என சித்தரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்ததாக அவர்கள் சொன்னார்கள்.நியாயமான கோபாவேசத்துடன் சிவிலியன்கள் உள்ளூர் இராணுவ தலைமை இடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதை அடுத்து மீண்டும் சிவிலியன் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 7 பேரை கொன்றொழித்தார்கள். பிறகு அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்று விட்டதாக சொல்லப்பட்ட சிறப்பு படைகள், செல்லும் வழியில் இருந்த சுரங்க தொழிலாளர்களின் குடியிருப்புகள் மீதும் கூட துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். மொத்தத்தில் அதிரடி தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் 15 சிவிலியன்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் மற்றும் பலர் கடுமையாக காயமுற்றிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் விதிவிலக்காக தவறுதலாக நடந்த ஒன்றல்ல. வடகிழக்கு மாநிலங்களில் அதுபோல் காஷ்மீர், பஸ்தார் மற்றும் இதர மோதல் பகுதிகளில் கொலைகளை செய்துவிட்டு அவற்றை 'போலி மோதல்' என்று நாடகமாடுவது இயல்பானதாக உள்ளது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மரபியல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை ஒடுக்க 1942ல் பிரயோகப்படுத்தப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார அவசர சட்டத்தில் உள்ளது. வெட்கக் கேடான விதத்தில் காலனிய வேர்களைக் கொண்ட இந்த சட்டம் 1958லிருந்து வடகிழக்குப் பகுதிகளில் இந்திய சட்டமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

கொலை, துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு என்று கூட குற்றம் சாட்டப்பட்ட ஆயுதப் படையினருக்கு குற்றவியல் நடவடிக்கை களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. எனவேதான் ஓடிங் படுகொலை சம்பவத்தில் நாகாலாந்து காவல்துறை சிறப்பு படை பிரிவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்த போதிலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அவர்களால் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை. மேலும், அது போன்ற (மத்திய அரசின்) அனுமதி ஒருபோதும் வழங்கப்படுவதும் இல்லை. 2004இல் மணிப்பூரில் தஞ்சம் மனோரமா கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் துப்பாக்கி படைப்பிரிவினர் குற்றவாளிகள் என்று நீதித்துறை விசாரணை கண்டு கொண்ட பின்பும் குற்றவாளி கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாமல் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் இதுநாள் வரை பாதுகாத்து வருகிறது.

சிவிலியன்கள் மீதான இராணுவ வன் கொடுமை நிகழ்த்துவதற்கான தலையாய காரணமாக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் இருக்கின்ற காரணத்தால், வடகிழக்கு மக்கள் அதற்கு எதிராக நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். மணிப்பூரிலுள்ள அசாம் துப்பாக்கி படைத் தலைமையகம் முன்பு "இந்தியப் படையே எங்களை  பாலியல் வல்லுறவு செய்து கொள்" என்ற பதாகையுடன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு பெண்கள் நடத்திய போராட்டம் என்பது முடை நாற்றமடிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மீதான களங்கமாக இன்றளவும் உள்ளது.ஆனால், அடுத்தடுத்து வந்த பலவகை அரசாங்கங்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ஒழித்துக்கட்ட மறுத்து விட்டன அல்லது வடகிழக்கு, காஷ்மீர், பஸ்தார் அதுபோல் மற்ற இடங்களில் சிவிலியன்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு இராணுவத்தின ரையும் துணை ராணுவ படையினரையும் பொறுப்பாக்கவும் மறுத்துவிட்டன. கடந்த இரண்டு தசாப்தங்களில் மணிப்பூரில் நிகழ்ந்த 1500 போலி மோதல்  தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதி கேட்டு இன்றளவும் காத்து நிற்கின்றன.

இராணுவத்தினரின் போலி மோதல் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு பிரச்சினைகளை எழுப்புகின்ற மனித உரிமைப் பாதுகாவலர்களை தேச விரோதிகள் என்று பாஜக முத்திரை குத்துகிறது. தேசத்துரோக வழக்கு கொண்டு அவர்களை மிரட்டி வருகிறது. ஜே கேசிசிஎஸ் என்ற அமைப்பைச் சார்ந்த காஷ்மீரின் முன்னணி மனித உரிமைப் பாதுகாவலர் குர்ரம் பர்வேஷ் சமீபத்தில் கைது செய்யப்பட்டு கொடிய உபா (ஹிகிறிகி) சட்டத்தில் புனையப்பட்ட குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கிறார். ஓடிங்கில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் போல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல படுகொலைகளை 'மோதல் படுகொலை' என மூடி மறைக்கப் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை ஜேகே சிசிஎஸ் பிரயத்தனப்பட்டு ஆவணப்படுத்தி மனித உரிமைகளை முன்னெடுக்கும் அமைப்பாக நன்கு அறியப்பட்டதாகும்.

இப்போது பாஜகவின் கூட்டாளிகளாக இருக்கக்கூடிய நாகாலாந்து, மேகாலயா முதல மைச்சர்கள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மோன் மாவட்ட பாஜக தலைவர், தன் மீதும் சிவிலியன்கள் மீதும் ஆயுதப் படையினர் துப்பாக்கிச்சூடு பிரயோகப் படுத்தியதாகவும் போலி மோதல் கொலை என நாடகமாட அவர்கள் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்வதோடு கூடவே அந்தப் பகுதி ராணுவமயப்படுத்தப்படுவதிலிருந்து  விடுவிப்ப தையும், கடந்த கால இராணுவ நடவடிக்கையின் மனித உரிமை மீறலுக்கு பொறுப்பாக்கப்படு வதையும் நீதி கோருகிறது. வடகிழக்கு மாநிலம் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் நடந்த மனித உரிமை மீறலுக்காக கடந்த காலங்களில் உத்தரவிடப்பட்ட விசாரணைகள் கூட வெட்கக்கேடான விதத்தில் நடைபெற்று, குற்றச்செயல் புரிந்தவர்கள் எவ்வித தண்டனையுமின்றி தப்பிவிட்டார்கள்.

மேலும் ஓடிங் விசாரணையும் அதுபோல் ஆயுதப்படைகள் மீதான மற்ற குற்றச்சாட்டுகளும் வெளிப்படையான சிவிலியன் நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டும். நடைபெற்றுவரும் எல்லா ஆயுத மோதல்களிலும் சர்வதேச மனிதாபிமான, மனித உரிமை சட்டங்கள், அரசமைப்புச் சட்ட நெறி முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இராணுவத் தீர்வுக்கு எதிராக நாடு எழுந்து நின்று இராணுவ துருப்புகளிடமிருந்து பொறுப்புடைமையை கோருவதற்கான சரியான தருணம் இது.மொத்த நாடும் எதிர்ப்புப் போராட்டத்தில் எழுந்துநின்று ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க இறுதி சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். நாம் சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் கடைப்பிடிக்கும் போது, காலனிய ஆட்சியின் மரபியல் கொண்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திலிருந்து விடுபட வேண்டிய தருணமாக இது அமைந் துள்ளது. மோதல் பகுதிகளின் ஒவ்வொரு கொட்டடி வன்முறைக்கும் நீதியையும் பொறுப்பாக்குதலையும் உத்தரவாதம் செய்வோம்.

எம்எல் அப்டேட் தலையங்கம்

14-20 டிசம்பர் 2021

தமிழாக்கம்தேசிகன்